— வி. சிவலிங்கம் —
புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் – (விவாத களம் 8)
‘ …… தெற்கில் வாழும் மக்கள் இந்த விடயங்களை உத்தியோகபூர்வ மொழி மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இது சிங்கள மொழியின் தொடர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையூறாக அமையலாம் எனக் கருதுகின்றனர். இது சிங்கள மொழியின் அழிவைக் கிட்டத்தட்டக் குறிப்பதாக அமையும்.
என் நல்ல நண்பர்கள் இதனை ஒருவேளை ஒப்புக் கொள்ளாமல் போகலாம். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் முன்பு கூறப்பட்ட காரணங்களுக்காக உணர்ந்தார்கள். மற்ற நாடுகளில் பல மில்லியன் மக்களால் தமிழ் மொழி பேசப்படுவதாலும், மிகப் பரந்த இலக்கியங்களைக் கொண்டிருப்பதாலும் தமிழ் பேசும் மக்கள் தமது இலக்கியத்தையும், கலாச்சாரத்தையும் பரப்புவதற்கான பல வழிகளையும் கொண்டிருப்பதால் இந்த நாட்டில் சில மில்லியன் மக்கள் சிங்களத்தை மட்டும் பேசுபவர்களைவிட அதிக நன்மை கிடைக்கும் என அவர்கள் உணர்ந்தார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, ஏராளமான தமிழர்கள் சிங்கள மாகாணங்களிலும் உள்ளனர். தமிழ் பேசும் இந்தியர் கைகளில் அதிகளவு வர்த்தகமும் உள்ளது மட்டுமல்ல, இவை நியாயமான பாரிய அளவில் பாரிய நகரங்களிலும் உள்ளன. இவை அனைத்தும் ஒரு சூழ்நிலை உருவாகும்போது அவை ஓர் இயல்பான போக்கில் சிங்களவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் செய்யும். இதனால் காலப் போக்கில் ஓரங்கட்டும் நிலையைத் தோற்றுவிக்கும். அது மட்டுமல்லாமல் வேறு காரணிகளையும் அவர்கள் உணர்கிறார்கள்.
அவை இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்குவதற்கான யோசனைகளை எதிர்ப்பதற்கான காரணங்களாக உள்ளன. அதாவது இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒப்பீட்டு அடிப்படையில் சிங்களவர்களாகும். யாழ்ப்பாண உறுப்பினர் (திரு. ஜி. ஜி. பொன்னம்பலம்) முன்னைய நிகழ்வுகளில் எடுத்துக் காட்டிய ஒப்புமை (Analogic) எதுவும் பொருத்தப்பாடாக இல்லை.
இவை அனைத்தும் தமிழ் மொழி அழிவதற்கான ஆபத்தை அது ஏற்படுத்தவில்லை என்ற உணர்வை உருவாக்கிய காரணிகளாக இருந்தன. சம அந்தஸ்து என்பது சமமான நிலைப்பாட்டைக் கொடுத்தாலும் உண்மையில் சிங்கள மொழிக்கு அவ்வாறான ஆபத்து உள்ளது.
மக்கள் இக் கண்ணோட்டத்துடன் இணங்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் சிங்கள மக்களில் பெரும்பாலோர் அந்த விவாதங்களை மிகவும் வலுவாக உணர்ந்தார்கள் என்ற உண்மையை எடுத்துக் கொள்ளுங்கள். இவை முற்றிலும் நியாமானவை என ஏற்றுக் கொள்வது என்பது இன்னொரு கேள்வியாகும்…..‘
(எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு ‘சிங்களம் மட்டும்’ சட்ட விவாதத்தின் போது குறிப்பிட்டவை இவை)
அன்பார்ந்த வாசகர்களே!
கடந்த விவாதக் களம் – 7 கட்டுரையில் வெளிவந்த கருத்துக்கள் பல விவாதங்களைத் தூண்டியிருந்தது. அதில் மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்களில் இடதுசாரிக் கட்சிகளான, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூ. கட்சி போன்றவற்றின் கருத்துக்கள் வெளிப்படவில்லை என்ற ஆதங்கமும் காணப்பட்டது. இக் கட்டுரையின் பிரதான இலக்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றத்திற்கான பின்னணியில் எழுந்த அரசியல் விவாதங்களிலும், இன்று அக்கட்சியிலிருந்து பிளவுபட்டு உருவாகியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுன வின் தோற்றத்தின் போது எழுந்துள்ள அரசியல் விவாதங்களுக்குமிடையே காணப்படும் ஆழமான கருத்தியல் அடிப்படைகளையும், அவற்றினூடாக இனவாதத்தின் தரத்தையும் பாகுபடுத்தி இதன் காரணமாக எழுந்துள்ள தாக்கங்களை ஆராய்வதாகும்.
இந்த அடிப்படையிலேயே இக் கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள 1956 இல் ‘சிங்களம் மட்டும்’ என்ற மசோதா விவாதிக்கப்பட்ட வேளையில் பண்டாரநாயக்கா தெரிவித்த கருத்துக்களின் ஆழம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ் விவாதங்களில் தேசிய சிறுபான்மை இனங்களின் மொழி மற்றும் பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக காணப்பட்டதா? அல்லது சிங்கள மொழியின் வளர்ச்சி, அதன் தனித்துவம் என்பவற்றின் காரணமாக எழுந்த பயத்தின் வெளிப்பாடா? என்பது எமது கவனத்திற்குரியது.
இடதுசாரிகளின் நிலைப்பாடு
இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி 1935ம் ஆண்டு உருவாகிய அரசியல் கட்சியாகும். இக் கட்சி தனது முதலாவது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டில் பேசப்படும் சிங்கள, தமிழ் மொழிகள் இரண்டினதும் பயன்பாடு கீழ் நீதிமன்றங்களிலும், பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படும் மொழியாகவும் பின்னர் படிப்படியாக அரச திணைக்களங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம் எனத் தெரிவித்திருந்தது. இவை சுதந்திரத்திற்கு முன்னதாகவே விவாதிக்கப்படுவதை நாம் அவதானிக்க வேண்டும்.
மொழி தொடர்பான இப் பிரச்சினையில் இடதுசாரிகள் வரலாற்றின் போக்கின் அடிப்படையிலிருந்தே நோக்கினர். அதாவது பல நூற்றாண்டுகள் இலங்கைத் தேசம் ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற நாடாகவும், நிர்வாக மொழி அவ் ஆதிக்க நாடுகளின் மொழியாகவும் இருந்தது. எனவே நாட்டிற்கான சுதந்திரத்தைக் கோருகையில் நிர்வாக மொழி தொடர்பான விவாதங்கள் எழுவது இயல்பானது. இப் பிரச்சனையில் நாட்டின் நிர்வாக மொழி என்பது அந்நாட்டு மக்களுக்குப் புரிந்த மொழிகளாக அமைவது அவசியம் என்பது இடதுசாரிகளின் விளக்கமாக அமைந்தது.
நாட்டின் மொழிக் கொள்கை தொடர்பாக வரலாற்று நிகழ்வுகளை புரிந்து கொண்டால் மாத்திரமே நாம் இன்றுள்ள நிலையை எவ்வாறு அடைந்தோம்? என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நாம் எமது தேசத்தின் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்க வேண்டுமாயின் அவை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பதையும், கடந்த காலத்தின் தொடர்ச்சியோடு இன்றைய நிலமைகளையும் பொருத்தி ஆராய்ந்து எதிர்காலத்திற்கு ஏற்றவாறான படிமுறை மாற்றங்களை நோக்கிச் செல்ல வேண்டும். எனவே கடந்த காலத்தை நோக்கிய பார்வை என்பது குற்றம் காணல் என்பதாக அல்லாமல் மாற்றங்களின் போக்கைப் புரிந்து கொள்வதாக அமைதல் அவசியம்.
ஜே ஆரின் நிலைப்பாடு
ஏற்கனவே குறிப்பிட்டது போலவே அப்போதிருந்த அரச சபையில் (State Council) நாட்டின் மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் 1944ம் ஆண்டு இடம்பெற்றிருந்தன. அவ் விவாதங்களின்போது ஜே ஆர் பின்வரும் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.
‘ நாட்டில் சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது அவசியம் என்பதால்,
– நாட்டின் சகல பாடசாலைகளிலும் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் சிங்கள மொழியில் இடம்பெற வேண்டும்.
– சிங்கள மொழியிலேயே பொதுப் பரீட்சைகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
– அரச சபை விவகாரங்கள் அனைத்தும் சிங்களத்தில் நடத்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
– சிங்கள மொழி மாற்றத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான மொழிமாற்ற ஏற்பாடுகளை ஆணைக்குழு ஒன்று அமைத்து மேற்கொள்வதோடு வேற்று மொழி நூல்களை சிங்கள மொழி மாற்றம் செய்தல் வேண்டும்.
– சிங்கள மொழி மாற்றங்கள் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஆணைக்குழு நிறுவப்பட்டு அறிக்கை வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.
அரச சபையில் முன்மொழியப்பட்ட இத் தீர்மானத்தில் தமிழ் மொழி பற்றிய எவ்வித கருத்துக்களும் இடம்பெறவில்லை. இதனால் மிகவும் கடுமையான விவாதங்கள் அங்கு இடம்பெற்றிருந்தன. இதன் விளைவாக ஜே ஆரின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டது. தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து தேவை என தமிழர்கள் கருதினால் சம அந்தஸ்து வழங்கலாம். அந்த இலக்கை அடைவதற்கு நாம் இடையூறாக இருக்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக அத் தீர்மானம் அரச சபையில் 29 – 8 என்ற வாக்குத் தொகையில் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக காலப் போக்கில் ஐ தே கட்சியாகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியாகவும், தமிழ் காங்கிரஸ் கட்சியாகவும், முஸ்லீம் லீக் கட்சியாகவும் செயற்பட்ட பலர் இத் திருத்திய தீர்மானத்தை ஆதரித்தனர்.
இவ்வாறான மாற்றங்களோடு பயணித்த வேளையில் 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. அதனை ‘டொமினியன் அந்தஸ்து’ எனக் குறிப்பிட்டார்கள். இதன் அர்த்தம் என்பது பிரித்தானிய முடியரசின் ஆதிக்கத்திலிருந்து முற்றாக வெளியேறுவதற்கு முன்னருள்ள நிலை என்பதாகும். இதனை நாம் ‘பாதிச் சுதந்திரம்’ என வர்ணிக்க முடியும்.
சிங்கள மட்டும் என்பதில் நின்ற இரு முதன்மைக் கட்சிகள்
இப் பின்னணியில் சேர். ஜோன் கொத்தலாவலை (இலங்கையின் பிரதமராக 1953 – 1956 வரை செயற்பட்டவர்) இம் மொழிப் பிரச்சினை உச்சக் கட்டத்தில் இருந்த வேளையில் யாழ்ப்பாணம் சென்றார். அவருக்கு கொக்குவில் என்ற கிராமத்தில் மிக வரவேற்பும், கழுத்து நிறைய மாலைகளும் கிடைத்தன. இதனால் மிக அகமகிழ்ந்த அவர் சிங்களத்திற்கும். தமிழுக்கும் உத்தியோக மொழி அந்தஸ்தை வழங்க முயற்சிகள் எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.
ஆனால் அவர் கொழும்பை அடைந்த போது பலமான எதிர்ப்புக் கிடைத்தது. அவ் வேளையில் சிங்கள மக்கள் மத்தியில் பிரசித்தி வாய்ந்த சிங்கள கல்வியாளர்களும், ஆங்கில மொழியிலிருந்து சுயபாஷையை நோக்கி கல்வி முறை மாற்றப்பட வேண்டும் எனக் கூறிய எல். எச். மேத்தானந்த, எவ். ஆர். ஜெயசூரிய போன்றவர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக ஐ தே கட்சி ‘சிங்களம் மட்டும்’ அரச கரும மொழி என அறிவித்தது.
‘ சம அந்தஸ்து’ என்ற மொழிக் கொள்கை பெரும் நெருக்கடிக்குள் சென்றதாலும், சிங்கள மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக் காணப்பட்டதாலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தனது மொழிக் கொள்கையில் மாற்றத்தை அறிவித்தது. அதாவது அரச கரும மொழியாக சிங்களம் இருக்கும், அதேவேளை நியாயமான பாவனைக்கான உரிமை தமிழுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. இங்கு மொழி தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்து வருவதை அவதானிக்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது மொழிக் கொள்கையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்திய வேளையில் தாம் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் 24 மணித்தியாலங்களில் தனிச் சிங்கள மசோதாவை நிறைவேற்றுவதாக ஐ தே கட்சி அறிவித்தது. 1956ம் ஆண்டுத் தேர்தல் என்பது மொழிக் கொள்கை தொடர்பான தேர்தலாக அமைந்தது.
24 மணிநேரத்தில் ‘சிங்களம் மட்டும்’
மொழிக் கொள்கை விவாதங்கள் உக்கிரமடைந்த நிலையில் ஐ தே கட்சியின் மொழிக் கொள்கையோடு ‘மகாஜன எக்ஸத் பெரமுன’ அதாவது பிலிப் குணவர்த்தனாவினால் 1959களில் தோற்றுவிக்கப்பட்ட இக் கட்சி பொதுவாகவே இடதுசாரி அரசியலைப் பின்பற்றி வந்தது. ஆனால் மொழிக் கொள்கை தொடர்பான மாற்றங்கள் காரணமாக ஐ தே கட்சியுடன் இணைந்து ’24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும்’ என்ற அலையில் சிக்கியது.
நாம் சிங்களம் மட்டும் சட்டத்தினை நாட்டின் சுதந்திரத்திற்கான கோரிக்கைகள், சிங்கள மொழியின் இருப்பிடம், பௌத்த மதத்திற்கும், சிங்களத்திற்கும் இடையேயான உறவுகள் இவற்றின் பின்னணியில் நோக்குவதோடு அப்போதிருந்த அரசியல் போக்குகளையும் இணைத்து அணுகுவது இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்ப்பதற்கு உதவும். ஒரு புறத்தில் சிங்கள மொழிக்கான இருப்பிடம் பற்றிய விவாதங்கள் இடம்பெற்ற வேளையில் நாட்டின் பொருளாதாரம், குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுபடுதல் குறிப்பாக குடியேற்ற ஆதிக்க பொருளாதாரத்திலிருந்து சுயசார்புப் பொருளாதாரத்தை நோக்கிய விவாதங்களும் சமாந்தரமாக இடம்பெற்றிருந்தன. பண்டாரநாயக்காவின் பொருளாதார நிலைப்பாடுகளில் இடதுசாரிகளின் நிலைப்பாடு இணக்க நிலையிலிருந்த போதிலும், தேசிய நல்லிணக்கத்தில் பண்டாரநாயக்காவுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. டி. எஸ். சேனநாயக்க தலைமையிலான ஐ தே கட்சியினர் குடியேற்ற ஆதிக்கத்தோடு இணைந்து முதலாளித்துவ கட்டமைப்பைத் தொடந்தும் பாதுகாக்க விழைந்த வேளையில், சிறீலங்கா சுதந்திரக் கட்சி சிங்கள பௌத்த ஆதிக்கம் நிறைந்த தேசிய முதலாளித்துவத்துடன் இணக்கத்திலிருந்தது. இதனால் இரு தரப்புமே தேசத்தின் ஒடுக்குமுறைச் சக்திகளாகவே இடதுசாரிகளால் கருதப்பட்டன.
இடதுசாரிக் கட்சிகள் சுரண்டல், ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பவற்றிற்கு மத்தியில் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து மிகவும் இறுக்கமான கொள்கைகளில் செயற்பட்டனர். ஆனால் நாட்டின் ஆதிக்க சக்திகள் இனவாத சக்திகளுடன் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழ்ச்சிகளில் இறங்கினர். நாட்டில் இனவாத ஆதிக்க அலை ஒருபுறமும், குடியேற்ற ஆதிக்கச் சுரண்டல் மறுபுறமுமாக செல்கையில் பெரும்பான்மைச் சமூகம் இனவாத அலைக்குள் தள்ளப்பட்டது.
இன்றும் தொடரும் பேரினவாத நிலை
அவ்வாறான ஓரு நிலையே இன்றும் காணப்படுகிறது. அதாவது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் செயற்படுத்தப்படும் நவதாராளவாத பொருளாதார நடவடிக்கைகள் குடியேற்ற ஆட்சிக் காலத்தின் நிலமைகளுக்குள் மக்களை எடுத்துச் சென்றுள்ளது. இன்றைய நவதாராளவாத பொருளாதாரத்தால் பயனுற்றுவரும் சக்திகள் அப் பயனைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு இப்போதும் இனவாதத்தையே துணைக்கு அழைத்துள்ளனர். பண்டாரநாயக்க காலத்தில் இனவாதம் என்பது சிறுபான்மை இனங்களைச் சரீர அடிப்படையில் துன்புறுத்தவில்லை. ராணுவம், அரச அதிகாரிகள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. பிக்குகள் அரசியலில் மிகவும் ஆதிக்கம் செலுத்தவில்லை. அப்பட்டமாக இனவாதத்தில் ஈடுபடவில்லை. பாராளுமன்ற அரசியலிற்குள் பிரவேசிக்கவில்லை.
ஆனால் இன்றைய பிரதான வேறுபாடு எதுவெனில் இன்று நாட்டின் நிர்வாக யந்திரமும், பாதுகாப்பு யந்திரமுமான ராணுவமும் இந்த அணியில் இணைந்துள்ளன. அன்று குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் பண்டாரநாயக்காவின் தேசியவாதத்திற்கு உதவியது. பலமான தொழிற் சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் அவற்றிற்கு உதவியாக அமைந்தன. இதனால் குடியேற்ற ஆதிக்க பொருளாதார இருப்புகளைத் தேச உடமையாக்க முடிந்தது. அதனால் இனவாதம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது.
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அன்றைய போக்கு
பண்டாரநாயக்கா தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றின் போக்கினை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம். அதாவது அக் கால வேளையில் சிங்கள தேசியவாதம் என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கல்விச் சமூக சிங்கள உயர் வர்க்கத்தின் ஆயுதமாக காணப்பட்டது. இவ் விவாதங்கள் யாவும் சிங்கள மக்களின் ஆதரவை ஈர்ப்பதற்கான நியாயப்படுத்தல்களாக அமைந்தன. பண்டாரநாயக்காவின் எழுத்துக்களில் வெளியான வாதங்கள் பல தேசங்களில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் உள்நாட்டு தேசியவாத கருத்துக்களுக்கும், சர்வதேச அளவில் எழுந்து வரும் குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பு வாதம், ஒடுக்குமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சோசலிசம் போன்ற கருத்துக்களுக்குமிடையெ ஓர் இணக்கத்தினை ஏற்படுத்துவனவாகவே இருந்தன. உள்நாட்டு தேசியக் குரலுக்கு ஓர் நவீன விளக்கங்களை உட்புகுத்துவனவாக காணப்பட்டன. எனவேதான் அவரது கருத்தக்கள் தேசிய அளவிலான பிளவுகளை உருவாக்கவில்லை.
இவ்வாறான ஒர் பொதுவான இணக்கம் காணப்பட்டதன் விளைவாகவே காலப் போக்கில் பிரதான இடதுசாரிக் கட்சிகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் பிற்காலத்தில் உருவாகின.
இத் தொடர் கட்டுரைகளில் சிங்கள பௌத்த இன மையத் தேசியவாதமாக மாற்றம் பெற்றுள்ள சிங்கள அரசியல், கோட்பாட்டு அடிப்படையில் நாட்டின் இதர தேசிய சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் வகையிலான திட்டங்களில் செயற்படுவதைக் குறிப்பிட்டிருந்தோம். இதுவரை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்தின்போது காணப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார பின்னணிகளை ஆராய்ந்த நிலையில் தற்போதுள்ள நவதாராளவாத பொருளாதார கட்டமைப்பிற்குள் ஆதிக்கம் செலுத்தும் சிறீலங்கா பொதுஜன பெரமுன இன் கோட்பாட்டு அம்சங்களை நோக்கிச் செல்லலாம்.
தேசிய சிந்தனையின் போக்குகள்
ஏற்கனவே குறிப்பிட்டது போல தேசிய சிந்தனை என்ற பெயரில் இடம்பெற்று வரும் வாதங்கள் நளீன் டி சில்வா, குணதாஸ அமரசேகர என்பவர்களால் எடுத்துச் செல்லப்படுவதாகப் பார்த்தோம். இருப்பினும் இவர்கள் இருவரும் இச் சிந்தனையை அல்லது சிங்கள தேசியவாதத்தினை அதன் தீவிரத் தன்மைக்கு இரு வேறு போக்கில் மாற்றினர். ஏற்கனவே குறிப்பிட்டது போல 80 களில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விவாதங்கள் தற்போதுதான் முன்னிலைக்கு வந்துள்ளன. அவ்வாறாயின் இச் சிங்கள தீவிரவாத சிந்தனை என்பது தற்போதுள்ள ஆட்சியாளர்களின் உள்நோக்கங்களுக்கு மிகவும் உகந்ததான சிந்தனையாக அவை இன்று உள்ளதாகவே கொள்ள வேண்டும். ஏனெனில் சிங்கள பௌத்த ஆதிக்க அரசியல் பலம் பெற்றுவரும் வேளையில் பிரதான அரசியல் கட்சிகளும் அதன்வழி இழுபட்டுச் செல்வதை நாம் காண்கிறோம். பண்டாரநாயக்கா காலத்தில் மகாஜன எக்ஸத் பெரமுன போன்ற கட்சிகள் ஐ தே கட்சியை நோக்கிச் சென்ற விவகாரங்களை ஒத்த நிலமைகளை நாம் இங்கு காண்கிறோம்.
சிங்கள கலாச்சாரம் தொலைக்கப்படுவதான கருத்து..
80களில் குணதாஸ அமரசேகர ‘ எமது நாட்டின் எதிர்காலம் நாட்டின் கிராமங்களின் இளைஞர் கல்விச் சமூகத்தினுடையது’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தார். இக் கட்டுரை வெளியானதன் பின்னணி கவனத்திற்குரியது. 77ம் ஆண்டில் தேசத்தின் பொருளாதாரம் என்பது அந்நிய நாடுகளின் சுரண்டலுக்குத் திறக்கப்படுகிறது. அதாவது சிங்கப்பூராக மாற்றும் கனவுகளோடு உள்நாட்டுச் சந்தை திறக்கப்படுகிறது. அதன் விளைவாக குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மேற்குலக கலாச்சாரங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார்கள். இது சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்குப் பெரும் கலக்கமாக அமைகிறது. அவரது கட்டுரையின் தமிழாக்கம் பின்வருமாறு
‘… மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த சிங்கள ஆசிரியர் ஒருவரின் மகன் பல்கலைக்கழக வைத்திய பிரிவிற்குச் செல்கிறான். வைத்தியக் கல்வியைத் தொடரும் அதே வேளை மேற்குலக (Ball room dance) நடனங்களைக் கற்கும் ஆர்வத்துடன் வைத்தியக் கல்வியுடன் அதனையும் தொடர்கிறன். …பல்கலைக் கழகக் கல்விக்காக வந்த கிராமப்புற மாணவி ஆங்கிலக் கவிதைகளை கடுதாசிகளில் எழுதிவைத்துப் பாடமாக்குகிறாள்…..‘
இவ்வகை எழுத்துக்கள் பல மேற்குலக கலாச்சார ஊடுருவல்களின் தாக்கம் குறித்த ஏக்கங்கள் என்பதாகும். ஒரு புறத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேற்குலகச் சந்தையாக மாற்ற மக்கள் சம்மதித்துள்ள நிலையில் அதனுடன் கூடவே இணைந்துவரும் மேற்குலக கலாச்சாரத்திற்கு எதிராக செயற்பட முடியவில்லை. இதுவே சிங்கள அடையாளம் தொலைக்கப்படுவதாக முன்வைக்கப்படும் ஒப்பாரிகளாகும். 80களில் இந்த ஒப்பாரிகளுக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் மக்கள் ஐ தே கட்சியின் சிங்கப்பூர் கனவுலகில் வாழ்ந்தார்கள்.
சிங்களத்தில் கலக்கப்பட்ட மார்க்ஸிசம்
இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு அநாகாரிக தர்மபால ஓர் கிறிஸ்தவராக இருந்த போதிலும் காலப் போக்கில் மதம் மாறி சிங்கள பௌத்த பிரச்சாரகராக மாற்றமடைந்திருந்தார். இவரது சிந்தனைகள் மார்க்ஸிச சிந்தனைகளோடு இணைந்து செல்வதாக அமரசேகர கருதியமையால் சிங்கள தேசியவாத சிந்தனைகளுடன் மார்க்ஸிச சிந்தனைகளை மிகவும் இலகுவாக இணைத்து இரண்டும் ஒரே பாதையை நோக்கிச் செல்வதாக அவர் வாதிட்டு வந்தார். இவை இடதுசாரி மார்க்ஸிசவாதிகள் மத்தியிலே பெரும் கவலையை ஏற்படுத்தியது. அதாவது கருத்துமுதல்வாதத்தை முன்னிலைப்படுத்தும் பௌத்தமத வாதிகளான இவர்கள் சம காலத்தில் பொருள்முதல் வாதத்துடனும் இணைத்து விவாதிப்பது விஞ்ஞானபூர்வ மார்க்ஸிசத்தைக் கொச்சைப்டுத்துவதாகவே அமைவதாக விமர்சித்தனர்.
(தொடரும்)