— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—
சென்ற பத்தியில் (சொல்லத் துணிந்தேன்—52) 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலின் போது நடந்த விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.
2008ல் பிள்ளையானை முதலமைச்சராகக் கொண்டு அமைந்த மாகாண அரசு அதன் முழுப் பதவிக்காலமும் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னரே முதலமைச்சரின்ஒப்புதலுடன் 2012ல் கலைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தல் 08.09.2012 இல் நடைபெற்றது.
இதற்கு முந்திய 2008 தேர்தலில் அதாவது கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட மாட்டோமென்று கொள்கைச் சூளுரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு மாறாக 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது.2012 செப்டம்பர் 08-ஆம் தேதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புUPFA—14
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA —11
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்SLMC—07
ஐக்கிய தேசியக் கட்சி UNP—04
தேசிய சுதந்திர முன்னணி NFF—01
மொத்தம்—37
கிழக்கு மாகாணசபையில் தனிக்கட்சியொன்று ஆட்சியமைப்பதாக இருந்தால் மொத்தம் 37 ஆசனங்களில் ஆகக்குறைந்தது 19 ஆசனங்களைப் பெறவேண்டும். இது நடைமுறையில் எந்தக் கட்சிக்கும் சாத்தியமில்லைஎன்பது ஒரு சாதாரண அரசியல் மாணவனுக்கும் தெரிந்த விடயம். 2012செப்டம்பர் 08-ஆம் தேதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 14ஆசனங்களைப் பெற்ற UPFA (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) உடன் சேர்ந்து ஆட்சியமைக்க வரும்படி 11ஆசனங்களைப் பெற்றிருந்த TNA(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) க்கு அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் பச்சை விளக்குச் சமிக்ஞைக்காகப் பல நாள் காத்திருந்து விட்டுத்தான், SLMC உடன் உடன்பாட்டிற்கு வந்து கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டரை வருடங்களுக்கு UPFA ஐச் சேர்ந்த நஜீப் மஜீத் முதலமைச்சரானார்.
இக்காலகட்டத்தில் கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதைப் போல் TNA ஆனது SLMC (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் காலத்தை வீணாக்கியது.
TNA இன் 11 ஆசனங்களும் SLMC இன்07 ஆசனங்களுடன் சேர்ந்தாலும் கூட ஆட்சியமைக்கப் போதாது (11+07=18<19). UNP இன் 04ஆசனங்களும் சேர்ந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். (11+07+04=22>19)
மத்தியில் அதிகாரத்தில் உள்ள UPFA உடன் சேர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதிலா? அல்லது மத்தியில் எதிர்க் கட்சியாக உள்ள UNP உடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதிலா? நன்மைகளுண்டு என்று கேட்டால் ஒரு சிறுவன் கூட UPFA உடன் சேர்ந்து மாகாணசபை ஆட்சியமைப்பதுதான் நன்மை என்று கூறுவான். இது கூடத் தெரியாமல் SLMC உடன் TNA பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. SLMC ஐப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள UPFAஅரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வைத்துக்கொண்டிருந்த அவர்கள், மத்தியில் எதிர்க்கட்சியாக உள்ள TNA உடனும் UNP உடனும் சேர்ந்து மாகாணசபையில் ஆட்சி அமைக்க வரமாட்டார்கள் என்று தெரிந்தும் கூட அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது TNA இன் வழமையான அரசியல் முட்டாள்தனமாகும்.
SLMC ஆனது TNA உடன் ஒரு புறம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போல் போக்குக்காட்டிக் கொண்டே மறுபுறம் UPFA உடன் உடன்பாட்டிற்கு வந்தது. அரசியல் காய்களை நகர்த்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கேற்றது. அதில் தவறில்லை.அது அவர்களுடைய அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன் சார்ந்த அரசியல் தந்திரோபாயம். TNA ஆனது இறுதியில் SLMC தங்களை ஏமாற்றி விட்டதாக அழுது வடிந்ததுதான் மிச்சம்.
மேலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரைUNP என்றாலும் சரி அல்லது SLFP என்றாலும் சரி அல்லது UPFA என்றாலும் சரி எல்லாமே குணாம்சம் அளவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. பேரினவாதக் கட்சிகளிலொன்றான அதிலும் மத்தியில் எதிர்க்கட்சியாகவுமுள்ள UNP உடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு TNA முன் வர முடியுமானால் இன்னொரு பேரினவாதக் கட்சியான அதேவேளை மத்தியில் ஆட்சியிலுள்ள UPFA உடன் சேர்ந்து ஆட்சியமைப்பதில் TNA ற்கு இருந்த தடை என்ன? TNA ஆனது UNP இற்குத் தேவையான அரசியலைச் செய்கிறதே தவிர தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியலைச் செய்யவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது (?) என்னவென்றால் பிள்ளையான் மீண்டும் முதலமைச்சராக வருவதைத் தடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிள்ளையானைப் பழிதீர்த்துக் கொண்டது மட்டுமே.
தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) இத் தேர்தலில் கிழக்கு மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றுவோமென தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதலமைச்சர் பதவியையும் அவர்களுக்கு கொடுப்பதற்குச் சம்மதித்து வடக்குக் கிழக்கை இணைப்போம் என்றது. இரண்டுமே நடைபெறவில்லை.
கிழக்குத் தமிழர்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை பிள்ளையானுக்குச் சகுனப்பிழையை ஏற்படுத்து என்று புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இட்ட கட்டளையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவ்வனே நிறைவேற்றியது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் அத்தனையுடனும் இப்பத்தி எழுத்தாளருக்கு உடன்பாடில்லை. அது வேறு விடயம். ஆனால், பிள்ளையானைப் பழிவாங்கியதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த நன்மைகள் என்ன என்பதே கேள்வி. இப்பத்தி எழுத்தாளரின் பார்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விதத்தில் அரசியல் தந்திரோபாயத்துடன் செயற்பட்டிருக்கலாம்.
ஒன்று–(தேர்தலுக்கு முன்னர்): இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்டிருந்த ‘வடகிழக்கு’மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர், கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக–பொருளாதார–அரசியல் இருப்பிற்கான ஆபத்தைக் கணக்கிலெடுத்து, 2008ல் நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ‘பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் நாம் போட்டியிடமாட்டோம்’ என்ற நிலைப்பாட்டையெடுத்து அத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியதைப் போன்று இத்தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தால் அப்போது ஏற்பட்ட கையறுநிலை கிழக்குத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கமாட்டாது.
மற்றது–(தேர்தலுக்குப் பின்னர்): தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டிய மற்றொன்று என்னவெனில், “முதலமைச்சர் பதவியோ வேறு அமைச்சர் பதவியோ எமக்கு வேண்டாம். அரசாங்கம் விரும்பும் தமிழ் முதலமைச்சரை நியமித்துக் கொள்ளுங்கள். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இன்னும் ஆறு மாத காலத்திற்குள் (அல்லது ஒரு வருடத்திற்குள்) அரசாங்கம் முன்வைக்க வேண்டும்” என்ற காலக்கெடு நிபந்தனையுடன் (தமிழ் மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரக்கூடிய–ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிப்பது போன்ற–உப நிபந்தனைகளையும்கூட விதித்திருக்கலாம்) ஆட்சியமைப்பதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் தீர்மானமொன்றை எடுத்திருக்கலாம்.
மேலும், வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிக்குமாறு எந்தத் தமிழ்க் கட்சியும் கேட்கவில்லை. வடக்கில் இருந்து கிழக்கைப் பிரிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பின்படியே கிழக்கு பிரிக்கப்பட்டது. அப்போது அதனை எதிர்த்துக் காத்திரமான தொடர் சட்ட நடவடிக்கைகளையோ அல்லது மக்களைத் திரட்டி வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்திச் சாத்வீகப் போராட்டங்களையோ முன்னெடுக்கத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றினால் வடக்கு கிழக்கை இணைப்போமென்று கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டமை எப்படியாவது பேசி தமிழ் மக்களின் வாக்கைச் சூறையாடும் நோக்கமே தவிர வேறல்ல. நடைமுறைச் சாத்தியம் இல்லாதவற்றைப் பேசுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம் ஆகிவிட்டமை தமிழர்களின் தலைவிதி.
2008 இல் முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்த போது வடகிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவோமேயன்றி பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டோமென்று ஒதுங்கி நின்றவர்கள், இத் தேர்தலில் போட்டியிட்டது எவ்வகையில் கொள்கை நேர்மையானது. இது முற்றிலும் ஒரு முரண்பாடான அரசியல் நிலைப்பாடாகும்.
கட்சி அரசியலுக்கு அப்பால் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக–பொருளாதார–அரசியல் எதிர்காலத்தின் மீது ஆத்மார்த்தமான அக்கறை கொண்ட சில சமூக அரசியல் முக்கியஸ்தர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிவிடும்படி இறுதி நேரம்வரை இடித்துக் கூறியும் (இப்பத்தி எழுத்தாளரும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தார்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் தவறான அரசியல் தீர்மானம் ஒன்றை தான்தோன்றித்தனமாக எடுத்து இத் தேர்தலில் போட்டியிட்டது. 2010ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தவறான முடிவு எப்படித் தற்கொலைக்கு ஒப்பானதோ அதனை விட மோசமானது,இரண்டாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட எடுத்த முடிவு.
களநிலையைக் கணக்கிலெடுக்காத–கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக–பொருளாதார–அரசியல் இருப்புக்கு வந்திருக்கும் எதிர்கால ஆபத்தைக் கணக்கிலெடுக்காத–முட்டாள்தனமான முடிவு இது என்பதை இத்தேர்தல் முடிவுகளும் அதன் பின்விளைவுகளும் நிரூபித்துள்ளன. அப்போது ஆட்சியிலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை மேற்கூறியவாறு எடுத்திருந்தால் (இப்படியானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு தலைமைப் பீடத்தை வலியுறுத்தும்படி இப்பத்தி எழுத்தாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுக் கூட்டமைப்புப் பட்டியலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவான உறுப்பினரிடம் கேட்டிருந்தார்) ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்க முடியும். அவையாவன:
1. பதவிக்காக அல்ல; இனப்பிரச்சினைத் தீர்வுக்காகவே அரசாங்கத்தை ஆதரிக்கின்றோமென்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி ஜனாதிபதிக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். சர்வதேசத்திற்கும் இதனை வெளிப்படுத்தியிருக்க முடியும்.
2. ஆட்சியதிகாரத்தைத் தீர்மானிப்பதில் பேரம் பேசும் சக்தி அல்லது வலு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கைகளுக்குப் போகாமல் தடுத்து அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்வசப்படுத்தியிருக்கலாம். தான் விட்ட அரசியல் தவறுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் குறை கூறும் சந்தர்ப்பத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனால் தவிர்த்திருக்க முடியும்.
3. பிள்ளையானுடனான பகைமையுணர்வு நீங்கி எதிர்காலத்தில் வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு அதிகாரப் பகிர்வு அலகுக்குப் பிள்ளையானின் கட்சியையும் சம்மதிக்க வைத்திருக்கலாம்.
இத்தேர்தல் பெறுபேறுகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணந்தால் அதற்கு ஆதரவளிக்கத்தயார் என அப்போது மத்தியில் எதிர்க்கட்சியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதை ஏற்றது. தேர்தல் முடிந்ததும் ‘ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ளது. ஆட்சியமைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் முடிவை நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம்’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுதான்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும்) ஒன்றுதான். அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் சொல்லுவார் ‘இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று. எனவே எதிர்க் கட்சியிலுள்ள பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்வதை விட ஆட்சியிலுள்ள மற்றொரு பேரினவாதக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்து அதனால் வரக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் அல்லவா?அதே போன்று மத்தியில் அரசாங்கத்தை ஆதரித்து அதன் பங்காளிக் கட்சியாகவுமிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்ய முடியுமென்றால் அதே அரசாங்கத்தை ஆதரித்து நின்ற பிள்ளையானுடன் சேர்ந்து அரசியல் செய்ய என்னதடை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது. தர்க்கரீதியான இந்த வாதத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிலென்ன? முதற்கட்டம் இதுவென்றால் அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பி ஏமாந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களை ஏமாற்றி விட்டது என்று அறிக்கை விட்டு அழுது வடிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,இரண்டாம் கட்டமான 2015 ஜனவரி 08 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை அடுத்து வரும் பத்தியில் (சொல்லத் துணிந்தேன்–54)பார்க்கலாம்.