ஜே.வி.பி.யின் இரத்தக்களரியான கிளர்ச்சிக்கால  மனிதப் புதைகுழி – தற்போது அதன் அரசாங்கத்துக்கே சவாலாகிறது

ஜே.வி.பி.யின் இரத்தக்களரியான கிளர்ச்சிக்கால  மனிதப் புதைகுழி – தற்போது அதன் அரசாங்கத்துக்கே சவாலாகிறது

1980களின் இறுதியில் மார்க்சியக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த அடக்குமுறையின் போது காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், மாத்தளை நகரில் கண்டுபிடிக்கப்பட்ட 155 மனித உடல்களின் எச்சங்களைக் கொண்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான நீதித்துறை விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு கடந்த புதன்கிழமை மாத்தளை மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு மாத்தளை நகரின் பிரதான வைத்தியசாலை வளாகத்தில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு எந்த முன்னேற்றமுமின்றி முடங்கிக் கிடக்கிறது.

இலங்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைக் கொண்ட அமைப்பான “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்” அமைப்பின் சார்பில் சட்டத்தரணிகளான ஹிமாலி குலரத்ன மற்றும் லக்மால் சூரியகொட ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்களில், நாட்டின் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிக் காலத்தில் தமது குடும்ப உறுப்பினர்களைக் காணாமல் பறிகொடுத்த 15 தாய்மார்களும் அடங்குகின்றனர்.

இந்த அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவிக்கையில், மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னர் இடம்பெற்ற விசாரணை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறே குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார்.

இந்த வழக்கில் சட்டத்தரணிகள் ஜனவரி 13ஆம் திகதி எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழ்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுத்ததைத் தொடர்ந்து, விவகாரம் மேல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் குடும்பத்தினர் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். ஏற்கெனவே இடம்பெற்ற விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும், அத்துடன் மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான டி.என்.ஏ. தரவுத்தளமொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.

எனினும், ஜூலை மாதம் மாத்தளை நீதவானும் மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷன தனுஷ்க ரத்நாயக்க, முன்னைய நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பைத் தமது நீதிமன்றத்தால் மீண்டும் திறக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார். சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அவர் அறிவுறுத்தினார்.

நகரின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி..

2012 நவம்பர் 26ஆம் திகதி, மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் உயிர்வாயு (Biogas) உற்பத்தி அலகொன்றை அமைப்பதற்காகத் தொழிலாளர்கள் நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தபோது மனித எச்சங்களைக் கண்டுபிடித்தனர்.

அந்த மனித எலும்புக்கூடுகள் நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.45 மீற்றர் ஆழத்தில் காணப்பட்டன. கனரக மண் அகழ்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் சில எலும்புக்கூடுகள் சேதமடைந்திருந்தன.

2013 பெப்ரவரி மாதத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மொத்தம் 155 மனித உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

இறந்தவர்களில் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்தப் புதைகுழியில் 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுச் சென்ற சிங்கள இளைஞர்களின் உடல்களே புதைக்கப்பட்டுள்ளன என குடும்பத்தினர், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜே.வி.பி. ஆகியவை நீண்டகாலமாகக் கருதி வருகின்றன.

மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தளை மாவட்டம், அந்தக் கிளர்ச்சியின் முக்கிய தளங்களில் ஒன்றாக இருந்தது.

2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தில், மாத்தளை மாவட்டத்தில் 1,041 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை அரச ஆணைக்குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 700க்கும் அதிகமான சம்பவங்கள் 1989 மே மாதம் முதல் 1990 ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்றவை.

முன்னாள் தடுப்புக்காவல் கைதிகளும் மனித உரிமை அமைப்புகளும் இந்தப் புதைகுழிக்கும் அருகிலுள்ள பாடசாலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

1989 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் விஜய வித்தியாலயம் என அழைக்கப்படும் விஜய கல்லூரியில் இராணுவத்தின் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பிரிவு தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை முகாமொன்றை நடத்தி வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தக் காலப்பகுதியில் குறித்த பாடசாலை வைத்தியசாலையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு வைத்தியசாலை ஊழியர் ஒருவர், அந்தக் காலப்பகுதியில் வைத்தியசாலையின் இரண்டு விடுதிகளில் இராணுவத்தினர் தங்கியிருந்ததாகத் தெரிவித்தார். எனினும், அங்கு எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

கமலாவதி என்ற தாயொருவர், 2013ஆம் ஆண்டு வெளியான நேர்காணல்களில், 1989 டிசம்பர் 13ஆம் திகதி தனது 18 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்களையும் இராணுவத்தினர் உடுவெலையில் உள்ள தமது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகத் தெரிவித்திருந்தார்.

விஜய வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அவர்களை விடுவிக்குமாறு கோருவதற்காக அப்போதைய மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்டினன்ட் கேணல் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கச் சென்றபோது, முகாமின் வாயிலிலேயே தாம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவரே கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்.

சித்திரவதைக்கான சான்றுகள் மற்றும் சர்ச்சைக்குரிய கால நிர்ணயம்:

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு மனிதப் புதைகுழியிலும் பதிவுசெய்யப்பட்ட மிகக் கொடூரமான தடயவியல் சான்றுகளில் மாத்தளைப் புதைகுழியின் கண்டுபிடிப்புகளும் அடங்குகின்றன.

நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியான டாக்டர் அஜித் ஜயசேன, தலை துண்டிக்கப்பட்டமை, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டமை, மண்டையோடுகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டமை மற்றும் கால்விரல்களில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தமை போன்றவற்றைத் தனது அறிக்கையில் பதிவு செய்திருந்தார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ, ஒரு எலும்புக்கூட்டின் காலில் காணப்பட்ட உலோகக் கயிற்றுச் சுருக்கை அடையாளம் கண்டார். அது தூக்கிலிடுபவர்கள் பயன்படுத்தும் முடிச்சு வகையைச் சேர்ந்த, தேவைக்கேற்ப இறுக்கத்தை மாற்றக்கூடிய சாதனம் என அவர் தெரிவித்தார்.

தற்போது யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் நீதிமன்ற உத்தரவின் பேரிலான அகழ்வுப் பணிகளுக்குப் பேராசிரியர் சோமதேவ தலைமை தாங்கி வருகிறார்.

மாத்தளைப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டொன்றையும் போத்தல் ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டு, 1986 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்தப் புதைகுழியில் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் மதிப்பிட்டிருந்தார்.

2013ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவரடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.

அப்போது மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தார்.

இந்த ஆணைக்குழு எலும்பு மாதிரிகளை அமெரிக்காவின் மியாமியில் அமைந்துள்ள பீட்டா அனலிட்டிக் (Beta Analytic) ஆய்வுகூடத்துக்கு அனுப்பியது. அங்கு அனுப்பப்பட்ட எட்டு மாதிரிகளில் ஏழு மாதிரிகள் பரிசோதனைக்கு ஏற்றவை எனத் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்க தடயவியல் மானிடவியலாளர் டக்ளஸ் யூபெலேக்கர் இந்தப் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, அந்த எலும்புக்கூடுகள் 1950ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என முடிவு செய்தார்.

எனினும், புதைகுழி திறக்கப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் அதற்குள் வெள்ளம் புகுந்ததால் மாதிரிகள் மாசடைந்திருக்கலாம் எனப் பேராசிரியர் சோமதேவ வாதிட்டார்.

அவரது விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பதாகக் கூறிய விசாரணை ஆணைக்குழு, அந்த வாதத்தை நிராகரித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது. எனினும், அவர்கள் யார், அவர்களைக் கொலை செய்தவர்கள் யார், அதற்கான காரணம் என்ன என்பவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தது.

கிளர்ச்சிக் காலத்தில் தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக 47 சாட்சிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர். அவர்களில் பலர் இராணுவ அல்லது பொலிஸ் சீருடை அணிந்த நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினர்.

எனினும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களில் எவரையும் இந்தப் புதைகுழியுடன் தொடர்புபடுத்தி நிரூபிக்க எவராலும் முடியவில்லை.

விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையை 2015 ஏப்ரல் 29ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பித்தது.

அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்த டாக்டர் ஜயசேனவும் பேராசிரியர் சோமதேவவும் பின்னர் ஆணைக்குழுவின் முடிவுகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தனர்.

அதே ஆண்டு நீதவான் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணைகளை இடைநிறுத்தியது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள்..

1989ஆம் ஆண்டு முதல் 1990 ஜனவரி மாதம் வரை மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றினார். அந்தக் காலப்பகுதிக்குள் ஜே.வி.பி. கிளர்ச்சி முற்றாக ஒடுக்கப்பட்டிருந்தது.

2019ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நாடு முழுவதும் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்து அவர் பதவி விலகினார்.

2023 ஜூன் மாதம் நான்கு அமைப்புகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையொன்றில், இந்தப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை கோட்டாபய ராஜபக்ஷ தடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project), மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் (Centre for Human Rights and Development), இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அமைப்பு ஆகியவையே இந்த அறிக்கையை வெளியிட்ட நான்கு அமைப்புகளாகும்.

புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் பழைமையான அனைத்து பொலிஸ் பதிவுகளையும் அழிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியது.

எனினும், இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி…

இந்த வழக்கு தற்போதைய அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஜே.வி.பி. தற்போது ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. இந்தப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டவர்களில் சிலர் ஜே.வி.பி. உறுப்பினர்களாக இருந்திருக்கலாம்.

புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இதனை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றமொன்றை அமைக்க வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன், 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் காணாமல் போன தமது கட்சி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையையும் அக்கட்சி ஆரம்பித்திருந்தது.

2025 ஏப்ரல் மாதம், ஜே.வி.பி.யைச் சேர்ந்த பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மாத்தளை மாவட்டத்தில் 20 சித்திரவதை முகாம்கள் இயங்கியதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

2025 ஜூலை மாதம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் ஜே. தத்பரன், மாத்தளைப் புதைகுழி விவகாரத்திலும், ஜே.வி.பி.க்கு எதிரான கிளர்ச்சி ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய மற்றொரு புதைகுழியான சூரியகந்த புதைகுழி விவகாரத்திலும் தமது அலுவலகம் தலையிட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள தற்போதைய மனுவுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறதா என்பது குறித்து இதுவரை பகிரங்கமாக எதனையும் அறிவிக்கவில்லை.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போது நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பிரிட்டோ பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், இந்த வழக்கு தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவிதமான அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை எனக் கூறியிருந்தார்.

மேலும், இந்த அரசாங்கமும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லாவிட்டால், வேறு எவரும் அதனை முன்னெடுத்துச் செல்லமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

(நன்றி: ஜஃப்னா மொணிட்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *