(ஆண்ட்ரியாஸ் க்ளூத் / புளூம்பெர்க் / ஜப்பான் டைம்ஸ்)
வட அமெரிக்கா முதல் ஐரோப்பா மற்றும் கிழக்காசியா வரையிலான நாடுகள், அவை வலிமைமிக்கதாயினும், ஆதிக்கப் போக்கைக் கொண்ட அமெரிக்காவுடனான சார்புநிலையை முற்றாகத் துண்டித்துக்கொள்வது மிகுந்த செலவுமிக்கதாக இருக்கும் அல்லது நடைமுறையில் சாத்தியமற்றதாகக்கூட இருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டுள்ளன. அதேவேளை, தமது பாதுகாப்பு மற்றும் இறைமை கருதி, குறைந்தபட்சம் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் ஆபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவை உணர்ந்துள்ளன. ஆனால், இது உண்மையிலேயே சாத்தியமானதா?
பல ஆண்டுகளாக, இவ்வாறான ஆதிக்கப் போக்கைக் கொண்ட நாடு என்றால் சர்வாதிகாரப் போக்குடைய சீனாவே எனக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் தமது சார்புநிலையைக் குறைத்துக்கொள்ள விரும்பும் வல்லரசு அமெரிக்காவாகவே மாறியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னரும் இந்தக் கவலை குறையவில்லை; மாறாக, அது மேலும் அவசரமானதாக மாறியுள்ளது. தேர்தலில் நிராகரிக்கப்பட்டு அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இப்போது கோபமும் மனக்கசப்பும் கொண்டவராகச் செயல்படக்கூடும். ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸில் பெரும்பான்மையைப் பெற்றாலும், ஜனாதிபதியைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மிகக் குறைவாக உள்ள துறைகளில் வெளிநாட்டுக் கொள்கையும் ஒன்றாகும்.
மேலும், அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதன் மீதான சார்புநிலையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தைத் தாண்டியும் பல தசாப்தங்கள் நீடிக்கக்கூடும். ஏனெனில், இத்தகைய சார்புநிலையைக் குறைப்பதற்கு அவ்வளவு நீண்ட காலம் தேவைப்படும்.
வர்த்தக உறவுகளில் தங்கியிருப்பதைத் தாண்டி, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மிகவும் கவலைப்படுவது இராணுவத் துறையில் அமெரிக்காவுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பைப் பற்றியே ஆகும். உக்ரைன் மற்றும் அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) இடையே அண்மையில் இடம்பெற்ற சம்பவம் இந்த அச்சத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை ட்ரம்புடன் நெருக்கமான உறவையும் முரண்பாடுகளையும் கொண்டுள்ள எலோன் மஸ்க் தலைமை தாங்குகிறார்.
உக்ரைனில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்லிங்க் (Starlink), ஸ்டார்ஷீல்ட் (Starshield) செயற்கைக்கோள் சேவைகளின் செயல்பாட்டைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியபோது, ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிப்பதற்காக உக்ரைன் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் போதிய வேகத்தில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உக்ரைனிய உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதற்கான பொறுப்பை எலோன் மஸ்க்கும் ட்ரம்ப் நிர்வாகமும் வேறு தரப்பின் மீது சுமத்த முயன்றபோதிலும், ஏற்பட்ட பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தச் சம்பவம் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளைப் பெரிதும் உலுக்கியுள்ளதாக ஒட்டாவாவில் உள்ள கார்ல்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப் லகாஸ் (Philippe Lagassé) எம்மிடம் தெரிவித்தார். கனடாவின் இராணுவக் கொள்முதல் தொடர்பில் அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பல தசாப்தங்களாக கனடாவின் இராணுவக் கொள்முதல்களில் பெரும்பகுதி அமெரிக்காவிடமிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உதாரணமாக, கனடாவிடம் தற்போது பழைய மாதிரியான அமெரிக்கத் தயாரிப்பு எப்-18 (F-18) போர் விமானங்கள் உள்ளன. அவற்றுக்குப் பதிலாக நவீன அமெரிக்கத் தயாரிப்பு எப்-35 (F-35) போர் விமானங்களை வாங்குவதற்கு கனடா நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்துள்ளது.
இந்த எப்-35 விமானங்களில் ‘செயலிழக்கச் செய்யும் மறைமுகக் கட்டுப்பாட்டு வசதி’ (Kill Switch) ஒன்று இருப்பதாகக் கூறப்படும் அச்சமும் உள்ளது. அதாவது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள் சேவைகளைக் கட்டுப்படுத்தியதைப் போல, அமெரிக்கா விரும்பினால் வெளிநாடுகள் பயன்படுத்தும் இந்தப் போர் விமானங்களையும் செயலிழக்கச் செய்ய முடியுமா என்பதே அந்தக் கேள்வி.
“அத்தகைய ஒரு செயலிழக்கச் செய்யும் வசதி இருப்பதற்கோ இல்லையென்பதற்கோ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்கிறார் லகாஸ். ஆனால், முக்கியமான விடயம் என்னவென்றால், “எப்-35 விமானங்களின் செயல்பாட்டைப் பாதிப்பதற்கு அமெரிக்காவுக்கு அத்தகைய மறைமுகச் சுவிட்ச் ஒன்று அவசியமில்லை” என்பதாகும்.
அமெரிக்கா அந்த விமானங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை வழங்குவதை நிறுத்திவிடலாம். அதைவிட முக்கியமாக, அந்த விமானங்கள் இயங்குவதற்குத் தேவையான தனியுரிமை கொண்ட தரவுத் தொடர்பு வசதிகளைத் துண்டித்துவிடலாம்.
இந்த வகையில், நவீன ஆயுதங்கள் ஸ்மார்ட்போன்களைப் போன்றவை. அவை செயற்கைக்கோள்கள் முதல் பல்வேறு உணரிகள் (Sensors) வரை கிடைக்கும் உளவுத் தகவல்களை ஒருங்கிணைக்கும் மேம்பட்ட வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதனை ஐபோன் மற்றும் அன்ட்ரொய்ட் தொலைபேசிகளுடன் ஒப்பிடலாம். ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பச் சூழலில் இயங்கும் ஒரு நட்பு நாட்டு இராணுவம், சில சாம்சங் சாதனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கலாம். ஆனால், அவை ஏனைய இராணுவப் பிரிவுகள், கூட்டாளிகள் மற்றும் கட்டளைப் பரிமாற்றத் தொடர்களுடன் இணைக்கப்பட முடியாததால், அவற்றின் பயன்பாடு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகிவிடும்.
இந்தப் பிரச்சினை அமெரிக்காவின் பெரும்பாலான நட்பு நாடுகளைப் பாதிக்கிறது. இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு பிரான்ஸ். ஏனெனில், டாங்கிகள் முதல் அணுவாயுதங்கள் வரையிலான தனது சொந்த விநியோக மற்றும் உற்பத்திக் கட்டமைப்புகளைப் பேணிவரும் பாரம்பரியம் அந்நாட்டுக்கு உள்ளது.
உதாரணமாக, கிரீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய பின்னர், டென்மார்க் தனது எப்-35 விமானக் கொள்வனவு ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்தது. ஆனால், இதுவரை அவ்வாறு செய்யவில்லை. போர்த்துக்கலும் இதுதொடர்பில் இன்னமும் உறுதியான முடிவுக்கு வரவில்லை.
அமெரிக்காவின் மாநிலமாக கனடாவை இணைத்துக் கொள்ளப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், கனடா இந்த வரையறைகளுடன் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க அழுத்தங்களுக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், நடுத்தர வல்லரசு நாடுகள் (Middle Powers) ஒன்றிணைய வேண்டும் என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்னி விரும்புகிறார். ஆனால், இராணுவத் துறையில் இது மிகவும் கடினமானது. ஏனெனில், அமெரிக்காவின் இராணுவத் தொழில்நுட்பம் உலகின் பல பகுதிகளிலும் ஆழமாகப் பரவியுள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவின் போயிங் (Boeing) நிறுவனம் தயாரிக்கும் மாற்று விமானத்தை வாங்குவதைத் தவிர்ப்பதற்காக, கனடா கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்வீடனின் சாப் (Saab) நிறுவனத்துடன் குளோபல் ஐ (GlobalEye) கண்காணிப்பு விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், இந்த விமானங்களும் அதே தரவுப் பரிமாற்ற மற்றும் ஒருங்கிணைப்புப் பிரச்சினையைக் கொண்டுள்ளன.
கனடாவின் எப்-35 விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மார்க் கார்னி தொடங்கியுள்ள ஆய்விலும் இந்தத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பிரச்சினை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
எப்-35 விமானங்களுக்குப் பதிலாக சாப் நிறுவனத்தின் கிரிப்பன் (Gripen) போர் விமானங்களை வாங்குவது ஒரு மாற்றுத் தெரிவாக உள்ளது. அவற்றை கனடாவிலேயே தயாரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ஆனால், கார்னிக்கு முந்தைய அரசாங்கமே எப்-35 விமானங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறியவை என்ற முடிவுக்கு வந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கனடாவிடம் ஏற்கெனவே உள்ள அமெரிக்கத் தயாரிப்பு இராணுவ உபகரணங்களுடன் கிரிப்பன் விமானங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படாது என்பதே முக்கியமான பிரச்சினையாகும்.
கனடாவுக்கு இது குறிப்பாகப் பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில், நேட்டோ கூட்டணிக்குள் மட்டுமன்றி, வட அமெரிக்காவின் வான்பரப்பைப் பாதுகாக்கும் கனடா – அமெரிக்கா இணைந்த இராணுவக் கட்டமைப்பான NORAD (North American Aerospace Defense Command) அமைப்பிலும் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் கனடாவுக்கு உள்ளது.
மூன்றாம் தரப்பு நாடுகளிடமிருந்து வாங்கப்படும் போர் விமானங்கள் தமது தரவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரநிலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கருதினால், தனது பாதுகாப்புத் திட்டங்களில் இருந்து கனடாவை முற்றாகப் புறக்கணிக்கக்கூடும்.
கனடாவின் நிலைமை, ஜேர்மனி முதல் தென்கொரியா வரையிலான அமெரிக்காவின் ஏனைய நட்பு நாடுகளும் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது.
“கடந்த சுமார் 80 ஆண்டுகளாக, அமெரிக்க இராணுவத்துடன் அதிகளவில் இணைந்து செயல்படக்கூடிய வகையில் எமது ஆயுதப் படைகளை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்” என்று கனேடிய குளோபல் அஃபயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டேவிட் பெரி (David Perry) என்னிடம் தெரிவித்தார்.
“ஜனாதிபதி ட்ரம்ப் தனது தனித்துவமான அணுகுமுறையின் மூலம், மேற்கத்திய நாடுகள் அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்தில் எந்தளவுக்கு தங்கியிருக்கின்றன என்பதை உண்மையில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் நல்ல மாற்றுத் தெரிவுகள் எதுவும் இல்லை.
வாஷிங்டனுக்கும் கீவ்வுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்டதைப் போன்றதொரு பதற்றமான உறவு, எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையிலும் உருவானால், அந்த நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும்.
உதாரணமாக, எப்-35 போர் விமானங்களுக்கான பல உதிரிப்பாகங்கள் அமெரிக்காவின் நட்பு நாடுகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. அந்த நாடுகள் அவற்றை வழங்க மறுக்கலாம்.
ஆனால், “இவ்வாறான பதற்றத்தை அதிகரிக்கும் பாதையில் நீங்கள் செல்லத் தொடங்கினால், முழுக் கூட்டணியும் சிதைந்துவிடும்” என்கிறார் லகாஸ்.
அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடுவதற்காக பிரான்ஸ் போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருப்பதும் சிக்கலானதே.
உதாரணமாக, பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதியாக மரின் லு பென் (Marine Le Pen) தெரிவுசெய்யப்பட்டு, அவர் ட்ரம்பைவிடவும் வேகமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டால் என்ன நடக்கும்?
எனவே, அமெரிக்காவின் மீதான சார்புநிலையைக் குறைப்பது என்பது வெறுமனே சுதந்திரத்தை அறிவிப்பதன் மூலம் சாத்தியமாகாது. அது படிப்படியாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, உள்நாட்டிலேயே ஆளில்லா விமானங்கள் மற்றும் தன்னியக்க ஆயுதக் கட்டமைப்புகளை (Autonomous Weapons) உருவாக்குவதில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், இன்றைய சார்புநிலைகள் நாளைய ஆயுதக் கட்டமைப்புகளிலும் மீண்டும் உருவாகாமல் தடுக்க முடியும்.
ஆனால், இதற்கு மிகப்பெரிய அளவிலான நிதி தேவைப்படும். அதுவும், பிரான்ஸ் உட்பட பெரும்பாலான நட்பு நாடுகள் ஏற்கெனவே கடன் சுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மேலும் சவாலானதாக இருக்கும்.
வெளிப்படையான அரசியல் பேச்சுக்களுக்கு அப்பால், தற்போதைய திட்டம் என்னவென்றால், “அடுத்த இரண்டு ஆண்டுகளைப் பல்லைக் கடித்துக்கொண்டு கடந்து செல்வதுதான். அதன் பின்னர் பதவிக்கு வரும் ஓர் அரசாங்கம், ‘கடவுளே! நாம் இப்போது சிதைத்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறதே’ என்பதை உணரும்” என்று லகாஸ் என்னிடம் தெரிவித்தார்.
“ஆனால், நடந்ததை நாம் ஒருபோதும் மறந்துவிட மாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மறதி இல்லாத நிலைமை பல மாற்றங்களை ஏற்படுத்தும். அவற்றில் ஒன்று, அமெரிக்காவின் நட்பு நாடுகள் படிப்படியாக அமெரிக்க ஆயுதங்களுக்காகச் செலவிடும் தொகையைக் குறைத்து, அவை தரத்தில் குறைந்தவையாக இருந்தாலும், மாற்று நாடுகளின் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் அதிகம் முதலீடு செய்வதாகும்.
இதன் விளைவாக, அமெரிக்காவின் உலகளாவிய வல்லமை தொடர்ந்து வீழ்ச்சியடையும்; அதன் இராணுவக் கூட்டணிகளும் பலவீனமடையும். மொஸ்கோ முதல் பெய்ஜிங் மற்றும் பியோங்யாங் வரையிலான அமெரிக்காவின் எதிரி நாடுகள் இந்த மாற்றங்களை மிக உன்னிப்பாகக் கவனிக்கும்.
இறுதியில், உலகில் உள்ள அனைவரினதும் பாதுகாப்பும் மேலும் பலவீனமடையும்.
(ஆசிரியர் குறிப்பு: ஆண்ட்ரியாஸ் க்ளூத், புளூம்பெர்க் ஒப்பீனியன் (Bloomberg Opinion) கட்டுரையாளர். அமெரிக்காவின் இராஜதந்திரம், தேசியப் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் எழுதிவருகிறார்.)
