ஷேக் ஹசீனாவின் பங்களாதேஷ் திரும்புதல்: தடைகள், ஆபத்துகள் மற்றும் அரசியல் சவால்கள்

ஷேக் ஹசீனாவின் பங்களாதேஷ் திரும்புதல்: தடைகள், ஆபத்துகள் மற்றும் அரசியல் சவால்கள்

 ~ கல்லோல் பட்டாச்சார்ஜி / தி இந்து

 பங்களாதேஷ் அரசாங்கத்திடம் புதிய கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைக் கோரி ஷேக் ஹசீனா திங்கட்கிழமை (நவம்பர் 9, 2026) விண்ணப்பித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பதில் வெளிவிவகார அமைச்சர் ஹுமாயுன் கபீர், ஏற்றுக்கொள்ளக்கூடிய கைதிகள் பரிமாற்ற நடைமுறையின் கீழ் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதையே பங்களாதேஷ் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

2024 ஆகஸ்ட் 5ஆம் திகதி, மாணவர்கள் தலைமையிலான மக்கள் எழுச்சியினால் அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா தொடர்பான விவகாரத்தில் இது அண்மைய திருப்பமாகும்.

ஷேக் ஹசீனா மீண்டும் பங்களாதேஷ் திரும்புவதற்கு முன்னால் உள்ள தடைகள் என்ன?

ஷேக் ஹசீனா ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளார். அரசியல் தலைவராக மீண்டும் நாடு திரும்பி, தனது அவாமி லீக் கட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

ஆனால், 2024 ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது பொலிஸார் நடத்திய அடக்குமுறைக்கு உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

நீதியை எதிர்கொள்வதற்காக நாடு திரும்பிய பின்னரும், தனது நாட்டின் அரசியல் தலைவராக மீண்டும் உருவெடுப்பது எப்படி என்பதே அவருக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

பொலிஸ் அடக்குமுறைக்காகத் தான் மன்னிப்புக் கோரப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொலிஸார் தனது உத்தரவுகளுக்கு அமையச் செயற்படவில்லை என்றும், அவர்களைத் தூண்டிவிட்ட ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பொலிஸார் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், ஹசீனாவின் நாடு திரும்புதல் என்பது இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக மட்டும் அமைய முடியாது என்பது தெளிவாகிறது. அவர் நாடு திரும்பினால் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, பங்களாதேஷில் நீதியை நிலைநாட்டும் சட்ட நடைமுறையின் ஒரு பகுதியாகவே அவரது மீள்வருகை அமைய வேண்டியிருக்கும்.

இதற்கு மேலதிகமாக, அவரிடம் தற்போது பங்களாதேஷ் கடவுச்சீட்டு இல்லை. இதனால் செல்லுபடியாகும் பயண ஆவணமின்றி அவர் இருக்கிறார்.

அவரைத் திருப்பி அனுப்புவதோ அல்லது நாடு கடத்துவதோ கடவுச்சீட்டு கிடைப்பதிலேயே தங்கியுள்ளது. கடவுச்சீட்டு இல்லாத நிலையில், இந்தியாவினால் அவரை பங்களாதேஷிடம் ஒப்படைக்க முடியாமல் போகலாம்.

எனினும், அவர் ஒரு ‘பயங்கரவாதி’ என்பதால் அவருக்குக் கடவுச்சீட்டு வழங்கப்போவதில்லை என்று பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஏன் அவரைப் பயங்கரவாதி என்று குறிப்பிடுகிறது?

அண்மையில், திங்கட்கிழமை (நவம்பர் 9, 2026) ஹசீனாவை ‘பயங்கரவாதி’ என்று அமைச்சர் ஹுமாயுன் கபீர் குறிப்பிட்டுள்ளார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் இதே சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.

தனது ஆட்சிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழக்கக் காரணமான பொலிஸ் அடக்குமுறைக்கு ஹசீனா உத்தரவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான கொள்கையை நடைமுறைப்படுத்தியதாக அவர் கூறுகிறார். அந்தக் கொள்கையை விரைவுச் செயற்பாட்டுப் படையணி (Rapid Action Battalion – RAB) முன்னெடுத்ததாகவும், அந்தப் படையணியைத் தனது ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஹசீனாவைப் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது அரசியல் சொல்லாடலாகவே தெரிகிறது. பங்களாதேஷ் அரசியலில் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் வழக்கமானவை.

ஹசீனா ஆட்சியில் இருந்தபோதும் தனது அரசியல் எதிரிகளையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்களையும் அடிக்கடி பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு வந்தார்.

ஹசீனா நாடு திரும்ப விரும்பினால், எந்த வழியைத் தேர்ந்தெடுப்பார்?

2026 ஆகஸ்ட் 5ஆம் திகதி, தான் நாடு திரும்ப விரும்புவதாகவும், அதற்காக டிசம்பர் மாதத்தை எதிர்பார்ப்பதாகவும் ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால், எவ்வாறு நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை அவர் எந்தத் தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

1981ஆம் ஆண்டு அவர் வர்த்தக விமானம் ஒன்றில் டாக்காவுக்குத் திரும்பினார். ஆனால், அப்போதைய சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

அப்போது அவர் ஒரு பாதிக்கப்பட்டவராகவே பார்க்கப்பட்டார். அவரது தந்தையும் பங்களாதேஷின் ஸ்தாபகத் தலைவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானும், அவரது குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோரும் 1975 ஆகஸ்ட் 15ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ஹசீனாவும் அவரது சகோதரி ரெஹானாவும் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், இப்போது அவர் கொலைகளுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இந்தியா – பங்களாதேஷ் நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அவரைப் பங்களாதேஷிடம் ஒப்படைத்தால், விமான நிலையத்தில் வந்திறங்கியவுடனேயே அவர் கைது செய்யப்படுவார்.

அதேவேளை, அவர் தானாகவே நாடு திரும்பினால், மேற்கு வங்காள எல்லையில் அமைந்துள்ள பெனாபோல் – பெட்ராபோல் போன்ற தரைவழி எல்லைக் கடவையைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஹசீனாவின் மீள்வருகையால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்ன?

பங்களாதேஷில் அவாமி லீக் கட்சி தொடர்ந்து தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனினும், அக்கட்சிக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

ஹசீனா பெனாபோல் – பெட்ராபோல் எல்லை வழியாகத் திரும்பினால், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களும் அங்கு கூடக்கூடும்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான மோதல் ஏற்படலாம். ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள பங்களாதேஷ் அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு இயந்திரத்துக்கு இது மிகப்பெரிய சவாலாக அமையலாம்.

கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஹசீனா நாடு திரும்புவது அவரது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான மோதல்களைத் தூண்டக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. 2024 ஆகஸ்ட் மாத மக்கள் எழுச்சியின் பாதிப்பிலிருந்து இன்னமும் முழுமையாக மீளாத பங்களாதேஷின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இது அச்சுறுத்தலாக அமையலாம்.

குறிப்பாக, பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து அதிக கவலை நிலவுகிறது. 2024 ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற அடக்குமுறையில் பொலிஸாரின் பங்கு காரணமாக, அவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் இன்னமும் மிகவும் குறைவாகவே உள்ளன.

ஹசீனா பங்களாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டால் அந்நாட்டின் அரசியல் நிலைமையில் என்ன மாற்றம் ஏற்படும்?

ஹசீனா நாடு திரும்புவது, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அல்லது மீள்விசாரணையின் ஊடாக முன்னெடுக்கப்படும் சட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக அமையும்.

அதேவேளை, அவரது மீள்வருகை மத்திய இடதுசாரி அரசியல் சக்திகளுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜாதிய கட்சி மற்றும் அவாமி லீக் போன்ற கட்சிகள் மீண்டும் வீதிகளில் இறங்கிச் செயற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இது தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்துக்கு புதிய சவாலாக அமையும். ஏற்கனவே ஆயத்த ஆடை உற்பத்தித் துறையில் தொழிலாளர் அமைதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை அந்த அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய பங்களாதேஷ் அரசியல் களத்தில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி (NCP) ஆகியவை மத்திய வலதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

ஹசீனா மீண்டும் நாடு திரும்புவது இடதுசாரி மற்றும் மத்திய இடதுசாரி அரசியல் சக்திகளுக்கு புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *