வெளிநாடுகளில் கல்வி பயிலும் தெற்காசிய மாணவர்களின் நிலைவரம்

வெளிநாடுகளில் கல்வி பயிலும் தெற்காசிய மாணவர்களின் நிலைவரம்

~ பி.கே. பாலச்சந்திரன்

சர்வதேச மாணவர் தினம் நவம்பர் 17ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1939ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாஜி ஜேர்மனியின் கொடூர அடக்குமுறைக்கு எதிராக செக்கோஸ்லோவாக்கிய மாணவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் சமகால நிலைமைகளை ஆராய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இத்தினம் பயன்படுத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் தெற்காசிய மாணவர்களின் நிலைவரத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச மாணவர் இடம்பெயர்வில் தெற்காசியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

2025ஆம் ஆண்டில் கனடாவின் பல்கலைக்கழக மாணவர் தொகையில் தெற்காசிய மாணவர்கள் 28 சதவீதமாகவும், பிரித்தானியாவில் 22 சதவீதமாகவும், அவுஸ்திரேலியாவில் 15 சதவீதமாகவும், ஜேர்மனியில் 7 சதவீதமாகவும் இருந்தனர்.

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

தெற்காசிய மாணவர்கள் மத்தியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM), சுகாதாரத்துறை, வணிகத் தரவுப் பகுப்பாய்வு மற்றும் பொதுக் கொள்கை ஆகிய பாடநெறிகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

பட்டப்படிப்பை முடித்த பின்னர் வேலை செய்வதற்கான அனுமதியும், நிரந்தரக் குடியேற்றத்துக்கான வாய்ப்புகளும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான முக்கிய உந்துதல்களாக உள்ளன. எனினும், குறிப்பாக அமெரிக்காவில் பட்டப்படிப்புக்குப் பின்னரான வேலைவாய்ப்புகள் கடுமையான கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாகி வருகின்றன.

இந்திய நிலைவரம்:

www.pienews.com இணையத்தளத்தின் தகவலின்படி, 2022ஆம் ஆண்டில் 750,000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர். இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 930,000 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 1.33 மில்லியன் ஆகவும் அதிகரித்தது.

2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய மாணவர்களின் 74 சதவீத கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களை கனடா நிராகரித்திருந்தது. சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒட்டாவா அரசாங்கம் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தபோதிலும், 427,085 இந்திய மாணவர்களுடன் இந்திய மாணவர்கள் அதிகளவில் கல்வி பயிலும் நாடாக கனடா தொடர்ந்து விளங்குகிறது.

அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய மாணவர்களுக்கான கல்வி விசாக்கள் 44 சதவீதம் குறைந்திருந்தன. இருப்பினும், 255,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றனர். இது அந்நாட்டிலுள்ள மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 31 சதவீதமாகும். இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் மூலநாடாக இந்தியா தொடர்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் (MEA) தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் 173,190 இந்திய மாணவர்களும், அவுஸ்திரேலியாவில் 138,579 பேரும், ஜேர்மனியில் 59,000 பேரும், ரஷ்யாவில் 27,000 பேரும், கிர்கிஸ்தானில் 16,500 பேரும், ஜோர்ஜியாவில் 16,000 பேரும் கல்வி பயின்றனர்.

மற்றுமொரு ஆய்வின்படி, வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களில் பெண்கள் 40 சதவீதமாக உள்ளனர். குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இவர்களில் பலர் கோயம்புத்தூர், இந்தூர், புவனேஸ்வர் போன்ற சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

கல்வி பெறும் நாடுகளின் கொள்கை மாற்றங்கள் இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வித் தீர்மானங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதிகளை கனடா 49 முதல் 55 சதவீதம் வரை குறைத்துள்ளது. தற்போது பத்தில் ஒன்பது மாணவர்கள் தங்களது விசா அனுமதி தொடர்பாக அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதேவேளை, வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கான அனுமதி மறுக்கப்படும்போது, பல்கலைக்கழகங்களுக்கு 925 பவுண்ட்கள் வரையான வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கான வருடாந்தச் செலவு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து, பிரித்தானியப் பவுண்டில் 8,200 முதல் 8,300 வரையான தொகையை எட்டியுள்ளது. இதன் காரணமாக, குறிப்பாக STEM மற்றும் மருத்துவக் கல்விக்காகக் குறைந்த செலவிலான ஜேர்மனி, ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் ஜோர்ஜியா போன்ற புதிய கல்வி இலக்குகளை நோக்கி மாணவர்கள் திரும்புகின்றனர்.

பங்களாதேஷ்:

2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பங்களாதேஷிலிருந்து 120,000க்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்றுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பங்களாதேஷ் மாணவர்களின் வழக்கமான கல்வி இலக்குகளாக இருந்தாலும், அண்மைய ஆண்டுகளில் பலர் வேறு நாடுகளையும் தெரிவுசெய்து வருகின்றனர்.

யுனெஸ்கோ தரவுகளின்படி, பங்களாதேஷ் மாணவர்கள் அதிகளவில் செல்லும் முதலாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் விளங்குகிறது. அங்கு 11,157 பங்களாதேஷ் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்காவில் 8,665 பேரும், மலேசியாவில் 6,180 பேரும் கல்வி பயில்கின்றனர்.

கனடாவுக்கான கல்வி விண்ணப்பங்களிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் கல்வியை நிரந்தரக் குடியேற்றத்துக்கான ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான்:

பாகிஸ்தானில் வெளிநாட்டுக் கல்விக்கான கேள்வி அதிகமாக உள்ளது. எனினும், பாகிஸ்தான் மாணவர்களும் விசா அனுமதி தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், 2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் 150,000 பாகிஸ்தான் மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்றுள்ளனர். பொதுவாக இவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளை நோக்கிச் சென்றனர்.

2024–25 காலப்பகுதியில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட விசா நிராகரிப்புகள் காரணமாக, துருக்கி மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கல்வி பயில்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் மாணவர்கள் தங்களது நிதி வசதிகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தல், உண்மையான கல்வி நோக்கத்தை நிரூபித்தல் மற்றும் அதிகரித்து வரும் விசா நிராகரிப்பு விகிதம் போன்ற கடுமையான சோதனைகளை எதிர்கொள்கின்றனர்.

உதாரணமாக, அண்மைய அறிக்கைகளின்படி, பிரித்தானிய மாணவர் விசா நிராகரிப்பு விகிதம் பாகிஸ்தான் விண்ணப்பதாரர்கள் மத்தியில் கடுமையாக அதிகரித்து, சில அண்மைய கணக்கீடுகளில் 40 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. இதனால் ஒப்பீட்டளவில் எளிதாகக் கல்வி வாய்ப்புகளைப் பெறக்கூடிய நாடுகளை நோக்கிப் பாகிஸ்தான் மாணவர்கள் திரும்புகின்றனர்.

நேபாளம்:

2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் 95,000க்கும் அதிகமான நேபாள மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கனடாவைத் தெரிவுசெய்துள்ளனர். அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முக்கிய கல்வி இலக்குகளாக உள்ளன.

எனினும், அவுஸ்திரேலியா 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய உண்மையான தற்காலிகக் கல்வி நோக்கத்தை உறுதிப்படுத்தும் (Genuine Temporary Entrant – GTE) விதிமுறைகள் காரணமாக, அந்நாட்டுக்குச் செல்லும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் கனடா மற்றும் ஜப்பான் நோக்கி மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

தாதியர் கல்வி, விருந்தோம்பல் துறை, சுற்றுச்சூழல் விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளில் நேபாள மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நேபாள மாணவர்கள் பெருமளவில் கல்வி ஆலோசனை நிறுவனங்களின் உதவியைச் சார்ந்திருப்பதால், தவறான தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் இலகுவில் இலக்காகின்றனர்.

இலங்கை:

2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் 45,000 இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைத் தெரிவுசெய்துள்ளனர்.

STEM பாடநெறிகள் மற்றும் மருத்துவம், நிதித்துறை, கல்வியியல், உளவியல் ஆகிய துறைகளில் முதுநிலைக் கல்வி பயில்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாகப் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் காமன்வெல்த் புலமைப்பரிசில் திட்டங்களின் மூலம் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலும் இலங்கை மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

“உயர்கல்விக்காக இடம்பெயர்வது தொடர்பான இலங்கை மாணவர்களின் பார்வைகளும் அதனைப் பாதிக்கும் காரணிகளும்” (Sri Lankan Students’ Perceptions and the Factors that Affect Migrating for Their Higher Studies) என்ற தலைப்பிலான ஆய்வொன்று, மாணவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான காரணங்களைப் பின்வருமாறு அடையாளப்படுத்தியுள்ளது:

  • வெளிநாட்டுக் கல்வியின் உயர் தரம் – 56.4 சதவீதம்.
  • இலங்கையின் பொருளாதார உறுதியற்ற நிலை – 53.6 சதவீதம்.
  • அரச பல்கலைக்கழகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் வளப்பற்றாக்குறை – 20 சதவீதம்.

உள்நாட்டின் உயர்கல்வி முறைமை தொடர்பான அதிருப்தியும் மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வியைத் தெரிவுசெய்வதற்கான மற்றுமொரு காரணமாக உள்ளது.

பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னர் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்புவதில்லை. இது குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் மூளைசார் வள இழப்பையும் (Brain Drain), அந்நியச் செலாவணி வெளியேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

சவால்கள்:

தெற்காசிய மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் விசா நிராகரிப்புகள், கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடச் செலவுகளின் அதிகரிப்பு, மொழிப் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கல்வி முகவர்களைச் சார்ந்திருத்தல் ஆகியவை அடங்குகின்றன.

பலவீனமான ஆவணச் சமர்ப்பிப்பு, நிதி வசதிகளுக்கான போதிய ஆதாரமின்மை மற்றும் விசா நேர்முகத் தேர்வுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவை விசா நிராகரிப்புகளுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் ஆங்கிலம் அல்லாத மொழிகளைப் பேசும் நாடுகளிலும் மாணவர்கள் மொழிசார் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

2026 மார்ச் மாத நிலவரப்படி, அமெரிக்காவில் புதிதாக வழங்கப்படும் F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் மிகப்பெரிய மூலநாடான இந்தியாவில், 2025ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் வழங்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது.

2026 ஜனவரி 12ஆம் திகதி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், “அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக” மாணவர் விசாக்கள் 8,000 உட்பட 100,000க்கும் அதிகமான விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 39 நாடுகளின் குடிமக்களுக்கான விசா வழங்கல்களை நிறுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

பல தசாப்தங்களாக, வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், புதிய முறைமையின் கீழ், மேலதிக காலம் தங்க வேண்டிய மாணவர்கள் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் திணைக்களத்தில் (USCIS) கால நீடிப்புக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக 420 அமெரிக்க டொலர் கட்டணம் (2026 மே மாத நிலவரப்படி) செலுத்துவதுடன், உயிரியல் அடையாளப் பதிவுகளையும் (Biometrics) பூர்த்தி செய்ய வேண்டும்.

எனினும், 2026 செப்டெம்பர் 14ஆம் திகதி, மசாசூசெட்ஸ் மாநிலத்தின் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஒருவர், அந்த உத்தரவை நாடு முழுவதும் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தும் ஆரம்பகட்ட நீதிமன்றத் தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

இத்தகைய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா ஆண்டுதோறும் 43 பில்லியன் டொலர் வருமானத்தை இழக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

சமூக, கலாசார மற்றும் கல்விசார் சவால்கள்:

மேற்கூறிய கட்டமைப்பு ரீதியான பாதகமான சவால்களுக்கு அப்பால், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து செல்லும் தெற்காசிய மாணவர்கள் பல்வேறு சமூக மற்றும் கலாசாரத் தடைகளையும் எதிர்கொள்கின்றனர்.

உணவுப் பழக்கவழக்கங்கள், மொழிசார் குறைபாடுகள் மற்றும் கலாசாரத் தயக்கங்கள் ஆகியவை உள்ளூர் மக்களுடன் சமூக உறவுகளை ஏற்படுத்துவதற்கும், அந்தச் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கும் தடையாக உள்ளன. இந்தப் பிரச்சினைகள் வகுப்பறைகளுக்குள்ளும் வெளியேயும் காணப்படுகின்றன.

வயதில் குறைந்த மாணவர்கள், வயதில் மூத்த மாணவர்களைவிட அதிகமான இல்ல ஏக்கத்தை (Homesickness) எதிர்கொள்கின்றனர்.

உலகளாவிய தெற்குப் பகுதியிலிருந்து (Global South) வரும் மாணவர்களுக்காகப் பல்கலைக்கழகங்கள் அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சிகளை (Orientation Sessions) ஏற்பாடு செய்ய வேண்டும் எனச் சில ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அத்துடன், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு சமூகப் பணியாளர்கள் சென்று, தங்கியிருக்கும் நாட்டின் சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நடத்தை மற்றும் ஒழுக்க நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கத்திய கல்வி முறைமை சுயகற்றல் மற்றும் ஏற்கெனவே கற்பிக்கப்பட்ட அறிவை எதிர்த்துக் கேள்வி எழுப்புவது உட்பட கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆனால், மேலிருந்து கீழ்நோக்கிய கற்பித்தல் முறைக்குப் பழக்கப்பட்டுள்ள பெரும்பாலான தெற்காசிய மாணவர்களுக்கு இந்த அணுகுமுறை புதியதாகவும் அந்நியமானதாகவும் உள்ளது.

தமது நாடுகளில் உள்ள உயர்மட்டக் கல்வி நிறுவனங்களைச் சாராத கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் தெற்காசிய மாணவர்கள், குறிப்பாக, பிறரது எழுத்துக்களைத் தமதாக்கிப் பயன்படுத்தும் கல்விசார் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகின்றனர்.

காலப்போக்கில் அவர்கள் கல்விசார் நடைமுறைகளில் தேர்ச்சிபெற்று வந்தாலும், ஆரம்பத்திலேயே கல்வி முறைமையால் நிராகரிக்கப்படுவது அவர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, கல்விசார் எதிர்பார்ப்புகள் குறித்து ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். தாங்களாகவே சிந்திக்கவும், தமது சொந்த வார்த்தைகளில் கருத்துகளை வெளிப்படுத்தவும், பிறரிடமிருந்து தகவல்களையோ ஆய்வுப் பகுப்பாய்வுகளையோ பெற்றுப் பயன்படுத்தும்போது உரிய மூலங்களைச் சுட்டிக்காட்டவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் தெற்காசிய மாணவர்களின் கலாசாரப் பின்னணியை முதலில் புரிந்துகொள்வதும் முக்கியமானதாகும். உள்ளூர் கல்வித் தரங்களையும் நடைமுறைகளையும் அவர்கள் பூர்த்தி செய்யத் தவறும்போது, உடனடியாகத் தண்டனை நடவடிக்கைகளில் இறங்குவதற்குப் பதிலாக, அந்த மாணவர்களுக்கு உரிய வழிகாட்டலையும் புரிதலையும் வழங்க வேண்டும்.

(நன்றி: இண்டோபசுபிக் அஃபயர்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *