ஒரு காதல் கதை எப்படி ஆழமான நாட்டுப்பற்றுதலாக மாறியது?

ஒரு காதல் கதை எப்படி ஆழமான நாட்டுப்பற்றுதலாக மாறியது?

 ~ என். ராம்

இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சோனியா காந்தி ‘தி இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் விரைவில் வெளியாகவிருக்கும் தனது நூலான “Belonging: A Journey of Love”  குறித்துப் பேசினார். அதில், கடந்த 12 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ராஷ்டிரிய சுயசேவக சங் ( ஆர்.எஸ.எஸ்.) ஆட்சியின் கீழ், இந்தியாவின் கட்டமைப்புக்கும் ஜனநாயகத்திற்கும் நிறுவனங்களுக்கும் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

“தற்போதைய  அரசுக்குப் பிறகும் கூட, இந்தியாவின் அமைப்புகளை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டுவர கால அவகாசமும், அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான உழைப்பும் தேவைப்படும். மக்கள் இப்போது அமைதியிழந்து, ஏற்பட்டுள்ள சேதத்தை உணரத் தொடங்கியுள்ளனர். ஆனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்; இந்திய மக்கள் மீண்டும் ஒரு சரியான நல்லாட்சி திரும்புவதை வரவேற்பார்கள் என்பதை நான் அறிவேன்” என்றும் அவர் கூறினார்.  

இந்தியாவின் முதன்மை அரசியல் கட்சி என்ற நிலையிலிருந்து காங்கிரஸ் இன்றைய நிலைக்கு  சரிவடைந்தது குறித்து, கட்சியின் வீழ்ச்சியை மாற்றியமைக்க முடியவில்லை என்ற சில விமர்சகர்களின் கருத்துப் பற்றி கேட்கப்பட்டபோது, “நான் அந்த அளவுக்கு நம்பிக்கையற்றவளாக இல்லை. இந்த அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து காங்கிரஸிற்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகள்  கிடைக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அனைத்து நிறுவனங்கள் மீது, குறிப்பாக தேர்தல் ஆணையம் மீது ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் முழுமையான பிடி, பிரதான  ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு, அவர்களின் பணபலம் மற்றும் மதத்தை அவர்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், எங்கள் கட்சி போராடி முன்னேறி வருகிறது… மேலும் பல தேர்தல்கள் திருடப்பட்டுள்ளன என்பதும், மக்கள் இப்போது அதைப்பற்றி விழிப்புணர்வு அடைந்துள்ளனர் என்பதும் சமீபத்திய மாதங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது, மேலும் நாளுக்கு நாள் எங்கள் வாய்ப்புகள் மேம்பட்டு வருகின்றன” என்று திருமதி காந்தி பதிலளித்தார்.  

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஹார்ப்பர் கொலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படும் “Belonging”  என்ற சோனியா காந்தியின் நினைவுக்குறிப்பு நூல், பின்னணியில் அரசியல் அல்லது “ஒரு வகையான கட்டமைப்பாக” அமைந்திருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட நினைவுக் குறிப்பாகும்.  

“நான் இதை அதன் மையத்தில் ஒரு காதல் கதையாகவே படிக்கிறேன் — ராஜீவிற்கும் சோனியாவிற்கும் இடையே உடனடியாக உருவான ஒரு அசாதாரணமான காதல் பிணைப்பு, அது படிப்படியாக மிகப் பெரிய ஒன்றாக வளர்ந்து, அவரை அவரது குடும்பத்திற்குள்ளும், பின்னர் அதிகாரத்தின் உயர்மட்ட வட்டாரங்களுக்கும் இழுத்துச் சென்று, இறுதியில் பொது வாழ்க்கை மற்றும் அரசியலுக்குள் தயக்கத்துடன் நுழைய வைத்து, நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களில் ஒருவராக மாற்றிய கதை. ‘புனைகதையை விட விசித்திரமானது’, அல்லவா?” என்று நேர்காணலில் நான் அவரிடம் கேட்டேன்.  

“ஆம்,” என்று அவர் பதிலளித்தார். “நான் இவ்வளவு காலம் இதைப் பற்றி பேச விரும்பாததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் இது எங்கள் இருவருக்கு இடையிலான ஒரு காதல் கதை மட்டுமல்ல, ராஜீவின் குடும்பத்தையும் அவர்கள் சார்ந்திருந்த நாட்டையும் நான் எவ்வாறு நேசிக்கத் தொடங்கினேன், பின்னர் நானும் அதில் எவ்வாறு கலந்தேன் என்பதன் கதையுமாகும். மேலும் இந்த காதல் என்னை எவ்வாறு பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தது என்பதன் கதையுமாகும் — அவர்கள் செய்த தியாகங்களின் நோக்கம் அச்சுறுத்தப்படுவதையும், கட்சி பலவீனமடைவதையும் கண்டபோது, நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியும் இந்திரா காந்தியும்  சோனியாவின் கதையில் இரு முக்கிய மையப் புள்ளிகளாக இருக்கிறார்கள். திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள்  எத்தகைய  குணங்களை கொண்டிருந்தார்கள்,  அவை ஒவ்வொன்றும் இவரது  வாழ்க்கையையும் நோக்கையும்  எவ்வாறு வடிவமைத்தன என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு விளக்கம் தந்தார் ; 

 “நான் ஒரு இளம் மணப்பெண்ணாக இந்தியா வந்தபோது, இந்தியாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அதை அவர்களிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். அவர்களின் தைரியம், அவர்களின் இரக்கம், ஒரு மதச்சார்பற்ற – ஜனநாயக இந்தியாவிற்கான அவர்களின் அர்ப்பணிப்பு, மற்றும் அனைத்திற்கும் மேலாக, மற்ற எதையும் விடப் பெரிதான கடமை உணர்வு — அதுவே எனக்கு ஊக்கமளித்து, சிரமமானதும்  சந்தேகங்கள் நிறைந்ததுமான  காலங்களில் என்னை உறுதியாகப் பிடித்து நிறுத்தியது”.  

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு கிரேக்க உணவகத்தில் ராஜீவ் காந்தியைச் சந்தித்த அந்த இளம் இத்தாலியப் பெண், இன்றைய சோனியாவிற்குள் எவ்வளவு தூரம் வாழ்கிறார் என்று கேட்டதற்கு, அவர், “நான் வளர்ந்தபோது கற்றுக்கொண்ட மதிப்புகள் இன்றும் வாழ்கின்றன… ஆனால் நான் முன்னைவிட இப்போது அதிகமாகச் சிரிக்கவும் புன்னகைக்கவும் செய்கிறேன்” என்று பதிலளித்தார்.

 1975-1977 அவசரநிலை காலம் பற்றிய கேள்விகளுக்கு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அது ஒரு ஜனநாயகமற்ற – சர்வாதிகாரக் கட்டம் என்று சில விவரங்களுடன் பதிலளித்த அவர், அவசரநிலையை இன்று அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள அந்தப் பதில் முழுமையாகப் படிக்கப்பட வேண்டும் என்றார்.  

1999 மே மாதத்தில் ,  சரத் பவார் உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் சோனியா காந்தியின் வெளிநாட்டு வம்சாவளிப் பிரச்சினையை எழுப்பி, இந்தியாவில் அவர் உயர்பதவிகளை வகிக்க முடியாது என்று கூறியபோது, அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பின்னர் அதைத் திரும்பப் பெற்றார். இதைப் பற்றிக் கேட்டபோது சோனியா காந்தி, “நிச்சயமாக, நான் காயப்பட்டதாக உணர்ந்தேன்… அவர்கள் என்னை இன்னும் ஒரு அந்நியராகவே பார்க்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்று பதிலளித்தார்.  

ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, ” அவர்களுக்கு சொந்தக்  காரணங்கள்  இருந்திருக்கலாம்” என்பதை அவரால்  காண முடிந்தது. “சில சுயபரிசீலனைக்குப் பிறகு, என் தனிப்பட்ட உணர்வுகள் எனது பெரிய நோக்கத்திலிருந்து என்னை திசைதிருப்ப நான் அனுமதிக்க முடியாது, நான் தொடர வேண்டும்” என்பதைத் தான் உணர்ந்ததாக அவர் மேலும் கூறினார்.  

2004 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு  கூட்டணியின், பிரதமர் பதவிக்கான இயல்பான தெரிவாக   சோனியா காந்தி இருந்தார். ஆனால், அந்த  முடிவை அவர் நிராகரித்தார்.  என்றாலும், தொடர்ந்து வந்த “விசித்திரமான நாடகத்தின்” கடுமையான அழுத்தத்தின் கீழ், அவர் “தெக் ஹை” (சரி) என்று மட்டுமே கூறினார், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

 பிரதமர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டிருந்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொள்கைகளும்   காங்கிரஸின்  உத்தியும் எவ்வாறு வேறுபட்டிருக்கக் கூடும் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா என்று சோனியா காந்தியிடம் கேட்டதற்கு, அவர் அழுத்தமாகப் பதிலளித்தார் ; 

“இல்லை, அறவே இல்லை. அது என் மனதிலேயே தோன்றியதில்லை. எங்கள் அனுபவம் மிக நேர்மறையானதாக இருந்தது. நாங்கள் ஒரு குழுவாக வேலை செய்தோம், அரசாங்கத்தை வழிநடத்தும் மன்மோகன் சிங்கும் கட்சியை வழிநடத்தும் நானும் தனித்தனிப் பொறுப்புகளைக் கொண்டிருந்தோம்”.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *