~ ஒலிவர் ஹோம்ஸ் மற்றும் காமில் அஹமட்
மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபட்டதா என்பது தொடர்பாக உலகின் உச்ச நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இந்த வாரம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றான இனப்படுகொலை தொடர்பாக இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையக்கூடும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இனப்படுகொலைக் குற்றம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு அரசையும் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்ததில்லை. எனவே, இந்தத் தீர்ப்பு சர்வதேச சட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலையா என்பது தொடர்பாக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்கிலும் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2017ஆம் ஆண்டு மியான்மார் இராணுவத்தின் நடவடிக்கைகளால் நூறாயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.
மியான்மார் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் விசாரணையாளர் யாங்கீ லீ கூறுகையில்:
“உலகெங்கும் வாழும் ரோஹிங்கியா இனப்படுகொலை உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மார் இராணுவம் மேற்கொண்ட கொடூரங்களைத் தடுப்பதில் சர்வதேச சமூகம் தோல்வியடைந்தது. அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்று, ரோஹிங்கியா மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தத் தீர்ப்பை சர்வதேச சமூகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
இனப்படுகொலை நோக்கத்தை நிரூபிப்பதே முக்கிய சவால்:
முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட காம்பியா நாடு, மியான்மார் அரசாங்கம் ரோஹிங்கியா மக்களை ஒடுக்கியதன் மூலம் 1948ஆம் ஆண்டு ஐ.நா. இனப்படுகொலைத் தடுப்பு உடன்படிக்கையை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஆராய்ந்து வந்துள்ளனர்.
இனப்படுகொலை வழக்குகளில் முக்கியமான சட்டச் சவாலாக இருப்பது, குற்றம் புரிந்தவர்களின் நோக்கத்தை நிரூபிப்பதாகும்.
ஒரு தேசிய, இன, இனக்குழு அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இனப்படுகொலையாக வரையறுக்கப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Legal Action Worldwide (LAW) அமைப்பின் நிறுவனர் அன்டோனியா முல்வி, மியான்மார் அரசு முழுமையாகப் பொறுப்புக்கூறச் செய்யப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், அதேவேளை எச்சரிக்கையுடனேயே இந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ரோஹிங்கியா மக்களை அழிக்கும் தெளிவான நோக்கம் மியான்மார் அரசின் நடவடிக்கைகளில் வெளிப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“கிராமங்கள் மீதான தாக்குதல்கள் ஒரே விதமான முறையில் இடம்பெற்றன. பொதுமக்கள் தாக்கப்பட்டனர். கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டனர். பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் தப்பியோடியபோதும் அவர்கள் கொல்லப்பட்டனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
பால்கன் பிராந்தியத்தில் இடம்பெற்ற கொடூரங்கள் தொடர்பாக முன்னர் விசாரிக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும், நேரடியாக இனப்படுகொலைக்குப் பொறுப்பான நாடுகள் என அரசுகள் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதற்காக செர்பியா சட்டரீதியான பொறுப்புக்குட்படுத்தப்பட்டது.
பாலியல் வன்முறைகளும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாகுமா?
இந்தத் தீர்ப்பில் பாலியல் வன்முறைகள் இனப்படுகொலைக்கான ஆதாரமாக எவ்வாறு கருதப்படுகின்றன என்பது முக்கியமான அம்சமாக இருக்கும் என அன்டோனியா முல்வி தெரிவித்துள்ளார்.
மியான்மார் இராணுவத்தினர் பெண்களின் பிறப்புறுப்புகளைச் சிதைத்ததுடன், அவர்களது முகங்களைக் கடித்துச் சிதைத்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களைத் தமது அமைப்பு சேகரித்துள்ளதாக அவர் கூறினார்.
“மக்களை அடையாளப்படுத்தவும் முத்திரை குத்தவும் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, அவர்களது இனப்பெருக்கத் திறனைத் தடுப்பதும் இதன் நோக்கமாக இருந்தது” என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
“ஒரு இனக்குழுவை அழிக்கும் நோக்கத்தை நிரூபிப்பதில் பாலியல் வன்முறைகள் முக்கியமான ஆதாரமாக அமைகின்றன.
ஒரு குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளைப் பெற்றோரின் முன்னிலையில் கொல்ல வேண்டிய அவசியமில்லை. உடல்களைச் சிதைக்கவோ, பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தவோ வேண்டியதில்லை. அப்படியானால், இவற்றின் நோக்கம் என்ன? அந்தக் குழுவையே அழிப்பதுதான் அதன் நோக்கம்” என்றார்.
உயிர் பிழைத்தவர்களின் நேரடி சாட்சியங்கள்..
கடந்த ஜனவரி மாதம் சர்வதேச நீதிமன்றம் மூடிய அறை விசாரணைகளை நடத்தியது. இதன்போது பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களிலிருந்து பயணித்த ரோஹிங்கியா உயிர் பிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாகச் சாட்சியமளித்தனர்.
ஒரு பெண் சாட்சியாளர், தனது கைகளிலிருந்து குழந்தையைப் பறித்து, கத்தியால் குத்தி நெருப்பில் வீசியதாகத் தெரிவித்தார்.
மற்றொரு சாட்சியாளர், பாரிய புதைகுழியில் ஏராளமான சடலங்கள் குவிந்து கிடந்ததைக் கண்டதாகக் கூறினார்.
விசாரணையின்போது காம்பியாவின் நீதியமைச்சர் டவுடா ஜல்லோ நீதிமன்றத்தில் உரையாற்றுகையில்:
“இந்த வழக்கு சர்வதேச சட்டத்தின் சிக்கலான கோட்பாடுகள் பற்றியது அல்ல. இது உண்மையான மனிதர்களைப் பற்றியது. அவர்களின் உண்மையான அனுபவங்களைப் பற்றியது. அழிக்கப்படுவதற்காக இலக்கு வைக்கப்பட்ட ஒரு மனிதக் குழுவைப் பற்றியது. அவர்கள் மியான்மாரின் ரோஹிங்கியா மக்கள்” என்றார்.
மியான்மார் அரசாங்கம் இனப்படுகொலைக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் எழுச்சியை ஒடுக்குவதற்காகவே இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அது வாதிடுகிறது.
பல தசாப்தங்களாகத் தொடரும் ரோஹிங்கியா மக்களின் ஒடுக்குமுறை:
மேற்கு மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கியா மக்கள் பல தசாப்தங்களாகக் குடியுரிமை மறுக்கப்பட்டும், அதிகரித்துவரும் பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகியும் வந்துள்ளனர்.
பௌத்த சமூகத்தினருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையிலான இன முரண்பாடுகளும் இந்த நெருக்கடியின் பின்னணியில் உள்ளன.
2017ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் ரோஹிங்கியா ஆயுதக் குழுவொன்று கொரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்தது.
இதற்குப் பதிலடியாக மியான்மார் இராணுவம் பாரிய அளவிலான ‘கிளியரன்ஸ் ஒப்பரேஷன்ஸ்’ (Clearance Operations) எனப்படும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அப்போது பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்ற அகதிகள், துலா டோலி (Tula Toli) கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து “தி கார்டியன்” பத்திரிகைக்குச் சாட்சியமளித்திருந்தனர்.
பொதுமக்கள் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் செய்மதிப் படங்கள் மூலம் அந்தக் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நேரடிச் சாட்சியங்கள் இனப்படுகொலைக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் ஆதாரங்களாகச் சேகரிக்கப்பட்டன.
மியான்மார் இராணுவத் தலைவருக்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்..
மியான்மார் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்நாட்டின் தலைவர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும்.
2016–2017ஆம் ஆண்டுகளில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது மின் ஆங் ஹ்லைங் இராணுவத்தின் தலைவராக இருந்தார்.
பின்னர் 2021ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். இதன் விளைவாக மியான்மாரில் உள்நாட்டுப் போர் வெடித்து, பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
தனிநபர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் (ICC), மின் ஆங் ஹ்லைங் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சர்வதேச நீதிமன்றம் (ICJ) நாடுகளின் பொறுப்பை விசாரிக்கின்ற நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தனிநபர்களின் குற்றவியல் பொறுப்பை விசாரிக்கிறது.
மின் ஆங் ஹ்லைங் கடந்த ஏப்ரல் மாதம் சிவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். எனினும், அவரது தலைமையில் நடத்தப்பட்ட தேர்தல்கள் மோசடியானவை எனப் பரவலாகக் கண்டிக்கப்பட்டன. தற்போது அவர் சர்வதேச இராஜதந்திர உறவுகளை மீளக் கட்டியெழுப்ப முயற்சித்து வருகிறார்.
இஸ்ரேலுக்கு எதிரான வழக்கிலும் தாக்கம் ஏற்படுமா?
மியான்மார் தொடர்பான இந்தத் தீர்ப்பு உலகளாவிய முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலையா என்பது தொடர்பாக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கில், சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் எத்தகைய சட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக்கூடும் என்பதற்கான முக்கியமான முன்னறிவிப்பாக மியான்மார் தீர்ப்பு அமையலாம்.
இரண்டு வழக்குகளுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தின் நடவடிக்கைகளால் குறிப்பிட்ட இனக்குழுவொன்று இலக்கு வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வலுவான இராஜதந்திர ஆதரவு உள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராகவும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
ரோஹிங்கியா நெருக்கடியை ஏற்கெனவே இனப்படுகொலையாக அமெரிக்கா அதிகாரபூர்வமாகக் கருதியுள்ளது. இது ஜோ பைடன் நிர்வாகத்தின் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
எனினும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஐ.நா. தூதர் மைக் வோல்ட்ஸ், இனப்படுகொலைக்கான வரையறையை சர்வதேச நீதிமன்றம் விரிவுபடுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
அவ்வாறு செய்தால், அது அமெரிக்காவின் நட்பு நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுத விநியோகத்துக்குத் தடைவிதிக்க வேண்டுமா?
மியான்மார் இனப்படுகொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டால், அந்த நாட்டுக்கான ஆயுத விநியோகம் மற்றும் விமான எரிபொருள் வழங்கலைத் தடுக்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என இந்த வழக்கின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச நீதிமன்றத்துக்கு தனது தீர்ப்புகளை நேரடியாக அமுல்படுத்துவதற்கான அதிகாரமோ, அதற்கான நடைமுறைப் பொறிமுறையோ இல்லை.
இருப்பினும், கடந்த காலங்களில் அதன் தீர்ப்புகள் மதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இந்தத் தீர்ப்புக்கு வலுச்சேர்க்க முடியும். ஆனால் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக, அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
பத்து இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக..
தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக வாழ்கின்றனர். உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாக பங்களாதேஷின் ரோஹிங்கியா அகதி முகாம்கள் விளங்குகின்றன.
மியான்மாருக்குள் 600,000க்கும் குறைவான ரோஹிங்கியா மக்களே எஞ்சியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மாருக்குள் இடம்பெயர்ந்து வாழும் ரோஹிங்கியா ஒருவர் தி கார்டியன் பத்திரிகையிடம் கூறுகையில், இந்தத் தீர்ப்பு பல தசாப்தங்களாகத் தொடரும் ஒடுக்குமுறைக்கும் பாகுபாட்டுக்கும் முடிவுகட்ட உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வெறும் அனுதாபத்தை மட்டும் கேட்கவில்லை. நீதியையும், எங்களது இன அடையாளத்துக்கான அங்கீகாரத்தையும், சம உரிமைகளையும் கேட்கிறோம். எங்களது குழந்தைகள் தங்களது சொந்தத் தாயகத்தில் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய எதிர்காலத்தையே விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
(மூலம்: தி கார்டியன்)
