‘பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமடா’ : நாம் வாழ்வது நகரத்திலா இல்லை நரகத்திலா?

‘பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமடா’ : நாம் வாழ்வது நகரத்திலா இல்லை நரகத்திலா?

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

வெள்ளம் சூழ்ந்திருக்கிறது எங்கும். பாரதி இருந்திந்தால் “பார்க்குமிடமெங்கும் வெள்ளமடா” எனப் பாடியிருப்பார். ஆனால், இதைப்பார்த்து யாரும் ஆனந்தப்பட முடியாது. வெள்ளம் பார்ப்பதற்கும் படமெடுப்பதற்கும் அழகாக இருக்கலாம். அதற்குள் வாழ வேண்டியிருந்தால் அழுகைதான் வரும். 

வெள்ளம் நிரம்பிய தெருவில் கால் வைத்து நடக்க முடியாது. வீட்டுக்குள்ளும் இருக்க முடியாது. நுளம்புத் தொல்லையும் நாற்றமும் ஆட்களைக் கொன்று விடும்.  

வேண்டுமென்றால் ஒரு தடவை யாழ்ப்பாண மாநகரத்திலிருக்கும் நாவாந்துறைப்பக்கம் வந்து பாருங்கள்,எப்படியிருக்கும் என்று அப்பொழுது புரியும். அல்லது கிளிநொச்சியில் பன்னக்கண்டிக்கோ கொடிகாமத்தில் நாவலடிக்கோ வாருங்கள். அங்கெல்லாம் ஏன், உங்கள் ஊர்களிலும் இந்த வெள்ள வரமிருக்கலாம். அல்லது அடுத்த அதற்கடுத்த ஊர்களிலும் இருக்கக் கூடும். 

இவ்வளவுக்கும் நாங்கள் “அபிவிருத்தி அபிவிருத்தி“ என்ற ஓயாதொலிக்கும் அலங்கார வார்த்தைகளின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு தெருவிலும் உள்ள அபிவிருத்திப் பெயர்ப்பலகைகளைப் பார்த்தால், இந்த நேரம் நாங்கள் சொர்க்கத்தில் அல்லவா இருந்திருக்க வேணும்!  

அபிவிருத்தி நாயகர்கள் வேறு அந்தப் பெயர்ப்பலகைகளில் சிரித்துக் கொண்டிக்கிறார்கள். அவர்கள் தங்களை நினைத்துச் சிரிக்கிறார்களா? அல்லது எங்களை நினைத்துதான் இப்படிச் சிரிக்கிறார்களா? என்று எனக்குக் கேள்வி. 

உண்மையில் நாங்கள் இருப்பதோ நரகத்தில். இதை மாறி யாரும் நகரத்தில் என்று வாசித்திருந்தால் தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். நமக்கு வாய்த்திருக்கும் தலைவர்கள் இப்படித்தான் நரகத்திலேயே எங்களை வைத்திருக்கிறார்கள். அதையிட்டெல்லாம் அவர்களுக்குக் கூச்சமில்லை. நமக்கும்தான். இல்லையென்றால், இவர்களையே நாம் தலைவர்களாக வைத்துக் கொண்டிருப்போமா? 

”மழை வந்தால் வெள்ளம் வரும்தானே! அதைப்போலக் கோடை என்றால் வரட்சி ஏற்படும். இதிலென்ன புதுமை?இயற்கையின் நியதி அப்படி” என்று யாரேனும்  அறிஞர் பெருமக்கள் ஞான வார்த்தைகளால் பதில் சொல்லக் கூடும். அவர்களுக்குக்கு நாம் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம். “இயற்கையை வென்றே மனித சமூகம் வாழ்கிறது. மாரிக்கும் கோடைக்கும் இடையில் சமனிலையைக் காண்பதே அறிவு. அதற்கே அரசாங்கமும் அபிவிருத்தியும் அதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்கு நிர்வாகப் பொறிமுறையும் இருக்கிறது” என. 

வெள்ளம் வரும் என்பதைக் கணக்கிட்டே வீதிகள், பாலங்கள், ஊர் மற்றும் நகர அபவிருத்தியைச் செய்ய வேணும். அதைப்போல வரட்சிக்காலத்தில் அதைத் தாங்கிக் கொள்வதற்கு என்ன செய்வது என்பதையும் திட்டமிட வேண்டும். 

இதைச் சரியாகச் செய்தால் அதுவே அபிவிருத்தி. இல்லையென்றால் அதை நாங்கள் குறை விருத்தி என்றே சொல்ல முடியும். 

“யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் பத்து ஆண்டுகள் முடிந்திருக்கிறது. நாட்டில் கஜானா வேறு காலியாக உள்ளது. இதற்குள் இவ்வளவைச்செய்திருப்பதே பெருங்காரியம்” என்றும் யாரேனும் ஒரு புத்திசாலி இதற்குக் காரணம் கண்டு பிடிக்கலாம். 

யுத்தம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதற்குள் எவ்வளவோ விசயங்களைச் செய்திருக்கலாம். எவ்வளவோ செய்திருக்கவும் வேண்டும். அப்படிச் செய்திருக்க வேண்டிய  – தேவையான விசயங்கள் ஆயிரமிருக்கின்றன. ஆனால்,தேவையில்லாத விசயங்களில்தான் அரசாங்கத்துக்கும் அக்கறையிருக்கிறது. நமக்கும் கரிசனை. கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலிருந்த நினைவுத்தூபியொன்றை உடைத்ததும் அதைப் பிறகு (உத்தியோக பூர்வமாக என்று) கட்டுவதும் தேவையான ஒன்றுதானா? அதைத் தொடுவானேன்,கவலைப்படுவானேன்? என்ற நிலையில் அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? 

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சர்ச்சை. பிணங்களை அடக்கம் செய்யச் சர்ச்சை. மாடு மேய்க்கச் சென்றால் சர்ச்சை. சொந்தக் காணியில் குடியிருக்கப்போகிறோம் என்றால் சர்ச்சை. காணாமலாக்கப்பட்ட பிள்ளையையோ புருசனையோ தேடிச் சென்றால் சர்ச்சை. பாராளுமன்றத்தில்,மாநகர சபையில், பிரதேச சபைகளில் என்று எல்லா இடங்களிலும் சர்ச்சை. இப்பொழுது அபிவிருத்தியைக் கண்காணிக்கவும் அதை முடுக்கி விடவும் என்று படை அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

இது சரியா, தவறா என்று சர்ச்சை. கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதற்கென்றும் படை அதிகாரிகளே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொவிட் 19பயங்கர வைரஸ் என்பது உண்மை. ஆனால். அதை பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் வைத்துக்கொண்டு இந்த நியமனங்களைச் செய்தால், அந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? பாவம். அவர்கள் தங்கள்  கண்ணுக்கு எந்தப் பயங்கரவாதியும் அப்படித் தெரியவில்லை என்று தங்கள் மனைவிமார்களிடமும் காதவிகளிடமும் இரவில் சொல்லி அழுகிறார்கள். இது அவர்களுக்குச் செய்திருக்கும் அநியாயம். தங்களுடைய இறுதிக்காலத்தில் இப்படியொரு சோதனை தமக்கு வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இதை முன்பே தெரிந்திருந்தால் போர்க்களத்திலேயே வீரமாக மடிந்து புகழ் பெற்றிருப்பர். 

இதற்கெல்லாம் பொருத்தமான ஆட்கள் இருக்கிறார்கள். அந்தத் துறையில் படித்துப் பட்டம் பெற்று. “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அவனை அவன் கண் விடல்” என்று வள்ளுவரே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆனால்,நம்முடைய தலைவர்கள் புத்தர் சொன்னதையே கேட்காத ஆட்களல்லவா, வள்ளுவர் சொன்னதையா கேட்கப்போகிறார்கள்? 

என்பதால், ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், சனங்களின் வாயில்,மூளையில் என்று எங்கும் எப்போதும் ஒரே சர்ச்சைப் பேச்சுத்தான். எது சரி,எது தவறு என்று.  உலகமெல்லாம் பிச்சைப் பாத்திரமேந்திக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருக்கிற ஒரு ஏழை நாட்டுக்கு இதெல்லாம் அவசியம்தானா?   

தேவையில்லாத விசங்களில் கை வைத்தால், தேவையற்ற பிரச்சினைதானே வரும்? ஆக பிரச்சினைகள் பெருகி வெள்ளமாகி விட்டது. நம்மைச் சுற்றி மழை வெள்ளம் மட்டுழுமல்ல, பிரச்சினைகளின் வெள்ளமும் நிற்கிறது. வெள்ளம் மூழ்கடிக்கும் மக்களாகி விட்டோம். 

யாரேனும் சொல்லுங்கள்,உண்மையிலேயே அபிவிருத்தி என்ற உண்மையான தோணியோ கப்பலோ வருகிறதா, நம்மை மீட்பதற்கென்று. உண்மையிலேயே தீர்வு என்ற படகோ மீட்பணியோ வருகிறதா, நம்மையும் நாட்டையும் காப்பதற்கென்று.