வங்காள விரிகுடாவுக்கு ஏன் நிலையான கடல்சார்  பொருளாதாரம் அவசியம்? – அவுஸ்திரேலியா எமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் என்ன?

வங்காள விரிகுடாவுக்கு ஏன் நிலையான கடல்சார்  பொருளாதாரம் அவசியம்? – அவுஸ்திரேலியா எமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் என்ன?

( ~ ஆர். குமரிஹாமி ஆய்வாளர், பாத்ஃபைண்டர் மன்றம் (Pathfinder Foundation) மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர், ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் (AIT), தாய்லாந்து.)

[Blue Economy – (நீலப் பொருளாதாரம்) என்பது கடல், பெருங்கடல்கள் மற்றும் நீர்நிலைகளின் வளங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கும்.]

வங்காள விரிகுடா தனது பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியமான காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மீன்பிடி, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, துறைமுகங்கள், கரையோரச் சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கடலை அடிப்படையாகக் கொண்ட ஏனைய தொழில்துறைகள் வழங்கும் வாய்ப்புகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துதல் போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு, நீலப் பொருளாதாரத்தின் மீதான ஆர்வம் புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால், இங்கு அடிப்படையான சவால் கடலிலிருந்து எவ்வாறு அதிக பொருளாதாரப் பெறுமதியை உருவாக்குவது என்பது மட்டுமல்ல. அந்தப் பொருளாதார எதிர்காலம் இறுதியில் தங்கியிருக்கும் கடல் சூழலியல் தொகுதிகள், மீன்வளம் மற்றும் கரையோரச் சமூகங்களின் வலிமையைப் பாதிக்காமல் எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பதே முக்கியமான கேள்வியாகும்.

இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், கடலில் நடைபெறும் ஏறக்குறைய எந்தவொரு நடவடிக்கையையும் ‘நீலப் பொருளாதாரம்’ என்ற சொல்லுக்குள் கொண்டுவர முடியும். ஆனால், நிலையான நீலப் பொருளாதாரம் அதைவிட உயர்ந்த தரநிலையைக் கோருகிறது. பொருளாதார அபிவிருத்தியுடன் ஆரோக்கியமான கடல் சூழலியல் தொகுதிகள், நம்பகமான விஞ்ஞான ஆய்வுகள், பயனுள்ள ஒழுங்குமுறைகள், கரையோரச் சமூகங்களின் பங்கேற்பு மற்றும் நீண்டகால அடிப்படையில் கடலின் பல்வேறு பயன்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய நிறுவனக் கட்டமைப்புகள் ஆகியவையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அவுஸ்திரேலியாவின் அனுபவம் வழங்கும் வாய்ப்பு:

2026ஆம் ஆண்டுக்கான ‘வங்காள விரிகுடாவில் (இந்தியப் பெருங்கடல்) நிலையான நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்’ (Enabling a Sustainable Blue Economy in the Bay of Bengal) தொடர்பான அவுஸ்திரேலிய விருதுகள் (Australia Awards Fellowship) திட்டம், இந்தக் கேள்விகளை ஒப்பீட்டு அடிப்படையில் ஆராய்வதற்கான பயனுள்ள வாய்ப்பை வழங்கியது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் (DFAT) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த 15 ஆய்வாளர்கள் பங்கேற்றனர். வொல்லொங்கொங் பல்கலைக்கழகத்தின் அவுஸ்திரேலிய கடல் வளங்கள் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய நிலையம் (ANCORS) இத்திட்டத்திற்குத் தலைமை தாங்கியது.

இத்திட்டம் இலங்கையின் பாத்ஃபைண்டர் மன்றம் (PF), இந்தியாவின் தேசிய கடல்சார் அறக்கட்டளை (NMF) மற்றும் பங்களாதேஷின் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (BIMRAD) உள்ளிட்ட பிராந்திய நிறுவனங்களையும் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களையும் ஒன்றிணைத்தது.

இத்திட்டத்தின் பெறுமதி அவுஸ்திரேலியாவின் கடல்சார் தொழில்துறைகளைப் பற்றிய அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அவற்றின் பின்னணியில் இயங்கும் நிறுவனக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் இது உதவியது.

பெப்ரவரி மாதத்தில் வொல்லொங்கொங், சிட்னி, கன்பரா மற்றும் தஸ்மானியா ஆகிய இடங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட களப் பயணங்களின்போது, கடல்சார் ஆராய்ச்சி, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கடல் நிர்வாகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஒருங்கிணைந்த கடல் முகாமைத்துவம் ஆகியவை தனித்தனியான துறைகளாக அல்லாமல், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பரந்த கட்டமைப்பின் கூறுகளாகச் செயற்படுவதை ஆய்வாளர்கள் அவதானித்தனர்.

உதாரணமாக, நீலப் பொருளாதாரக் கூட்டுறவு ஆராய்ச்சி நிலையம் (Blue Economy Cooperative Research Centre), கடலுக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கடல்சார் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் அரசாங்கத்தை ஒன்றிணைத்துச் செயற்படுகிறது.

விஞ்ஞான அறிவுக்கும் நடைமுறை கொள்கை மற்றும் முதலீட்டு முடிவுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்துவது நீலப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியம் என்பதே இத்திட்டத்தின் முக்கியமான பாடங்களில் ஒன்றாக அமைந்தது.

இலங்கைக்கான முக்கியத்துவம்:

இந்தப் பாடம் இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது. நீலப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்குத் தேவையான பல அடிப்படைக் கூறுகளை இலங்கை ஏற்கனவே கொண்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் அமைவிடம், நிலைபெற்ற மீன்பிடித் துறை, கரையோர மற்றும் கடல்சார் சுற்றுலா, முக்கிய துறைமுகங்கள், பல்வகைப்பட்ட சூழலியல் தொகுதிகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட வளர்ந்து வரும் கடல்சார் தொழில்துறைகளுக்கான வாய்ப்புகள் ஆகியவை அவற்றில் அடங்குகின்றன.

புதிய துறைகளுக்கான வாய்ப்புகள் இல்லாததே பிரச்சினையல்ல. அவற்றை நிலையான முறையில் அபிவிருத்தி செய்வதற்குப் போதுமான ஆராய்ச்சித் திறன், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் நாட்டில் உள்ளனவா என்பதே கடினமான கேள்வியாகும்.

அவுஸ்திரேலியாவின் அனுபவம் இங்கு பயனுள்ள பாடங்களை வழங்குகிறது. ஆனால், அதனை அப்படியே நகலெடுத்துப் பின்பற்ற வேண்டிய மாதிரியாகக் கருதக்கூடாது. பொருளாதார வாய்ப்புகளை விஞ்ஞானம், திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறைகள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அவுஸ்திரேலிய அனுபவம் எடுத்துக்காட்டுகிறது என்பதிலேயே அதன் பெறுமதி தங்கியுள்ளது.

உதாரணமாக, அவுஸ்திரேலியாவின் 2026ஆம் ஆண்டுக்கான நிலையான கடல் திட்டம் (Sustainable Ocean Plan), கடல்சார் தொழில்துறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கைகள், ஆதிக்குடி மக்களின் பங்கேற்பு, அறிவு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறது.

மீன்பிடி, எரிசக்தி, சுற்றுலா, பல்லுயிர்ப் பெருக்கம், போக்குவரத்து மற்றும் கரையோரச் சமூகங்கள் ஆகிய அனைத்தும் ஒரே கடல் வெளியைப் பகிர்ந்துகொள்கின்றன என்பதையும், எனவே அவற்றைத் தனித்தனியாக நிர்வகிப்பது பயனுள்ளதாக இருக்காது என்பதையும் இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது.

இலங்கைக்கான பாடம் தெளிவானது. மீன்பிடிக் கொள்கையை கரையோர முகாமைத்துவத்திலிருந்து முற்றிலும் பிரித்துப் பார்க்க முடியாது. சூழலியல் தொகுதிகளையும் ஏற்கனவே கடலைப் பயன்படுத்திவரும் சமூகங்களையும் கருத்தில் கொள்ளாமல் கடல்சார் சுற்றுலாவைத் திட்டமிட முடியாது. மீன்பிடித் தளங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த புரிதலின்றி கடலுக்கு அப்பாலான எரிசக்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. துறைமுக அபிவிருத்தி கரையோரப் பகுதிகளைப் பாதிக்கிறது. அதேவேளை, காலநிலை மாற்றம் இந்த அனைத்துத் துறைகளையும் பாதிக்கிறது.

எனவே, நீலப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு மீன்பிடி, சுற்றுச்சூழல், சுற்றுலா, துறைமுகங்கள், எரிசக்தி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையில் வலுவான ஒருங்கிணைப்பு அவசியமாகும். தனித்தனியான துறைசார் திட்டங்களை மேலும் உருவாக்குவது இதற்கான தீர்வாகாது.

நிலையான மீன்பிடி முகாமைத்துவம்:

அவுஸ்திரேலியாவிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான விடயங்களில் நிலையான மீன்பிடியும் ஒன்றாகும்.

அவுஸ்திரேலியாவின் பொதுநலவாய மீன்பிடித் துறையில் (Commonwealth fisheries), விஞ்ஞான மதிப்பீடுகளையும் பிடிக்க அனுமதிக்கப்படும் மீன்களின் அளவு தொடர்பான முடிவுகளையும் இணைக்கும் முறையான மீன்பிடி அறுவடை உத்திகள் (Harvest Strategies) நடைமுறையில் உள்ளன.

இந்த உத்திகளில் சூழலியல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அதேவேளை பொருளாதார ரீதியாகச் சாத்தியமான மீன்பிடித் தொழில்துறையைப் பேணுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவுஸ்திரேலிய மீன்பிடி முகாமைத்துவ அதிகாரசபை (Australian Fisheries Management Authority) குறிப்பிடுகிறது.

இந்த அணுகுமுறை மீன்பிடி முகாமைத்துவத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவதில்லை. இருப்பினும், எவ்வளவு அளவு மீன்களைப் பிடிக்கலாம் என்பது குறித்த முடிவுகள், மீன்வளமும் சூழலியல் தொகுதிகளும் எவ்வளவு அளவைத் தாங்கக்கூடியவை என்பது தொடர்பான விஞ்ஞான ஆதாரங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான கோட்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.

இது வங்காள விரிகுடாப் பிராந்தியத்திற்கு மிகவும் பொருத்தமானது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மீன்பிடி பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனினும், அளவுக்கு அதிகமான மீன்பிடி, காலநிலை மாற்றம், வாழிடச் சீரழிவு, சட்டவிரோத மற்றும் அறிக்கையிடப்படாத மீன்பிடி நடவடிக்கைகள், கடலின் பல்வேறு பயனாளர்களுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றினால் இத்துறை அழுத்தங்களை எதிர்கொள்கிறது.

எனவே, பிராந்தியத்திற்கான நிலையான மீன்பிடி மாதிரியானது பிடிக்கப்படும் மீன்களின் அளவை அதிகரிப்பது, மீன்பிடிக் கப்பல்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது அல்லது ஏற்றுமதித் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது.

மீன்வள இருப்பு தொடர்பான மதிப்பீடுகள், நம்பகமான மீன்பிடித் தரவுகள், கண்காணிப்பு, சட்ட அமுலாக்கம் மற்றும் நீண்டகால மீன்பிடி அறுவடைத் திட்டமிடல் ஆகியவையும் அவசியமாகும்.

முகாமைத்துவ முடிவுகள் வெளிப்படையான விஞ்ஞான நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்படும்போது, நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது இலகுவாகிறது என்பதை அவுஸ்திரேலிய அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.

மீன்பிடி விஞ்ஞானத்தில் அதிக முதலீடு செய்வதன் மூலமும், ஆராய்ச்சி முடிவுகள் முகாமைத்துவப் பொறுப்பைக் கொண்ட நிறுவனங்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன் மூலமும் இலங்கை இந்தத் தொடர்பை வலுப்படுத்த முடியும்.

இதே கோட்பாடு பிராந்திய மட்டத்திலும் பொருந்துகிறது. மீன் வளங்கள் நிர்வாக எல்லைகளுக்குள் மட்டும் கட்டுப்பட்டிருப்பதில்லை. பல மீன்பிடிப் பிரச்சினைகளும் நாடுகளுக்கு இடையில் பொதுவானவையாக உள்ளன.

எனவே, பிராந்திய விஞ்ஞான ஒத்துழைப்பு, ஒப்பிடக்கூடிய தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு ஆகியவை வங்காள விரிகுடாவுக்கான நீலப் பொருளாதாரத் திட்டத்தின் முக்கியமான கூறுகளாக அமைய முடியும்.

நிலையான மீன்பிடி என்பது மீன்வள இருப்பைப் பாதுகாப்பது மட்டுமல்ல என்பதையும் அவுஸ்திரேலிய அணுகுமுறை எடுத்துக்காட்டுகிறது. நவீன மீன்பிடி நிர்வாகம், இலக்கல்லாத உயிரினங்கள் மீன்பிடியில் சிக்குவது (Bycatch), வாழிடங்களின் மீதான தாக்கங்கள், சூழலியல் தொகுதிகளின் ஆரோக்கியம் மற்றும் மீன்பிடிச் சமூகங்களின் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறது.

மீன்பிடி என்பது கரையோரச் சமூகங்களுடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு துறையாக இருப்பதால், இலங்கைக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இந்த விரிவான அணுகுமுறை மிகவும் அவசியமானது.

முகாமைத்துவ முடிவுகள் கடலில் மீன்பிடிக்கும் படகுகளை மட்டுமல்ல; மீன் பதப்படுத்துவோர், விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், குடும்பங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களையும் பாதிக்கின்றன.

நீர்வாழ் உயிரின வளர்ப்பும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்:

அவுஸ்திரேலியாவின் அனுபவம் பயனளிக்கக்கூடிய மற்றொரு துறை நீர்வாழ் உயிரின வளர்ப்பாகும்.

தஸ்மானியா, கடலை அடிப்படையாகக் கொண்ட உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளையும் அதில் காணப்படும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டியது.

நவீன நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையங்களும் கடல்சார் ஆராய்ச்சிகளும் தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தியையும் கண்காணிப்பையும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றன. அதேவேளை, இத்துறையின் விரிவாக்கத்துடன் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளும் பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூறும் நடைமுறைகளும் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் அவுஸ்திரேலிய அனுபவம் உணர்த்துகிறது.

எனவே, நீர்வாழ் உயிரின வளர்ப்பில் முதலீட்டை அதிகரிப்பது மட்டுமே இலங்கைக்கான பாடமல்ல.

விரிவாக்க நடவடிக்கைகளை மீளப்பெற முடியாத நிலை ஏற்படுவதற்கு முன்னரே, சுற்றுச்சூழல் நிலைமைகள் தொடர்பான அடிப்படைத் தரவுகளைச் சேகரித்தல், நோய்த் தொற்று கண்காணிப்பு, சூழலியல் தாங்குதிறன் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அதன் தாக்கங்களை நிர்வகிப்பதற்கான தெளிவான முறைமைகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் இத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு:

ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு மற்றுமொரு முக்கியமான பாடமாகும்.

இந்தப் பயிற்சித் திட்டத்தின்போது மீண்டும் மீண்டும் அவதானிக்கக்கூடிய ஒரு விடயம், பரந்த கொள்கை விவாதங்களில் பல்கலைக்கழகங்களும் விசேட ஆராய்ச்சி நிலையங்களும் வகிக்கும் பங்காகும்.

வொல்லொங்கொங் பல்கலைக்கழகம் மற்றும் ANCORS போன்ற நிறுவனங்கள் கடல்சார் சட்டம், மீன்பிடி நிர்வாகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரக் கொள்கை ஆகிய துறைகளில் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கின்றன. அதேவேளை, ஏனைய அவுஸ்திரேலிய நிறுவனங்கள் கடல்சார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் இந்தப் பரந்த உரையாடலுக்குள் கொண்டுவருகின்றன.

கடல் மற்றும் கரையோர வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் பொருளாதாரமாக நீலப் பொருளாதாரத்தை ANCORS வரையறுக்கிறது. அதேவேளை, ஒருங்கிணைந்த மற்றும் சமூக உள்ளடக்கத்துடன் கூடிய நிர்வாகத்திற்கும் அது முக்கியத்துவம் அளிக்கிறது.

இலங்கையிலும் கணிசமான ஆராய்ச்சி நிபுணத்துவம் உள்ளது. எனினும், பல்கலைக்கழகங்கள், விசேட ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைச்சுக்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு இடையில் இன்னும் வலுவான தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

ஆராய்ச்சி அறிக்கை வெளியிடப்படுவதுடன் ஆராய்ச்சிப் பணிகள் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மீன்பிடி முகாமைத்துவம், கரையோர அபிவிருத்தி மதிப்பீடு மற்றும் வளர்ந்து வரும் கடல்சார் தொழில்துறைகளின் மதிப்பீடு ஆகியவற்றில் அந்த ஆராய்ச்சி முடிவுகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, கூட்டாய்வு, முதுநிலைப் பட்டப் பயிற்சி, தொழில்முறைப் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இதற்கு ஆதரவளிக்க முடியும்.

பிராந்திய ஒத்துழைப்பின் அவசியம்:

இந்த ஒத்துழைப்பு இலங்கையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்பதையும் இப்பயிற்சித் திட்டம் எடுத்துக்காட்டியது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒன்றிணைந்தபோது, வங்காள விரிகுடாப் பிராந்தியத்தில் பல்வேறு தேசிய வேறுபாடுகள் காணப்பட்டாலும், பொதுவான கடல்சார் பிரச்சினைகளும் அதிகமாக உள்ளன என்பது தெளிவானது.

காலநிலை மாற்றம், கடல் மாசடைதல், சட்டவிரோத மீன்பிடி, மீன்வள நிலைத்தன்மை மற்றும் கடல்சார் வர்த்தகம் ஆகியவற்றை நாடுகள் தனித்தனியாகச் செயற்பட்டு முழுமையாக எதிர்கொள்ள முடியாது.

இதற்கான பிராந்தியக் கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது.

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (BIMSTEC), நீலப் பொருளாதாரத்தைத் தனது ஒத்துழைப்புத் துறைகளில் ஒன்றாக உத்தியோகபூர்வமாக உள்ளடக்கியுள்ளது. அதேவேளை, மீன்பிடி விவகாரங்கள் அதன் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பின் கீழ் இடம்பெறுகின்றன.

இப்போது செய்ய வேண்டியது, இந்தப் பரந்த உறுதிமொழிகளை நடைமுறைச் செயற்திட்டங்களாக மாற்றுவதாகும்.

வங்காள விரிகுடாவுக்கான பிராந்திய நிலையான நீலப் பொருளாதாரத் திட்டத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்க முடியும்:

  • பகிரப்பட்ட மீன்பிடி ஆராய்ச்சித் திட்டங்கள்.
  • கூட்டுப் பயிற்சித் திட்டங்கள்.
  • கடல்சார் தரவுப் பரிமாற்றம்.
  • கடல்சார் இடவியல் திட்டமிடலில் (Marine Spatial Planning) திறன் மேம்பாடு.
  • நீலக் காபன் (Blue Carbon) மற்றும் கரையோர மீள்திறன் தொடர்பான கூட்டாய்வுகள்.
  • பல்கலைக்கழகங்கள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான வலுவான தொடர்புகள்.

இதற்காக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒரே மாதிரியான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு வளங்கள், நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் உள்ளன.

அந்த வேறுபாடுகள் ஒன்றுக்கொன்று துணைபுரியும் நிபுணத்துவமாக மாறும்போதே பிராந்திய ஒத்துழைப்பு சிறப்பாகச் செயற்படும்.

இந்தியாவிடம் விரிவான கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மூலோபாய ஆற்றல் உள்ளது. பங்களாதேஷ் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கரையோர அனர்த்தங்களை எதிர்கொள்வதில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்டுள்ளது. இலங்கையிடம் அதன் சொந்த மீன்பிடி அறிவு, முக்கியமான கடல்சார் அமைவிடம் மற்றும் நிறுவன அனுபவம் உள்ளன.

கடல் விஞ்ஞானம், நிர்வாகம், மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் நிறுவனத் திறன் மேம்பாடு ஆகியவற்றில் அவுஸ்திரேலியா தனது விசேட நிபுணத்துவத்தைப் பங்களிக்க முடியும்.

எனவே, வங்காள விரிகுடாப் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவின் நீலப் பொருளாதார மாதிரியை அப்படியே இறக்குமதி செய்வது நோக்கமாக இருக்கக்கூடாது.

அவுஸ்திரேலிய அனுபவத்தின் பின்னணியில் உள்ள கோட்பாடுகளை ஆராய்ந்து, பிராந்தியத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைப்பதே மிகவும் பயனுள்ள அணுகுமுறையாகும்.

அந்தக் கோட்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • ஆராய்ச்சியை அரச கொள்கைகளுடன் இணைத்தல்.
  • விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் மீன்பிடி முடிவுகளை எடுத்தல்.
  • தொழில்துறைகள் விரிவடைவதற்கு முன்னரே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துதல்.
  • கடலின் பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.
  • கண்காணிப்புக் கட்டமைப்புகளில் முதலீடு செய்தல்.
  • ஆரோக்கியமான சூழலியல் தொகுதிகளைப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அல்லாமல் பொருளாதாரச் சொத்துக்களாக அங்கீகரித்தல்.

அவுஸ்திரேலியாவின் புதிய நிலையான கடல் திட்டம் (Sustainable Ocean Plan) இந்தச் சிந்தனையின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.

அது கடலை ஒன்றோடொன்று தொடர்புபட்ட ஒரு கட்டமைப்பாகக் கருதுவதுடன், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் கடல்சார் பொருளாதாரத்தின் நீண்டகால வெற்றியையும் தெளிவாக இணைக்கிறது.

மேலும், எந்தவொரு தனி அரச நிறுவனமோ, தொழில்துறையோ அல்லது சமூகமோ தனித்து நின்று கடல்சார் சவால்களை எதிர்கொள்ள முடியாது என்பதையும் அங்கீகரிக்கிறது.

தேசிய மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு இரண்டுமே அவசியமாக உள்ள வங்காள விரிகுடாப் பிராந்தியத்திற்கு இந்தக் கோட்பாடு மிகவும் பொருத்தமானது.

வளங்களைப் பாதுகாப்பதே நிலையான வளர்ச்சியின் அடிப்படை

எனவே, பிராந்தியத்தில் நிலையான நீலப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான நியாயம் புதிய தொழில்துறைகளின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார வாய்ப்புகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஏற்கனவே உள்ள வளங்களைப் பாதுகாப்பதிலும் அது தங்கியுள்ளது.

வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள மில்லியன் கணக்கான மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கடல் மற்றும் கரையோர வளங்களைச் சார்ந்து வாழ்கின்றனர்.

மீன்பிடி உணவுப் பாதுகாப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் பங்களிக்கிறது. அதேவேளை, கரையோரச் சூழலியல் தொகுதிகள் இயற்கைப் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பொருளாதாரப் பெறுமதி ஆகியவற்றை வழங்குகின்றன.

அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்த அடித்தளங்களைப் பலவீனப்படுத்தினால், குறுகியகால நீலப் பொருளாதார வளர்ச்சி நீண்டகால நீலப் பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடும்.

வேறுபட்ட பாதையை உருவாக்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது.

உள்நாட்டில், கடல்சார் விஞ்ஞானத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல், நிலையான மீன்பிடி முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், நீலப் பொருளாதாரத் துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கண்காணிப்பில் முதலீடு செய்தல் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளில் கரையோரச் சமூகங்களை அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கச் செய்தல் ஆகியவை இதற்குத் தேவைப்படுகின்றன.

பிராந்திய மட்டத்தில், வலுவான ஆராய்ச்சி மற்றும் கொள்கை வலையமைப்புகள் மூலம் இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் இணைந்து செயற்படுவதுடன், BIMSTEC மற்றும் இந்தியப் பெருங்கடல் கரையோரப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (IORA) போன்ற கட்டமைப்புகளை நடைமுறை ஒத்துழைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

வங்காள விரிகுடாவில் கடல் வளங்களுக்குப் பற்றாக்குறை இல்லை. அதேபோன்று அபிவிருத்தி செய்வதற்கான இலட்சியங்களுக்கும் பற்றாக்குறை இல்லை.

அந்த இலட்சியங்களை நிலையான அபிவிருத்தியாக மாற்றுவதற்கான வலுவான அடித்தளமே இப்போது அவசியமாகிறது.

விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையிலான மீன்பிடி முகாமைத்துவம், ஒருங்கிணைந்த கடல் திட்டமிடல், ஆராய்ச்சிக்கும் கொள்கை வகுப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நிறுவனத் திறன் மேம்பாடு ஆகியவற்றில் அவுஸ்திரேலியாவின் அனுபவம் பயனுள்ள பாடங்களை வழங்குகிறது.

அந்தக் கட்டமைப்புகளை அப்படியே பிரதியெடுப்பது இலங்கைக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் சவாலாக இருக்கக்கூடாது. மாறாக, வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத ஒரு பிராந்தியத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப, அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மாற்றியமைப்பதே உண்மையான சவாலாகும்.

எனவே, நிலையான நீலப் பொருளாதாரம் என்பது கடல் வளங்களைச் சுரண்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. மாறாக, அபிவிருத்தியை நிர்வகிப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறையாகவே அது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

வங்காள விரிகுடாவில் நீலப் பொருளாதாரம் தொடர்பாக அதிகரித்து வரும் ஆர்வம், குறுகியகால பொருளாதார வாய்ப்பாக மாறுமா அல்லது பிராந்தியத்தின் நீண்டகாலச் செழுமைக்கான அடித்தளமாக அமையுமா என்பதைத் தீர்மானிப்பது இந்த வேறுபாடுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *