(ராமச்சந்திர குஹா | டெலிகிராப் இந்தியா)
சில புத்தகங்களை நாம் ஒருமுறை மட்டுமே வாசிப்போம். இன்னும் சில புத்தகங்களிடம் நாம் அவ்வப்போது மீண்டும் மீண்டும் திரும்பிச் செல்வோம். இரண்டாவது வகையைச் சேர்ந்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை ரவீந்திரநாத் தாகூரின் தேசியம் (Nationalism), பி.ஆர். அம்பேத்கரின் சாதி ஒழிப்பு (Annihilation of Caste), சி.எல்.ஆர். ஜேம்ஸின் எல்லைக்கு அப்பால் (Beyond a Boundary) மற்றும் வால்டர் குரோக்கரின் நேரு: ஒரு சமகாலத்தவரின் மதிப்பீடு (Nehru: A Contemporary’s Estimate) ஆகியவை.
இந்த நான்கு நூல்களில் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட புத்தகமே மிகவும் குறைவாக அறியப்பட்டதாகும். அதுவே அதைப் பற்றி இங்கு எழுதுவதற்கான ஒரு காரணம். இரண்டாவது, இன்னும் முக்கியமான காரணம், ஜவஹர்லால் நேருவின் 137ஆவது பிறந்தநாளான இன்று இந்தக் கட்டுரை வெளியாகிறது என்பதாகும்.
வால்டர் குரோக்கர் முதன்முதலில் 1945ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது சில வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து நாட்டைப் பற்றிய ஆரம்பகட்ட அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். 1950களில் மீண்டும் இந்தியாவுக்கு வந்த அவர், புதுடில்லியில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக இரண்டு தடவைகள், தலா சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
குரோக்கர் இந்தியாவில் பணியாற்றிய காலம், ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த செல்வாக்கு மிக்க காலப்பகுதியுடன் ஒத்துப்போனது. நேரு என்ற மனிதரையும் அரசியல்வாதியையும் மிக நெருக்கமாகப் பல ஆண்டுகள் அவதானித்ததன் விளைவே இந்தப் புத்தகம்.
நேருவின் குடும்பப் பின்னணி, கல்வி மற்றும் அவரது சிந்தனையில் தாக்கம் செலுத்திய அறிவுசார் காரணிகள் பற்றிய விபரங்களுடன் இந்நூல் ஆரம்பமாகிறது. நேருவின் எழுத்தாற்றல் குறித்து அவருக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த பலரைப் போலவே குரோக்கரும் பெரிதும் வியப்படைந்திருந்தார்.
நேருவின் மூன்று முக்கிய நூல்களையும் அவர் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறார். நேருவின் சுயசரிதை பற்றிக் குறிப்பிடும்போது, அது “குறைகளும் நிறைகளும் உடைய, வழக்கத்திற்கு மாறான ஒரு மனிதரின் உருவப்படத்தைத் தீட்டுகிறது. பெரும்பாலும் மிகவும் கவர்ச்சிகரமான மனிதராகவே அவரை அந்த நூல் சித்திரிக்கிறது” என்று எழுதுகிறார்.
குரோக்கரின் புத்தகத்தில் முக்கிய இடம் பெறுவது, நேரு பிரதமராகப் பதவி வகித்த ஆண்டுகள் குறித்த அத்தியாயமாகும்.
பிரதமராக நேரு நிகழ்த்திய மிக முக்கியமான சாதனை, நாட்டுக்கு எதிராகப் பல்வேறு சவால்கள் அணிவகுத்து நின்றபோதிலும் இந்தியாவை ஒன்றிணைத்து வைத்திருந்ததுதான் என்பது குரோக்கரின் மதிப்பீடு.
மத அடிப்படையிலான முரண்பாடுகள், வறுமை, கல்வியறிவின்மை, பரவலான சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சவாலான அண்டை நாடுகள் என இந்தியா எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்.
நேருவின் இரண்டாவது முக்கிய சாதனை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளர்ச்சியையும் சுயாதீனமான நிறுவனங்களின் உருவாக்கத்தையும் ஊக்குவித்ததாகும்.
மூன்றாவது சாதனை, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடமளிக்கும் மதச்சார்பற்ற அரசை உருவாக்கியதுடன், குறிப்பாகப் பெண்களின் உரிமைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியான சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்ததாகும்.
நேருவின் பொருளாதாரக் கொள்கை:
நேருவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான குரோக்கரின் மதிப்பீடு கலவையானதாக இருக்கிறது.
நவீன பொருளாதாரத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் ஐந்தாண்டுத் திட்டங்கள் முக்கிய பங்காற்றியதை அவர் பாராட்டுகிறார். அதேவேளை, உரிமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பெருகியதையும் விவசாயத்துக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படாததையும் அவர் நியாயமான முறையில் விமர்சிக்கிறார்.
பிரதமர் நேருவின் சிந்தனையில், “மார்க்சிய மற்றும் தாராளவாதச் சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று குழப்பமான நிலையில் இருந்தன. அவை நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கொள்கையாக உருவாக்கப்படவில்லை” என்று குரோக்கர் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக நேருவின் பொருளாதாரச் சிந்தனையில் இந்த முரண்பாடு தெளிவாகத் தெரிந்ததாக அவர் கருதுகிறார்.
நேரு நீண்டகாலம் பிரதமர் பதவியில் நீடித்த முடிவையும் குரோக்கர் விமர்சிக்கிறார். இந்த விடயத்தில் அவரது விமர்சனம் மிகவும் திட்டவட்டமானது.
“நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலனைக் கருத்தில் கொண்டிருந்தால், நேரு முன்னதாகவே பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அவர் அரசியல் களத்திலிருந்து விலகுவதால் ஏற்படக்கூடிய குழப்பங்கள், அவர் உயிருடன் இருக்கும்போதே, அதுவும் அவரது உடல்நிலை நன்றாக இருந்த காலத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போது நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறினால், அரசாங்கத்தைச் சீராக வழிநடத்துவதற்கு அவர் அருகில் இருந்திருக்க முடியும்” என்று குரோக்கர் எழுதுகிறார்.
நேருவும் ராஜாஜியும்: நிகழாமல் போன அரசியல் இணைவு
சர்தார் வல்லபாய் பட்டேலின் மறைவுக்குப் பின்னர், நேருவுடன் இணைந்து அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய அவருக்கு நிகரான ஆளுமை கொண்ட ஒருவர் இல்லாமல் போனது பெரும் இழப்பு என்றும் குரோக்கர் கருதினார்.
இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் சி. ராஜகோபாலாச்சாரியை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு குரோக்கருக்குக் கிடைத்தது. அவரது அறிவாற்றலையும் சிந்தனையின் தெளிவையும் கண்டு அந்தத் தமிழ் அரசியல் தலைவரை அவர் பெரிதும் மதித்தார்.
1950களின் நடுப்பகுதியில் ராஜாஜியை நேரு மீண்டும் தனது அமைச்சரவைக்குள் அழைத்திருந்தால், ஒருவேளை “தென்னிந்தியாவுக்கும் வடஇந்தியாவுக்கும் இடையிலான பாலமாக ராஜாஜி விளங்கியிருக்க முடியும்” என்று குரோக்கர் வாதிடுகிறார்.
அதுமட்டுமன்றி, அமைச்சரவையில் இருந்த ஏனைய அமைச்சர்களைப் போல ராஜாஜி நேருவின் கருத்துகளுக்கு அடிபணிந்து நடக்கக்கூடியவராக இருந்திருக்க மாட்டார். குறிப்பாகப் பொருளாதாரம் தொடர்பாக நேரு கொண்டிருந்த சில கருத்துகள் விவேகமற்றவை அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்று கருதியிருந்தால், அவற்றை நேரடியாகச் சவாலுக்கு உட்படுத்தியிருப்பார்.
ஆனால், அந்தச் சமரச முயற்சி கைகூடவில்லை.
காங்கிரஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட ராஜாஜி, தனக்கென சுதந்திராக் கட்சியை உருவாக்கி, நேருவின் கொள்கைகளைத் தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் விமர்சித்தார்.
இதுகுறித்து குரோக்கர் வருத்தத்துடன் எழுதுகிறார்:
“சுதந்திரத்துக்குப் பிந்தைய இரண்டு முக்கியமான தசாப்தங்களில் இந்தியாவுக்கு இந்த இரு தலைவர்களும் தேவைப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் இணைவு ஏற்படாமல் பிளவு ஏற்பட்டதற்கான பொறுப்பை இருவருமே ஏற்க வேண்டும். என்றாலும், அந்தப் பொறுப்பு இருவருக்கும் சமமானதாக இருந்திருக்காது.”
நேரு என்ற மனிதர்:
பிரதமர் நேருவை மதிப்பிடுவதில் குரோக்கர் மிகவும் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார். அதேவேளை, நேரு என்ற மனிதரைப் புரிந்துகொள்வதில் ஆழமான நுண்ணறிவை வெளிப்படுத்துகிறார்.
இயற்கையின் மீது நேரு கொண்டிருந்த ஆழமான ஆர்வத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்தக் காலத்தில் இந்தியர்களிடையே இத்தகைய ஆர்வம் வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
சாதாரண மக்களுடன் நேரு கொண்டிருந்த நெருக்கத்தையும் அவர் எடுத்துரைக்கிறார்.
“தினமும் காலை சுமார் 8.30 மணியளவில் அவரது தோட்டத்தில் இடம்பெற்ற பார்வையாளர்களின் வரிசையில், தங்களது குறைகளைக் கூற விரும்புபவர்கள், ஏதேனும் ஆலோசனை வழங்க விரும்புபவர்கள் அல்லது நேருவை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் என எவரும் வந்து சந்திக்க முடிந்தது” என்று குரோக்கர் எழுதுகிறார்.
நேரு மிகச் சிறந்த விருந்தோம்பல் பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதையும் நாம் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்கிறோம்.
வெளிநாட்டுப் பிரதமர்களும் ஜனாதிபதிகளும் புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது, “அத்தகைய சந்தர்ப்பங்களில் நேருவைப் போல கண்ணியமாகவும், இயல்பாகவும், அதேவேளை விருந்தினர்களை அன்புடன் வரவேற்கக்கூடியவராகவும் வேறு எந்த அரசாங்கத் தலைவரும் இருக்க முடியாது” என்று குரோக்கர் குறிப்பிடுகிறார்.
நேருவின் தோற்றம் குறித்தும் அவர் பாராட்டுகிறார். நேருவின் தோற்றம் நேர்த்தியானதாக இருந்தாலும், ஆடம்பரமற்றதாக இருந்தது.
உண்மையில், “சிறுத்தைக்கு இயல்பாக அமைந்துள்ள கம்பீரம் போலவே நேருவுக்கும் அந்தக் கம்பீரம் இயல்பாகவே அமைந்திருந்தது” என்கிறார் குரோக்கர்.
மேலும், “அவரது நடத்தைகள் மிகவும் நேர்த்தியானவை; பிறரிடம் காட்டிய மரியாதை உயர்ந்த பண்புடையது” என்றும் குறிப்பிடுகிறார்.
“நேருவின் ஆளுமையின் அடையாளமாக கம்பீரமும் கவர்ச்சியும் கலந்திருந்தன. அது நாடாளுமன்ற விவாதங்களாக இருந்தாலும் சரி, அவரது உணவு மேசையைச் சுற்றியிருந்த உரையாடல்களாக இருந்தாலும் சரி, பரிசுகள் வழங்குதல் அல்லது அடிக்கல் நாட்டுதல் போன்ற சாதாரண நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, அந்தப் பண்பு வெளிப்பட்டது” என்று குரோக்கர் எழுதுகிறார்.
மக்களிடம் நேரு பெற்றிருந்த மாயாஜாலச் செல்வாக்கு:
1950களில் இந்தியப் பிரதமரைச் சுற்றி ஒரு தனித்துவமான கவர்ச்சி வட்டம் இருந்ததாக எனது வயதான நண்பர்கள் பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
அந்தக் காலகட்டத்தில் நேருவை நேரடியாக அவதானித்த வெளிநாட்டுத் தூதரான வால்டர் குரோக்கர், இந்திய மக்களிடையே நேரு பெற்றிருந்த செல்வாக்கு “ஒருவித மாயாஜாலத் தன்மை கொண்டதாக இருந்தது” என்று எழுதுகிறார்.
இந்தச் செல்வாக்கு வெகுஜன ஊடகங்கள் மூலம் நேருவின் ஆளுமை திட்டமிட்டு விளம்பரப்படுத்தப்பட்டதன் விளைவாக உருவானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஏனெனில், அக்காலத்தில் பெரும்பாலான கிராம மக்களுக்கு வானொலி அல்லது சினிமா பற்றிய அறிமுகம் கூட இருக்கவில்லை. தொலைக்காட்சி பற்றிய அறிவு அவர்களுக்கு அறவே இருக்கவில்லை.
அப்படியென்றால், நேரு மக்களிடையே ஒப்பற்ற செல்வாக்கைப் பெற்றதற்கான காரணம் என்ன?
குரோக்கர் அதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடுகிறார்.
ஒருபுறம், மகாத்மா காந்தியால் தனது அரசியல் வாரிசாக நேரு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
மறுபுறம், நேருவின் இயல்பான கவர்ச்சியும் துடிப்பும் அவரது ஆளுமையும் மக்களை ஈர்த்தன.
அவர் புரிந்துகொண்ட வகையில் தேசிய நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்ததும் அவரது செல்வாக்குக்குக் காரணமாக அமைந்தது. இந்திய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோரிடமிருந்து அவரைத் தனித்துக் காட்டிய பண்பு அதுவாகும்.
செல்வந்தராக இருந்த ஒருவர் தனது செல்வத்தைத் துறந்து, பல ஆண்டுகளாக இந்திய மக்களின் கடினமான வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில்கூட அவர் பயணம் செய்தார்.
அத்துடன், இந்திய மக்கள் பாரம்பரியமாகவே வீரர்களையும் தலைவர்களையும் வழிபடும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பதும் அவரது செல்வாக்குக்குக் காரணமாக இருந்தது.
உலகத் தலைவர்களுடன் ஒப்பிடத்தக்க நேரு:
வால்டர் குரோக்கர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். பரந்த வாசிப்புப் பழக்கமும் உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவமும் அவருக்கு இருந்தன.
தனது வாழ்க்கையிலும் அரசுப் பணியிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல் தலைவர்கள் செயற்பட்ட விதங்களை அவதானித்து ஆராய்வதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருந்தது.
உலக வரலாறு மற்றும் சமகால அரசியல் பற்றிய இந்த விரிவான அறிவின் அடிப்படையில் அவர் ஒரு முடிவுக்கு வருகிறார்.
“தமது சொந்த நாட்டு மக்களிடையே இத்தகைய செல்வாக்கைப் பெற்ற தலைவர்கள் வேறு எந்த நாட்டிலும் மிகக் குறைவு; அத்தகைய செல்வாக்கை இவ்வளவு நீண்டகாலம் தக்கவைத்த தலைவர்களும் மிகக் குறைவு” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள், நேரு தங்களுக்காக மட்டுமே உதவ விரும்பினார் என்பதையும், தனக்காக எதையும் விரும்பவில்லை என்பதையும் உணர்ந்திருந்தனர். அந்த உணர்வை அவர்கள் ஒருபோதும் இழக்கவில்லை.
மேலும், அவர் கருணையும் இரக்கமும் கொண்ட ஆட்சியாளர் என்பதையும் மக்கள் உணர்ந்திருந்தனர் என்று குரோக்கர் எழுதுகிறார்.
நேருவின் பேச்சாற்றல்:
பொதுமேடைகளில் உரையாற்றுவதில் நேரு கொண்டிருந்த திறமையையும் குரோக்கர் பெரிதும் பாராட்டுகிறார்.
“பெரும்பாலான உரைகள் முன்கூட்டியே தயாரிக்கப்படாமல், எந்தக் குறிப்புகளையும் பயன்படுத்தாமல் நிகழ்த்தப்பட்டவை. அவற்றின் தலைப்புகளும் உள்ளடக்கங்களும் வியக்கத்தக்க அளவுக்கு விரிவானவை. பல்வேறு அரசியல் விடயங்கள் மட்டுமன்றி, தொழில்நுட்பம், விஞ்ஞானம், கலை, ஒழுக்கம், வரலாறு, சமூக நலன் மற்றும் ஏராளமான பொதுநலக் காரணிகள் குறித்தும் அவர் உரையாற்றினார்.
ஆங்கிலத்தில் சுமார் அரைமணி நேரம் உரையாற்றிவிட்டு, எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் அதே உரையை இந்துஸ்தானி மொழியிலும் மீண்டும் நிகழ்த்தும் அபாரமான ஆற்றல் அவருக்கு இருந்தது. அந்த மொழிபெயர்ப்பு சொல்லுக்குச் சொல் அப்படியே இருந்ததாக எனது இந்திய நண்பர்கள் தெரிவித்தனர்” என்று குரோக்கர் எழுதுகிறார்.
இன்றைய அரசியலுக்கு நேரு உணர்த்தும் பாடம்:
நாம் இன்று வாழும் காலம் நச்சுத்தன்மை கொண்ட அரசியல் பிளவுகளும் மொழியின் தரம் சீரழியும் போக்கும் நிறைந்த ஒரு காலமாகும்.
இத்தகைய சூழலில், குரோக்கரின் எழுத்துகள் மூலம் நேருவைப் பற்றிய சில உண்மைகளை மீண்டும் நினைவுகூர்வது பயனுள்ளதாக இருக்கும்.
“நேருவின் அரசியல் போட்டிகள் எப்போதும் கொள்கைகள் மற்றும் சிந்தனைகள் தொடர்பானவையாகவே இருந்தன. அவருடைய தனிப்பட்ட நலன்கள் தொடர்பானவையாக ஒருபோதும் இருக்கவில்லை” என்றும், “நேருவைப் பொறுத்தவரை, இலக்கை அடைவதற்காக எந்த வழிமுறையையும் நியாயப்படுத்துவது என்பது மிக அரிதான ஒன்றாகவே இருந்தது” என்றும் குரோக்கர் குறிப்பிடுகிறார்.
இந்த இரண்டு பண்புகளையும் நேரு தனது அரசியல் வழிகாட்டியான மகாத்மா காந்தியிடமிருந்தே பெற்றுக்கொண்டார். உண்மையில், குரோக்கரின் இந்தப் புத்தகத்தில் காணப்படும் மிகச் சில குறைபாடுகளில் ஒன்று, நேருவின் குணாதிசயத்திலும் ஆளுமையிலும் மகாத்மா காந்தி செலுத்திய தாக்கத்தை அவர் போதியளவு மதிப்பிடவில்லை என்பதாகும்.
“ஆபிரகாம் லிங்கனைப் போலவே, நேருவின் அதிகாரம் அதிகரித்தபோது அவரது கருணையும் அதிகரித்தது” என்று இந்த அனுபவமிக்க அவுஸ்திரேலிய அவதானிப்பாளர் எழுதுகிறார்.
“அவர் அதிகாரத்தை விரும்பினார். ஆனால், அந்த அதிகாரத்தைத் தனக்காக அல்ல, ஒரு நோக்கத்துக்காகவே விரும்பினார்.
சில விடயங்கள் தொடர்பாக நேரு அறியாமையுடன் இருந்திருக்கலாம் அல்லது தவறான வழிகாட்டுதல்களைப் பெற்றிருக்கலாம். சில நபர்களைப் பற்றிய அவரது மதிப்பீடுகளும் தவறாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் சுயநலமற்றவராகவே இருந்தார். இந்திய மக்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கோ எது நன்மை பயக்கும் என்று அவர் கருதினாரோ, அதிலேயே எப்போதும் அக்கறை கொண்டிருந்தார்.”
ஆறு தசாப்தங்களுக்குப் பின்னரும் சிறந்த நூல்:
வால்டர் குரோக்கரின் இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் ஆழமான சிந்தனையைத் தூண்டும் கருத்துகளால் நிரம்பியுள்ளது.
1966ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்த நூல், ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னரும் ஜவஹர்லால் நேருவையும் அவரது காலகட்டத்தையும் புரிந்துகொள்வதற்கான மிகச் சிறந்த நூலாகத் திகழ்கிறது.
இந்தப் புத்தகத்தை நான் எவ்வளவு உயர்வாகப் பரிந்துரைத்தாலும் அது மிகையாகாது.
