எம்.கே. சிவாஜிலிங்கம்: தடைகளை மீறி போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூர்ந்த தமிழ் தேசியவாதி

எம்.கே. சிவாஜிலிங்கம்: தடைகளை மீறி போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூர்ந்த தமிழ் தேசியவாதி

இலங்கை அரசாங்கங்கள், பாதுகாப்புப் படையினர், போட்டித் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தனது சொந்த அரசியல் சகாக்களுடனும் நான்கு தசாப்தங்களாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த தனித்துவமான தமிழ் அரசியல்வாதியான எம்.கே. சிவாஜிலிங்கம், சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையிலுள்ள வல்வெட்டித்துறையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 69.

சனிக்கிழமை இரவு சுமார் 11.35 மணியளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஜூன் மாதம் கொழும்பில் அவருக்குச் செய்யப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் இனிமேல் தங்களால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனது இறுதி மூன்று நாட்களைக் கழித்த அவர் உயிரிழந்தார்.

சிவாஜிலிங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன், வடமாகாண சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகப் பதவி வகித்து வந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் சிவாஜிலிங்கமும் பிறந்து வளர்ந்த இடம் வல்வெட்டித்துறையாகும். பிரபாகரனின் தாயார் வழி குடும்ப உறவினர்கள் மூலம் இருவருக்கும் தொலைதூர உறவுமுறை இருந்தது. 1980களில் பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் புலிகள், சிவாஜிலிங்கம் அங்கம் வகித்த ஆயுதக் குழுவின் உறுப்பினர்களை வேட்டையாடியபோது, அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

அவர் தேசிய அரசியலில் வகித்த பதவிக்காலம் ஒரு தசாப்தத்திற்கும் குறைவானதாக இருந்தபோதிலும், அதற்கு வெளியே அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளே அவரை அதிகம் பிரபலப்படுத்தின.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், பிரபாகரனைத் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவராகவே அவர் தொடர்ந்து அழைத்து வந்தார். போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து வந்த காலகட்டத்தில், அவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளை அவர் ஏற்பாடு செய்தார். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டார். ஒரு தடவை சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசத்தில்கூட தேர்தலில் களமிறங்கி தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

ஆயுதப் போராட்டக் காலம்:

மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி வடமராட்சிப் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் கடலோடிகளின் நகரமான வல்வெட்டித்துறையில் பிறந்தார். அந்த நகரின் அம்மன் ஆலயத்திற்கு அருகில் அவர் வளர்ந்தார். திருமணத்திற்குப் பின்னர் நெடியகாடு பகுதியில் வசித்து வந்தார்.

மொழிக் கொள்கை, பல்கலைக்கழக அனுமதி நடைமுறைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் காரணமாகத் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் அதிருப்தியும் கோபமும் அதிகரித்த காலகட்டத்தில் அவர் அரசியலுக்கு வந்தார்.

தனித் தமிழீழ அரசை உருவாக்குவதற்காக அப்போது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO) அவர் இணைந்தார். அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவில் பணியாற்றினார்.

1986ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள், டெலோ இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுத்தனர். அதன் தலைவர் சிறீ சபாரத்தினம் உட்பட பல போராளிகள் கொல்லப்பட்டனர். சிவாஜிலிங்கம் உயிர் தப்பினார். பின்னர், தன்னையே அழித்தொழிக்க முயன்ற அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை மிகத் தீவிரமாகப் பகிரங்கமாக ஆதரித்தவர்களில் ஒருவராக அவர் மாறினார்.

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர், டெலோ இயக்கத்தில் எஞ்சியிருந்த உறுப்பினர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். சிவாஜிலிங்கம் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்தார்.

நாடாளுமன்ற அரசியலும் இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சினைகளும்..

2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெலோ இயக்கம் மேலும் மூன்று கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) உருவாக்கியது. அப்போது வடக்கு, கிழக்கின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகள் இந்தக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்தனர்.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாண நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2004ஆம் ஆண்டிலும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் இறுதிக்கட்டப் போர் தீவிரமடைந்திருந்த வேளையில், தனித் தமிழீழ அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததைக் காரணம் காட்டி, 72 மணித்தியாலங்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு அவருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் சென்னைக்குச் சென்றார். அங்கு இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு அருகில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். 2010ஆம் ஆண்டிலும் இந்தியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிரபாகரனின் குடும்பத்துடனான தொடர்பு:

2009ஆம் ஆண்டு மே மாதம் வடகிழக்குக் கடற்கரையிலுள்ள முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதுடன், பிரபாகரனும் கொல்லப்பட்டார். அவரது வயதான பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வேலுப்பிள்ளை உயிரிழந்தார். அரசாங்கத்தின் அனுமதியுடன் அவரது உடலைப் பொறுப்பேற்ற சிவாஜிலிங்கம், இறுதிச் சடங்குகளையும் ஏற்பாடு செய்தார்.

அதன் பின்னர், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலின் ஒரு பகுதி செயலிழந்திருந்த பார்வதி அம்மாளின் பராமரிப்புப் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

பார்வதி அம்மாளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்காகப் பல மாதங்கள் முயற்சிகளை மேற்கொண்டார்.

2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து கனடாவில் வசிக்கும் அவரது மகள் வினோதினியிடம் அவரை அழைத்துச் செல்ல உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்தத் திட்டம் கைகூடவில்லை.

ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அவர் சென்னைக்குச் சென்றபோது, இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் விமான நிலையத்திலேயே அவருக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து மே மாதம் அவர் மீண்டும் வல்வெட்டித்துறைக்குத் திரும்பினார்.

2011ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி அவர் உயிரிழக்கும் வரை வல்வெட்டித்துறை அரசாங்க வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டார். அவரது மரணத்தை ஊடகங்களுக்கு அறிவித்தவரும் சிவாஜிலிங்கமே.

பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில் அவரது உடலைப் படம்பிடித்தவர்களின் புகைப்படங்களை இராணுவத்தினர் பரிசோதிக்க முயன்றபோது, சிவாஜிலிங்கம் அவர்களை எதிர்த்து நின்றார். பிரபாகரனின் மகனை மட்டுமல்ல, அவரது தாயாரைக்கூட இராணுவம் அஞ்சுகிறது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

வெற்றி பெற முடியாத தேர்தல் போட்டிகள்..

அதற்குள் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியிருந்தார்.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், போரின் முடிவுக்குத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 9,662 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 0.1 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

அவரது வேட்புமனுத் தாக்கல் இனவாத அடிப்படையிலான பிளவைத் தீவிரப்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மறைமுகமாக உதவியதாகச் சில தமிழ் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். தமிழ் வாக்குகளைப் பிரிப்பதற்காக அவர் பணம் பெற்றுக்கொண்டு போட்டியிட்டதாகவும் வேறு சிலர் குற்றஞ்சாட்டினர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

மற்றொரு அதிருப்தியாளரான என். சிறீகாந்தாவுடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்றவில்லை.

2011ஆம் ஆண்டு இருவரும் மீண்டும் டெலோ இயக்கத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்தனர். அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராகத் தெரிவானார்.

2013ஆம் ஆண்டு வடமாகாணத்தின் முதலாவது மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

புதிய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய மறுத்த ஒன்பது மாகாணசபை உறுப்பினர்களில் சிவாஜிலிங்கமும் ஒருவராக இருந்தார்.

அக்டோபர் 14ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உள்ள கடற்கரையோர இந்து ஆலயமொன்றில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மாகாணசபையில் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இராஜதந்திரிகளையும் சந்தித்து அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

2015ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரமே மிகவும் விமர்சனத்துக்குள்ளான ஒன்றாக அமைந்தது.

அந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார். சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினரும் வசித்து வந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சிவாஜிலிங்கம் அங்கு சுயேச்சைக் குழுவொன்றை நிறுத்தினார்.

அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 424,539 விருப்பு வாக்குகளைப் பெற்றார். சிவாஜிலிங்கத்துக்குக் கிடைத்த வாக்குகள் வெறும் 91 மட்டுமே.

பிரபாகரனின் உறவினர் ஒருவருடன் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதாக அவரது ஆதரவாளர்கள் இந்தத் தேர்தலைச் சித்தரித்தனர். சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் அரசியல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகச் சில தமிழ் அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.

2019ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அவர் 12,256 வாக்குகளைப் பெற்றார்.

அவரது வேட்புமனுவை டெலோ எதிர்த்ததுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் ஆரம்பித்தது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகினார்.

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டபோதும் தோல்வியடைந்தார். பின்னர் சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

நினைவேந்தலுக்கான போராட்டம்:

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது வல்வெட்டித்துறை பொலிஸாரால் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 1987ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான திலீபனை நினைவுகூரும் நிகழ்வொன்றை கோண்டாவிலில் நடத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை அவர் மீறினார்.

இதையடுத்து சட்டமா அதிபர் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். 2023ஆம் ஆண்டு இரண்டு பிணையாளிகள் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

ஒருமுறை விசாரணையாளர்கள், பிரபாகரனுடன் உறவுமுறை இருந்த காரணத்தினால்தானா அவரது பிறந்தநாளில் சிவாஜிலிங்கம் கேக் வெட்டினார் என்று அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், “ஆம், அவர் எனது உறவினர். ஆனால் அதற்காக நான் கேக் வெட்டவில்லை” என்று பதிலளித்தார்.

பிரபாகரன் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் என்பதாலேயே அவருக்காகக் கேக் வெட்டியதாக அவர் விளக்கமளித்தார்.

2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பதை விசாரணையாளர்களுக்கு அவர் நினைவூட்டினார்.

“அவர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது சிவாஜிலிங்கத்துடன் அல்ல; பிரபாகரனுடன்தான்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நல்லூர் பிரதேச சபை உறுப்பினரான பார்த்திபன் வரதராஜன் இந்த ஆண்டு எழுதிய கட்டுரையில், பல ஆண்டுகளாக இராணுவக் கண்காணிப்புக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நினைவேந்தல் இடங்களுக்கு சிவாஜிலிங்கம் வாழைத்தண்டுகளைச் சுமந்து சென்றதன் மூலம், இன்று வடக்கில் பெருமளவில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அவர் அடித்தளமிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இறுதியாக வகித்த பதவியும் மருத்துவ உதவிக்கான கோரிக்கையும்:

2025ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வல்வெட்டித்துறை நகரசபையின் ஒன்பது வட்டாரங்களில் ஏழு வட்டாரங்களைக் கைப்பற்றியது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் அந்த முன்னணி, காலியாக இருந்த நகரசபை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் மாதம் சிவாஜிலிங்கத்தை நியமித்தது. நவம்பர் மாத இறுதியில் நகரசபையின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

அப்போது அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து கொண்டிருந்தன.

இந்த ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கும் அதனுடன் தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்கும் சுமார் 70 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், ஏற்கெனவே சுமார் 19 இலட்சம் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகள் மாகாணசபை உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தபோதிலும், தனக்குச் சொந்தமாக வீடு, காணி அல்லது வாகனம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் அவருக்கு நிதியுதவி வழங்க முன்வந்தனர்.

பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் சங்கம் யாழ் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடாக 25 இலட்சம் ரூபாயை வழங்கியது. சட்டத்தரணி கே.வி. தவசராசா குடும்ப நினைவு அறக்கட்டளையின் ஊடாக 10 இலட்சம் ரூபாயை வழங்கினார். நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களும் தங்களது மாதாந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதாக உறுதியளித்தனர்.

ஜூன் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் மாதம் அவர் கொழும்பில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அக்டோபர் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இம்மாத ஆரம்பத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அக்டோபர் 30ஆம் திகதி அவர் தலைமை வகித்த நகரசபையில் ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவரது மருத்துவ விடுப்பு தொடர்பாக விளக்கம் கோருமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்தக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஓர் உறுப்பினர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஓர் உறுப்பினர் ஆகியோர் அதற்கு ஆதரவளித்தனர்.

நவம்பர் 10ஆம் திகதி பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய பின்னர், டிசம்பர் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோரும் அழைப்பாணையொன்றை வழங்கிவிட்டுச் சென்றனர்.

குடும்பத்தின் சார்பில் சட்டத்தரணியாகச் செயற்பட்ட என். சிறீகாந்தா, அந்த அழைப்பாணையில் எந்த வழக்கு தொடர்பாக அவர் முன்னிலையாக வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே மரணப் படுக்கையில் இருந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு இவ்வாறான அழுத்தம் கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் விமர்சித்தார்.

இறுதிக் கிரியைகள்:

சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள கால் வீதியிலமைந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். நண்பகல் சுமார் 12 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பூதவுடல் வல்வெட்டித்துறை சந்திக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு இரங்கல் உரைகளும் இடம்பெறும்.

அதன் பின்னர் பூதவுடல் வல்வெட்டித்துறையில் உள்ள ஊரணி இந்து மயானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

(நன்றி: ஜஃப்னாமொனிட்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *