~ பி.கே. பாலச்சந்திரன்
இந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பங்களாதேஷ் உறவுகள் முட்டுக்கட்டையைச் சந்தித்து வருகின்றன. முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் காலத்திலும், தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்தின் காலத்திலும் இந்தப் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
2025 நவம்பரில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தீர்ப்பாயம் ஒன்றினால் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துமாறு பங்களாதேஷ் கோரி வருகிறது. ஆனால், சட்டரீதியான சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அவரை ஒப்படைக்க இந்தியா மறுத்து வருகிறது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, மரண தண்டனைக்கு எதிராக ஹசீனா சட்ட உதவியுடன் மேல்முறையீடு செய்வதற்கு டாக்கா அனுமதிக்க வேண்டும் என்று புதுடில்லி விரும்புவதாகத் தெரிகிறது. இல்லாத நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை அவர் முன்னிலையின்றியே நடைபெற்றது. அந்த விசாரணையின்போது அவருக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை. அத்துடன், ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த விசாரணையையும் தண்டனையையும் மறுபரிசீலனை செய்யும் மனநிலையில் டாக்கா இல்லை. குறிப்பாக, தீவிர தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி (JI) மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) ஆகிய எதிர்க்கட்சிகள் ஹசீனாவுக்கும் அவாமி லீக்குக்கும் எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. அவாமி லீக்கை இந்தியாவின் அடிவருடியாகச் செயற்பட்ட பாசிசக் கட்சி என்று அவை குற்றஞ்சாட்டுகின்றன.
ஹசீனா விவகாரத்துக்கு அப்பாலும் நீடிக்கும் முரண்பாடுகள்..
ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பான பிரச்சினைக்கு அப்பாலும், இந்தியா – பங்களாதேஷ் உறவுகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளன.
கோடிக்கணக்கான பங்களாதேஷ் முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகவும், இதனால் இந்தியாவின் பல எல்லை மாநிலங்களில் மக்கள்தொகை விகிதாசாரம் மாறி வருவதாகவும் இந்திய அரசியல்வாதிகள் தொடர்ந்து கூறி வருவது குறித்து டாக்கா அதிருப்தியடைந்துள்ளது. அதேவேளை, பங்களாதேஷில் முஸ்லிம் பெரும்பான்மையினர் அங்குள்ள இந்து சிறுபான்மையினரைத் துன்புறுத்தி வருவதாகவும் இந்திய அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாரம்பரியமாக இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த பங்களாதேஷ், தற்போது அந்த உறவுகளைத் திட்டமிட்டு தளர்த்தி, இந்தியாவின் போட்டி நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கியுடன் நெருக்கத்தை வளர்த்து வருவதாகவும் இந்தியத் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவின் பிரதான நிலப்பரப்பையும் வடகிழக்கிலுள்ள ஏழு மாநிலங்களையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாதையான சிலிகுரி வழித்தடத்தை இராணுவ ரீதியாகத் துண்டிப்பதற்குப் பங்களாதேஷ் திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மறுபுறம், சட்டவிரோதக் குடியேற்றத்துக்கான முக்கிய மூல நாடாகப் பங்களாதேஷை இந்தியா தவறாகச் சித்தரிப்பதாகவும், குறுகிய தேர்தல் அரசியல் இலாபங்களுக்காக வங்காள மொழி பேசும் இந்திய முஸ்லிம்களைப் பங்களாதேஷுக்குள் தள்ளுவதாகவும் பங்களாதேஷ் குற்றஞ்சாட்டுகிறது.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா தனது வர்த்தகப் போக்குவரத்து வழித்தடங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பங்களாதேஷ் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலும் நிலவும் பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, புதுடில்லி உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருந்த போதிலும், பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் இதுவரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை. மாறாக, இந்தியாவின் பிராந்தியப் போட்டி நாடுகளான சீனா மற்றும் துருக்கிக்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் பங்களாதேஷுக்குத் திரும்பி, அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் நாடு திரும்புவதற்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. எனினும், அவருக்கான பயண ஆவணங்களை வழங்கி, போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யுமாறு டாக்காவிடம் புதுடில்லி எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், குற்றவாளியாகக் கருதப்படும் ஹசீனா நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனக் கூறி டாக்கா அதனை நிராகரித்துள்ளது.
பங்களாதேஷுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தினேஷ் திரிவேதி, தாரிக் ரஹ்மானைச் சந்தித்து, ரஹ்மானும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காண முடியும் என வலியுறுத்தியிருந்தார். எனினும், அவரது முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.
கங்கை நதிநீர் ஒப்பந்தம்:
ஹசீனா விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முடக்கி வைத்துள்ள நிலையில், மற்றொரு முக்கியமான இருதரப்புப் பிரச்சினை அவசர கவனத்தைக் கோரி நிற்கிறது. அதுதான் கங்கை நதிநீர் ஒப்பந்தம் (Ganges Waters Treaty – GWT).
இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பரில் புதுப்பிக்கப்பட வேண்டிய அல்லது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த 30 ஆண்டுகால ஒப்பந்தம் டிசம்பர் 12ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.
காலநிலை மாற்றம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் பங்களாதேஷில் அதிகரித்து வரும் நீர்த்தேவை, அத்துடன் இந்தப் பகுதிகளில் நிலவும் அரசியல் சூழ்நிலை ஆகியவற்றால் கங்கை நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகள் மேலும் சிக்கலடைந்துள்ளன.
இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, காலநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கக்கூடிய புதிய நீர்ப்பகிர்வு கட்டமைப்பொன்றை இந்தியாவும் பங்களாதேஷும் உருவாக்க முடியுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
கங்கை நதிநீர் ஒப்பந்தம் ஏன் கைச்சாத்திடப்பட்டது?
கொல்கத்தா துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், அத்துறைமுகத்துக்குத் தேவையான நீரோட்டத்தைப் பேணுவதற்கும் கங்கை நதியின் ஒரு பகுதி நீரை ஹூக்ளி நதிக்குத் திருப்பிவிட இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதற்காக ஃபராக்கா தடுப்பணை பயன்படுத்தப்பட்டது.
இதற்கு பங்களாதேஷ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. கங்கை நதியின் நீர் ஹூக்ளி நதிக்குத் திருப்பிவிடப்படுவதால், வறண்ட காலப்பகுதியில் கீழ்நோக்கிப் பாயும் நீரின் அளவு குறைந்து, பங்களாதேஷில் பத்மா நதிக்குக் கிடைக்கும் நீரின் அளவும் பாதிக்கப்படுவதாக அது வாதிட்டது.
1976ஆம் ஆண்டு மௌலானா பாஷானி தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபராக்கா நீண்ட நடைப்பயணம் (Farakka Long March) முன்னெடுக்கப்பட்டது. கங்கை நதிநீரில் பங்களாதேஷுக்குரிய பங்கை இந்தியா பறிப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு தற்காலிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக, 1996 டிசம்பர் 12ஆம் திகதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் எச்.டி. தேவகவுடாவும் பங்களாதேஷின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவும் புதுடில்லியில் கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 30 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் புதுப்பிக்கக்கூடிய ஏற்பாடும் அதில் உள்ளடக்கப்பட்டது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரையிலான வறண்ட காலப்பகுதியில் கங்கை நதிநீரை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதை இந்த ஒப்பந்தம் ஒழுங்குபடுத்தியது.
எனினும், ஃபராக்கா பகுதியில் எந்த நேரத்தில் எவ்வளவு நீர் கிடைக்கிறது என்பதே இந்த ஒப்பந்தத்தின் பிரதான அடிப்படையாக இருந்தது.
- நீரோட்டம் 70,000 கன அடி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், இந்தியாவும் பங்களாதேஷும் தலா 50 சதவீத நீரைப் பெற்றுக்கொள்ளும்.
- நீரோட்டம் 70,000 முதல் 75,000 கன அடி வரை இருந்தால், பங்களாதேஷுக்கு 35,000 கன அடி வழங்கப்படும். எஞ்சிய நீரை இந்தியா பெற்றுக்கொள்ளும்.
- நீரோட்டம் 75,000 கன அடி அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், இந்தியா 40,000 கன அடியைப் பெற்றுக்கொள்ளும்.
- மிகக் குறைந்த நீரோட்டம் நிலவும் காலப்பகுதியில், இரு நாடுகளுக்கும் தலா 35,000 கன அடி நீர் வழங்கப்படும்.
எனினும், இந்த ஒப்பந்தம் 1949 முதல் 1988 வரையிலான வரலாற்று நீரியல் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்தத் தரவுகளே தற்போது மிகவும் பழைமையானவையாகிவிட்டன.
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நதியின் இயல்பும், அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் தேவைகளும் பெருமளவில் மாறிவிட்டன.
காலநிலை மாற்றத்தால் சீரற்ற மழைவீழ்ச்சி, நீண்டகால வறட்சி மற்றும் தீவிர வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன. அதேவேளை, மக்கள்தொகை அதிகரிப்புடன் விவசாயம் மற்றும் தொழில்துறைக்கான நீர்த்தேவையும் விரிவடைந்துள்ளது.
இதனால், 1996ஆம் ஆண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட நீரியல் அடிப்படைகள் தற்போது காலாவதியாகிவிட்டன.
பங்களாதேஷ் மேலும் கணிக்கக்கூடிய நீர்ப்பகிர்வு ஏற்பாட்டைக் கோரி வருகிறது. குறிப்பாக, பெப்ரவரி முதல் மே வரையிலான காலப்பகுதியில் 40,000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்றும், வெள்ளம் தொடர்பான தரவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வலுவான ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், நீண்டகால அடிப்படையிலான புதிய கட்டமைப்பு அவசியம் என்றும் அது வலியுறுத்தி வருகிறது.
அரசியல் சிக்கல்கள்:
பங்களாதேஷைப் பொறுத்தவரையில், கங்கை நதிநீர் ஒப்பந்தம் என்பது இந்தியாவுடனான இருதரப்பு ஒப்பந்தமாகும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது.
இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்கள் கங்கை நதிநீரில் தமக்கான பங்கைக் கோருகின்றன.
கொல்கத்தா துறைமுகம் ஆண்டு முழுவதும் இயங்குவதற்குப் போதுமான நீர் கிடைக்க வேண்டும் என்பது மேற்கு வங்காளத்தின் தேவையாகும்.
மறுபுறம், ஃபராக்கா தடுப்பணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதால் பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் வண்டல் படிவுகள் அதிகரித்து வருவதாக அந்த மாநிலம் கூறுகிறது. இதனால் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் பாதிக்கப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டுகிறது.
எனவே, பங்களாதேஷுடனான கங்கை நதிநீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என்று பீகார் மாநிலம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, கொல்கத்தா துறைமுகத்தின் தேவைகளை மேற்கு வங்காளமும் வலியுறுத்தி வருகிறது.
புதுடில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்துக்கு இதனால் மேலதிக அரசியல் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தற்போது பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கங்கள் ஆட்சியில் உள்ளன.
எனவே, பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு, தனது சொந்தக் கட்சி ஆளும் மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகளை எதிர்ப்பது கடினமானதாக இருக்கும்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஃபராக்கா தடுப்பணையையும், கொல்கத்தா, பீகார் மற்றும் பங்களாதேஷ் மீதான அதன் தாக்கத்தையும் மட்டும் மையப்படுத்திய விவாதம் போதுமானதல்ல.
மாறாக, முழு கங்கை நதிப் படுகையையும் உள்ளடக்கிய புதிய, சுயாதீனமான விஞ்ஞானபூர்வ மதிப்பீடு அவசியமாகிறது.
நிபுணர்களின் கருத்துப்படி, விஞ்ஞானபூர்வமான, பகுத்தறிவுடனான, யதார்த்தமான, குறுகிய காலத்துக்குச் செல்லுபடியாகும் மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒப்பந்தமொன்றை உருவாக்கிப் பேச்சுவார்த்தை நடத்துவதே மிகவும் பொருத்தமான தீர்வாக இருக்கும்.
வறண்ட காலப்பகுதியில் நீர் ஒதுக்கீட்டுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதையும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் நீர்த்தேவைகளை அங்கீகரிப்பதையும் இந்தியா வலியுறுத்தக்கூடும்.
மறுபுறம், கணிக்கக்கூடிய குறைந்தபட்ச நீரோட்டம், வறண்ட காலப்பகுதியில் அதிகளவு நீர் ஒதுக்கீடு மற்றும் நீரியல் மற்றும் வெள்ளம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வலுவான பொறிமுறைகள் ஆகியவற்றை பங்களாதேஷ் கோரக்கூடும்.
1996ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒரு கேள்விக்குப் பதிலளித்தது:
ஃபராக்கா பகுதியில் கிடைக்கும் கங்கை நதிநீரை எவ்வாறு பகிர்ந்துகொள்வது?
ஆனால், புதிய ஒப்பந்தம் இதைவிடப் பரந்ததொரு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கலாம்:
மாறிவரும் காலநிலைச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான நீரை முழு கங்கை நதிப் படுகையிலும் எவ்வாறு உருவாக்குவது, பாதுகாப்பது மற்றும் பகிர்ந்துகொள்வது?
இதன் மூலம் நீர்ப்பாதுகாப்பு, நதிகளைப் புனரமைத்தல், வண்டல் படிவுகளைக் கட்டுப்படுத்துதல், வெள்ள முன்னெச்சரிக்கை, தரவுப் பகிர்வு மற்றும் நதிப் படுகை மட்டத்திலான ஒத்துழைப்பு போன்ற விடயங்களும் புதிய ஒப்பந்தத்தின் கவனத்துக்கு வரக்கூடும்.
குறுகிய காலத்துக்குச் செல்லுபடியாகும் ஒப்பந்தமொன்றை உருவாக்குவது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையலாம். இதன் மூலம் மேலும் 30 ஆண்டுகளுக்கு ஒரே நீர்ப்பகிர்வு சூத்திரத்தில் கட்டுப்பட்டிருப்பதைத் தவிர்த்து, அடிக்கடி ஒதுக்கீடுகளை மறுபரிசீலனை செய்ய முடியும்.
தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலப் பாதை..
இந்தியாவும் பங்களாதேஷும் கூட்டு நதிகள் ஆணைக்குழு (Joint Rivers Commission – JRC) மற்றும் தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் கூட்டுக் குழு ஆகியவற்றின் ஊடாகத் தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
2026 மே மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டு நதிகள் ஆணைக்குழுவின் கூட்டமே டிசம்பர் காலக்கெடுவுக்கு முன்னதாக நடைபெற்ற அண்மைய முக்கியமான பேச்சுவார்த்தையாகும். எனினும், அதில் முறையான இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
எனவே, டிசம்பர் மாத காலக்கெடுவை அச்சத்துடன் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் புதிய சிந்தனையுடன் அணுகச் செய்து, யதார்த்தமான நீர்ப்பகிர்வு முறையொன்றை உருவாக்குவதற்கான உண்மையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் தீர்வை எட்ட முடியும்.
ஆனால், அதற்கு முன்னதாக இந்தியாவிலும் பங்களாதேஷிலும் தற்போது நிலவும் நச்சுத்தன்மை கொண்ட அரசியல் சூழல் சீர்செய்யப்பட வேண்டும்.
(நன்றி: இண்டோ பசுபிக் அஃபயர்ஸ்)
