புலம் பெயர்ந்த சாதியம் – 6

புலம் பெயர்ந்த சாதியம் – 6

 — அ. தேவதாசன் — 

மாடு ஓடவிட்டு கயிறு எறியவேணும் என்று சொல்லுவார்கள். புலம் பெயர் தேசங்களில் அந்த வித்தையை சாதிய பாதுகாவலர்கள் மிகவும் நிதானமாக கடைப்பிடிக்கிறார்கள். தங்களைவிட குறைந்த சாதியினர் எனக்கருதுவோரை தமது பிள்ளைகள் காதல் கொண்டுவிட்டால் அவர்கள் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதை தேடித்துலாவிக்கண்டு பிடித்து விடுகிறார்கள். தமது பிள்ளைகளோடு கதையோடு கதையாக “அவையளோட நாங்கள் ஊரில் பழகிறதில்லை, வீட்டுக்குள்ள விடுகிறதில்லை” இப்படியாக பல சுயபெருமைக் கதைகளை ஆலோசனை அல்லது அறிவுரை என்கிற பெயரில் பிள்ளைகளிடம் கூறி மனதை மாற்ற முயற்சிப்பார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு இது புரியாது. ஒரே மொழி, ஒரே நிறம், ஒரே தொழில், ஒரே நாடு இதிலென்ன வேறுபாடு என யோசிப்பார்கள். இது ஒருபுறம்!

மறுபுறம் சிங்களவன்தான் நமது எதிரி நாம் எல்லோரும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராடி நாடு பிடிக்க வேண்டும் என்கிற கருத்துக்களும் பிள்ளைகள் மத்தியில் புகுத்தப்படுகிறது. ஒருபுறம் தமிழர் ஒற்றுமை, மறுபுறம் சாதிவேற்றுமை. பொது இடத்தில் பேசுவது ஒன்று வீட்டுக்குள் பேசுவது வேறொன்று.

தமிழர்களுக்கான ஒரு நாடு வேண்டும் என்பதில் தொண்ணூறுவீதமான தமிழர்களுக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. அதற்காக தமிழ்த்தேசியத்தை கையில் எடுப்பதும் முரண்பாடு இல்லை. அதேவேளை சாதிய ஒடுக்குமுறை, பிரதேச வாதம், மதவாதம், பெண்ணிய ஒடுக்குமுறை, வர்க்கமுரண்பாடு என்பனவற்றின் தெளிவும், அதை அகற்றவேண்டும் என்கிற உறுதியும், அதற்கான வேலைத்திட்டங்களும் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் தலைமைகளிடம் அறவே இல்லை. மாறாக இவைகள் அனைத்தையும் அழியவிடாது தற்காத்துக்கொண்டே விடுதலையை வேன்றெடுப்போம் என்கிற குறுகிய சிந்தனைப் போக்கும், இந்த முரண்பாடான வாழ்க்கை முறையும் இங்கு பிறந்த தலைமுறையினருக்கு விடுதலை பற்றிய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரது தர்க்கீகம் அற்ற ஆலோசனையை அல்லது அறிவுரையை கவனத்தில் கொள்வதில்லை. இதற்காக பெற்றோர்களும் துவண்டு விடுவதில்லை.

தொடர்ந்து குறைந்தது மூன்று வருடங்கள் காதல் தொடரும்போது காதலர்கள் மத்தியில் சிறிது சிறிதாக உரசல்கள், கோபங்கள், முரண்பாடுகள், சில நாள் பிரிவுகள் வந்து போவது இயல்பு. இந்த இடைவெளிகளை பெற்றோர்கள் மிகக்கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள். சில தினங்கள் பிள்ளைகள் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் “நாங்கள் முந்தியே சொன்னனாங்கள் நீதான் கேக்கயில்லை, நீ இப்படி இருக்கிறது எங்கட மனதுக்கு எவ்வளவு கஸ்டமாயிருக்கு” இப்படியாக அன்பு மழை கொட்டி இறுதியாக ஒன்று சொல்வார்கள், “சாதிப்புத்தியக் காட்டிப்போட்டான் அல்லது போட்டாள்”. இவ்வாறு தொடர்ந்து சொல்லிச் சொல்லி சிறிய இடைவெளியை பெரும் வெளியாக மாற்றி விடுவார்கள். கல்லும் கரையத்தான் செய்யும், அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்… இப்படியாக பல காதல்கள் பிரிந்து போன வரலாறுகளும் உண்டு.  

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதியை உடைத்து இணைந்த காதலர்களின் சாதிமறுப்புத் திருமணங்களை ஆதிக்க சாதியினர் அவசரமாக கொலைகள் செய்து பழி தீர்த்து விடுவதுண்டு. அதை ஆணவக்கொலை என்பர். அப்படி யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் அவசரப்படுவதில்லை. மிகவும் பொறுமையாக இலக்கை நோக்கி விழிப்புடன் இருப்பார்கள். மாடு ஓட கயிறு எறிந்து வீழ்த்திவிடுவார்கள். அதாவது சந்தர்ப்பம் பார்த்து பிரித்து விடுவார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆனாலும் சரி யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆனாலும் சரி நோக்கம் ஒன்றுதான் சாதியை காப்பாற்றுவது.
செயயற்பாடுகள்தான் வேறுபாடானவை..

சாதிய ஆதிக்கம் என்பது ஒவ்வொரு விடயத்திலும் மிக நுணக்கமாக புலம் பெயர் தேசங்களில் செயற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு ஊர்ச்சங்கங்கள் இருப்பது போன்று தமிழர்களுக்கு என பொதுவான சங்கங்களும் உண்டு. தமிழர் நட்புறவுச்சங்கங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், கோயில் பரிபாலன சபைகள் போன்ற பல அமைப்புகள் இயக்குகின்றன. இவைகளில் அதிகமானவை தமிழ்த்தேசிய பற்றாளர்கள் என்போரால் வழி நடாத்தப்படுகின்றன. இவ்வமைப்புக்கள் அறிவியல் பலத்தில் செயற்படுவதில்லை, மாறாக பொருளாதார பலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே செயற்படுகின்றன. இப்பொருளாதார பலம் ஆதிக்க சாதியினர் எனப்படுவோர் கைவசமே இருப்பதனால் இவ்வமைப்புகளை ஆதிக்க சாதிகள் கையகப்படுத்த இலகுவான வாய்ப்பாக அமைகிறது.  

இவ்வமைப்புக்களை மேலோட்டமாக பார்க்கிற போது தமிழர்களின் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் சமத்துவமாக செயற்படுத்துவது போன்ற தோற்றப்பாடு தெரியும். இவைகளுக்கு உள்ளே சென்று பார்த்தால் சாதிய ஆதிக்கம் மிக நுணுக்கமாக செயற்படுவதை கண்டுகொள்ளலாம். இவ்வமைப்புகளுக்கு வெளித்தோற்றத்தில் ஒரு நிர்வாகம் இருந்தாலும் அதற்குள் ஒரு நிழல் நிர்வாகம் இருந்துகொண்டே இருக்கும். அந்த நிழல் நிர்வாகிகள் அந்த அமைப்புகளின் உறுப்பினராக கூட இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களே நிர்வாகம் எப்படி இயங்கவேண்டும் நிர்வாகத்தில் யார் யார் இடம்பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். வெளிப்படைத்தன்மையற்ற இவ் இயங்கியல் முறை சரியான ஜனநாயக வடிவத்தை தேட முடியாமலும், சமூக மாற்றத்திற்கான விதைகளை ஊன்ற முடியாமலும், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியாமலும் பழமைவாத சிந்தனைகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது.  

இதனால், புலம்பெயர் தேசங்களில் பிறந்த இளஞ்சந்ததியினர் “பழமைவாத சக்திக”ளோடு தங்களை இணைத்துக்கொள்ள முடியாது தூர விலகி தமக்கான வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இச்செயற்பாடுகள் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுடன் கூடிய சமூக நல்லுறவை இழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது.

புலம் பெயர் தேசங்களில் உருவாக்கப்பட்ட சகல அமைப்புகளின் முதன்மை நோக்கம் என்பது கலாச்சாரத்தை காப்பாற்றுவது. இதற்காக சகல அமைப்புகளும் கலாச்சார நிகழ்வுகள் நடாத்த வேண்டியது கட்டாயம். கலாச்சார நிழ்ச்சிகளில் முதலாவது நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றுதல் நடக்கும். ஆளுயர குத்துவிளக்கு வைத்து, அந்தந்த அமைப்புகளுக்கு நிதி வழங்கும் ஊர்ப்பணக்காரர் சிலரும் ஊரில் ஆசிரியராக இருந்து இடையில் விட்டிட்டு வந்தவர்கள் அல்லது பென்சனுக்கு பிறகு வந்தவர்கள் ஆகியோரை அழைத்து விளக்கு ஏற்றப்பட்ட பின்னர் இறைவணக்கம் செய்யப்படும். இவ் இறைவணக்கம் பரதநாட்டிய நடனம் மூலம் கடவுளுக்கு காணிக்கையாக்கப்படும். இதனைத்தொடர்ந்து  நடனம், நாடகம், இசை இப்படி பல நிகழ்வுகள் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகளின் பிரதான நிகழ்வாக பரத நாட்டியம் மட்டும் நிகழ்ச்சி நேரங்களில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனேனில், மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர், “பரதம் தமிழர்களின் கலை” என்று பலராலும் கண்டுபிடிக்கப்பட்டு அது கற்றுக்கொள்ளபடுகிறது.

மேற்குலக நாடுகளின் பணபலம் நம்மவர் மத்தியிலும் பரவலாக புழக்கத்தில் உள்ளதால் பணம் படைத்தவர்களுக்கான கடவுளைப் புகழும் பரதநாட்டியம் தமிழரின் அதி உச்ச கலையாக மாறிப்போனது வேடிக்கை. மேற்குறிப்பிட்ட சங்க நிகழ்வுகளுக்கு பெண்கள் சீலை அணிந்து வருவதும் ஆண்கள் கோட்சூட் அணிந்து வருவதும் கலாச்சாரத்தை காப்பாற்றும் நோக்கம் என்றே கருதுகிறார்கள்.

நிகழ்வு மேடைகளிலும் கலாச்சாரம் காப்பாற்ற வேண்டும் என்கிற உபதேசங்கள் உரத்த குரலில் அறிஞர் பெருமக்களால் பேசப்படும். நானும் பலரிடம் தமிழ்க்கலாச்சாரம் பற்றிய அறிதலுக்காக அதற்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலாச்சாரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அறிஞர் பெருமக்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை அவர்களின் பதிலாக இருப்பது “பெண்கள் சேலை அணிவது, பொட்டு வைப்பது, தாலி கட்டுவது, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது” ஆகியவைதான் என முடித்து விடுவார்கள். இந்தியாவில் தமிழர்கள் அல்லாதவரும் சேலை, போட்டு, தாலி, ஒருத்தனுக்கு ஒருத்தி வாழ்க்கை முறைப்படி வாழ்கிறார்கள். இதுதான் தமிழ் கலாச்சாரமா? தமிழர்களுக்கென தனித்துவமாக வேறேதும் இல்லையா? என திருப்பிக் கேட்டால் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும். நமக்கு தெரிவதெல்லாம் கலாச்சாரம் என்கிற ஒற்றைச் சொல் மட்டுமே! இந்த ஒற்றைச் சொல்லக்குப் பின்னால் சாதியமும் பெண்ணொடுக்கு முறையும் நிரம்பிக்கிடக்கிறது.
            

தொடரும்……