பாகிஸ்தானில் சூரிய மின்சக்திப் புரட்சி: மக்களின்  வெற்றியால் நெருக்கடியில் தேசிய மின்சாரத்துறை! இலங்கைக்கும் ஒரு பாடம்

பாகிஸ்தானில் சூரிய மின்சக்திப் புரட்சி: மக்களின் வெற்றியால் நெருக்கடியில் தேசிய மின்சாரத்துறை! இலங்கைக்கும் ஒரு பாடம்

~ கேரி டேவிஸ்/பிபிசி பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சூரிய மின்சக்தியின் பயன்பாடு எதிர்பாராத அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் மக்களுக்கு மின்சாரச் செலவைக் குறைக்க உதவியுள்ள போதிலும், நாட்டின் தேசிய மின்சார விநியோகக் கட்டமைப்புக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

திருமணச் சீதனத்திலும் இடம்பிடித்த சூரிய மின்தகடுகள்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிராமப்புறமொன்றில் வசிக்கும் பைசல் ஷாஸாத்திற்குத் திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன.

அவரது வீட்டில் திருமணச் சீதனமாக மனைவியின் குடும்பத்தினர் வழங்கிய நகைகள், பளபளக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், சோபாக்கள், குளிரூட்டும் சாதனம் எனப் பல பொருட்கள் நிறைந்துள்ளன.

ஆனால், இவற்றில் மிகவும் மதிப்புமிக்க பொருள் கட்டிலுக்கு அடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அது 340 வாட் திறன்கொண்ட ஒரு சூரிய மின்தகடு!

“கோடைக்காலத்தில் காலை எட்டு மணி முதல் மாலை வரை இதைப் பயன்படுத்தினோம். பகல் நேரத்தில் தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெறவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. எங்களுடைய காற்றுக் குளிரூட்டியை நாள் முழுவதும் இதன்மூலம் இயக்கினோம்” என்கிறார் ஷாஸாத்.

பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்தகடுகளின் பயன்பாடு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வீடுகள், மருத்துவமனைகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலை வளாகங்கள் என எங்கு பார்த்தாலும் சூரிய ஒளியில் மின்னும் மின்தகடுகளைக் காண முடிகிறது.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட Renewables First என்ற ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, 2018ஆம் ஆண்டில் நாட்டின் மின்சார உற்பத்தியில் ஒரு சதவீதமாக இருந்த சூரிய மின்சக்தியின் பங்கு, 2025ஆம் ஆண்டில் 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போது சுமார் 70 இலட்சம் குடும்பங்கள் சூரிய மின்தகடுகளை வைத்துள்ளன.

“முன்பெல்லாம் திருமணங்களில் மோட்டார் சைக்கிள்கள் அல்லது வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைப் பரிசாக வழங்குவார்கள். இப்போது சூரிய மின்தகடும் காற்றுக் குளிரூட்டியும் வழங்குகிறார்கள். இவை திருமணத்தில் தவிர்க்க முடியாத பொருட்களாக மாறிவிட்டன” என்கிறார் ஷாஸாத்.

இருப்பினும், அவர் தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்தும் மின்சாரத்தைப் பெறுகிறார்.

ஏனெனில், அவரது வீட்டில் சகோதரர்களின் குடும்பங்களும் ஒன்றாக வசிக்கின்றன. ஒரே நேரத்தில் பல மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் சூரிய மின்சக்தி மட்டும் போதுமானதாக இல்லை.

பாகிஸ்தானில் சராசரி மாத ஊதியம் 40,000 பாகிஸ்தானிய ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இது சுமார் 110 பிரித்தானிய பவுண்டுகள் அல்லது 145 அமெரிக்க டொலர்களுக்குச் சமமானது.

ஆனால், மாதாந்த மின்சாரக் கட்டணம் 15,000 முதல் 18,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், சாதாரண மக்களுக்கு அதைச் செலுத்துவது பெரும் சுமையாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் COP31 காலநிலை மாநாடு, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்கள், வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் பிற உபகரணங்களிலிருந்து உலகம் படிப்படியாக விலக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இத்தகைய சூழலில், சூரிய மின்சக்திப் பயன்பாட்டில் பாகிஸ்தான் உலகிற்கே முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது.

ஆனால், இந்த வெற்றியின் மறுபக்கத்தில் தேசிய மின்சாரக் கட்டமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

தேசிய மின்சாரக் கட்டமைப்பை வீழ்ச்சிக்குத் தள்ளும் சூரிய மின்சக்தி!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள சூரிய மின்சக்திப் புரட்சி அரசாங்கத்தின் திட்டமிட்ட கொள்கைகளால் உருவானதல்ல.

மாறாக, சாதாரண மக்களின் தனிப்பட்ட முடிவுகளாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் சந்தித்த பெரும்பாலான மக்கள், அதிகரித்த மின்சாரக் கட்டணங்களிலிருந்தும் நம்பகத்தன்மையற்ற தேசிய மின்விநியோகத்திலிருந்தும் தப்பிப்பதற்காகவே சூரிய மின்தகடுகளை நிறுவியதாகத் தெரிவித்தனர்.

Renewables First நிறுவனத்தின் தொழில்துறை இணைப்பாளர் முஹம்மது ஹசன் டஜானாவின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

அதேவேளை, சீனாவில் தயாரிக்கப்படும் சூரிய மின்தகடுகளின் விலை 93 சதவீதம் குறைந்துள்ளது.

“மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான மாற்று வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள்” என்கிறார் பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவைஸ் அஹ்மத் லெகாரி.

“இது மிகவும் ஆரோக்கியமான மாற்றம். சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் மாறியுள்ளோம். மக்களும் பொருளாதார ரீதியாகச் சாத்தியமான, திறன்மிக்க முறையில் செயல்பட்டுள்ளனர்” என்றும் அவர் கூறுகிறார்.

சூரிய மின்சக்தியின் வளர்ச்சி பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெருமளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் பாகிஸ்தானுக்கு இது முக்கியமான பொருளாதார நன்மையாக அமைந்துள்ளது.

ஆனால், இதனால் புதிய ஆபத்தும் உருவாகியுள்ளது.

அதுதான் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடும் Utility Death Spiral எனப்படும் மின்சார விநியோக நிறுவனங்களின் வீழ்ச்சிச் சுழற்சி.

இந்த வீழ்ச்சிச் சுழற்சி எவ்வாறு ஏற்படுகிறது?

மக்கள் சூரிய மின்சக்திக்கு மாறும்போது தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவு குறைகிறது.

இதனால், தேசிய மின்விநியோகக் கட்டமைப்பைப் பராமரிப்பதற்கான நிலையான செலவுகளை ஈடுசெய்யும் வருமானம் குறைகிறது.

அந்தச் செலவுகளை மீட்டெடுப்பதற்காக மின்சாரக் கட்டணங்களை மேலும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கட்டணங்கள் உயரும்போது இன்னும் அதிகமான மக்கள் சூரிய மின்சக்திக்கு மாறுகிறார்கள்.

இவ்வாறு ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சிச் சுழற்சி உருவாகிறது.

இதன் இறுதியில், சூரிய மின்தகடுகளை வாங்க வசதியுள்ளவர்கள் குறைந்த செலவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால், அவற்றை வாங்க முடியாத ஏழை மக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதனால், நாட்டில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட சமத்துவமற்ற மின்சாரப் பயன்பாட்டு முறை உருவாகக்கூடும்.

“இறுதியில் அரசாங்கம் தொடர்ந்து பெருமளவு நிதி வழங்கிப் பராமரிக்க வேண்டிய ஒரு வெள்ளை யானையாக அரசுக்குச் சொந்தமான மின்சார நிறுவனம் மாறிவிடும்” என எச்சரிக்கிறார் டஜானா.

ஆண்டுக்கு 500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சுமை!

இந்த நெருக்கடியின் விளைவுகள் ஏற்கெனவே உணரப்படுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து விலகியதன் காரணமாக, தொடர்ந்து அதைப் பயன்படுத்தும் ஏனைய நுகர்வோர் மீது ஆண்டுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கூடுதல் செலவுச் சுமை ஏற்பட்டுள்ளது” என்கிறார் எரிசக்தி அமைச்சர் லெகாரி.

“இது மிகப்பெரிய சுமையாகும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

எனினும், மக்களைச் சூரிய மின்சக்தியிலிருந்து விலக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று அவர் விளக்குகிறார்.

மாறாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பை அதிக போட்டித்திறன் கொண்டதாக மாற்றி, குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

பாகிஸ்தானின் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு மின்சாரத்தை வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், அதிக செலவுடைய மற்றும் நெகிழ்வுத்தன்மையற்ற ஒப்பந்தங்களில் நாட்டைச் சிக்கவைத்துள்ளதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஆனால், மின்சாரக் கட்டமைப்பின் மோசமான பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புப் பிரச்சினைகளும் கட்டண உயர்வுக்குக் காரணம் என அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

பெரும்பாலான ஒப்பந்தங்களை அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தித் திருத்தியுள்ளதாக அமைச்சர் லெகாரி தெரிவிக்கிறார்.

தற்போது மின்சாரச் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல், வீணாகும் மின்சாரத்தைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

2036ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாகிஸ்தானின் மின்சாரத் தேவையில் 90 சதவீதம் வரை தூய்மையான எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே அமைச்சரின் இலக்காகும்.

இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் அணுசக்தியும் அடங்கும்.

அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி மீதான நாட்டின் சார்பை 26 சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளிலும் சூரிய மின்சக்திப் புரட்சி!

தேசிய மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் முயன்றுவரும் அதேவேளை, தொழிற்துறையில் சூரிய மின்சக்தியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இஸ்லாமாபாத்தில் உள்ள கொஹினூர் நெசவாலைகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அங்கு பரந்த நிலப்பரப்பில் நீல நிற சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தத் தொழிற்சாலையின் மின்சார மற்றும் பயன்பாட்டுச் சேவைகள் மேலாளர் சபாவூன் கான், இந்த மின்தகடுகளைத் தனது “குழந்தை” என்று அன்புடன் குறிப்பிடுகிறார்.

மேலும் சூரிய மின்தகடுகளை நிறுவுவதற்காக நிலம் சமப்படுத்தப்படும் பணிகளையும் அவர் காட்டுகிறார்.

சூரிய ஒளி போதுமான அளவில் கிடைக்கும் நேரங்களில், தொழிற்சாலையின் நூற்றுக்கணக்கான இயந்திரங்களும் முழுமையாகச் சூரிய மின்சக்தியிலேயே இயங்குவதாக கான் தெரிவிக்கிறார்.

முன்னர் பயன்படுத்தப்பட்ட கனரக எரிபொருள் எண்ணெயில் இயங்கும் இயந்திரங்கள் தற்போது ஒரு கிடங்கில் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், சூரிய மின்சக்திக்கும் சில வரம்புகள் உள்ளன.

மேகமூட்டமான நாட்களிலும் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களிலும் இரவு வேளைகளிலும் தொழிற்சாலை தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தைப் பெறுகிறது.

ஏனைய நிறுவனங்களைப் போலவே, கொஹினூர் நெசவாலையும் அடுத்த சில வாரங்களில் தொழில்துறை மின்கலங்களைப் பயன்படுத்தத் தொடங்கவுள்ளது.

இதன்மூலம் பகலில் உற்பத்தியாகும் மேலதிக சூரிய மின்சாரத்தைச் சேமித்து, பின்னர் பயன்படுத்த முடியும்.

“எங்களுடைய எரிசக்திச் செலவுகளைக் குறைக்க வேண்டியிருந்தது. அதற்கான ஒரு வழியாகச் சூரிய மின்சக்தியைத் தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தௌபீக் சயீத் சைகோல்.

எனினும், தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து முற்றாக விலகுவது தங்களுடைய நோக்கமல்ல என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“துரதிர்ஷ்டவசமாக அரசாங்கத்திடம் போதுமான வளங்கள் இல்லை. எனவே, எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே குற்றஞ்சாட்ட முடியாது. சில விடயங்களை நாங்களே செய்துகொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் அவர்.

சூரிய மின்சாரக் கொள்கையில் மாற்றம்: சிறு தொழில்களுக்கு பாதிப்பு!

சூரிய மின்சக்தி தொடர்பான விதிமுறைகளை அரசாங்கம் அடிக்கடி மாற்றுவதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னர் வீடுகளில் உற்பத்தியாகும் மேலதிக சூரிய மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான வரவுகளைப் பெற முடிந்தது.

சூரிய ஒளி இல்லாத நேரங்களில் தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை ஈடுசெய்ய இந்த வரவுகளைப் பயன்படுத்த முடிந்தது.

ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்தக் கொள்கை மாற்றப்பட்டது.

“ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கை மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆனால், பின்னர் அது மாற்றப்பட்டது. இப்போது எங்களிடமிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக்கொண்டு, அதிக விலையில் எங்களுக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்” என்கிறார் பைசலாபாத் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் ஆரிப் எஹ்சான் மாலிக்.

இந்த மாற்றம் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பெரிதும் பாதிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆனால், எரிசக்தி அமைச்சர் லெகாரி இதற்கு வேறுவிதமான விளக்கத்தை அளிக்கிறார்.

முன்னர் நடைமுறையில் இருந்த முறையின் பொருளாதாரக் கணக்கீடுகள் சரியாக அமையவில்லை என்கிறார் அவர்.

சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு வழங்கிய மின்சாரத்தின் மதிப்பைவிட, பின்னர் அவர்கள் அதிலிருந்து பெற்ற மின்சாரத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததாக அவர் விளக்குகிறார்.

“அவர்கள் பெற்ற அந்த நன்மைகள் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஏனைய நுகர்வோரின் செலவிலேயே கிடைத்தன” என்கிறார் அமைச்சர்.

“இந்த விதிமுறைகளை மாற்றியிருக்காவிட்டால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏனைய மின்சார நுகர்வோர் ஆண்டுக்கு குறைந்தது 150 முதல் 200 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் வரையிலான மேலதிகச் சுமையைச் சுமக்க வேண்டியிருந்திருக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.

சூரிய மின்சக்தியில் பாகிஸ்தானின் எதிர்காலம் என்ன?

பாகிஸ்தானில் ஏற்பட்ட முதலாவது சூரிய மின்சக்திப் பயன்பாட்டு அலை அரசாங்கத்திற்கே எதிர்பாராத ஒன்றாக இருந்தது என்பதை அமைச்சர் லெகாரி ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அரசாங்கத்தின் திட்டங்களை மீறிச் சென்றுவிடும் என்ற அச்சம் தனக்கு இல்லை என்கிறார் அவர்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் மின்சாரத் திட்டமிடலில் இந்த வளர்ச்சி ஏற்கெனவே உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் தற்போது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

சூரிய மின்சக்தி தொடர்பில் பாகிஸ்தான் மிகப்பெரிய இலக்குகளைக் கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூரிய மின்சக்தியைச் சேமிப்பதற்கான மின்கல உற்பத்தித் தொழிற்சாலைகளை நிறுவவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், பாகிஸ்தான் தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது.

“எங்களுக்கு முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன” என்கிறார் Renewables First நிறுவனத்தின் முஹம்மது ஹசன் டஜானா.

முதலாவது பாதை, சூரிய மின்சக்தியும் தேசிய மின்சாரக் கட்டமைப்பும் ஒன்றுக்கொன்று துணையாகச் செயல்படும் எதிர்காலமாகும்.

அத்தகைய நிலை உருவானால், படிப்படியான எரிசக்தி மாற்றத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதற்கு பாகிஸ்தான் உலகிற்கே சிறந்த முன்னுதாரணமாக அமையும்.

இரண்டாவது பாதை, அதிக செலவுடைய, தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் சுமையில் நாடு சிக்கிக்கொள்வதாகும்.

அவ்வாறு நடந்தால், சூரிய மின்சக்திப் புரட்சியைச் சரியாக நிர்வகிக்கத் தவறினால் என்ன நிகழும் என்பதற்கான எச்சரிக்கை உதாரணமாக பாகிஸ்தான் மாறிவிடும்.

முழுமையான மின்சாரத் தன்னிறைவை நோக்கி ஒரு குடும்பம்!

இந்தச் சவால்கள் அனைத்திற்கும் மத்தியில், பஞ்சாபின் கிராமப்புறத்தில் வசிக்கும் பைசல் ஷாஸாத்தின் சூரிய மின்சக்திக் கனவுகள் சிறிதும் குறையவில்லை.

மாறாக, அவை மேலும் விரிவடைந்துள்ளன.

“இன்னும் 10 முதல் 15 சூரிய மின்தகடுகளை வாங்கி வீட்டின் கூரையில் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் மின்கலங்களையும் அவசரகால மின்சாரச் சேமிப்பு வசதிகளையும் இணைத்து ஒரு முழுமையான மின்சார அமைப்பை உருவாக்குவோம்” என்கிறார் அவர்.

“எங்களுடைய இலக்கு, மின்சாரத் தேவையில் முழுமையாகத் தன்னிறைவு அடைவதுதான்.”

பாகிஸ்தானின் சூரிய மின்சக்திப் புரட்சியின் அடிப்படையான மாற்றத்தை அவரது இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

மின்சாரத்திற்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள், இப்போது தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இந்த மக்கள் முன்னெடுத்துள்ள எரிசக்திப் புரட்சிக்கு ஏற்ப தேசிய மின்சாரக் கட்டமைப்பையும் மாற்றியமைப்பதே பாகிஸ்தான் அரசாங்கத்தின் முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

(மூலம்: பிபிசி செய்திகள்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *