சொல்லத் துணிந்தேன்—56

சொல்லத் துணிந்தேன்—56

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி நத்தார் சிறப்பு ஆராதனை நேரத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான (இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்) சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட அனைவருக்கும்  மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு, இப்போது அதே நீதிமன்றத்தினால் 13.01.2021 அன்று வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு பிள்ளையானுள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. 

பிள்ளையானின் விடுதலையை விரும்பாத அரசியல் சக்திகள் அவரின் விடுதலை பற்றி விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. 

முன்னாள் ‘ரெலோ’ இயக்கத் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிள்ளையானை விடுதலை செய்ய முடியுமானால் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது எனக் கேள்வியெழுப்பியுள்ளார். 

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கேட்பதில் தவறொன்றுமில்லை. அது நியாயமான கோரிக்கையாகும். ஆனால், சிவாஜிலிங்கம் போன்றவர்களின் பேச்சுத் தொனி அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதைவிட பிள்ளையானை ஏன் விடுதலை செய்தீர்கள்? அவரை விடுதலை செய்திருக்கக்கூடாது என்பதாகவே உள்ளது. 

சிவாஜிலிங்கத்தின் கடந்த கால அரசியற் செயற்பாடுகள் பல அரசியல் கோமாளித்தனமாகவே வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் திருமதி கிலாரி பில் கிளின்டன் வெல்ல வேண்டுமென்று தேங்காயுடைத்தமை– இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் (2010, 2019 ) வேட்பாளராகப் போட்டியிட்டமை– இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் (2015) முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவை எதிர்ப்பதாகக் கூறிக் குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிட்டமை–முன்னாள் மட்டக்களப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் (தமிழரசுக் கட்சி/தமிழர் விடுதலைக் கூட்டணி) அமைச்சருமான செ. இராசதுரை அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடி காட்டியமை போன்றவை அவர் நிகழ்த்திக் காட்டிய அரசியல் கோமாளிக் கூத்துக்களில் சிலவாகும். சிவாஜிலிங்கத்தின் பேச்சுக்களைச் ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளத் தேவையில்லையென்றாலும் கூட, பிள்ளையானின் விடுதலை குறித்தும் வழக்குத் தள்ளுபடி குறித்தும் பிழையான புரிதல் மக்களிடையே இருக்கக்கூடாது– பிள்ளையான் மட்டுமல்ல அது யாராக இருந்தாலும் கூட இவ்வாறான தவறான புரிதலை மக்களிடையே ஏற்படுத்தக் கூடாது–என்பதாலேயே இப்பத்தியில் இவ்விவகாரம் குறித்துப் பேச வேண்டியுள்ளது.  

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஓர் அரசியற் தீர்மானத்தின் மூலமாகவோ அல்லது ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பினூடாகவோ பிள்ளையான் விடுதலை செய்யப்படவில்லையென்பதை சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கவனத்தில் கொள்ளவில்லைப் போலும். வழமையான சட்ட நடைமுறைகளுக்கு ஊடாகவே பிள்ளையானின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக் காட்டுவதே இப்பத்தியின் நோக்கமாகும். 

இப்பத்தி எழுத்தாளர் பிள்ளையானின் கட்சியைச் சேர்ந்தவருமல்ல, அவரின் எல்லா அரசியல் நடவடிக்கைகளுடனும் உடன்படவுமில்லையென்பதை முதற்கண் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால், முன்பே கூறியது போல் பிள்ளையானின் விடுதலை குறித்தும் வழக்குத் தள்ளுபடி குறித்தும் தவறான புரிதல் இருக்கக் கூடாது. 

மேற்படி கொலைச் சம்பவம் நடந்து சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் பிரதீப் மாஸ்டர் என்பவரும் அவருடன் சேர்த்து இன்னொருவரும் கைது செய்யப்படுகின்றனர். பின்னர் பிள்ளையானுள்ளிட்ட மேலும் மூவர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் ஐவருக்கெதிராகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. 

இது குறித்த விசாரணைகள் ஆரம்பித்தபோது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முன்வைத்திருந்த பிரதான சாட்சியான பிரதீப் மாஸ்டரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பிள்ளையான் தரப்பினால் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஆனால், மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கிறது. 

எனினும், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் மேற்படி தீர்மானத்தை ஆட்சேபித்து பிள்ளையான் தரப்பினால் கொழும்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதீப் மாஸ்டரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தீர்ப்பளித்தது. 

இதனடிப்படையில்தான் பிள்ளையான் உள்ளிட்ட அனைவருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுப் பின்னர் மேற்படி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியாதெனச் சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பேரில் அவ் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு வழமையான சட்ட முறைகளுக்கூடாகவே இது நடைபெற்றுள்ளது. 

உண்மை இவ்வாறிருக்க அதனை உணர்ந்து கொள்ளாது சிவாஜிலிங்கம் போன்ற அரசியல் பிரமுகர்கள் பிள்ளையான் மீது தாங்கள் கொண்டுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் பிழையான–பொய்யான கூற்றுகளைக் கூறித் தமிழர் அரசியலைச் ‘சாக்கடை’ யாக்கக் கூடாது. 

மேலும், வடக்கு மாகாணத்தைத் தோற்றுவாய்த் தளமாகக் கொண்டதும் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என நாமகரணம் சூட்டிக் கொண்டதுமான தமிழ் அரசியல் கட்சிகளின் யாழ் மேலாதிக்கச் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளினால் ஏற்கனவே விசனமும் வெறுப்புமுற்றிருக்கும் கிழக்கு மாகாணத் தமிழர்களை மென்மேலும் துருவப்படுத்தவே சிவாஜிலிங்கம் போன்றோர் துணை போகிறார்கள் என்பதையும் இப்பத்தி சுட்டிக்காட்டத் துணிகிறது.