~ ஆண்ட்ரூ கிரெகரி சுகாதாரப் பிரிவு ஆசிரியர்
வயாகரா (Viagra) மருந்தைப் போன்று இரத்த நாளங்களைத் தளர்த்தி, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மாத்திரையொன்று, அல்சைமர் (Alzheimer’s) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அறிவாற்றல் வீழ்ச்சியை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைக்கக்கூடும் என்று சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
மறதிநோய் எனப்படும் டிமென்ஷியாவின் (Dementia) மிகவும் பொதுவான வடிவமே அல்சைமர் நோயாகும். 2050ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் 15 கோடியே 30 இலட்சம் பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நோயை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பிரித்தானியா உள்ளிட்ட 13 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில், AR1001 என்ற மாத்திரை, அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களின் அறிவாற்றல் வீழ்ச்சியை 31 சதவீதம் குறைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, அல்சைமர் நோய்க்காக வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளாத நோயாளிகளிடையே இந்த முன்னேற்றம் பதிவாகியுள்ளது.
இந்த ஆய்வில் நேரடியாகப் பங்கேற்காத மருத்துவ நிபுணர்கள், முடிவுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். எனினும், இந்த முடிவுகள் மிகவும் உற்சாகமளிப்பதாகவும், பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்சைமர் நோய்க்கான முற்றிலும் புதிய சிகிச்சை முறை உருவாகுவதற்கான வாய்ப்பை இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடைபெற்ற அல்சைமர் நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டன.
வயாகரா மருந்துக் குடும்பத்தைச் சேர்ந்த AR1001
AR1001 என்பது பாஸ்போடைஎஸ்டரேஸ்-5 தடுப்பான் (Phosphodiesterase-5 inhibitor) வகையைச் சேர்ந்த மருந்தாகும்.
ஆண்களின் விறைப்புத்தன்மைக் குறைபாட்டுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வயாகரா மருந்தும் இதே மருந்துக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
AR1001 மருந்தைத் தயாரிக்கும் தென்கொரிய நிறுவனமான அரிபயோ (AriBio), அல்சைமர் நோய்க்காக வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளாத 604 நோயாளிகளிடம் இந்த மாத்திரை நோயின் தீவிரமடையும் வேகத்தைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், அல்சைமர் நோய்க்கான ஏனைய மருந்துகளையும் எடுத்துக்கொண்ட நோயாளிகள் அடங்கிய பரந்த குழுவில், இந்த மாத்திரையின் செயல்திறன் புள்ளிவிவர ரீதியாகக் குறிப்பிடத்தக்க அளவில் நிரூபிக்கப்படவில்லை.
மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்து:
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் நரம்புச் சிதைவு நோய்கள் தொடர்பான பேராசிரியரும், மருத்துவ அறிவியல் அகாடமியின் உறுப்பினருமான பேராசிரியர் தாரா ஸ்பையர்ஸ்-ஜோன்ஸ், இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
“இந்த மருந்து மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. அத்துடன், கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் மூளைச் செல்களின் செயல்பாட்டு வழிமுறைகளையும் நேரடியாகத் தூண்டக்கூடும்” என்றார்.
அல்சைமர் சிகிச்சையில் முக்கிய முன்னேற்றம்:
பிரித்தானிய அல்சைமர் ஆராய்ச்சி அமைப்பின் (Alzheimer’s Research UK) ஆராய்ச்சிப் பணிப்பாளர் டாக்டர் ஷியோனா ஸ்கேல்ஸ் (Sheona Scales), இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.
அல்சைமர் நோய்க்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறியும் முயற்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
AR1001 மருந்து மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருப்பதும், தற்போது பயன்பாட்டிலுள்ள சிகிச்சைகளிலிருந்து மாறுபட்ட முறையில் செயல்படுவதும் இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும் என்று அவர் விளக்கினார்.
“தற்போதுள்ள சில சிகிச்சைகளைப் போன்று மூளையில் தேங்கும் அமிலாய்டு (Amyloid) புரதத்தைக் குறிவைப்பதற்குப் பதிலாக, இந்த மருந்து குறிப்பிட்ட ஒரு நொதியின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன், மூளையின் செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு உயிரியல் செயன்முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
“அல்சைமர் நோய்க்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளாத நோயாளிகளிடம், நோயின் தீவிரமடையும் வேகத்தை இந்த மருந்து புள்ளிவிவர ரீதியாகக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.
“எனினும், ஆய்வில் பங்கேற்ற அனைத்து நோயாளிகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தக் குழுவில், இந்த நன்மை புள்ளிவிவர ரீதியாகக் குறிப்பிடத்தக்கதாக இருக்கவில்லை.
“இருப்பினும், அல்சைமர் ஆராய்ச்சியில் இது ஊக்கமளிக்கும் முன்னேற்றமாகும். இந்தச் சிக்கலான நோயை எதிர்கொள்வதற்குப் பல்வேறு புதிய அணுகுமுறைகளை ஆராய்வதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.
நினைவாற்றல் வீழ்ச்சியை 31 சதவீதம் குறைக்கும் வாய்ப்பு:
அல்சைமர் சங்கத்தின் (Alzheimer’s Society) ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் இணைப் பணிப்பாளர் டாக்டர் ரிச்சர்ட் ஓக்லி (Richard Oakley), இந்த ஆரம்பகட்ட முடிவுகள் மிகவும் உற்சாகமளிப்பதாகக் கூறினார்.
“அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு, நோயின் அறிகுறிகளை மட்டும் கட்டுப்படுத்தாமல், அதன் அடிப்படைக் காரணங்களை எதிர்கொள்ளக்கூடிய முற்றிலும் புதிய சிகிச்சை உருவாகலாம் என்பதற்கான அறிகுறியாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
“AR1001 மருந்து புதிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்துவதன் மூலம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
“மேலும், இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் பலனளித்துள்ள ஏனைய நோயின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளைப் போலன்றி, இந்த மருந்தை நாளொன்றுக்கு ஒருமுறை மாத்திரையாக எடுத்துக்கொள்ள முடியும். இதனால் சிகிச்சை முறையை எளிமைப்படுத்த முடியும்.
“ஓராண்டு காலம் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில், இந்த மருந்து நோயாளிகளின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் வீழ்ச்சியை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைத்துள்ளது.
“மேலும், பதிவான பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை இலேசானவை அல்லது மிதமானவை” என்று அவர் தெரிவித்தார்.
எனினும், அல்சைமர் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஏனைய மருந்துகளை எடுத்துக்கொண்ட நோயாளிகளிடம் AR1001 அதே அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என்றும், இது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வயாகராவை அல்சைமர் சிகிச்சைக்காகப் பயன்படுத்த வேண்டாம்!
“AR1001 மருந்து வயாகரா மருந்தின் அதே குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது குறிப்பாக அல்சைமர் நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது” என்று டாக்டர் ஓக்லி விளக்கினார்.
அதேவேளை, அல்சைமர் நோயைக் குணப்படுத்துவதற்கோ அல்லது அதன் முன்னேற்றத்தைக் குறைப்பதற்கோ பொதுமக்கள் தாங்களாகவே வயாகரா மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த ஆய்வின் முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், AR1001 மருந்து அல்சைமர் நோய்க்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக மாறுவதற்கு முன்னர் மேலும் பல மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இந்த மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முழுமையான தரவுகள் விஞ்ஞான சமூகத்தினாலும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளினாலும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அதன் பின்னரே அல்சைமர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப் பரிந்துரைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.
அல்சைமர் நோயை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், AR1001 தொடர்பான இந்த ஆய்வு, நோயின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்கான புதிய சிகிச்சை வாய்ப்பாக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
(நன்றி: த கார்டியன்)
