“மலேசியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள பாகுபாடு: இந்திய வம்சாவளி இளைஞர்கள் அந்நியமாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் உணர்கின்றனர்”

“மலேசியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள பாகுபாடு: இந்திய வம்சாவளி இளைஞர்கள் அந்நியமாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் உணர்கின்றனர்”

(மிலாட் ஹசாண்டர்விஷ் / நியூஸ்-யாகூ.கொம்)

 மலேசியாவில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் ஓரங்கட்டப்பட்டவர்களாக உணர்ந்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வீடமைப்பு ஆகிய துறைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான பாகுபாடுகள் காரணமாக, அவர்களில் பலர் அரசியல் ரீதியாகவும் அந்நியப்படுத்தப்பட்டவர்களாக உணர்கின்றனர் என Iman Research ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

‘Kami Orang Sini Juga – Indian Youth Report’ (நாங்களும் இங்கேயே இருக்கிறோம் – இந்திய இளைஞர்கள் குறித்த அறிக்கை) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

மலேசிய இந்திய இளைஞர்கள் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்படாத ஒரு மக்கள் பிரிவினராக இருப்பதாகவும், அவர்களது பிரச்சினைகள் நீண்டகாலமாகக் கொள்கை வகுப்பாளர்களாலும் அரசியல் தலைமையகங்களாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள 111 இந்திய இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆழமான நேர்காணல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறுவயதிலிருந்தே இந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகளை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. பாடசாலைகளில் இன ரீதியான விரோதப் போக்கை எதிர்கொள்வது முதல் வீடமைப்பு மற்றும் தொழிலாளர் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற நிலைமை வரை பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும் என்றும், மலேசிய இந்திய சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் Iman Research ஆய்வாளர் ஷலீன் சுரேந்திரா வலியுறுத்தினார்.

“இந்திய இளைஞர்கள் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்படாத ஒரு மக்கள் பிரிவினராக உள்ளனர். அவர்களது கவலைகள் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. ஆழமான நேர்காணல்களின் மூலம், தாங்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள், சமூகத்தில் தமக்குரிய இடம் மற்றும் அடையாளம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வுகள், அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுதல் ஆகிய அனுபவங்களை அவர்கள் எங்களிடம் விவரித்தனர்” என ஆய்வு முடிவுகளை வெளியிட்டபோது ஷலீன் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் விடுவதால் ஏற்படும் விளைவுகளையும் இந்த அறிக்கை ஆராய்கிறது. குறிப்பாக, அரசியல் ரீதியான அந்நியப்படுத்தல் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை அடுத்த தேர்தலையும் நாட்டின் அரசியல் களத்தையும் தீர்மானிக்கும் தாக்கத்தைக் கொண்டிருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலையிலிருந்து தொழிலாளர் சந்தை வரை..

இந்த ஆய்வு, கட்டமைப்பு ரீதியான தோல்விகளின் தொடர்ச்சியான தாக்கத்தை விவரிக்கிறது.

பல இந்திய இளைஞர்கள் தமது பாடசாலைக் காலத்திலேயே சக மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் வாய்மொழி ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கும் அவர்கள் உள்ளாகியுள்ளனர்.

தமிழ்ப் பாடசாலைகள் அவர்களுக்கு ‘தற்காலிகமான பாதுகாப்பை’ வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டாலும், இந்த மாணவர்களை அந்நியப்படுத்தும் நிறுவனமயமான கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு அவை தீர்வாக அமைவதில்லை.

இந்தப் போராட்டம் அவர்கள் வயது வந்த பின்னரும் தொடர்கிறது.

மெட்ரிகுலேஷன் கல்வி முறை, குறைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட இளைஞர்களை விகிதாசாரமற்ற வகையில் பாதிப்பதாகவும், உயர்கல்வியைத் தொடர்வதற்கான அவர்களது வாய்ப்புகளைத் தடுக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுக்கும் சந்தைகளிலும் இந்த இளைஞர்கள் சீரற்ற தரநிலைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர். இதனால் பலர் நேரடியான நிராகரிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதன் விளைவாக, அவர்கள் முறைசாரா தொடர்பு வலையமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனினும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய தொடர்பு வலையமைப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை.

அரசியல் ரீதியான அடையாள அணுகுமுறையும் கும்பல்களில் இணைத்துக்கொள்ளப்படும் அபாயமும்..

மலேசியாவின் அரசியல் நிலைமையையும் இந்த அறிக்கை ஆராய்கிறது. தற்போது இந்திய இளைஞர்களின் வாக்குகள் அரசியல் கட்சிகளால் தம்வசப்படுத்தப்படக்கூடிய நிலையில் இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

எனினும், வெறுமனே பெயரளவிலான பிரதிநிதித்துவத்தை (Tokenistic Representation) வழங்கும் அரசியல் அணுகுமுறைகளை இந்த வாக்காளர்கள் படிப்படியாகப் புரிந்துகொண்டு வருவதாகவும் ஆய்வு எச்சரிக்கிறது.

மலேசிய இந்தியர்களின் மாற்றத்துக்கான பிரிவு (Malaysian Indian Transformation Unit – Mitra) போன்ற அரசாங்க அமைப்புகள் போதிய தாக்கத்தையும் சென்றடையும் ஆற்றலையும் கொண்டிருக்கவில்லை என ஆய்வில் பங்கேற்றவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த ஏமாற்றத்தை அரசியல் அக்கறையின்மை எனத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மாறாக, இன வேறுபாடுகளைக் கடந்து, தமது உரிமைகளுக்காக உறுதியான நடவடிக்கைகள் மூலம் குரல்கொடுக்கும் தலைவர்களை இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதற்கான அறிகுறியாகவே இதனைக் கருத வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பின் விளைவுகள் குறிப்பிடத்தக்கவை.

போதிய ஆதரவு அமைப்புகள் இல்லாத நிலையில், குறிப்பாக ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள இளம் இந்திய ஆண்கள், குற்றக் கும்பல்களால் தமது குழுக்களில் இணைத்துக்கொள்ளப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய கும்பல்கள் அவர்களுக்கு ‘பாதுகாப்பு மற்றும் சமூகச் சார்பு உணர்வை’ வழங்குவதாகக் காட்டிக்கொண்டாலும், அது உண்மையில் ஒரு தவறான நம்பிக்கையே என அறிக்கை எச்சரிக்கிறது.

கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தத்துக்கான அழைப்பு:

இந்திய இளைஞர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக விரிவான கொள்கை மாற்றங்களை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

அவற்றில் முக்கியமானவை:

1. கல்விச் சீர்திருத்தம்

  • மெட்ரிகுலேஷன் கல்வி முறைமையில் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றி, மாணவர்களின் தேவைகள் மற்றும் சமூகப் பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில் வாய்ப்புகளை வழங்கும் முறையை அறிமுகப்படுத்துதல்.
  • இன மற்றும் சமூக உணர்வுகள் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்குதல்.

2. சட்ட ரீதியான பாதுகாப்பு

  • வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறைகளில் பாகுபாடுகளைத் தடுக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
  • வீடுகளை வாடகைக்கு வழங்கும் நடைமுறைகளில் நிலவும் பாகுபாடுகளைத் தடுப்பதற்கான சட்டப் பாதுகாப்புகளை ஏற்படுத்துதல்.

3. அரசியல் உள்ளடக்கமும் பங்கேற்பும்

  • இளைஞர்களின் கருத்துகளை நேரடியாகக் கொள்கை விவாதங்களிலும் வரவு செலவுத் திட்டத் தயாரிப்பிலும் உள்வாங்குவதற்காக மக்கள் சந்திப்புக் கூட்டங்களையும் (Town Halls), இளைஞர் சபைகளையும் உருவாக்குதல்.

4. குடிமக்கள் பங்கேற்பு

  • அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல்.
  • பாரம்பரிய அரசியல் கட்சிகளின் தொடர்பு வலையமைப்புகளுக்கு அப்பால் இளைஞர்களை அணிதிரட்டுவதற்குக் குடிமக்கள் கல்வித் திட்டங்களை ஊக்குவித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *