— செங்கதிரோன் —
மல்லிகை ஜீவா! மாண்புறு மனிதன் நீ! – இன்றுனை
மண்ணில் நாம் இழந்தோம்!
இலக்கிய உலகு எங்கணும் சோகம்!
ஈடுசெய்ய முடியாதுன் இழப்பு!
எண்பத்தியேழில் இலக்கிய உலகு
எடுத்தது மணிவிழா! – பின்னர் உன்
பவளவிழாவும் பார்த்துக் களித்தோம்!
அகவை எண்பதை அடைந்த போதினில்
மிகவும் உனைநாம் மெச்சி மகிழ்ந்தோம்!
தொண்ணூறு வயதைத் தாண்டியபோதும்
துவளா உந்தன் துணிவைப் புகழ்ந்தோம்!
நூறுவயதை அடைவதற்கின்னும்
ஆறு ஆண்டுகள் இருக்கும் போதிலே
ஜயோ! உந்தன் ஆவி பிரிந்ததே!
‘சுதந்திரன்‘ இல் – உன் எழுத்து
சூல் இனைக் கொண்டதும்
கணேசலிங்கன் அதற்குக் கால்ஆய் அமைந்ததும்,
‘எஸ்.பொ. எழுத்து நண்பராய் ஆனதும்
பின்னர் ‘டானியல்‘ பிணைப்பு நிகழ்ததும்
சென்னையில் வெளிவரும் சிற்றிதழ் ஒன்றினில்
‘சிலுவை‘ என்றஉன் சிறுகதை வந்ததால்
சிலாகித்து அதனைச் சிந்தையில் கொண்டவர்
‘ஏ.ஜே.‘ எனும்நல் இலக்கிய நண்பரோ
தேடிவந் துன்னுடன் தோழமை பூண்டதும்
தமிழ்நாடும்உன் தகுதி அறிந்ததால்
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தி எட்டிலே
அட்டைப்படத்தில் உன் அழகிய முகமலர்
தாங்கியதாகச் ‘சரஸ்வதி‘ – சஞ்சிகை(யை)
விஜயபாஸ்கரன் வெளியிட்டு வைத்ததும்
சென்னை ‘சரஸ்வதி‘ – உன்
சிறுகதைத் தொகுதியைத்
‘தண்ணீரும் கண்ணீரும்‘ தலைப்பில் கொணர்ந்ததும்
அறுபதாம் ஆண்டிலே அந்தப் புத்தகம்
சாகித்ய மண்டலப் பரிசுக்குரியதாய்
ஆகித் தமிழில் சிறுகதை இலக்கியம்
ஆக்குமுன் ஆற்றலை அளவிட வைத்ததும்
இலக்கிய உலகினில் ஏற்றமுற நீ
எடுத்து வைத்தநல் இனிய தடம்களாம்!
‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்‘
ஈழமண்ணில் எழுந்த வேளையில்
விளங்கினாய் யாழ்கிளைச் செயல் ஆளனாய்! – அதன்
வெற்றி தோல்வியில் பங்கு கொண்டதால் – நீ
கற்றுக் கொண்டவை காலத்தின் பதிவுகள்.
கார்த்திகேசன் மாஸ்ரரில் ‘மார்க்ஸிசம்‘
நேர்த்தியாய்க் கற்று நெஞ்சில் மானுட
நேயம் வளர்த்த டொமினிக் ஜீவா!
‘பஞ்சமர்‘ தம்மைப் பழித்திடுவோரை
வெஞ்சினம் கொண்டு வீழ்த்திய வீரன்!
அஞ்சினன் அல்லன்! அத்தகையோரை
எத்தகை உயர்ந்த இடத்தினரேனும்
பொத்திவாய்புறம் போகவைத்தவன்!
‘கந்தபுராணக் கலாசாரம்‘ என்றெலாம்
கணக்கிலாதபல கதைகளைக் கட்டியும்
சொந்தமண்ணின் சுதந்திர மாந்தரைச்
சோடை போனவர் என்று சுரண்டியும்
முந்தமுனைந்த மூடரை எழுத்தினால்
முதுகுகாட்டி ஓடி மூலையில்
ஒளிக்க வைத்தவன்! – நெஞ்சில்
ஓர்மம் படைத்தவன்!
‘இழிசனர் இலக்கியம்‘ என்றிவர் எழுத்தினை
‘இலக்கியக் கொம்புகள்‘ இயம்பிய வேளையில்
கிழிகிழியெனக் கிழித்தவர் கிண்டலைக்
கீழ்த்தரமானவை என்று நிறுவியே
விழிபிதுங்கிஅவ் வீணர்கள் விலகிட
வீறுகொண்டுநல் வினை விதைத்தவன்.
அறுபத்திஆறு ஆகஸ்ட் பதினைந்தில்
ஆமாம்! அந்த அரங்கேற்றம் நிகழ்ந்தது.
சிகை அலங்காரச் சிறுகடையொன்றினுள்
சிறியமூலையில் சிற்றிதழ் ‘மல்லிகை‘
முகை அவிழ்ந்தது! – இம் மூத்த சஞ்சிகை
நாற்பத்தியெட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாய்
நடை பயின்றதோர் நல்ல சஞ்சிகை.
‘மல்லிகை‘ யெனும்இம் மாசிகை வரவினால்
‘மல்லிகை ஜீவா! – என
மதிக்கப்பட்டவர்!
வெள்ளை வேட்டியும் வெள்ளை‘நெஸனலும்‘
வெளியில் எங்கும் வேறுடை தரியா –உன்
உள்ளத்தனையது உடையின் வெண்ணிறம்.
கொள்ளை அழகு – உந்தன்
கொடுப்புச் சிரிப்பு!
கொண்ட கொள்கையில் கோணாப் போக்கும்
துண்டை எவர்க்கும் தூக்கா மிடுக்கும்
குன்றின் வைரக் கொள்கைப் பிடிப்பும்
என்றும் இலங்கும் இளமைத் துடிப்பும்
என்றும் உன்னை இளமையாய்க் காட்டுமே!
இலக்கியம் எங்கோ அங்கெலாம் ஏகி
களைப்பிலாதெங்கும் ஏறி இறங்கி
இளைஞனைப் போலவே எதிலிலும் துடிப்பாய்
எண்ணித் துணிந்து கருமங்கள் இயற்றி
உழைப்புஒன்றே உயர்ந்ததென்றெண்ணி
ஊதியம் தன்னை ஒருபுறம் தள்ளி
ஊறுகள் விளையினும் உடைத்துத் தகர்த்து
உன்னதமான கொள்கைகள் நெஞ்சில்
உள்ளதால் என்றும் உலகு அளாவிய
உழைக்கும் மாந்தரை உயர்வெனப் போற்றிய
தோழர் டொமினிக் ஜீவா! – உன் நாமம்
துலங்கும்! உலகில் துலங்கும்!! துலங்கும்!!!