இந்தியாவின் புவிசார் அரசியல் ரீதியான  வலியுறுத்தல்களை தமிழ் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

இந்தியாவின் புவிசார் அரசியல் ரீதியான வலியுறுத்தல்களை தமிழ் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

(இலங்கையின் மூத்த தமிழ் செய்தியாளர்களின் ஒருவரான வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களால் நியூஸின் ஏசியா ஊடகத்துக்கு எழுதப்பட்ட ஆக்கம். தமிழில் சீவகன் பூபாலரட்ணம்

கடந்த வாரத்தில் இலங்கை வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அவர்கள் டில்லி திரும்பும் முன்னதாக கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சுமார் அரை மணிநேரம் சந்தித்தார். 

தமிழர்களுக்கு சில அதிகாரங்களைப் பகிரக்கூடிய மாகாணசபைகள் குறித்தும் அதற்கு வழி செய்யும் அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்தும் இருவரும் பேசியதாகக் கூறப்படுவதுடன், இந்த விடயத்தின் உணர்வூட்டக்கூடிய தன்மைகள் காரணமாக தாம் விவாதித்த விடயம் குறித்து ரகசியம் காப்பது என இருவரும் உடன்பட்டதாகவும் கூறப்படுகின்றது.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்திய டோவல் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் அதிக கவனத்தை குவிக்க வேண்டும் என்று சம்பந்தனுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.  

உண்மையில், தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை போட இந்தியா விரும்பவில்லை அல்லது அதைச் செய்யக்கூடிய நிலையில் அது இல்லை. இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் 13வது திருத்தத்தை முழுமையாக அமல் படுத்துவதன் மூலம் கையாளப்பட வேண்டும் என்று ராஜபக்‌ஷ சகோதரர்களுடனான தனது அதிகாரபூர்வ சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், அதனால் பயனில்லை. மோடியின் முன்பாக எப்போதும் ஆழ்ந்த யோசனையுடனான ஒரு மௌனத்தைக் காத்த ராஜபக்‌ஷ சகோதரர்கள், பின்னர் டில்லியில் உள்ள முக்கிய ஆங்கில பத்திரிகைகளுக்கான நீண்ட செவ்விகள் மூலம், சிங்கள பெரும்பான்மைக்கு எதிராக தாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக பிரகடனம் செய்வார்கள். தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக மோடியின் கோரிக்கைக்கு அதுவே அவர்களது பதிலாகும். 

தனது பங்குக்கு இந்தியா தொடர்ச்சியாக இந்த விடயத்தை முன்னெடுக்கும். ஆனால், உண்மை என்னவென்றால், தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் உள்நாட்டு அரசியல் விடயங்களில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் போட விரும்பவில்லை.  

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வளரும் செல்வாக்கை தடுப்பதற்கான கேந்திர முக்கியத்துவ நடவடிக்கையில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தியா, இலங்கையின்  அரசாங்கத்தை அன்னியப்படுத்தவோ அல்லது அதனுடன் முரண்பட்டுக்கொள்ளவோ விரும்பவில்லை. இலங்கையை அன்னியப்படுத்தவோ அதனுடன் முரண்படவோ இந்தியா விரும்பவில்லை. ஆகவே, ராஜபக்‌ஷ அரசாங்கத்தை சங்கடத்துக்குள் தள்ளும் எந்தவிதமான நடவடிக்கையையும் இந்தியா எடுக்காது. இன்றைய பூகோள(புவிசார்) அரசியல் யதார்த்தம் இதுதான். 

ஆகவே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்படுவதை விட, பொருளாதார விடயங்களில் அக்கறை காட்டுவதே இந்தியாவுக்கு விவேகமாகும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க முனையுமானால், தமிழர் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது. தமிழர் விவகாரம் தொடர்பிலான இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை இதுதான். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டால், அவர்கள் இந்தியாவிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது. 

ஆகவே இப்போதைய தேவை, இந்த அணுகுமுறைக்கு ஏற்றவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமது அரசியல் யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும்; இப்போதைக்கு இதுதான் உகந்தது என்று இந்தியா கருதுகிறது. ஆனால், அடுத்த முக்கிய கேள்வி என்னவென்றால், இதனை எவ்வாறு இவர்கள் செய்து முடிக்கப்போகிறார்கள் என்பதுதான். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை, அவர்கள் தமது பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியில்  முழுமையாகக் கவனத்தை குவிக்கவில்லை என்று கூறமுடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருடாந்தம் தமக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு பொருளாதார திட்டங்களைச் செய்து வந்தார்கள். அந்த நிதி போதுமானதாக இல்லை என்ற உண்மைக்கு அப்பால், அவர்களின் முக்கிய கவனம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதிலேயே குவிக்கப்பட்டு வந்தது.  

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதுடன், கடந்துபோன நாட்களில் வாழ்பவர்கள். பூகோள அரசியல் நிலைமைகள் மாறிய ஒரு களத்தில், புதிய அணுகுமுறைகளை வகுத்து, போருக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்களை வழிநடத்த முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இலங்கையின் அரசாங்கங்களுடன் ஒத்துழைக்கும் அரசியல் கலாச்சாரத்துக்கு தமிழர்கள் பழக்கப்படாதவர்கள். கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களும் தமிழர்களை பாரபட்சமாக நடத்தி வந்ததால், தமிழ்க் கட்சிகள் எப்போதும் எதிர்ப்பு அரசியலையே கடைப்பிடித்து வந்தன. ஆகவே, அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்யும் அரசியல்வாதிகளை துரோகிகள் என்று கூறுவது தமிழ் மக்கள் மத்தியில் வழக்கமாகிவிட்டது. 

தமிழர்களுக்கும் அவர்களது பிரதிநிதிகளுக்கும் இப்படியான ஒரு அரசியல் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்வது சிரமமானாலும், ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் நிலைமைகள் மாறிவிட்டன. ஆகவே அவர்கள் தமது அரசியல் கலாச்சாரத்தையும் மாற்றியாக வேண்டும். 

மைத்திரிபால சிரிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்த போது, அந்த நடவடிக்கையின் மூலமாக ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியது. அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையாவிட்டாலும் அதற்கு பூரண ஆதரவை வழங்கியது. அந்த புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கை தோல்வியடையவே, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு தேயத் தொடங்கியது. இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதால் எந்தவிதமான பயனும் கிடையாது என்று தமிழ் மக்கள் உணர்ந்தனர். 

இந்தச் சூழ்நிலையில், பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியா சொல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சங்கடமாகும்.  

ராஜபக்‌ஷ அரசாங்கம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காதே செய்துவருகிறது. தமிழ் பகுதிகளில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் எடுக்கும் முன்னதாக அரசாங்கம் தம்முடன் ஆலோசிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் நம்புகின்றன. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் வகையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தியை முன்னெடுக்கும் ஒரு யுக்தியை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்குமானால், இந்தியா வலியுறுத்துவது போல, பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக இருக்கும். தமிழ் தலைமைகளுடன் ஆலோசிப்பதற்கு ராஜபக்‌ஷ அரசாங்கத்தை இணங்க வைக்க இந்தியா முயல வேண்டும்.  

தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளையும், அவர்களது நியாயமான உரிமைப் போராட்டத்துக்கான சித்தாந்தத்தையும் தமிழ்க் கட்சிகள் கைவிடக்கூடாது. ஆனால், அதேவேளை, குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் மனிதாபிமான தேவைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் ஒரு குறுகிய கால, நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறையை அல்லது யுக்தியை கடைப்பிடுக்க அவர்கள் தயாராக வேண்டும்.  

தமது சொந்த மக்களின் நலனுக்காக ஒரு புதிய அணுகுமுறையைக் கைக்கொள்வதற்கு உதவ, பாரம்பரிய எதிர்ப்பு அரசியலை கைவிடுவதன் அவசியம் என்பது, இலங்கை அரசாங்கத்திடம் சரணாகதியடைவது என்று அர்த்தப்படுத்தப்படத் தேவையில்லை.