~ சசாங்க பெரேரா / நேபாளி டைம்ஸ்
சோனியா காந்தியின் Belonging: A Journey of Love என்ற நூல், அண்மைக்காலத்தில் இந்தியாவிலும், பொதுவாகத் தெற்காசியாவிலும் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நூல்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. இந்த நூலின் வெளியீடு வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்புகளையும், அரசியல் விவாதங்களையும், வர்த்தக ரீதியான ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தீவிரமான அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகக் கருதப்படும் எந்தவொரு நூலையும் போலவே, சோனியா காந்தியின் ஆதரவாளர்களும் குறிப்பிட்ட அரசியல் சார்பற்றவர்களும் இந்த நூலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அதேவேளை, அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் ஒரு பக்கத்தைக்கூடப் படிக்காமலேயே நூலைக் கடுமையாக விமர்சித்தனர். அந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது.
பல தசாப்தங்களாக பாக்கு நீரிணைக்கு அப்பாலிருந்து இந்திய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருபவன் என்ற வகையிலும், இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தவன் என்ற வகையிலும், இந்த நூலை அணுகிய எனக்கு, நவீன இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தீர்க்கமான வரலாற்றுப் பங்களிப்பாக இருப்பதைவிட, அரசியல் விமர்சனமாகவே இது அதிக சுவாரஸ்யமானதாகத் தோன்றுகிறது.
இந்த நூலின் விவரிப்பில் பாராட்டத்தக்க பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, ஒப்பீட்டளவில் வெளிப்படையாக எழுதப்பட்டிருப்பதும், எளிதில் வாசிக்கக்கூடிய நடையும் குறிப்பிடத்தக்கவை.
ஆனால் கேள்விக்குட்படுத்த வேண்டிய பல விடயங்களும் உள்ளன. குறிப்பாக, தனிப்பட்ட நினைவுகள், அரசியல் பொறுப்பு மற்றும் வரலாற்றுப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
சுயசரிதைகள் ஒருபோதும் முற்றிலும் நடுநிலையானவை அல்ல:
சுயசரிதைகள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களை நடுநிலையாகப் பதிவு செய்யும் ஆவணங்களாக இருப்பதில்லை.
அவை கடந்தகாலத்தை நினைவுகூருதல், சில நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்தல், அவற்றுக்கு விளக்கமளித்தல், சில சந்தர்ப்பங்களில் ஒருவரின் நற்பெயரை மீட்டெடுக்க முயற்சித்தல், அதேபோன்று சில நிகழ்வுகளை வரலாற்றிலிருந்து மறைத்தல் போன்ற செயற்பாடுகளையும் உள்ளடக்கியவை.
சுயசரிதை எழுதுபவர்கள் குறிப்பிட்ட அரசியல், சமூக மற்றும் நிறுவனச் சூழல்களுக்குள் இருந்தே எழுதுகின்றனர். அவர்களது விசுவாசங்கள், உறவுகள், கவலைகள் மற்றும் இலட்சியங்கள், எதை நினைவுகூர்கிறார்கள் என்பதையும் அதை எவ்வாறு முன்வைக்கிறார்கள் என்பதையும் தவிர்க்க முடியாத வகையில் பாதிக்கின்றன.
சோனியா காந்தியும் இதற்கு விதிவிலக்கல்ல.
நேரு–காந்தி குடும்பத்துடனான அவரது உறவு, அவருக்குக் கிடைத்த அரசியல் மரபுரிமை, காங்கிரஸ் கட்சி மற்றும் இவற்றைச் சூழ்ந்துள்ள வரலாற்றுச் சர்ச்சைகள் ஆகியவற்றின் ஊடாகவே அவரது விவரிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.
அவர் தனது வாழ்க்கையை வெறுமனே நினைவுகூரவில்லை. நவீன இந்தியாவை வடிவமைத்ததுடன், நவீன இந்தியாவினாலும் வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் வம்சத்தின் வரலாற்று மரபையும் அவர் கையாள்கிறார்.
எனவே, சோனியா காந்தி தனது சொந்தக் கண்ணோட்டத்தை முன்வைப்பதுதான் இங்குள்ள பிரச்சினையல்ல. ஒவ்வொரு சுயசரிதை எழுத்தாளரும் அதைத்தான் செய்கிறார்கள்.
மாறாக, தனிப்பட்ட நினைவுகள், அரசியல் விளக்கங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுரீதியான விளக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை வாசகர்களால் அடையாளம் காண முடியுமா என்பதே முக்கியமான கேள்வியாகும்.
அத்துடன், அந்த வேறுபாடுகள் ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
நூல் வெளியீட்டைச் சூழ்ந்த சர்ச்சை:
இந்த நூலின் வெளியீட்டைச் சுற்றி உருவான பெரும் கவனத்திற்கு, வெளியீட்டுக்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்களும் காரணமாக அமைந்தன.
ஆரம்பத்தில் இந்தியப் பதிப்பை வெளியிடவிருந்த பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India), பின்னர் அந்த ஏற்பாட்டை முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக நரேந்திர மோடி, ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் (RSS), மத சமூகங்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் இந்தியாவின் சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான பகுதிகளில் திருத்தங்களையும் நீக்கங்களையும் மேற்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த மாற்றங்களை ஏற்க சோனியா காந்தி மறுத்ததாகவும் கூறப்பட்டது.
எனினும், அவரது மறுப்பின் காரணமாகவே வெளியீட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டதை பெங்குயின் நிறுவனம் மறுத்தது.
இதனையடுத்து, இந்தியப் பதிப்பை வெளியிடும் பொறுப்பை ஹார்பர்கொலின்ஸ் (HarperCollins) நிறுவனம் ஏற்றுக்கொண்டது. நவம்பர் 10ஆம் திகதி நூல் வெளியானது.
உண்மையில் என்ன நடந்தது என்பது எதுவாக இருந்தாலும், இந்தச் சம்பவம் அரசியல் அழுத்தங்கள், பதிப்பகச் சுதந்திரம் மற்றும் இந்தியாவில் அரசியல் விமர்சனங்களையும் பொதுவிவாதங்களையும் முன்னெடுப்பதில் அதிகரித்துவரும் சிக்கல்கள் குறித்து பரவலான ஊகங்களையும் விவாதங்களையும் உருவாக்கியது.
ஒரு பெரிய விளம்பரப் பிரசாரத்தால்கூட பெற்றிருக்க முடியாத அளவுக்கு இந்தச் சர்ச்சை நூலுக்குப் பெரும் விளம்பரத்தை வழங்கியது.
இந்தச் சூழ்நிலையும் ஓரளவுக்குக் கைகொடுத்ததால், நூலின் வர்த்தக ரீதியான வரவேற்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
சில இடங்களில் பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தின் கையிருப்பு முழுமையாக விற்றுத் தீர்ந்ததாகவும், முக்கிய புத்தகக் கடைகளில் வழக்கத்திற்கு மாறான தேவை ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிராஸ்வேர்ட் (Crossword) புத்தக விற்பனை நிறுவனம், கணிசமான முன்பதிவுகளும் தொடர்ச்சியான மறுகொள்முதல் கோரிக்கைகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது வெறுமனே ஒரு பதிப்பக வெற்றி மட்டுமல்ல. காந்தி குடும்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல் வரலாறு குறித்த பொதுமக்களின் ஆர்வம் இன்னும் தொடர்வதற்கான சான்றாகவும் அமைந்துள்ளது.
ஆனால் சர்ச்சைகளையும் விற்பனைச் சாதனைகளையும் இலக்கிய அல்லது வரலாற்றுத் தரத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
சோனியா காந்தியின் வெளிப்படையான அணுகுமுறை:
இருப்பினும், பல சுயசரிதைகளுடன் ஒப்பிடும்போது சோனியா காந்தியின் விவரிப்பில் புத்துணர்ச்சி தரும் சில அம்சங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல அரசியல் சுயசரிதைகள், தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துதல், கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்த்துத் தம்மை வீரர்களாகச் சித்தரித்தல், பொறுப்புகளை முறையாக மற்றவர்கள்மீது சுமத்துதல், விரும்பத்தகாத மற்றும் வன்முறை நிறைந்த அரசியல் நிகழ்வுகளை முற்றிலுமாக மறைத்தல் போன்ற முயற்சிகளாக மாறிவிடுகின்றன.
அரசியல் தோல்விகள் சதித்திட்டங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. இராணுவச் சர்ச்சைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தவிர்க்க முடியாத நடவடிக்கைகளாக விளக்கப்படுகின்றன. சங்கடமான வரலாற்றுச் சம்பவங்கள் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது எழுத்தாளர் விரும்பும் வரலாற்றுப் பிம்பத்துக்கு ஏற்றவாறு மறுகட்டமைக்கப்படுகின்றன.
ஆனால் சோனியா காந்தியின் விவரிப்பு இதைவிடத் தெளிவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், பல அம்சங்களில் நேர்மையானதாகவும் உள்ளது.
குடும்பத்துக்குள் ஏற்பட்ட பதற்றங்கள், தனிப்பட்ட பலவீனங்கள், துயரங்கள், அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் பொதுவாழ்க்கைக்குள் அவர் நுழைந்தபோது எதிர்கொண்ட சிக்கலான சூழ்நிலைகள் குறித்து அவர் எழுதியுள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே பொதுவெளியில் கிடைக்கும் பிற தகவல்களின் அடிப்படையில் உண்மையானவை என்பதை நாம் அறிவோம்.
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள், தனது உடல்நலப் பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து அரசியல் தலைமைத்துவத்துக்கு மாறியபோது எதிர்கொண்ட சிரமங்கள் ஆகியவை குறித்த அவரது நினைவுகள், பல அரசியல் சுயசரிதைகளில் காணமுடியாத உணர்வுபூர்வமான ஆழத்தை இந்த நூலுக்கு வழங்குகின்றன.
உதாரணமாக, ‘ஒப்பரேஷன் புளூ ஸ்டார்’ (Operation Blue Star) நடவடிக்கைக்குப் பின்னர் குடும்ப இல்லத்தில் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்த அவரது விவரிப்பு, பொதுவாக இராணுவ மற்றும் அரசியல் வரலாறுகளின் ஊடாக மட்டுமே பேசப்படும் நிகழ்வுகளின் தனிப்பட்ட விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பை வழங்குகிறது.
2004ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்த அவரது விளக்கமும் முக்கியமானது.
எனினும், அந்தக் காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலைகளை அறிந்த வாசகர்கள், அவரது நினைவுகளை ஏனைய தரப்பினரின் விவரிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்புவது இயல்பானதே.
காங்கிரஸின் சர்ச்சைக்குரிய வரலாறு:
ஆனால் காங்கிரஸ் கட்சியினதும், சோனியா காந்தி இணைந்துகொண்ட அரசியல் குடும்பத்தினதும் வரலாற்றில் இடம்பெற்ற சங்கடமான நிகழ்வுகளை நூல் அணுகும்போது, அதன் விளக்கங்கள் அவ்வளவு நம்பத்தகுந்தவையாகத் தோன்றவில்லை.
அவசரகால ஆட்சி, 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள், ஷா பானு சர்ச்சை, பாபர் மசூதி இடிப்பு மற்றும் போஃபோர்ஸ் ஊழல் விவகாரம் ஆகியவற்றை சோனியா காந்தி மீண்டும் ஆராய்கிறார்.
தனக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான, வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிக்கலான அரசியல் உறவு குறித்த தனது மதிப்பீட்டையும் அவர் முன்வைக்கிறார்.
அரசியல் எதிரிகளுக்கிடையே வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் அடிப்படை மரியாதைகள்கூட எவ்வாறு சீர்குலைந்தன என்பதையும் அவர் விவரிக்கிறார்.
இந்த நினைவுகளில் சில முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
அவசரகால ஆட்சியின்போது இந்திரா காந்தி தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை மற்றும் சஞ்சய் காந்தி செலுத்திய செல்வாக்கு குறித்த அவரது விவரிப்பு, ஏற்கெனவே விரிவாக எழுதப்பட்ட ஒரு வரலாற்றுச் சூழ்நிலைக்கு குடும்பத்தின் உள்ளிருந்து ஒரு புதிய பார்வையை வழங்குகிறது.
ஆனால் அவசரகால ஆட்சியின்போது இடம்பெற்ற அதிகார துஷ்பிரயோகங்களுக்குப் பெருமளவில் சஞ்சய் காந்தியே காரணம் என்று கூறும் போக்கு, இந்திரா காந்தியின் சொந்த அரசியல் பொறுப்பைக் குறைத்து மதிப்பிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
அவசரகால ஆட்சி என்பது வெறுமனே ஒரு குடும்பத் துயரமோ அல்லது துரதிர்ஷ்டவசமான அரசியல் தவறான மதிப்பீடுகளின் காலகட்டமோ அல்ல.
அது ஜனநாயக நிறுவனங்களுக்கும் குடிமக்களின் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் எதிராகத் திட்டமிட்டும், அதன் விளைவுகளை அறிந்தும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.
அதற்குக் காந்தி குடும்பமும் காங்கிரஸ் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்.
1984 சீக்கியர் படுகொலைகள் தொடர்பான கேள்விகள்..
இதேபோன்று, 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ராஜீவ் காந்தியை சோனியா காந்தி பெருமளவில் விமர்சனமின்றிப் பாதுகாக்க முயல்வது, தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும், வரலாற்று விளக்கமாக அவ்வளவு நம்பத்தகுந்ததாக இல்லை.
அரச நிர்வாகம் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் செயலிழந்ததையும், வன்முறையைத் தூண்டிய அல்லது தடுக்கத் தவறிய சில தனிநபர்களின் உடந்தையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.
ஆனால் இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு ராஜீவ் காந்தி ஒருபோதும் அனுமதி வழங்கியிருக்க முடியாது என்ற அவரது வாதம், பெரும்பாலும் கணவரின் குணநலன்கள் குறித்த தனிப்பட்ட புரிதலையும், இயல்பாகவே அவரிடம் காணப்படும் தனிப்பட்ட சார்புநிலையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இங்கு மற்றொரு கேள்வியும் எழுகிறது.
அந்த வன்முறைகளில் ராஜீவ் காந்திக்கு எந்தப் பங்கும் இல்லையென்றால், அவற்றைத் தடுக்க முடியாத அளவுக்கு அவர் அரசியல் ரீதியாகப் பலவீனமானவராக இருந்தாரா?
நூலில் விடுபட்டுள்ள முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள்:
இந்த நூலில் குறிப்பிடத்தக்க சில விடுபாடுகளும் உள்ளன.
போஃபோர்ஸ் ஊழல் விவகாரம் குறித்த அவரது விளக்கம், அதில் சர்ச்சைக்குரிய பங்கு வகித்த ஒட்டாவியோ குவாத்ரோச்சியின் (Ottavio Quattrocchi) பங்களிப்பை அர்த்தமுள்ள வகையில் ஆராயவில்லை.
போபால் விஷவாயுப் பேரழிவு மற்றும் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் ஆண்டர்சன் (Warren Anderson), கடுமையான சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ளாமல் இந்தியாவிலிருந்து வெளியேறிய சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.
அவசரகால ஆட்சி குறித்த விவாதத்தில், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மீட்சிக்கு சஞ்சய் காந்தி வழங்கிய பங்களிப்பும் போதுமான அளவில் ஆராயப்படவில்லை.
அதேபோன்று, 1986ஆம் ஆண்டில் பாபர் மசூதியின் கதவுகளைத் திறப்பது தொடர்பாக காங்கிரஸ் அரசாங்கம் எடுத்த முடிவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அவர் முழுமையாக ஆராயவில்லை.
அந்த முடிவுகள், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கான சூழ்நிலையை மேலும் எளிதாக்கியதுடன், அதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்தன.
மேலும், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான வெளிநாட்டுக் கொள்கைத் தவறுகளையும் சோனியா காந்தி விவாதிக்கவில்லை.
அந்தக் கொள்கைத் தவறுகள் இறுதியில், 1991ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்தன.
இந்த விடுபாடுகள் முக்கியமானவை.
இவை சோனியா காந்தியின் முழு விவரிப்பையும் செல்லாததாக்கவில்லை. ஆனால் முழுமையான அரசியல் சுயசரிதை என்ற வகையில் அதன் நம்பகத்தன்மையைக் கட்டுப்படுத்துகின்றன.
மௌனம் என்பது அவசியமாக நேர்மையின்மைக்கான சான்றல்ல.
ஆனால் இந்தியாவின் அரசியல் வரலாற்றை மீண்டும் பரிசீலிக்குமாறு வாசகர்களை அழைக்கும் ஒரு நூலில், வெளிப்படுத்தப்படும் தகவல்களைப் போலவே பேசப்படாமல் விடப்படும் விடயங்களும் பல உண்மைகளை உணர்த்தக்கூடும்.
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நூலின் முக்கியத்துவம்:
இந்த நூல் வெளியிடப்பட்டுள்ள காலகட்டம் மிகவும் முக்கியமானது.
இந்தியா தற்போது கணிசமான அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள், நிறுவனங்களின் சுயாதீனம் தொடர்பான சர்ச்சைகள், ஜனநாயகப் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்களிக்கும் உரிமை குறித்த ஆர்ப்பாட்டங்கள், இந்திய அரசின் தன்மை தொடர்பான தொடர்ச்சியான விவாதங்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.
இதற்கிடையில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயற்பாடுகளை மையமாகக் கொண்டு, இந்தக் கொந்தளிப்புகளின் மத்தியில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் அரசியல் அணிதிரட்டலும் நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.
இந்தப் பின்னணியில், அரசியல் சகிப்பின்மை, அரசியல் எதிரிகளுக்கிடையிலான உறவுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளைச் சுயாதீனமாகப் பொதுவெளியில் கண்காணிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருதல் ஆகியவை குறித்த சோனியா காந்தியின் கருத்துகள், அவரது தனிப்பட்ட அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான முரண்பாடு ஒன்றும் உள்ளது.
பதிப்புச் சுதந்திரம் குறித்த சர்ச்சையில் சிக்கிய ஒரு நூல், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக வெளி ஆகியவை மீண்டும் இந்தியப் பொதுவாழ்வில் முக்கியமான விவாதப் பொருட்களாக மாறியுள்ள தருணத்தில் வெளியாகியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான முக்கியத்துவம்:
இந்தியாவுக்கு வெளியே உள்ள தெற்காசிய வாசகர்களுக்கும் இந்த நூல் கூடுதல் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்திய அரசியல் என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரிய விடயமல்ல.
அந்நாட்டின் அரசியல் கலாசாரம், நிறுவனங்களின் செயற்பாட்டு நடைமுறைகள், தலைமைத்துவ மரபுகள், தேசியவாதம் மற்றும் பிராந்தியவாதம் குறித்த முரண்பட்ட புரிதல்கள் ஆகியவை இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவின் அண்டை நாடுகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை.
எனவே, இந்திய அரசியல் அதிகார அமைப்பில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்த ஒருவரின் அரசியல் சிந்தனைகளைப் புரிந்துகொள்வது நிச்சயமாகப் பயனுள்ளது.
ஆனால் நேரு–காந்தி குடும்பத்தைப் பற்றிய இறுதியான உள்வட்ட விவரிப்பாகவோ அல்லது இதுவரை சொல்லப்படாத சமகால இந்தியாவின் முழுமையான அரசியல் வரலாறாகவோ இந்த நூலைக் கருதும் எண்ணத்திலிருந்து வாசகர்கள் விலகியிருக்க வேண்டும்.
இது ஒரு தனிப்பட்ட வாழ்க்கை விவரிப்பு. அதேவேளை, ஓர் அரசியல் தற்காப்பு வாதமாகவும், ஓரளவுக்கு வரலாற்றில் தனது இடத்தை நிலைநிறுத்தவும் கடந்தகால நிகழ்வுகளை மறுஒழுங்குபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.
இந்த வெவ்வேறு நோக்கங்கள் நூல் முழுவதும் தெளிவாக ஒன்றாகக் காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவை ஒன்றுக்கொன்று சிரமமான முறையிலும் இணைந்திருக்கின்றன.
நூலை வாசிப்பவர்களுக்கு எனது ஆலோசனை
ஓர் ஆசிரியர் என்ற வகையில், இந்த நூலை இன்னும் வாசிக்காதவர்களுக்கு நான் வழங்க விரும்பும் ஆலோசனை மிகவும் எளிமையானது.
நூலை வாசியுங்கள்.
ஆனால் அதனைச் சூழ்ந்துள்ள விளம்பரங்கள், சர்ச்சைகள் அல்லது தனிப்பட்ட நினைவுகளின் உணர்வுபூர்வமான தாக்கம் ஆகியவற்றால் முழுமையாக ஆட்கொள்ளப்படாதீர்கள்.
வெளிப்படைத்தன்மை காணப்படும் இடங்களில் அதனைப் பாராட்டுங்கள்.
தேவையான இடங்களில் நூல் முன்வைக்கும் விளக்கங்களைக் கேள்விக்குட்படுத்துங்கள்.
குறிப்பாக, சொல்லப்படாமல் விடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்துங்கள்.
இறுதி மதிப்பீடு: ‘Belonging’
இறுதியில், இது வாசிக்கத் தகுதியான ஒரு நூல் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதன் ஆதரவாளர்களும் விமர்சகர்களும் முன்வைக்கும் எல்லாக் காரணங்களுக்காகவும் அது முக்கியமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
என்னைப் பொறுத்தவரை, இந்த நூலின் மிகப்பெரிய பெறுமதி, அது நிறுவும் வரலாற்று உண்மைகளில் இல்லை.
மாறாக, அரசியல் நினைவுகள், மரபுரிமையாகக் கிடைக்கும் அதிகாரம், ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் ஒரு நாட்டின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ள தனது சொந்த வாழ்க்கைக் கதையைச் சொல்லும் சிக்கலான நடைமுறை ஆகியவை குறித்து அது எழுப்பும் கேள்விகளில்தான் அதன் உண்மையான பெறுமதி அடங்கியுள்ளது.
(ஆசிரியர் குறிப்பு: முனைவர் சசாங்க பெரேரா (Sasanka Perera), கொழும்பு மனித அறிவியல் நிறுவனத்தின் (Colombo Institute for Human Sciences) தலைவராவார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், புதுடில்லியிலுள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்திலும் (South Asian University) சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.)
மூலம்: Nepali Times
