— அழகு குணசீலன் —
இருபது இலட்சம் மக்களைச் சுமந்து நிற்கின்ற இந்திய தலைநகர் நியூடெல்லி.
அழுக்கு நிறைந்த, மலசல கூடம் போன்ற காட்சி அளிக்கும் இந்திய தலைநகரின் சேரிகள்.
கழிவு நீர் மூக்கை துளைக்க, வானமே கூரை பூமியே பாயாக இந்திய விவசாயிகள் வீதிகளில்.
வெளிமாநிலங்களுடன் புதுடெல்லியை இணைக்கும் ஐந்து இராட்சத வேகவீதிகள். இவற்றில் மூன்றை இந்திய விவசாயிகள் முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். முழுவதும் ஸ்தம்பிதம்.
அந்த வேகவீதிகள் தான் அவர்களுக்கு எல்லாம். வாகனத்தரிப்பிடம், வெயிலுக்கும், குளிருக்கும், பகலிலும், இரவிலும் ஒதுங்கும் இடம்.
சமையல் குசினி, சாப்பாட்டு இடம், போராட்டக்களம் எல்லாம்!…எல்லாம்!!
கொட்டும் பனி, நடுங்கும் குளிர், இடையிடையே மழை, விவசாயிகளோ வீதி மறியல் போராட்டத்தில்.
இலட்சக்கணக்கான உழவு இயந்திரங்கள். அவற்றில் தற்காலிக கொட்டில்களை படங்குகள், இலைகுலைகளைக் கொண்டும், பழைய துணிமணிகளைக்கொண்டும் அமைத்து வாழும் பெண்கள், ஆண்கள், அவர்களின் பிள்ளைகள்.
மூடை மூடையாக உணவுப்பொருட்கள் வேகவீதியின் நடுவே குவிக்கப்பட்டுள்ளன. வீதியோரம் எங்கும் அடுப்புகள். அவற்றில் உணவு சமைக்கும் ஆண்களும், பெண்களும்.
சப்பாத்தி, நாண், பரோட்டா, ரொட்டி, பருப்பும், கடலையும், மரக்கறிகளும் கலந்து சமைத்த கறி. கூடவே கொஞ்சம் கோதுமைக்கஞ்சியும், அரிசிச் சாதமும்.
இந்திய கோயில் திருவிழாக்களில் இடம்பெறுவது போன்ற காட்சிகள்.
நீண்டதூர புகையிரதப் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. புகையிரத நிலையங்களில் விவசாயிகள் தங்கி இருக்கின்றனர்.
ஆம்!
இந்திய விவசாயிகள் மோடி அரசுக்கு சவால் விடுத்து, தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். தலைநகர் ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது.
விவசாயிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு வேற்று உடை இல்லை. உடுப்புக்களைக் கழுவி உழவு இயந்திரங்களையும், லொறிகளையும் இணைத்து கயிறுகளை கட்டி உடுப்புக்களை காயவிட்டிருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதம் முதல் பல மாதங்களைத் தாண்டியும் ஒரு புரட்சிப் படையணி போன்று சாகும் வரை – வாழும்வரை போராடும் போராளிகளாக அவர்கள். நாளுக்கு நாள் புதிதாக வந்து இணைந்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாய் இருந்து இலட்சமாக அதிகரித்துச் செல்கின்றது. ஒன்பது மணித்தியால உண்ணா நோன்பு. குழுக்களாகத் தொடர்கிறது.
உலகமயமாக்கத்தில் சிக்கித் தவிக்கும் மோடி அரசாங்கம் விவசாய சட்டச்சீர்திருத்தத்தை மீளப் பெறத் தயாராக இல்லை. இந்தியா உலகின் பொருளாதார பலமும் வளமும் கொண்டது என்றும் தாங்கள் ஐரோப்பா, சீனா, பிரேசில் நாடுகளையும் ஏன்? அமெரிக்காவையும் விஞ்சி நிற்கின்றோம் என்றும் காட்டத் துணியும் போலிக் கௌரவம்.
“நாங்கள் இந்த இடத்தை விட்டு அகலப் போவதில்லை. இது எங்கள் உயிர் வாழ்விற்கான போராட்டம்” என்று கூறுகிறார்கள் விவசாயிகள்.
படையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே அங்காங்கே மோதல்களும் இடம்பெறாமல் இல்லை. போக்குவரத்து மற்றும் நெரிசல்களில் இதுவரை 30 விவசாயிகள் எதிர்ப்பு பேரணியில் உயிர் இழந்திருக்கிறார்கள்.
பொலிஸ் தகவல்களின்படி டெல்லியின் நிராங்கனி பூங்காவில் விவசாயிகள் முதலில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். 2,23,000 சதுர மீற்றர் களைக்க கொண்ட இந்தப் பூங்கா 30 உதைபந்தாட்டத் தடல்களுக்கு அல்லது 15 கிரிக்கட் மைதானங்களுக்குச் சமமானது. அலை மோதும் விவசாயிகளின் வெள்ளத்தை மதிப்பிட இதை விடச் சிறந்த உதாரணத்தை என்னால் உங்களுக்கு தரமுடியவில்லை.
ஏன் இந்தப் போராட்டம் ?
மோடி அரசாங்கம் புதிய விவசாயச் சட்டத்தை இரவோடிரவாக கொரோனா அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி நிறைவேற்றி இருக்கிறது.
1. இதுவரை விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக அரச கொள்வனவு களஞ்சியங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தார்கள்.
2. விவசாயிகளின் உற்பத்திகளுக்கு ஆகக் குறைந்தவிலை நிர்ணயம் இருந்தது.
3. தனியார் நிறுவனங்கள் அறுவடைக்காலத்தில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, தட்டுப்பாடான காலங்களில் கூடிய விலைக்கு விற்பனை செய்வது இதுவரை சட்டரீதியான குற்றமாக இருந்து.
ஆனால் மோடி அரசாங்கத்தின் விவசாய சீர்திருத்த சட்டம் மேற்குறிப்பிட்ட விவசாயிகளுக்கான பாதுகாப்பை விழுங்கி விட்டது.
#. இப்போது உலகமயமாக்க தாராள பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் விவசாயிகள் தனியார் முதலாளிகளுக்கும், சுப்பர் மார்க்கட் சங்கிலி அமைப்புக்களுக்கும் விற்பதற்கேற்றவாறு சட்டம் திருத்தப் பட்டுள்ளது.
#. விவசாயிகள் தங்களுக்கு நியாய விலை கிடைக்காது என்றும் தாராள சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும் என்றும் பதுக்கல் தனியார் முதலீட்டு முதலைகள் இலாபம் பெறுவர் என்று கூறுகின்றனர்.
#. விவசாயிகள் மத்தியில் தரகர்கள் குறித்த அச்சம் நிலவுகிறது. இவர்கள் தங்கள் இடைத்தரகர்களாக தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சுருட்டிக் கொள்வார்கள் என்று கருதுகிறார்கள் அவர்கள்.
#. விவசாயிகள் தமது தாவர மற்றும் தானிய உற்பத்திக் கழிவுகளை இதுவரை வயல்வெளிகளில் போட்டு எரித்து வந்தார்கள். தற்போது இது தண்டனைக்கான குற்றம். மாற்று வழி ஒன்றை அறிமுகம் செய்யுமாறும், குப்பைகளை அப்புறப்படுத்த மானியம் வழங்குமாறும் விவசாயிகள் கோருகின்றனர்.
வட இந்திய விவசாயிகள்
பிரதமர் மோடி தேர்தல் காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இப்போது நிலைமை இருந்ததையும் இழந்ததாய் போயிற்று.
2014 இல் மோடி இதைக்கூறி ஆட்சிக்கு வந்தார். 2022 காலகட்டத்தில் வருமானம் இரட்டிப்படையும் என்பது மோடியின் கூற்று. 2019 /2020 இல் விவசாயிகள் அதிக உச்ச அறுவடையைப் பெற்றிருந்தனர். ஆனால் வருமானம் வீழ்ச்சியடைந்தது. இது 150 மில்லியன் விவசாயிகளின் வாழ்வா? சாவா? என்று கேள்வி எழுப்புகின்ற போராட்டம்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா விவசாயிகளே இப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். தென் இந்திய மற்றும் ஏனைய மாநிலங்களில் இருந்து வரையறுக்கப்பட்ட ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய இராட்சத 500 விவசாயிகள் சங்கங்கள், 15 எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கின்றன.
ஏற்கனவே, பஞ்சாப்பில் இந்திய இரு பெரும் தேசியக் கட்சிகளுக்கும் பாரிய செல்வாக்கில்லை. அரச படைகள் பொற்கோயிலினுள் நுழைந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தை பஞ்சாப் சீக்கியர்கள் அவ்வளவு இலகுவாக மறந்து விடமுடியுமா? மறு பக்கத்தில் இந்திரா காந்தியின் கொலையையும் இந்திய அரசியல் மறக்கவில்லை.
இதனால் வருகின்ற 2024 தேர்தலில், மோடி அரசாங்கத்திற்கு இது பெரும் தலையிடியாக இருக்கப் போகிறது.
மோடிக்கு மட்டுமன்றி காங்கிரசுக்கும் பாடம் புகட்ட மூன்றாவது அணி ஒன்று தயாராகி வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட இடதுசாரிகளின் ஒரு மகத்தான கூட்டாக இது அமையும் என்பது ஒரு எதிர்வு கூறல். மதசார்பு அற்ற ஒரு அணி.
வடக்கில் பஞ்சாப் மற்றும் முஸ்லீம் மாநிலங்களில் ஏற்படப்போகும் இழப்பை ஈடுசெய்ய ரஜனிகாந்த் தரப்பை தம்முடன் கூட்டுச்சேர்க்க அ.தி.மு.க.வின் உதவியுடன் பாரதிய ஜனதா காய்களை நகர்த்த தொடங்கியது. மோடியின் தாடியும், காவியும், தாமரையும், ரஜனியின் ஆன்மீகமும், இரட்டை இலையும் கலந்த ஒரு தீர்த்தக் கலசம். மதத்தால் இந்திய தேசத்தை கூறு போடுவதற்கான ஒரு முயற்சி. ஆனால், ரஜனிகாந்த் பின்வாங்கிவிட்டார் போலும்.
இங்கு மோடிக்கு இருக்கக் கூடிய ஒரே முதலீடு இந்துத்துவம். முஸ்லீம். கிறிஸ்தவ எதிர்ப்பு. விவசாயப் போராட்ட மாநிலங்கள் தொடர்ந்தும் இந்துத்துவ மதவாதத்திற்கு ஆதரவளிக்கமாட்டா என்று நம்பப் படுகிறது. மறுபக்கத்தில் காலிஸ்தான், காஷ்மீர், ஜம்மு மற்றும் முஸ்லீம்களின் குடியுரிமைச் சட்டப் பிரச்சினைகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.
விவசாயிகளின் தற்கொலை
கிடைக்கின்ற புள்ளிவிபரங்களின்படி 2019 இல் மட்டும் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
வெறும் இரண்டு ஹெக்டேயர்கள் நிலத்தை கொண்டுள்ள இந்த சிற்றுடைமையாளர்களின் வாழ்வாதாரம் மாற்று வழியற்று மரணத்தை தெரிவு செய்வதாக உள்ளது. ஆகக் குறைந்தது எங்கள் உயிரைப் போக்கும் உரிமை எங்களுக்குரியது என்கிறார்கள் விசாயிகள்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வழங்கப்படும் மானியங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய விவசாயிகளளுக்கு எதுவுமே இல்லை. சமகால போராட்டத்தில் விவசாயிகள் இரு கோரிக்கைகளையும் மேலதிகமாக முன்வைத்துள்ளனர்.
1. விவசாயிகளின் மாதமொன்றுக்கான ஆகக்குறைந்த வருமானம் 15,000 இந்திய ரூபாய்களாக உறுதிப்படுத்தப்படவேண்டும்.
2. விவசாயிகள் வேலை இழக்கும் போது மாதமொன்றுக்கான நஷ்ட ஈட்டுக் காப்புறுதி உதவித்தொகை 7,500 இந்திய ரூபாய் வழங்கப்படவேண்டும்.
அவர்களின் கடன் சுமை அதிகரிக்கின்றது. வருமானம் குறைகின்றது. உதாரணமாக பருத்தி உற்பத்தியில் இந்திய ஆடைக்கைத்தொழில் இலாபம் அடைகிறது. ஆனால் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்கிற நிலை காணப்படுகிறது. விவசாய மூலப்பொருளூடான கைத்தொழில் வளர்ச்சியின் வருமானம் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு பாய்ச்சப்பட வேண்டும். இங்கு இது இடம்பெறவில்லை. நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
சசிகலாவின் குரல்! ஒரு சோறு பதம்!!?
இது சசிகலாவின் வெறும் துன்பம் அல்ல. அளவிடமுடியாத அளவிற்கு அதற்கும் மேலானதுயரம். நம்பிக்கை இழப்பு, வலி, அபாய ஒலி. என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்!! இது மூன்று பிள்ளைகளின் தாயான சசிகலாவின் அழுகுரல்.
காசு இல்லை. கணவன் இல்லை. வருமானம் இல்லை. சாப்பிட உணவில்லை. கொஞ்சம் கோதுமை,இன்னும் கொஞ்சம் அரிசி அவ்வளவுதான். அவளது கணவன் கஜானாந் மூன்று வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து விட்டான். அளவுக்கு அதிகமான கடன் சுமைக்குப் கொடுக்கப்பட்ட உயிர்ப் பலி.
“எனது குடும்பத்தை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்றால் நான் இருந்து என்ன? இல்லாவிட்டால் என்ன?”, என்று இறப்பதற்கு முதல் நாள் இரவு மூன்று பிள்ளைகளையும் மடியில் தூக்கி வைத்து அழுது இருக்கிறான். மனைவியும் பிள்ளைகளும் நள்ளிரவில் அயர்ந்து தூங்க இரவோடிரவாக அருகே உள்ள காட்டிற்குள் சென்று கழுத்தில் சுருக்கிக்கிட்டு………தன் உயிரை மாய்த்துக் கொண்டான் கஜானந்.
தனி ஒருவருக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அந்த மண்ணில் என்ன கொடுமை! ஒரு வேளை அடுப்பு எரிய வழியில்லை. வயிற்றுப் பசிக்கு கஞ்சிகூட இல்லை. விவசாயிகள் குடும்பத்தோடு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உலகமயமாக்கம் – பல்தேசியக்கம்பனிகள்
உலக மயமாக்கத்தை வெறும் தொலைத்தொடர்பு வளர்ச்சியாகவும், டிஜிட்டல் தொழில்நுட்ப விந்தையாகவும் பார்ப்பவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள். உலகமயமாக்கத்தின் சமூக பொருளாதார அரசியல் தாற்பரியங்களை அபிவிருத்திப் பொருளாதாரத்தின் தேறிய நன்மை மதிப்பீட்டின் அடிப்படையில் பார்ப்பவர்களாக துறைசார்ந்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிலும் எல்லோரும் இல்லை.
இந்திய உலகமயமாக்க, தாராள பொருளாதார கொள்கையில் தென் இந்திய மாநிலங்களின் நடுத்தர வர்க்கம் அளப்பரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆங்கில, தொழில்நுட்ப கல்வியின் வளர்ச்சி தமிழ் நாட்டை அனைத்து மாநிலங்களையும்விட மிக முன்னுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி இந்தியா முழுக்க சமமாக பங்கிடப்படவில்லை. இதனால் வடக்கு தெற்கு இடைவெளி மிகப் பெரிய மலைக்கும் மடுவுக்கும் இடையிலான இடைவெளியாக மாறியுள்ளது.
முதலாளித்துவம் உலக நடைமுறைகளுக்கும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப எப்பவும் தன்னைத் திருத்திக் கொண்டுதான் முன்னேறியது. இது வரலாறு. இதனால்தான் மார்க்ஸ் கூறியது போன்று பொருளாதார மந்தம், வங்குரோத்து, பணச்சந்தை வீழ்ச்சி, சமூகத்தின் கத்தரிக்கோல் அலகு இடைவெளி அதிகரிப்பு அனைத்தும் அப்பப்போது இடம் பெற்றாலும் முதலாளித்துவம் முழுமையாகத் தோல்வியடையவில்லை. அது இன்னும் தப்பிப்பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.
இதற்கு மாறாக சீனா தேசிய முதலாளித்து முதலீடு என்றும், ரஷ்யா மக்கள் ஜனநாயக முதலீடு என்றும் போர்வைகளை மாற்றிக் கொண்டு, உண்மையில் திருத்தப்பட்ட ஒரு முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுத்து நிற்கின்றன. இந்த நாடுகளில் மனித உரிமையும், விவசாயிகள், தொழிலாளர்களின் சமூக பொருளாதார நிலையும் மிக மோசமாக உள்ளது.
மேற்கு உலகமானது சீனா, ரஷ்யா குறித்தும் அவை சார்ந்த நாடுகள் குறித்தும் வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் அரசியல், பொருளாதார காழ்ப்புணர்வு சார்ந்தவை என்றாலும், குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று மறுப்பதும் கடினம்.
சீனா முழு ஆபிரிக்காவையும் விலைபேசி மிகப் பாரிய ஒரு முதலீட்டு வர்த்தக வலயத்தை ஏற்படுத்தியுள்ளது. வளங்களும், உழைப்பும் சுரண்டப்படுகின்றன. சீன உற்பத்திகள் ஆபிரிக்க சந்தைகளை ஆக்கிரமிக்க, ஆபிரிக்க உள்ளூர் தேசிய பொருளாதாரம் எந்தப் பாதுகாப்பும் இன்றி அழிந்து கொண்டிருக்கின்றது.
அது போன்றே அண்மையில் தென் கிழக்கு ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் மற்றொரு கூட்டு ஏற்பட்டுள்ளது.
இதில் இந்தியா இடம்பெறவில்லை. இது இந்தியாவுக்கும் மோடி அரசாங்கத்திற்கும் பெரும் தலையிடியாக உள்ளது. இதை இந்தியா வெறுமையாக பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை.
ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெறும் பிராந்திய தாராளமயமாக்க, சுதந்திர வர்த்தக கூட்டுக்களும், மலிவான உழைப்பையும், முதலீட்டையும், வளங்களையும் தேடும் இந்த நாடுகளின் பொருளாதாரப் பேராசை கத்தரிக்கோலின் அலகு இடைவெளியும் மேலும் மேலும் அதிகரித்து பொருளாதார ஏற்றத்தாழ்வை ஆழத்தோண்டி உள்ளன.
இந்த வெளிப்பாடுதான் இந்திய விவசாயிகளின் இன்றைய போராட்டம். இது இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உரிய நிலைமை அல்ல. மாறாக உலக சிறுவிவசாயிகள் அனைவருக்கும் உள்ள பொதுவான நிலை.
தாராளவாத, ஏகபோக உரிமையைக் கொண்ட பல்தேசிய நிறுவனங்களின் போட்டிக்கு பலிக்கடாவாக சிறுவிவசாயிகளும், உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள். இது பெரிய கம்பனிகளை சிறிய கம்பனிகள் விழுங்குகின்ற கழுத்தறு போட்டி.
இந்த அநியாயத்திற்கு தனது அதிகாரத்தினால் துணைபோகும் மோடி அரசுக்கு இந்திய விவசாயிகள் படிப்பிக்கப்போகும் பாடம் என்ன? 2024 இல் மோடி செய்ததிற்கு கோடி புண்ணியமாக தேர்தல் அறுவடை அமையுமா?