ஒரேயொரு அதிவேக நெடுஞ்சாலைக்கு வடக்கு கிழக்கின் மொத்த ஒதுக்கீட்டைவிட இரு மடங்கா?

ஒரேயொரு அதிவேக நெடுஞ்சாலைக்கு வடக்கு கிழக்கின் மொத்த ஒதுக்கீட்டைவிட இரு மடங்கா?

(ஜஃப்னா மொனிட்டர் செய்தியாளர் குழு)

இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டு, கொழும்புக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்வதற்காகச் செலவிடவுள்ள தொகையானது, உள்நாட்டுப் போர் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகமாகும்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில், கம்பஹா மாவட்டத்தில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியைப் பூர்த்தி செய்வதற்காக 53.45 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எமது கணக்கீட்டின்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களுக்கு நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மொத்தம் சுமார் 24.1 பில்லியன் ரூபா மட்டுமே. இந்த எட்டு மாவட்டங்களிலும் 2.9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகள் மற்றும் உர மானியம் போன்ற பிரதேச அடிப்படையில் பிரிக்கப்படாத தேசிய வேலைத்திட்டங்களின் மூலமும் இந்த இரண்டு மாகாணங்களுக்குப் பயன்கள் கிடைக்கும். எனினும், இவ்விரு மாகாணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான நிதி, போரினால் ஏற்பட்ட அழிவுகளைச் சீரமைப்பதற்கே செலவிடப்படவுள்ளது. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீடுகள், குடிநீர், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.

ஆனால், இந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகளாக அரசாங்கமே முன்னர் அறிவித்த திட்டங்கள் குறித்து வரவு செலவுத் திட்ட உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவுடனான வடக்கு மாகாணத்தின் நேரடி வான் மற்றும் கடல் போக்குவரத்துத் தொடர்புகளாக விளங்கும் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறைத் துறைமுகம் ஆகியவை பற்றியோ, 2025 பெப்ரவரியில் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று வடக்கு மாகாணக் கைத்தொழில் வலயங்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பிராந்தியத்துக்குக் கிடைப்பது என்ன?

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

போர் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையிலும், 13,000 குடும்பங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் குடும்பங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் மீள்குடியேற்றுவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், மன்னாரின் பேசாலைத் துறைமுகத்திற்கும் மேலும் 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 41 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்காக 1.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுதல் மற்றும் குடிநீர் மாசடைதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு தேசிய வேலைத்திட்டம் இந்தப் பிராந்தியத்துக்குச் சாதகமாக அமைந்துள்ளது. மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் அவற்றின் சனத்தொகையைப் பொருட்படுத்தாமல் தலா 2 பில்லியன் ரூபா வழங்கப்படுகிறது.

சனத்தொகை குறைந்த மாவட்டமான முல்லைத்தீவில் இது ஒருவருக்கு சுமார் 16,000 ரூபாவாக அமைகிறது. மேல் மாகாணத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் தொகை 1,000 ரூபாவுக்கும் குறைவாகும்.

மாகாண சபையின் ஊடாகச் செலுத்தப்படும் நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டில் 4 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 10 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகன் தெரிவித்தார்.

எனினும், பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உள்ளூர் மக்களின் ஆதரவு கிடையாது.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்துக்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நிதி ஒதுக்கீடுகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், இது வரவு செலவுத் திட்டத்தின் இணைப்பில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினால் தமது காணிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை வெளியிட்டு, கடந்த பெப்ரவரி மாதம் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தன.

விடுபட்டுள்ள விமான நிலையமும் துறைமுகமும்:

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறைத் துறைமுகம் ஆகியவை வரவு செலவுத் திட்ட உரையில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், கட்டுநாயக்க, இரத்மலானை, மத்தள, சிகிரியா மற்றும் சீனன்குடா ஆகிய விமான நிலையங்களின் அபிவிருத்தித் திட்டங்களையும், கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களின் அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த உரை பட்டியலிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு காங்கேசன்துறைத் துறைமுகத்தைப் புனரமைப்பதற்காக இந்தியா 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இணங்கியிருந்தது. 2024ஆம் ஆண்டு அந்தக் கடனுதவியை மானியமாக மாற்றிய இந்தியா, தற்போது முழுத் திட்டச் செலவையும் ஈடுகட்டக்கூடிய வகையில் 65 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவியை வழங்க உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உரையாற்றிய ஜனாதிபதி, துறைமுகத்தின் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மாத ஆரம்பம் வரையில், பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

பலாலி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் 2027 ஜூலை மாதத்துக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் பெருமளவிலான நிதி திறைசேரிக்கு வெளியிலிருந்து கிடைப்பதால், வரவு செலவுத் திட்ட உரையில் அவை இடம்பெறாதது அவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதைக் குறிக்காது.

எனினும், அரசாங்க அமைச்சர்கள் இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறைத் துறைமுகம் ஆகியவற்றை எப்போது, எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும், அவற்றுக்கான நிதியை யார் வழங்குகிறார்கள் என்பது அதற்குப் பொருட்டல்ல என்றும் தெரிவித்தார்.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர்,

“இவ்வாறான நட்டங்களை ஏற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை எமது அரசாங்கம் முன்னெடுக்காது” என்று கூறினார்.

எனினும், பலாலி விமான நிலையத்தின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மற்றொரு அமைச்சர் பின்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சாணக்கியன் இராசமாணிக்கம், மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆய்வறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

“பலாலி விமான நிலையம் பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என்று அரசாங்கம் கருதினால், அதற்கான ஆதாரங்களை அது முன்வைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

கைத்தொழில் வலயங்கள்..

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், ஐந்து கைத்தொழில் பூங்காக்களை அமைப்பதற்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. அவற்றில் இரண்டு வடக்கு மாகாணத்தில் காங்கேசன்துறை மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருந்தன.

பரந்தனில் இரசாயனப் பொருட்கள் உற்பத்தி வலயம் ஒன்றை அமைப்பதற்கும் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த மூன்று வடக்கு மாகாணக் கைத்தொழில் வலயங்களும் சுமார் 16,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்திருந்தது.

கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு முதலீட்டு மாநாட்டை அறிவித்தபோது, இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம், “குறிப்பாக வட இலங்கைக்காக” மேம்படுத்தப்பட்ட மூலதனக் கொடுப்பனவு சலுகைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

ஆனால், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் இந்த மூன்று கைத்தொழில் வலயங்கள் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

புதிய மூலதனக் கொடுப்பனவு சலுகையானது, நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைந்துள்ள முதலீட்டுச் சபையின் ஏற்றுமதித் திட்டங்கள் அல்லது சுற்றுலாத்துறைத் திட்டங்களில் குறைந்தது 3 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

கைத்தொழில் பேட்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 4 பில்லியன் ரூபா, மட்டக்களப்பின் வாழைச்சேனையில் அபிவிருத்திப் பணிகளையும், இங்கிரிய, தம்புள்ளை, ரைகம-மில்லணிய மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களில் மேலதிகப் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது.

வவுனியாவின் புளியங்குளத்தைப் பொறுத்தவரையில், அங்கு முன்னெடுக்கப்படவுள்ளது சாத்தியக்கூற்று ஆய்வு மட்டுமே.

ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை பற்றியும் இந்த உரையில் குறிப்பிடப்படவில்லை.

2013ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் மீள ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தப் பணிகளில் சிலவற்றுக்கான செலவுகளை இலங்கை முதலீட்டுச் சபையும் அரச நிறுவனங்களும் தமது சொந்த வரவு செலவுத் திட்டங்களிலிருந்து மேற்கொள்ளக்கூடும். அவை இந்த வரவு செலவுத் திட்ட உரையில் உள்ளடக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணம்:

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தின் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளுக்கான திட்டங்களுக்கும் நிதி வழங்குவது ஏனைய தரப்பினரிடமே விடப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் எதிர்கால எரிபொருள் சேமிப்பு மையமாகத் திருகோணமலையை உருவாக்கும் திட்டத்தை வரவு செலவுத் திட்ட உரை முன்வைக்கிறது.

மேல் எண்ணெய்த் தாங்கிப் பண்ணையிலிருந்து துறைமுகம் வரை குழாய் இணைப்பை அமைப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது சொந்த நிதியிலிருந்து 7.375 பில்லியன் ரூபாவைச் செலவிடவுள்ளது.

திருகோணமலை பெற்றோலிய முனையத்துக்குச் சொந்தமான 61 எண்ணெய்த் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காகத் தனியார் பங்காளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் திறைசேரியின் சொந்த நிதி பெரும்பாலும் நீர் விநியோகம், பாலங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான முண்டேனி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 1 பில்லியன் ரூபாவும், கிரான் மற்றும் பொண்டுகள்சேனைப் பாலங்களுக்காக 600 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய விஞ்ஞானப் பீடக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான ஒதுக்கீடும் இதில் இடம்பெற்றுள்ளது.

பெருந்தொகை நிதி எங்கு செல்கிறது?

நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் 251 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 146.5 பில்லியன் ரூபா, மேல், வடமேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் அமைந்துள்ள ஐந்து அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவுகள் மற்றும் அவற்றுடன் இணைக்கும் வீதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து இயங்கும் மூன்று புறநகர் ரயில் பாதைகளை மின்மயமாக்குவதற்கு 80 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக்குமான மொத்த நிதி ஒதுக்கீடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்குக்கும் அதிகமாகும்.

அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் எதுவும் தம்புள்ளைக்கு அப்பால் செல்லவில்லை. வடக்கு ரயில் பாதையில் எந்தவொரு அபிவிருத்திப் பணியும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஒருவருக்கான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கணக்கிட்டாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியதாகவே உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சாதகமான அனுமானங்களின் அடிப்படையில் கணக்கிட்டாலும் இந்த நிலை மாறவில்லை.

மேல் மாகாணத்துக்குள் மட்டுமே அமைந்துள்ள ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடுகளைக் கொண்ட 11 திட்டங்களுக்காக மொத்தம் சுமார் 177 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

6.1 மில்லியன் மக்கள் வாழும் மேல் மாகாணத்தில், இது ஒருவருக்கு சுமார் 29,000 ரூபாவாகும்.

மறுபுறத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மிகச் சிறிய நிதி ஒதுக்கீடுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒருவருக்குக் கிடைக்கும் தொகை சுமார் 8,200 ரூபா மட்டுமே.

இதற்குச் சில நியாயமான காரணங்களும் உள்ளன.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அடுத்த ஆண்டு ஒதுக்கப்படும் நிதி ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தப்படவுள்ளது.

புறநகர் ரயில்களில் கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்தும் பயணிகள் பயணிக்கின்றனர். மேலும், நாட்டின் மொத்த உற்பத்தியில் 42 சதவீதத்தை மேல் மாகாணமே வழங்குகிறது.

அரசாங்கம் முதன்மைச் செலவினங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டரீதியான உச்சவரம்பையும் எதிர்கொள்கிறது. 2.64 டிரில்லியன் ரூபாவாக உள்ள வட்டி செலுத்தும் செலவு, அரசாங்கத்தின் மொத்த மூலதனச் செலவினத்தை விடவும் அதிகமாக உள்ளது.

ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து தமது அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளன.

மத்திய வங்கியின் மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு 4.4 சதவீதமாகவும், கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு 5.0 சதவீதமாகவும் இருந்தது.

ஆனால், நாட்டின் மொத்த சனத்தொகையில் 13.5 சதவீதமானோர் இந்த இரண்டு மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.

உத்தியோகபூர்வமாகக் கிடைக்கக்கூடிய மாவட்ட அடிப்படையிலான சமீபத்திய புள்ளிவிபரங்கள் 2019ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. அவற்றின்படி, முல்லைத்தீவில் 44.5 சதவீத மக்களும், கிளிநொச்சியில் 26.4 சதவீத மக்களும் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தனர்.

நாட்டின் தேசிய வறுமை விகிதம் 14.3 சதவீதமாகவும், கொழும்பில் அது 2.3 சதவீதமாகவும் இருந்தது.

பிராந்தியங்களுக்கிடையிலான இந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான இலக்கு எதையும் வரவு செலவுத் திட்ட உரை நிர்ணயிக்கவில்லை. அவற்றைக் கண்காணிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

இந்தப் புள்ளிவிபரங்கள், நிதி ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும், ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும், நிரூபிக்கப்பட்ட கேள்வி உள்ள இடங்களில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறையுடன் ஒத்துப்போகின்றன.

எனினும், இந்தப் புள்ளிவிபரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று கூற முடியாது.

மீள்குடியேற்ற நிதி ஒதுக்கீடு தொடர்பான கேள்விகள்..

மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் கேள்விகள் எழுகின்றன.

13,000 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் 10 பில்லியன் ரூபா என்பது ஒரு குடும்பத்துக்கு சுமார் 770,000 ரூபாவாகும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை வடக்கு மாகாணத்தில் 1,363 மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்காக 2.73 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. இதன்படி ஒரு வீட்டுக்கான செலவு சுமார் 2 மில்லியன் ரூபாவாகும்.

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 7,306 வீடுகள் தேவைப்படுவதாக அந்த அதிகாரசபை தெரிவித்திருந்தது.

இந்தக் கணக்கீட்டின்படி, 10 பில்லியன் ரூபாவைக் கொண்டு சுமார் 5,000 வீடுகளையே அமைக்க முடியும்.

எனினும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் புதிய வீடு தேவைப்படாமல் இருக்கலாம். வீடுகளை அமைப்பதற்கான செலவுகளும் இடத்துக்கு இடம் மாறுபடலாம்.

ஆனால், அந்த 13,000 குடும்பங்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டன, அவர்கள் எங்கு மீள்குடியேற்றப்படவுள்ளனர், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் உள்ள காணிகளில் அவர்களில் சிலர் மீள்குடியேற்றப்படுவார்களா என்பது குறித்து வரவு செலவுத் திட்ட உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் இந்த நிதி ஒதுக்கீடு வீடுகளை அமைப்பதற்கான நிதி என்ற வகையில் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்..

இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறாத விடயங்கள், தேசிய மக்கள் சக்தி 2024ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் ஆறு ஆசனங்களில் மூன்றை வெற்றிகொள்வதற்குப் பங்களித்த வாக்குறுதிகளையும் உள்ளடக்கியுள்ளன.

தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு கட்சி யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிக வாக்குகளைப் பெற்றுத் தேர்தலில் முன்னிலை பெற்ற சம்பவம் இதுவாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது, இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிப்பது, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஆகிய வாக்குறுதிகளை அந்தக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியிருந்தது.

ஆனால், வரவு செலவுத் திட்ட உரையில் இவற்றில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அல்லது இழப்பீடுகளுக்கான அலுவலகம் பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதற்குப் பதிலாக, வடக்கு மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

இந்த வைத்தியசாலைகளை நிர்வகித்து வரும் வடக்கு மாகாண சபையில், அதன் பதவிக்காலம் 2018 ஒக்டோபரில் முடிவடைந்ததிலிருந்து இதுவரை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் எவரும் இல்லை.

ஒதுக்கப்பட்ட நிதி உண்மையில் செலவிடப்படுமா?

நிதி ஒதுக்கீடு என்பது உண்மையான செலவினத்துக்கு ஒப்பானதல்ல.

மேலும், மாகாண அடிப்படையில் மூலதனச் செலவினங்களை வரவு செலவுத் திட்ட உரை பிரித்துக் காட்டவில்லை.

கடந்த மாதம், அரசாங்க முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரத்துவ நடைமுறைகளும் வளப் பற்றாக்குறையும் தாமதங்களை ஏற்படுத்துவதாக பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஒப்புக்கொண்டிருந்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதியும், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *