மாறிவரும் தேசியவாதமும் விசுவாசத்தின் முரண்பாடுகளும்

மாறிவரும் தேசியவாதமும் விசுவாசத்தின் முரண்பாடுகளும்

 ~ வர்கீஸ் கே. ஜோர்ஜ் 

இந்தியாவில் உள்ள இந்து தேசியவாதிகளின் ஒரு பிரிவினர், நாட்டின் மதச் சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தேசத்தின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை நீண்டகாலமாகக் கேள்விக்குள்ளாக்கி வந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அவர்களும் தங்களது விசுவாசத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், இதில் ஒரு வரலாற்று முரண்நகை உள்ளது. இந்து தேசியவாதத்தின் முக்கிய தளமான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), ஒரு தேசத்தின் மீதான விசுவாசம் என்பது அதன் குடிமக்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை என்று இப்போது உலகிற்கு விளக்க முற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு  முன்னர் லண்டனில் நடைபெற்ற ‘ஒன்றிணைப்பைக் கொண்டாடுதல்’ (Celebration of Oneness) நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இதனைத் தெளிவுபடுத்தினார். 

அவர் பேசுகையில், “ஒரு இந்துவுக்கு, இந்தியனாக இருப்பதற்கும் மற்றொரு நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. பிரிட்டிஷ் இந்துக்கள் நல்லவர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், உண்மையான இந்துக்களாகவும் இருந்தால், பிரிட்டிஷ் நலன்களுக்கும் பாரதத்தின் நலன்களுக்கும் இடையே ஒருபோதும் முரண்பாடு இருக்காது. அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், பிரிட்டிஷ் இந்துக்கள் பிரிட்டனுடன்தான் நிற்பார்கள் என்பது தெளிவு. உங்கள் ‘கர்மபூமி’ (பணி செய்யும் இடம்) எங்கு உள்ளதோ, அங்குதான் உங்கள் விசுவாசம் இருக்க வேண்டும். உங்கள் ‘ஜன்மபூமி’ (பிறந்த பூமி) அல்லது ‘புண்யபூமி’ (புனித பூமி) என்பது உங்களுக்கு நற்பண்புகளை வழங்கும் இடமாகும், மேலும் அந்தப் பண்புகளின்படி உங்கள் கர்மபூமியில் வாழ வேண்டும். எனவே, இந்துத்துவம் ஒருபோதும் உங்களை உங்கள் கர்மபூமிக்குத் துரோகம் செய்யச் சொல்லாது” என்று குறிப்பிட்டார்.

தேசியத்தின் இரு  வடிவங்களும்  சிக்கல்களும்: 

தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினர் தங்களை ஒரே குழுவாகக் கருதும் ஒரு பொதுவான உணர்வாகும். இது பரந்த அளவில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. 

நிலப்பரப்பு சார்ந்தது (Territorial); ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து மக்களும் ஒன்று என்று கருதுகிறது. இந்த வரையறையின்படி, ஒருவர் இந்துவோ, கிறிஸ்தவரோ அல்லது முஸ்லிமோ, இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்களே ஆவர்.

கலாச்சாரம் சார்ந்தது (Cultural) ;  மக்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரே கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் அனைவரும் ஒரே குழு என்று கருதுகிறது. உதாரணமாக, அனைத்து கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அல்லது இந்துக்களும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று இது வாதிடலாம்.

நிஜ வாழ்க்கையில் இத்தகைய தெளிவான எல்லைகளை நடைமுறைப்படுத்துவது கடினம். ஏனெனில் மக்களும் எண்ணங்களும் எல்லைகளைக் கடந்து நகர்கின்றன. இந்தியச் சூழலில், ஜவஹர்லால் நேருவின் ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு சார்ந்த தேசியம் கலாச்சாரத்தையும் தழுவியே உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சாரத் தேசியம் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களையும் ஒரே தேசமாகக் கருதுகிறது. அதேசமயம் அது நிலப்பரப்பு சார்ந்த சில கருத்துக்களையும் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனைப் பாடலான ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமே’ நிலப்பரப்பின் முதன்மையை வலியுறுத்துவதோடு, உலகளாவிய இந்துத் தன்மையையும் கோருகிறது.

இன்றைய உலகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான அரசியல் சூழலில் இந்தக் கலாசாரத்துக்கும்  நிலப்பரப்புக்கும்  இடையேயான தொடர்பு மேலும் சிக்கலாகியுள்ளது. இதைச் சரிசெய்யவே மோகன் பகவத் தனது சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் உலகளாவிய தொடர்பை ஏற்படுத்த முயன்று வருகிறார். 

சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 இலட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்து வேறு நாடுகளின் குடிமக்களாக மாறுகின்றனர்.

அவர்கள் மருத்துவ உளவியலாளர்கள் “பிளவுபட்ட ஆளுமைக் கோளாறு” (dissociative identity disorder) என்று அழைக்கும் ஒரு அரசியல் சூழலில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தியக் கடவுச்சீட்டுகளைத் துறந்த பின்னரும் கூட, அவர்கள் மோகன் பகவத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி  கலந்துகொள்ளும் கூட்டங்களில் கலந்துகொண்டு “பாரத் மாதா கீ ஜெய்” என்று முழக்கமிடுகிறார்கள். 

மேலும், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் அவர்களில் சிலர், தங்கள் புதிய தாய்நாடுகளுக்கு எதிராகப் போட்டிகள் நடக்கும்போது இந்தியக் கிரிக்கெட் அணியை ஆதரிக்கின்றனர். அதுமட்டுமின்றி, தங்களது விசுவாசத்தைப் பொறுத்தவரை இரண்டு தாய்நாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பதுடன், துணைக் கண்டத்திலிருந்து தங்களது சாதி, சமயம் மற்றும் மதப் பிரிவுகள் சார்ந்த சண்டைகளையும் புதிய பிரதேசங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

‘உள்நாட்டு எதிரி’ என்ற கருத்தாக்கத்தின் தொடர்ச்சி:

இந்துத்துவாவின் நிறுவுனரான வி.டி. சாவர்க்கர், நாட்டின் எல்லைக்குள் வசிப்பவர்களின் விசுவாசம் குறித்த கவலையை முன்வைத்தார். ‘இந்துத்துவா ;  யார் ஒரு இந்து?’ என்ற தனது நூலில், இந்தியாவில் பிறப்பால் வாழ்பவர்களுக்கும், இந்தியாவைத் தங்களின் புனித பூமியாகக் கருதுபவர்களுக்கும் இடையே அவர் வேறுபடுத்திப் பார்த்தார்.

அவரது வரையறையின்படி, ஒரு உண்மையான இந்து என்பது, இந்தியாவைத் தனது ‘பித்ருபூமி’ (தந்தை வழி நிலம்) மற்றும் ‘புண்யபூமி’ (புனித நிலம்) ஆகிய இரண்டாகவும் கொண்டவர் ஆவார். 

இந்த வரையறை, பிற இடங்களில் தங்களது புனித நிலங்களைக் கொண்ட முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் புறக்கணிக்கிறது. உள்நாட்டுப் புகலிடவாதி அல்லது ‘உள்நாட்டு எதிரி’ பற்றிய இந்த பயம் இந்துத்துவ சிந்தனையில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதுகுறித்து மோகன் பகவத் முன்பு கூறுகையில், “இந்தப் போர் வெளிப்புற எதிரிக்கு எதிரானது அல்ல, மாறாக உள்நாட்டு எதிரிக்கு எதிரானது. எனவே இது இந்து சமூகம், இந்து தர்மம் மற்றும் இந்து கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான போராகும். வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் இனி இல்லை, ஆனால் வெளிநாட்டுச் சதிகளும் வெளிநாட்டுச் சதிகளின் தாக்கமும் தொடர்கின்றன…” என்று 2023 ஆண்டில்  ‘ஓகனைசர்’ (Organiser) இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். இந்த உள்நாட்டு எதிரி பற்றிய கருத்து இந்துத்துவ தேசியவாதத்தை தொடர்ந்து தூண்டி வருகிறது.

உலகம் ஒன்றிணைந்தது என்ற செய்தியை ஆர்.எஸ்.எஸ் பரப்பும் போது, இந்தியாவில் வாழுபவர்களும் அதே முன்னோர்களைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து மக்களும் இந்துக்களே என்ற வாதத்திற்கும், இந்திய எல்லைகளைக் கடுமையாகப் பாதுகாத்து ஊடுருவல்காரர்களை அகற்ற வேண்டும் என்ற அமைப்பின் நிலைப்பாட்டிற்கும் இடையில் ஒரு முரண்பாடு நிலவுகிறது.

புலம்பெயர்ந்தோரின் சங்கடமும்  புதிய பரிணாமமும்:

காலனித்துவத்துடனும் தொலைதூரக் கரைகளுக்கு இந்தியர்கள் புலம்பெயர்ந்ததுடனும் தேசிய இயக்கங்கள் தொடர்புள்ளன. காந்தியும் சாவர்க்கரும் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்தபோதே தங்களது யோசனைகளை உருவாக்கினர். அண்மைய 

தசாப்தங்களில் மேற்கத்திய நாடுகளில் இந்துக்கள் ஒரு அரசியல் சமூகமாக வெளிப்பட்டது இந்துத்துவாவிற்கு இரட்டை வாளாக அமைந்தது. 

வாஜ்பாய் அரசாங்கத்தின் போது ஆர்.எஸ்.எஸ்ஸும்  பாரதிய ஜனதா கட்சியும்  தங்களது புலம்பெயர்ந்தோர் அரசியலைத் தொடங்கியபோது ‘ஜன்மபூமி-கர்மபூமி’ என்ற புதிய சொற்களஞ்சியத்தை அறிமுகப்படுத்தின. மேற்கத்திய நாடுகள் புலம்பெயர்ந்தோரை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கும் வரை இது நன்றாக வேலை செய்தது. மோடியின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பகுதியாக மாறிய ஆர்.எஸ்.எஸ்-ஸின் தீவிரமான புலம்பெயர்ந்தோர் அரசியல், மேற்கத்திய நாடுகளின் தீவிர தேசியவாதத்தின் எழுச்சியுடன் ஒத்துப்போனது.

லண்டனில் பகவத் ஆற்றிய உரை, ‘வெளிநாட்டு மதம்’ என்று கூறப்படும் ஒரு நபர் நாட்டின் விசுவாசமுள்ள குடிமகனாக இருக்க முடியுமா என்ற கவலையைப் போக்க முயன்றது. இது ஆர்.எஸ்.எஸ் தனது 100-வது ஆண்டிற்குள் நுழையும் போது ஒரு பரிணாம மைல் கல்லாகும்.

ஆனால், அது உலகெங்கிலும் அதே தரநிலையைப் பயன்படுத்த வேண்டும். லண்டனில் உண்மையாக இருப்பது லக்னோவிலும் உண்மையாக இருக்க வேண்டும். ஒரு தேசத்தின் மீதான விசுவாசம் ஒருவர் பின்பற்றும் மதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக ஒருவரின் வசிப்பிடத்தாலும் நவீன குடியுரிமைக் கோட்பாட்டாலும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இந்திய வம்சாவளி மக்கள் எந்தச் சூழலிலும் இந்தியாவை விடத் தங்களது தத்தெடுக்கப்பட்ட நாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பகவத் கூறியது, ஜவஹர்லால் நேருவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது. இருப்பினும், பகவத்தின் வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ்-ஸின் உண்மையான பரிணாம வளர்ச்சிக்கு அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அவை இந்தியச் சூழலிலும் சமமாகச் சோதிக்கப்பட வேண்டும்.

(கட்டுரையாளர் ‘தி இந்து’ வின் இணை ஆசிரியரும் அமெரிக்க நிருபருமாவார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *