(நன்றி: தி எக்ஸாமினர்)
2027ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு – செலவுத் திட்டம், தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளின் தொடர்ச்சியையே சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒத்துழைப்பும் தொடரக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளும் இதில் காணப்படுகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வரவு – செலவுத் திட்ட உரையில், சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பைத் திறந்தே வைத்துள்ளார்.ஜ்ஹ்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட சில துறைகளில் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள மோசமான செயல்திறனையும் ஜனாதிபதி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் போதுமான அளவில் முன்னெடுக்கவில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டம், பெரிதாகப் பாராட்டப்படவுமில்லை; கடுமையாக விமர்சிக்கப்படவுமில்லை. “குறிப்பிட்டுச் சொல்லும்படியாக முட்டாள்தனமான விடயங்கள் எதுவுமில்லை; அதேவேளை, மிகச் சிறப்பான விடயங்களும் எதுவுமில்லை” என்பதே ஒரு பொருளாதார நிபுணரின் மதிப்பீடாக இருந்தது.
தி எக்ஸாமினர் பத்திரிகை கலந்துரையாடிய ஒன்பது பொருளாதார நிபுணர்களில் ஏறக்குறைய அனைவரும், இந்த வரவு – செலவுத் திட்டம் பொதுவாக விவேகமானதாகவும், தற்போதைய கொள்கைகளின் தொடர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவும் கருதினர். வருமானம் மற்றும் செலவினங்களுக்கான மதிப்பீடுகள் பெருமளவில் யதார்த்தமானவை என்பதும் அவர்களின் பொதுவான கருத்தாக இருந்தது.
வரவு – செலவுத் திட்ட உரையைக் கேட்ட பின்னர், அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தங்களது கணிப்புகளில் எவரும் மாற்றம் செய்யவில்லை.
வரவு – செலவுத் திட்டத்தின் தொழில்நுட்ப இணைப்புகளில் இடம்பெற்றுள்ள நுணுக்கமான விபரங்கள், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு திட்டத்தில் இணையத் தயாராகி வரக்கூடும் என்பதைக் காட்டுவதாகப் பொருளாதார நிபுணரும் முன்னாள் திறைசேரி அதிகாரியுமான உமேஷ் மொரமுதலி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான சர்வதேச இறைமைக் கடன் பத்திரங்களை (International Sovereign Bonds) வெளியிடுவது தொடர்பான திட்டம், வரவு – செலவுத் திட்டத்தின் வருடாந்த கடன் பெறல் திட்டத்தில் (Annual Borrowing Plan) இடம்பெறவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய வெளிநாட்டு நாணய வருமானம் இல்லாத நிலையில், அரசாங்கம் வெளிநாட்டு நாணய நிதியளிப்பில் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடலாம். பல்தரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து 1.44 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதையே கடன் பெறல் திட்டம் எதிர்பார்க்கிறது.
இதன் மூலம் ஏற்படக்கூடிய வெளிநாட்டு நாணய நிதிப் பற்றாக்குறையை, சர்வதேச நாணய நிதியத்தின் புதிய திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் நிதியைக் கொண்டு ஈடுசெய்ய அரசாங்கம் ஏற்கெனவே திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போதைய சர்வதேச நாணய நிதியத் திட்டம் 2027 மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
“அவர்கள் இதனை மிகவும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. அடுத்த ஆண்டு சர்வதேச இறைமைக் கடன் பத்திரங்களை வெளியிடாவிட்டால், நிதியைத் திரட்டுவதற்கான மற்றொரு வழி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இணைவதுதான்” என மொரமுதலி தெரிவித்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனது வரவு – செலவுத் திட்ட உரையிலும் திசாநாயக்க பயன்படுத்திய சொற்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய திட்டத்திற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை.
“உள்நாட்டுப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தயாராகும் இக்காலகட்டத்தில், உலகளாவிய மற்றும் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே கணிப்பது கடினமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு எமது வெளிநாட்டுக் கையிருப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என நம்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
மற்றுமொரு சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் இணைவது பொருத்தமானதா, அத்துடன் எத்தகைய திட்டத்தில் இணைவது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த வரவு – செலவுத் திட்டத்தில், புதிய சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் இணைவதற்குத் தடையாக அமையும் அடிப்படையான அம்சங்கள் எதுவும் இல்லை. அத்துடன், தற்போதைய திட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இது அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதித் தவணை நிதியைப் பெறுவதற்கு இது அவசியமான நிபந்தனையாகும்.
பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து பொருளாதார மாற்றத்தை நோக்கி:
அரசாங்கத்தின் கவனம் இனிவரும் காலங்களில் வேறு திசையில் திரும்பவுள்ளதாகவும் வரவு – செலவுத் திட்ட உரை சுட்டிக்காட்டுகிறது.
“பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலிருந்து விரைவாகப் பொருளாதார மாற்றத்தை நோக்கித் திரும்ப வேண்டும்” எனத் திசாநாயக்க அழைப்பு விடுத்தார். இதன் மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் பரந்த சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கும் என்பது வெளிப்படுகிறது.
நடுத்தர காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே திசாநாயக்கவின் இலக்காகும். கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட்ட உரையிலும் அவர் இந்த இலக்கை முன்வைத்திருந்தார்.
எனினும், தி எக்ஸ்ஸாமினர் கருத்துக் கேட்ட எட்டு பொருளாதார நிபுணர்களும் வங்கியாளர்களும், 2027ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கவில்லை. அவர்களின் கணிப்புகள் 3 முதல் 5 சதவீதம் வரையில் அமைந்திருந்தன.
நிதியமைச்சினால் இறுதியாக வெளியிடப்பட்ட கணிப்பீட்டின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2027ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பொதுமுதலீட்டில் அதிகரிப்பு:
எனினும், வீதிகள், பாடசாலை வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அரசாங்கச் செலவினங்களை உள்ளடக்கிய மூலதனச் செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளமை, பொருளாதார வளர்ச்சிக்கு ஓரளவு உந்துசக்தியை வழங்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் எச்சரிக்கையுடனான நம்பிக்கை காணப்படுகிறது.
“இந்த வரவு – செலவுத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் 2 டிரில்லியன் ரூபா மூலதனச் செலவின ஒதுக்கீடாகும்” என First Capital நிறுவனத்தின் பிரதம ஆய்வு அதிகாரி திமந்த மாத்யூ தெரிவித்தார்.
“ஆனால், ஒதுக்கப்பட்ட இந்த நிதியை அரசாங்கத்தால் உண்மையில் செலவிட முடியுமா என்பதுதான் ஒரே கவலை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நடைமுறையில் செலவிடுவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக கொள்வனவு நடைமுறைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து வரவு – செலவுத் திட்ட உரையில் விளக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோரல் நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு அமைச்சுக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், கொள்வனவு நடைமுறைகள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
“நடைபெற்று வரும் மூலதனச் செலவினத் திட்டங்களை நிறைவு செய்வதில் அரசாங்கம் உண்மையான அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது” என Centre for a Smart Future என்ற சிந்தனைக் குழுவின் நிறுவுநரும் பொருளாதார நிபுணருமான அனுஷ்க விஜேசிங்க தெரிவித்தார்.
தனியார் முதலீடுகளில் மந்தநிலை:
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் ஏற்பட்ட பலவீனமான செயல்திறன் உள்ளிட்ட அரசாங்கத்தின் குறைபாடுகளை ஜனாதிபதி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதை விஜேசிங்க பாராட்டினார்.
எனினும், தனியார் முதலீடுகளைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் எதுவும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை என்பது அவரது கவலையாகும்.
“வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) தொடர்பாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்களை நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
பொது-தனியார் பங்காண்மை தொடர்பான சட்டம், அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்வது மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்காக ஒரு பிரதான ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்குவது போன்ற யோசனைகள், இந்த அரசாங்கத்தின் மூன்று வரவு – செலவுத் திட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்புக்காகப் புதியதொரு நிறுவனத்தை உருவாக்கும் அறிவிப்பை விஜேசிங்க பாராட்டினார். முதலீட்டுச் சபை (Board of Investment – BOI) தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற நிறுவனமாக இல்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக அவர் கருதுகிறார்.
போட்டித்தன்மை வாய்ந்த ஊதியங்களை வழங்கி, உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கக்கூடிய புதிய நிறுவனமொன்றை உருவாக்கும் முன்மொழிவு சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்.
“பெரிய முதலீட்டாளர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் இலங்கைக்கு வருவதில்லை. அவர்களை ஈர்ப்பதற்காகப் புதிதாக எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை” என முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
தற்போதைய வரவு – செலவுத் திட்டம் முந்தைய வரவு – செலவுத் திட்டங்களின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளதாக அவர் கருதுகிறார். மூலதனச் செலவின ஒதுக்கீட்டைத் தவிர, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான உறுதியான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை என்பது அவரது கவலையாகும்.
தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கக்கூடிய ஒரு துறையாக எரிசக்தித் துறையை விஜேசிங்க அடையாளப்படுத்துகிறார்.
தனது உரையை எரிசக்தித் துறையுடன் ஆரம்பித்த திசாநாயக்க, மற்றைய துறைகளை விடவும் இந்தத் துறைக்கு அதிக விபரங்களை வழங்கினார். எண்ணெய்க் கப்பலிலிருந்து எரிபொருளை இறக்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்தது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
மின்சார விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துதல், மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்கள், எரிபொருள் சேமிப்புத் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை பொது-தனியார் பங்காண்மை அடிப்படையில் அமைத்தல் போன்ற பல வாய்ப்புகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளன.
எரிசக்தித் துறைக்கு அடுத்ததாக, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் போக்குவரத்துத் துறைகளைத் தவிர்ந்த ஏனைய துறைகள் குறித்து வரவு – செலவுத் திட்ட உரையில் மிகக் குறைந்தளவிலேயே விபரங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் திசாநாயக்க மேற்கொண்டு வரக்கூடும்.
அந்த நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு ஏற்பட்ட 528 பில்லியன் ரூபா இழப்பைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த முடிவு “ஒரு தனிநபரால்” எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தனது பரிவாரங்களுக்காக இடமளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கிவிடுமாறு உத்தரவிட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையே திசாநாயக்க மறைமுகமாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
இலங்கை – இந்திய மின்சாரக் கட்டமைப்பு இணைப்பு மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் போன்ற சர்ச்சைக்குரிய சில வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் குறித்து திசாநாயக்க தனது உரையில் தவிர்த்துச் சென்றார்.
கடன் நிலைமை:
வெளிப்புறச் சூழலில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாவிட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை தனது கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நிலையில் தொடர்ந்து இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பொதுவான இணக்கம் காணப்படுகிறது.
John Keells Stock Brokers நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கும் நவின் ரத்நாயக்க, குறிப்பாக வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை முடிவுக்கு வந்தால், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் தரப்படுத்தலை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம் என எதிர்பார்க்கிறார்.
எனினும், இந்தக் கேள்விக்கான விடையைத் தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
தெளிவாக வரையறுக்கப்பட்ட தொழில்துறைக் கொள்கை ஒன்று இல்லாதது ஏமாற்றமளிப்பதாக அரசியல் பொருளாதார நிபுணர் ஷிரான் இல்லன்பெரும தெரிவித்தார்.
குறிப்பாக உற்பத்தித் துறையில் எந்தெந்த தொழில்களை இலக்கு வைத்து அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்ற திட்டம் இல்லாமல், உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைவது யதார்த்தமானதல்ல என அவர் கருதுகிறார்.
வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக மூலதனச் செலவினத்தை ஒதுக்குவது மட்டுமே போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Verité Research நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ராஜ் ராஜகுலேந்திரனும் இதேபோன்ற சந்தேகங்களை எழுப்புகிறார்.
“இலங்கையிடம் உண்மையில் அபிவிருத்தித் திட்டம் ஒன்று இருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்புகிறார்.
வருமான ஏற்றத்தாழ்வுகளையும் வறுமையையும் எவ்வாறு கையாள்வது என்பது உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
“அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலை அல்ல. அது அரசாங்கத்தின் பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்தார்.
வரிகள்:
பொதுமக்கள் மத்தியில் நிலவிய சில எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அரசாங்கம் வருமான வரிகளில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை.
இனிமேல் மாதம் 162,500 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு முன்னர் இந்த வருமான வரி வரம்பு 150,000 ரூபாவாக இருந்தது.
எனினும், வருமான வரி விதிப்பு நிலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளதுடன், இடைநிலை 12 சதவீத வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் முன்னர் காணப்பட்ட சில பெரிய வரி அதிகரிப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பணவீக்க அழுத்தங்களைக் கருத்தில் கொள்ளும்போது, வரிக் குறைப்புகள் மூலம் கிடைக்கும் நிவாரணம் “மிகவும் சொற்பமானது” எனப் பொருளாதார நிபுணர் கல்ப ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்களுக்கு உண்மையான பொருளாதார நிவாரணத்தை வழங்குவதை விட, அவர்களைச் சமாதானப்படுத்தும் அரசியல் முயற்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அவர் கருதுகிறார்.
இந்த மாற்றத்தின் காரணமாக அரசாங்கத்தின் நிகர வருமானத்தில் ஏற்படக்கூடிய இழப்பு மிகவும் குறைவானது. இது சுமார் 16 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வருமானம் பெறுபவர்கள் வரியாகச் செலுத்தும் தொகை சற்றுக் குறையும் என உமேஷ் மொரமுதலி தெரிவித்தார். அதேவேளை, 250,000 ரூபா முதல் 300,000 ரூபா வரையிலான மாத வருமானம் பெறுபவர்களுக்குக் கிடைக்கும் வரிச்சலுகை மிகக் குறைவானதாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சிக்கலான வரி கட்டமைப்பைச் சீரமைத்து எளிமைப்படுத்துவதற்கு இந்த வரவு – செலவுத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுள்ளதாக Frontier Research நிறுவனத்தின் பிரதம பொருளாதார நிபுணர் சாயு டம்சிங்கே தெரிவித்தார்.
உதாரணமாக, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை (Social Security Contribution Levy – SSCL), பெறுமதி சேர் வரியுடன் (VAT) இணைப்பது போன்ற நடவடிக்கைகளை அவர் எதிர்பார்த்திருந்தார்.
அரசாங்கம் வரி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் நாட்டின் வரி அமைப்பு எத்தகைய வடிவத்தைப் பெறும் என்பது குறித்த தெளிவான விளக்கத்தைத் தாம் எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
