பிராங்கோய் க்ரோஸ்! தமிழ்த்தாய் தத்தெடுத்த தற்கால வீரமாமுனிவர்! (காலக்கண்ணாடி 37)

பிராங்கோய் க்ரோஸ்! தமிழ்த்தாய் தத்தெடுத்த தற்கால வீரமாமுனிவர்! (காலக்கண்ணாடி 37)

      — அழகு குணசீலன் — 

தமிழ் கூறும் நல் உலகத்திற்கு தமிழ் அன்னையால் ஐரோப்பாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள் இரு பேரறிஞர்கள். ஒருவர் தேம்பாவணியும், தமிழ்-இலத்தீன் அகராதியும் தந்த கிறிஸ்தவ பாதிரியார்  கொன்ஸ்ரான்ரின் ஜோசப் வெஸ்கி (Constantin Joseph Beschi), மற்றயவர் பண்டைய தேவாரம், பெரியபுராணம், போன்றவற்றை மொழிபெயர்த்த பிராங்கோய் க்ரோஸ்.(Francois Eduard Stephane Gros) 

இருவருமே திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். வெஸ்கி இலத்தீன் மொழியிலும், க்ரோஸ் பிரஞ்சு மொழியிலும் செய்திருக்கிறார்கள். க்ரோஸ் தனது 88வது வயதில் இருவாரங்களுக்கு முன் பிரான்சில் காலமானார். 

அன்னார் பண்டைத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணியை மதித்தும் நினைவுகூர்ந்தும், அன்னாருக்கு தமிழால் ஆரம் தொடுத்து அஞ்சலிக்கின்றது அரங்கம் – காலக்கண்ணாடி.  

1680இல் இத்தாலியில் பிறந்த வெஸ்கி 1747இல் தனது 66வது வயதில் இந்தியாவில் இறந்தார். 1710இல் கோவையில் வந்திறங்கிய பாதிரியார் நான்கு தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வாழ்ந்து தேவ சேவையுடன், தமிழ்பணியும் ஆற்றியவர். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக வீரமாமுனிவர் என்ற தமிழ் பெயரை ஏந்திக்கொண்டவர். சைவ சந்நியாசி போன்று ஆடையணிந்து வாழ்ந்தவர். 

இவருக்கு பின் இப்படியான மகத்தான தமிழ்ப்பணியை செய்தவர் என்ற வகையில் க்ரோஸ் இரண்டாவது வீரமாமுனிவர் ஆகிறார். வெஸ்கி குடியேற்றகால வீரமாமுனிவர் என்றால் க்ரோஸ் தற்கால வீரமாமுனிவர். 

முன்னையவர் கிறிஸ்தவ ஞானி என்றால் பின்னையவர் பண்டைய மொழிகளில் ஆர்வம் கொண்டு அவற்றை ஆய்வு செய்து தற்காலத்தில் அளப்பரிய தமிழ் இலக்கியப் பணியாற்றியவர்.  

தமிழ் நாட்டில் சுப்பிரமணியபாரதியார், பெரியார், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் தமிழ்மொழி ஆளுமையாலும், கருத்துக்களாலும் கவரப்பட்ட ஒரு ஐரோப்பியர் க்ரோஸ். இவர் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி ஆய்வுக்கு பெரும்பங்களிப்புச் செய்துள்ளார். 

பிராங்கோய் க்ரோஸ் இளமைக்காலம் 

பிரான்சின் லியோன் நகரில், குடும்பத்தில் ஒரே மகனாக 1933இல் பிறந்தவர் க்ரோஸ். தனது தந்தை கலாச்சாரமயப்படுத்தப்பட்ட ஒரு மனிதன் என்று கூறியுள்ள அவர், தனது தந்தையின் இரு குணாம்சங்கள் தன்னைக் கவர்ந்தாக கூறுகிறார். ஒன்று மாற்றுக்கலாச்சாரங்கள் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம். இரண்டாவது சுதந்திரமான மனநிலை. 

பிரான்சின் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான அன்ரனி டீ சென்.எக்ஸ்யுபெரி (Antoine de Saint- Exupery) எழுதிய சிறிய இளவரசன் (Little Prince) என்ற நூலைப்படித்தபோது தனது மொழியியல் ஆர்வம் அதிகரித்தது என்று குறிப்பிட்டுள்ளார் க்ரோஸ். 

அவரது புத்தகத்தை வாசித்து வளர்ந்தேன், ஆனால் துரதிஸ்டவசமாக அவரை நான் பார்க்கவில்லை. எக்ஸ்யுபெரியும் க்ரோஸின் அதே லியோன் நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் ஆலோசனையில் பிரஞ்சு, கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக்கற்ற அவருக்கு இந்திய மொழிகள் மீதான ஆர்வம் அதிகரித்தாக குறிப்பிடுகிறார். 

அவர் மொழியியலில் முதுமாணிப்பட்டம் பெற்ற போது இது நடந்தது. 

1954இல் அல்ஜீரியாவில் கெரில்லாக்கள் பிரான்ஸ் ஆட்சியாளர்களை எதிர்த்து தாக்குதல்களை மேற்கொண்டனர். இது அவரை கட்டாய இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தியது. 1957இல் தனது 24வது வயதில் அவரது பெயர் கட்டாய இராணுவ சேவை பட்டியலில் இடம்பெற்றது. 

“நான் ஒரு ஆயுதப்போராட்ட வீரன் அல்ல. ஆனால் இது கட்டாய இராணுவ சேவை. நான் அங்கு நிர்வாக வேலைகளிலும், கற்பிக்கும் வேலையிலும் தான் ஈடுபட்டேன்”. “நான் அங்கு பெற்றுக் கொண்ட அனுபவங்கள் இனவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற மன உறுதியை எனக்கு தந்தது.” என்று அவரது அனுபவம் பேசுகிறது. 

அல்ஜீரியாவில் இருந்து திரும்பிய அவர் பயணங்களை மேற்கொண்டார். இவை வெறும் உல்லாசச் சுற்றுப் பயணங்கள் அல்ல மாறாக மக்களை, அவர்களின் வாழ்வியலை, கலாச்சாரத்ததை கற்றுக் கொள்கின்ற பயணங்கள் என்பது அவர் கருத்து. 

இந்தியாவுக்கும் பிரான்ஸ்சிக்கும் கிழக்கிந்திய வர்த்தக கம்பனி முதல் இருந்த உறவும் தொடர்பும் இந்தியப் பயணங்களுக்கு தன்னைத் தூண்டியதாக கூறுகிறார் க்ரோஸ். 19ம் நூற்றாண்டு வரையிலும் பிரான்ஸ்சின் பல்கலைக்கழகங்களில் தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, கற்கக்கூடியதாக இருந்தது என்றும் பின்னர் அது இல்லாமல் போனது என்றும் வருத்தப்படுகிறார் அவர். 

கிழக்கத்திய மொழிகள், நாகரிகங்களின் தேசிய நிறுவனம் 

இந்தியப்பயணத்தில் க்ரோஸின் அனுபவங்களை கேட்ட பேராசிரியர் மைலே இந்த நிறுவனத்தில் பண்டைத் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்கபிக்குமாறு க்ரோஸ்க்கு ஆர்வம் ஊட்டினார். 

“க்ரோஸ் ஒருவர்தான் அவரது சந்ததியில் இத்துறையில் இன்றுவரை ஈடுபட்டிருந்த ஒருவர்”. என்று கூறுகிறார் அவரது மாணவிகளுள் ஒருவரான எலிசபெத் சேதுபதி.   

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் இலங்கைத் தமிழரான சேதுபதியை திருமணம் செய்துள்ளார் என்பது ஆர்வமான தகவல். இவர் INALCO நிறுவனத்தில் தமிழ்த் துறைத்தலைவியாக உள்ளார் என்பதும் முக்கியமான தகவலாகும். 

2002இல் ஓய்வு பெற்ற க்ரோஸ் பல்வேறு தென் இந்திய மொழி, கலாச்சாரம் சார்ந்த பிரான்ஸ் நிறுவனங்களில் கடமையாற்றி வந்தார். எப்படி இருந்தபோதும் பாண்டிச்சேரியில் 1963 முதல் 1977 வரை தான் கழித்த 14 ஆண்டு காலம்தான். தன் வாழ்வின் பொற்காலம் என்கிறார் க்ரோஸ். 

பண்டைத் தமிழ் என்பது 2ம் நூற்றாண்டு தொடங்கி 10ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டது என்று கூறும் க்ரோஸ், இதில் முக்கியமாக தேவாரம்,திருக்குறள், பெரியபுராணம் போன்ற பத்து பண்டைத் தமிழ் நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார். சமஸ்கிருதத்தில் உள்ள பல விடயங்கள் தமிழிலிலும் உள்ளன என்பது அவர் வாதம். 

மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் முக்கியத்துவம் பற்றி பேசும்போது வாசகர்கள் மத்தியில் அவை இருவகையான உணர்வுகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார். 

1. மூல மொழியில் வாசிக்க்கிடைக்காத ஒன்று, வாசிக்கக் கிடைத்துள்ளது என்ற உணர்வு. 

2. உள்ளடக்கம் மொழிபெயர்ப்பின் ஊடாக மூல மொழியின் அழகை வெளிப்படுத்தும் உணர்வு. 

அதேவேளை மொழி வெறுமனே புத்தகங்களால் மட்டும் வாழ்வதில்லை. மாறாக மக்களின் நாவினால் அது பெரிதும் வாழ்கிறது என்கிறார் க்ரோஸ். 

 வீரமாமுனிவர், க்ரோஸ்: விருதுகளும் கௌரவிப்பும்! 

வீரமாமுனிவர் தமிழில் எழுதினார் ,மொழிபெயர்ப்பு செய்தார் என்பவற்றிற்கும் மேலாக எழுத்துச் சீர்திருத்தம் ஒன்றையும் செய்தார் என்பது இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டிய அறிவியல். 

தமிழில் மெய் எழுத்துக்களை எழுதும் முறையிலும், குறிலில் இருந்து நெடிலை வேறுபடுத்தும் ஒலியைக் குறித்து எழுதுவதிலும் எழுத்துச் சீர்திருத்தம் வீரமாமுனிவரால் செய்யப்பட்டது. 

இவ்வாறான இலக்கிய, இலக்கணப்பணிகளை கௌரவித்து 1968இல் தமிழக அரசு செய்த கௌரவிப்பே வீரமாமுனிவர் மெரினா கடற்கரையில் கம்பீரத்துடன் தோன்றும் காட்சி. 

தமிழ் மொழி உத்தியோக மொழியாகவும், செம்மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தவர் பேராசிரியர் க்ரோஸ்.  

45 ஆயிரம் நூல்களை தனது வீட்டு நூலகத்தில் கொண்டுள்ள பேராசிரியர் இவை இந்தியா, தமிழ் மொழி, மற்றும் தென் இந்தியா தொடர்பாவை என்கிறார்.  

பிரான்ஸ் மக்கள் இன்னும் வெளிநாட்டவர்களை மனம் திறந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்று கவலை தெரிவித்துள்ள க்ரோஸ், இது பிரான்ஸ், ஈழத்தமிழ் சமூகங்களுக்கு இடையே ஒரு இடைவெளியாகவே இருக்கிறது என்று மனம் திறந்து பேசுகிறார். 

பேராசிரியர் க்ரோஸ்சை கௌரவிக்கும் முகமாக இந்திய ஜனாதிபதியினால் வழங்கப்படும் உயர் விருதிகளுள் ஒன்றான “குறள் பீடம்” விருது அவருக்கு 2012இல் வழங்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அவர் பிரயாணம் செய்ய முடியாத நிலையில் இருந்தமையால் ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாகப் பெறமுடியவில்லை. 

மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் அவ்விருதைப் பெற்றுக்கொண்டார். வெளிநாட்டவர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. அந்த வகையில் இது ஒரு வரலாற்றுப் பதிவு. 

அந்த வகையில் வீரமாமுனிவரை அடுத்து மற்றொரு ஐரோப்பிய தமிழ் அறிஞராக க்ரோஸ் இடம்பெறுகிறார். 

பெற்ற தாய்க்கும் பிறந்த பொன்னாட்டிற்கும் அப்பால் எல்லை கடந்து, மற்றொரு தேசத்தில் மாற்று மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்தவர்கள் இப் பேரறிஞர்கள். 

யாதும் ஊரே…..! யாவரும் கேளிர்……!!