மெகாஸ்பீட்: விளையாட்டு நிறுவனத்திலிருந்து கணினி சிப் வர்த்தகத்தின் முக்கிய இணைப்புப் புள்ளியாக உருவெடுத்த நிறுவனம்

மெகாஸ்பீட்: விளையாட்டு நிறுவனத்திலிருந்து கணினி சிப் வர்த்தகத்தின் முக்கிய இணைப்புப் புள்ளியாக உருவெடுத்த நிறுவனம்

(தி இந்து | அனந்த் கிருஷ்ணன்)

என்விடியா (Nvidia) நிறுவனத்தைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சையின் மையத்தில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அதிகம் அறியப்படாத ஒரு நிறுவனம் இடம்பெற்றுள்ளது. அந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, என்விடியாவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங் நவம்பர் 12ஆம் திகதி பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சையின் மையத்தில் இருப்பது, சீனத் தொழில்நுட்பத் துறை நிர்வாகியான அலிஸ் ஹுவாங் நிறுவிய மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனமாகும். உலகளாவிய கணினிச் சிப் வர்த்தகத்தில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது குறைக்கடத்தித் தொழில்நுட்பத் துறையில் எவ்வித முன் அனுபவமும் இன்றி செயல்படத் தொடங்கியது. ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே ஆசியாவின் குறைக்கடத்தி மற்றும் தரவு மைய வர்த்தகத்தில் முக்கிய இணைப்புப் புள்ளியாக வளர்ந்தது.

அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் கடுமையடைந்த நிலையில், சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெறுமதிமிக்க என்விடியா சில்லுகளைப் பெற்றுக்கொடுக்கும் முக்கிய இடைத்தரகராக மெகாஸ்பீட் உருவெடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நிறுவனம் 4 முதல் 5 பில்லியன் டொலர் பெறுமதியான என்விடியா தொழில்நுட்பப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மிகக் குறுகிய காலத்தில் இந்நிறுவனம் அடைந்த அசுர வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது.

மெகாஸ்பீட்டின் பயணம்:

2023ஆம் ஆண்டில் இந்தக் கதை ஆரம்பமாகிறது. ஷாங்காயின் நிதித்துறையில் பணியாற்றி வந்த அலிஸ் ஹுவாங், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ‘7Road International’ என்ற விளையாட்டுத் தொழில்நுட்ப நிறுவனத்தைக் கொள்வனவு செய்தார்.

பின்னர் அந்த நிறுவனத்தின் பெயரை மெகாஸ்பீட் என மாற்றி, தரவு மையங்கள் மற்றும் மேகக் கணினிச் சேவைகள் (Cloud Computing) துறையில் தனது கவனத்தைத் திருப்பினார்.

சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்கொண்ட முக்கியமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதே அவரது நோக்கமாக இருந்தது. அதாவது, என்விடியாவின் கணினிச் சில்லுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இந்தக் காலகட்டத்தில்தான் என்விடியாவின் இணை நிறுவனருடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, என்விடியா தனது அதிநவீன கணினிச் சில்லுகளில் பலவற்றை நேரடியாகச் சீனாவுக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கான மாற்று வழியாக சிங்கப்பூரும் தென்கிழக்காசிய நாடுகளும் உருவெடுத்தன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்தச் சில்லுகளைக் கொள்வனவு செய்து, அருகிலுள்ள மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அமைக்கப்பட்ட தரவு மையங்களுக்கு அனுப்ப முடிந்தது.

இதன் மூலம் அலிபாபா (Alibaba) போன்ற சீன நிறுவனங்கள் சட்டத்தை மீறாமல் தேவையான கணினிச் செயலாக்கத் திறனைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. மெகாஸ்பீட்டின் முக்கிய வாடிக்கையாளர்களில் அலிபாபாவும் ஒன்றாக இருந்தது.

சிங்கப்பூரில் விசாரணை:

தற்போதைய சர்ச்சை பொதுவெளியில் வெடிப்பதற்கு முன்னரே மெகாஸ்பீட் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தது.

ஜென்சன் ஹுவாங்கிற்கும் அலிஸ் ஹுவாங்கிற்கும் இடையிலான காதல் உறவு மற்றும் சீன அதிகாரிகளுடனான அவரது தொடர்புகள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து தற்போதைய சர்ச்சை தீவிரமடைந்தது.

இதற்கிடையில், நவம்பர் 12ஆம் திகதி சிங்கப்பூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, சிங்கப்பூர் பொலிஸ் படையும் (SPF), சிங்கப்பூர் சுங்கத் திணைக்களமும் இணைந்து, 2025 பெப்ரவரியில் பல நிறுவனங்கள், அவற்றின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பாகச் சுயாதீன விசாரணையை ஆரம்பித்திருந்தன.

இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் மெகாஸ்பீட்டும் இடம்பெற்றிருந்தது.

கொள்வனவு செய்யப்பட்டு மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சேவையகங்கள் (Servers), வேறு ஏதேனும் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனவா என்பது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அலிஸ் ஹுவாங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும், இந்த விசாரணை “உளவு பார்த்தமை தொடர்பானதல்ல” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விசாரணையை முடித்துக்கொண்ட சிங்கப்பூர் பொலிஸ் படை, அவர் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்தது. இதனையடுத்து அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

மெகாஸ்பீட் நிறுவனத்துக்கு எதிராகவோ அல்லது அலிஸ் ஹுவாங்குக்கு எதிராகவோ எந்தவொரு குற்றச்செயலும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது ஏற்பட்டுள்ள புதிய கவனம் காரணமாக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உளவாளி இல்லையா?

இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அலிஸ் ஹுவாங்கின் குறிப்பிட்ட பங்கு குறித்து விரிவான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் அமெரிக்க ஊடகங்கள் அவரை “சந்தேகிக்கப்படும் உளவாளி” என வர்ணித்திருந்தன. ஆனால், பின்னர் வெளியான அறிக்கைகள் இந்த விவகாரத்தில் தெளிவற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன.

நவம்பர் 13ஆம் திகதி வெளியான அமெரிக்க ஊடகச் செய்திகள், அலிஸ் ஹுவாங் சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சகத்துக்காக (Ministry of State Security – MSS) உளவாளியாகப் பணியாற்றினாரா என்பது தொடர்பான ஆதாரங்களின் வலிமை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தெரிவித்தன.

சீனாவுக்கு சில கணினிச் சில்லுகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்ததுடன், ஜென்சன் ஹுவாங்கிற்கு வலுவான ஆதரவை வழங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த விவகாரம் குறித்து தனக்கே தெளிவில்லை எனக் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஊடகவியலாளராக இருந்து, பல பில்லியன் டொலர் பெறுமதியான மூலோபாயக் கணினிச் சில்லுகளைக் கையாளும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் வியக்கத்தக்க வகையில் உயர்ந்ததே அவர் மீது சந்தேகம் எழுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

எனினும், சீனாவின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்ப மற்றும் நிதித்துறைகளில் இத்தகைய வளர்ச்சி முற்றிலும் அசாதாரணமானதல்ல. அங்கு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களை மறைத்துக்கொண்டு, செல்வாக்கு மிக்க தரப்பினருக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் இடைத்தரகர்கள் (Fixers) செயற்படுவது வழக்கமானதாகும்.

சீனாவின் அரசியல் மற்றும் நிதித்துறை உறவுகளை ஆராயும் ‘ரெட் ரவுலட்’ (Red Roulette) நூலின் ஆசிரியரான டெஸ்மண்ட் ஷும் (Desmond Shum) இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

“அலிஸ் ஹுவாங் முதலில் உளவாளியாக இருந்து பின்னர் ஒரு வர்த்தகப் பெண்ணாக மாறியவர் அல்ல என்பதே எனது சந்தேகம். அவர் ஒரு வர்த்தக இடைத்தரகராக இருந்திருக்கலாம். சக்திவாய்ந்த தரப்பினரை ஒன்றிணைப்பதிலும், அவர்களின் நேரடித் தொடர்புகளை மறைத்து வைப்பதிலுமே அவரது முக்கியத்துவம் அடங்கியிருந்தது” என அவர் எழுதியுள்ளார்.

அதேவேளை, சீனாவுக்கு கணினிச் சில்லுகளைப் பெற்றுக்கொடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு அவர் உயர்ந்ததைக் கருத்தில் கொண்டால், பின்னர் சீன அதிகாரிகள் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதையும் முற்றாக நிராகரிக்க முடியாது.

அமெரிக்காவின் முன்னாள் எதிர் உளவுத்துறை ஆய்வாளரான பீட்டர் மாட்டிஸ் (Peter Mattis) இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்:

“அவர் உண்மையில் சீன அரச பாதுகாப்பு அமைச்சகத்தின் (MSS) அதிகாரியாக இருந்தார் என்பதைக் காட்டும் எந்தவொரு ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த அமைச்சகம் இத்தகைய நபர்களின் முக்கியத்துவத்தை நிச்சயமாக உணர்ந்துள்ளது. குறிப்பாக, சர்வதேச அளவில் செயற்படும்போது அவர்களைப் பயன்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவரை ‘உளவாளி’ என அழைப்பது தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஏனெனில், உளவுத்துறை அதிகாரி ஒருவரிலிருந்து, உளவுத்துறையினரால் பயன்படுத்தப்பட்ட ஒருவர்வரை பல்வேறு தரப்பினரையும் இந்தச் சொல் குறிக்கக்கூடும். அவ்வாறு பயன்படுத்தப்படுவது மிகவும் தளர்வான அல்லது மறைமுகமான தொடர்பாகவும் இருக்கலாம்” என அவர் விளக்கமளித்துள்ளார்.

மெகாஸ்பீட்டின் எதிர்காலம் என்ன?

அலிஸ் ஹுவாங் மெகாஸ்பீட் நிறுவனத்துடனான தனது தொடர்புகளை முடித்துக்கொண்டிருந்தாலும், அந்த நிறுவனம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

எனினும், புதிதாக எழுந்துள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு மத்தியில், சிங்கப்பூரில் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது தெளிவாகவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதுடன், இந்த வர்த்தகத்துக்கு உதவியாக இருந்த மூன்றாம் நாடுகளையும் இலக்குவைக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்துடனேயே தாம் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டதாகவும், சீனாவில் பதிவு செய்யப்பட்ட அதன் துணை நிறுவனத்துடன் நேரடியாக வர்த்தகம் செய்யவில்லை என்றும் என்விடியா நிறுவனம் தனது செயற்பாடுகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டவையே எனத் தெரிவித்துள்ளது.

மெகாஸ்பீட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலும், அமெரிக்காவின் ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அமெரிக்க அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்” என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *