சீனாவிடமிருந்து செயற்கை நுண்ணறிவு(AI) விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கும் அமெரிக்க முயற்சியில் இந்தியா இணைந்தது!

சீனாவிடமிருந்து செயற்கை நுண்ணறிவு(AI) விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கும் அமெரிக்க முயற்சியில் இந்தியா இணைந்தது!

  ~ பிரதீக் சுக்லா / NDTV

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முக்கிய தொழில்நுட்பங்களையும் அவற்றின் விநியோகச் சங்கிலிகளையும் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சியில் இந்தியா இணைந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நீடித்த செழிப்புக்கான பாதுகாப்பான அடித்தளங்கள் குறித்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனம்’ (San Francisco Declaration on the Secure Foundations of Enduring Prosperity) என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இஸ்ரேல், பிரித்தானியா, தென்கொரியா, இந்தியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இதனிடையே, ஜேர்மனி, சுவீடன், நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவையும் அடுத்த வாரம் இந்த ஒப்பந்தத்தில் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, என்விடியா (Nvidia) நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு சில்லுகளை (AI Chips) சீனா பெற்றுக்கொள்வது தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் நிர்வாகத்தில் கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்விடியாவின் அதிநவீன சில்லுகளை சட்டவிரோதமாக சீனாவுக்கு மாற்றுவதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), சீன உளவாளி எனக் கூறப்படும் ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்பவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகியதாகவும் வெளியான தகவல்களுக்கு சில நாட்களுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பாக்ஸ் சிலிக்கா’ (Pax Silica) என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய விநியோகத் தடைகள் மீதான சார்பைக் குறைப்பதற்கும் அமெரிக்கா தலைமையில் 2025 டிசம்பர் மாதம் ‘பாக்ஸ் சிலிக்கா’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சான் பிரான்சிஸ்கோ பிரகடனம், அந்த முயற்சியின் அடுத்தகட்ட முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டம் செயற்கை நுண்ணறிவுத் துறையின் முழுமையான கட்டமைப்பையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாக, குறைக்கடத்திகள் (Semiconductors), முக்கிய கனிம வளங்கள், மேம்பட்ட உற்பத்தித் தொழில்நுட்பங்கள், எரிசக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் தரவு மையங்கள் (Data Centres) ஆகியவை இதில் அடங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான விநியோகச் சங்கிலிகள் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகும்.

உதாரணமாக, ஒரு கணினிச் சில்லு ஒரு நாட்டில் வடிவமைக்கப்படலாம். அதனை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் மற்றொரு நாட்டில் தயாரிக்கப்படலாம். பின்னர் அந்தச் சில்லு மூன்றாவது நாடு வழியாக ஏற்றுமதி செய்யப்படலாம்.

இவ்வாறான சூழ்நிலையில், எந்தவொரு தனிநாட்டாலும் இந்தத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது கடினமானதாக உள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் பொருளாதார விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் ஜேக்கப் ஹெல்பெர்க் (Jacob Helberg), பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

“சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றுவது என்னவென்றால், முக்கிய தொழில்நுட்பங்களையும் அவற்றை ஆதரிக்கும் உட்கட்டமைப்புகளையும் பாதுகாப்பது அனைத்து பாக்ஸ் சிலிக்கா கூட்டாளி நாடுகளினதும் கூட்டுப் பொறுப்பு என்பதை அவை ஏற்றுக்கொண்டுள்ளமையாகும்” என்றார்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் காணப்படும் பலவீனங்களைக் கண்டறிவதற்கும், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய பொருளாதார மையங்களை உருவாக்குவதற்குமான விசேட பணிக்குழுக்களை அமைக்கவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்திருப்பது ஏன் முக்கியமானது?

உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் தனது நிலையை வலுப்படுத்த இந்தியா முயற்சித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் அந்நாட்டிற்கு முக்கியமான வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

குறிப்பாக, குறைக்கடத்தி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன்களை விரிவுபடுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும் இந்தியாவின் இந்தப் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.

2026 பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின்போது (India AI Impact Summit), இந்தியா அதிகாரபூர்வமாக பாக்ஸ் சிலிக்கா திட்டத்தில் இணைந்தது.

இந்தக் கூட்டாண்மை மூலம் இந்திய நிறுவனங்கள் நம்பகமான சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் பங்கேற்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவும் வாய்ப்புகள் உருவாகலாம்.

எனினும், இந்தத் திட்டத்தில் இணைந்திருப்பதால் மட்டுமே இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி தானாகவே வளர்ச்சியடையும் என்றோ, வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் மீதான சார்பு உடனடியாகக் குறைந்துவிடும் என்றோ கருத முடியாது.

இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதுடன், முக்கிய கனிம வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளை உறுதிப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்கவும் வேண்டியுள்ளது.

இதுகுறித்து செயற்கை நுண்ணறிவு மற்றும் பொதுக் கொள்கை நிபுணர் சாகர் சாய் (Sagar Sai), NDTV ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

“இந்தியாவுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றுமொரு நாடாக மாறுவது மட்டுமல்ல.

மாறாக, உட்கட்டமைப்பு, குறைக்கடத்தி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான AI தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முழுமையான விநியோகச் சங்கிலியிலும் தனது திறன்களை வளர்த்துக்கொள்வதே இந்தியாவின் உண்மையான வாய்ப்பாகும்.

நம்பகமான சர்வதேசக் கூட்டாண்மைகள் இந்தப் பயணத்தை விரைவுபடுத்த உதவக்கூடும். எனினும், நீண்டகாலத் தொழில்நுட்பப் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதிலும் முக்கியமான வெளிநாட்டுச் சார்புகளைக் குறைப்பதிலுமே தங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் ஏற்பட்டுவரும் பாரிய மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.

உலக நாடுகள் தற்போது கணினிச் சில்லுகள், கணினிச் செயலாக்கத் திறன், முக்கிய கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி ஆகியவற்றை வெறுமனே வர்த்தகப் பொருட்களாக மட்டும் கருதாமல், தேசியப் பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமான மூலோபாய வளங்களாகக் கருதத் தொடங்கியுள்ளன.

இதனால், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மீதான ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான சர்வதேசப் போட்டி மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *