(~ சௌதிக் பிஸ்வாஸ்/இந்திய விவகாரங்களுக்கான பிபிசி செய்தியாளர் )
1984 ஒக்டோபர் 31ஆம் திகதி காலை. டெல்லியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இளம் மனைவியாகவும் தாயாகவும் வாழ்ந்து வந்தார் சோனியா காந்தி. குளிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, தோட்டத்திலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன.
அவரது மாமியாரும் இந்தியப் பிரதமருமான இந்திரா காந்தி, அருகிலுள்ள கட்டடத்தில் அமைந்திருந்த தனது அலுவலகத்திற்குச் சற்றுமுன்னர்தான் புறப்பட்டுச் சென்றிருந்தார். சில நிமிடங்களில், அவரது இரண்டு சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதே ஆண்டு முன்னதாக, சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றது.
அந்தத் துப்பாக்கிச் சத்தம் பட்டாசுகள் வெடிப்பதைப் போல இருந்தது. ஆனால், அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்ததாக சோனியா நினைவுகூர்கிறார்.
குழந்தைகளைக் கவனித்துக்கொண்டிருந்த பணிப்பெண் பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தட்டினார். அவர் வெறித்தனமாகக் கத்திக்கொண்டு தோட்டத்தைச் சுட்டிக்காட்டினார்.
சோனியா ஓடிச் சென்று பார்த்தார். வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று மெதுவாக அவரை நோக்கி வந்துகொண்டிருந்தது. காருக்குள் இந்திரா காந்தி இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது சேலை முழுவதும் இரத்தம் தோய்ந்திருந்தது. கண்கள் திறந்திருந்தன. அவரது முகத்தில் ஆச்சரியம் கலந்த ஓர் உணர்வு காணப்பட்டதாக சோனியா நினைவுகூர்கிறார்.
“மம்மி, மம்மி” என்று அழைக்க அவர் முயன்றார். ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை.
மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருந்தார். இறுதியில், மருத்துவர் ஒருவர் தலையை அசைத்தபோது, தான் அஞ்சிய செய்தி உண்மை என்பதை அவர் புரிந்துகொண்டார்.
ஆனால், அந்தத் துயரச் சம்பவத்துடன் சோதனைகள் முடிந்துவிடவில்லை.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் இருந்த அவரது கணவர் ராஜீவ் காந்தி, அவர், இந்திரா காந்தியின் மூத்த மகனும் ஆவார். அவர் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு வந்த ராஜீவிடம், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்குமாறு விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சோனியாவின் பதில் கோபமும் அச்சமும் கலந்ததாக இருந்தது.
“அவர்கள் உன்னையும் கொன்று விடுவார்கள். உன்னையும் கொன்று விடுவார்கள்!” என்று அவர் கதறினார்.
அதற்கு ராஜீவ், “எப்படியும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்” என்று பதிலளித்தார்.
அன்றைய மாலை, இந்திரா காந்தியின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சோனியா காந்தியின் புதிய சுயசரிதை நூலான Belonging: A Journey of Love (சொந்தம்: அன்பின் ஒரு பயணம்) நூலில் இடம்பெறும் மிகவும் நெஞ்சை உலுக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. தனிப்பட்ட வாழ்க்கையின் பேரிழப்பும் பொதுவாழ்க்கையின் அழுத்தங்களும் ஒரே நேரத்தில் எவ்வாறு ஒரு பெண்ணைச் சூழ்ந்துகொண்டன என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
அரசியலில் இருந்து பெரும்பாலும் விலகியே இருந்த ஒரு பெண், இப்போது இந்தியப் பிரதமரின் மனைவியாகிவிட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று, இரண்டு பொதுத் தேர்தல் வெற்றிகளுக்கு அக்கட்சியை வழிநடத்தி, இந்தியாவின் மிகுந்த செல்வாக்குமிக்க அரசியல் ஆளுமைகளில் ஒருவராகவும் உருவெடுத்தார்.
இந்தச் சம்பவம் மற்றொரு பேரிழப்பையும் முன்கூட்டியே சுட்டிக்காட்டுகிறது. 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
துயரத்திலிருந்து அரசியலை நோக்கி:
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரான ஆண்டுகள் சோனியாவைப் பொறுத்தவரையில் பொதுவாழ்க்கையிலிருந்து பின்வாங்கிய காலமாகவே அமைந்தன.
தனது 19ஆவது வயதில், இத்தாலியின் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணாக இருந்தபோது, இங்கிலாந்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இந்திய மாணவரான ராஜீவ் காந்தியை அவர் சந்தித்தார்.
அந்தக் காதல் அவரை ஒரு புதிய நாடு, புதிய குடும்பம் ஆகியவற்றுக்குள் அழைத்துச் சென்றது. இந்திரா காந்தியுடனும் அவருக்கு நெருக்கமான உறவு உருவானது. தனது கணவர் மற்றும் மாமியார் ஊடாக இந்தியாவே அவரது தாயகமாக மாறியது.
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர், அவர் தலைமை தாங்கிய நினைவு அறக்கட்டளைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகப் பொதுவெளியில் தோன்றுவதுகூட அவருக்குப் பெரும் சோதனையாக இருந்தது. உரையாற்றுவதற்கு முன்பாகவே கண்ணீர் தன்னை ஆட்கொண்டுவிடுமோ என்று அவர் அஞ்சினார்.
ஒருமுறை தலாய் லாமா, தனது கணவரைக் கொன்றவர்கள் மீது பழிவாங்கும் உணர்வு இருக்கிறதா என்று அவரிடம் கேட்டார்.
“இல்லை, அப்படியில்லை” என்று பதிலளித்த சோனியா, உடனடியாகக் கண்ணீர் விட்டு அழுதார்.
காலப்போக்கில் ராஜீவ் காந்தி தன்னுள் ஒரு நிலையான இருப்பாக மாறிவிட்டதாகவும், முன்புபோலத் துளைத்தெடுக்கும் வெறுமையாக அவர் உணரப்படவில்லை என்றும் சோனியா எழுதுகிறார்.
ஆனால், குடும்பத்தின் முக்கியமான நிகழ்வுகளின்போது அந்தத் துயரம் மீண்டும் தலைதூக்கியது.
1995ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரது மகன் ராகுல் பட்டமளிப்பைப் பெற்றுக்கொண்டபோது, ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார் என்ற எண்ணம் சோனியாவையும் அவரது பிள்ளைகளையும் ஆட்கொண்டது.
இதற்கிடையில் அரசியல் அவரை நெருங்கிக்கொண்டிருந்தது.
பல தலைமுறைகளாக அவரது கணவரின் குடும்பத்தின் அரசியல் தளமாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தனது ஒற்றுமையையும் தேர்தல் செல்வாக்கையும் இழந்து கொண்டிருந்தது. மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். சோனியா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன.
ஆரம்பத்தில் அவர் அதனை நிராகரித்தார்.
ராஜீவ் காந்தியின் ஊடாக அரசியலைத் தான் நெருக்கமாகப் பார்த்திருப்பதாக அவர் எழுதுகிறார். அரசியலின் சாதனைகளை மட்டுமல்ல, அதன் “அதிகார ஆசை, பேராசை, பாசாங்குத்தனம் மற்றும் துரோகம்” ஆகியவற்றையும் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.
“எனக்கு எப்போதுமே அரசியல் பிடித்ததில்லை” என்று அவர் எழுதுகிறார்.
அரசியல் முதலில் அவரது மாமியாரையும், பின்னர் “எனது வாழ்க்கையின் காதலையும், எனது பிள்ளைகளின் தந்தையையும்” பறித்துவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி அவருக்குத் தனிப்பட்ட வலியாக மாறத் தொடங்கியது.
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் புகைப்படங்களைக் கடந்து செல்லும்போது, “வலியும் குற்றவுணர்வும் கலந்த உணர்வு” தன்னை ஆட்கொள்வதாக அவர் கூறுகிறார்.
இந்தியாவின் பன்மைத்துவப் பண்பைப் பாதுகாப்பதற்காக அவர்கள் போராடிய அரசியல் சக்திகளுக்கு எதிரான சக்திகள் தற்போது வலுப்பெற்று வருவதாக அவர் அஞ்சினார்.
அதாவது, இந்துத்துவ தேசியவாதத்தின் எழுச்சி, அவர்கள் பாதுகாக்க விரும்பிய இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவக் கண்ணோட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கருதினார்.
சோனியா இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுச் சிதறிவிடும் என்றும், மதவாத அரசியலை எதிர்ப்பதற்கான வலுவான அரசியல் சக்தி இல்லாமல் போய்விடும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாதிட்டனர்.
மதம், சாதி, மொழி, பிராந்தியம் ஆகிய எல்லைகளைக் கடந்து தமது குடும்பப் பெயருக்கு மக்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பு இருப்பதாக அவர் நம்பினார்.
இதுவே தன்னை அரசியலுக்குள் நுழையத் தூண்டிய “மிகவும் வலுவான வாதம்” என்று அவர் கூறுகிறார்.
பகவத் கீதை காட்டிய வழி..
தனது தகுதிகள் குறித்தும் சோனியாவுக்கு சந்தேகங்கள் இருந்தன.
இந்திய அரசியலில் இரண்டு ஆளுமைமிக்க தலைவர்கள் வகித்த இடத்தை, வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் எவ்வாறு நிரப்ப முடியும்?
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி போன்ற இரு தலைவர்களின் அரசியல் வாரிசாகத் தன்னை முன்னிறுத்துவது எளிதான காரியமல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
வீட்டில், அவரது பிள்ளைகளான ராகுலும் பிரியங்காவும் தமது பாட்டியையும் தந்தையையும் இழந்ததைப் போலத் தாயையும் இழந்துவிடுவோமோ என்று அஞ்சினர்.
புத்தாண்டு விடுமுறைக்காகப் புறப்படுவதற்கு முன்னர், அவர்கள் சோனியாவிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டனர்.
“நாங்கள் வெளியே சென்றிருக்கும்போது எந்தவொரு முட்டாள்தனமான காரியத்தையும் செய்துவிடாதீர்கள்.”
தனது உள்ளார்ந்த குழப்பத்துக்கான விடை பகவத் கீதையின் ஊடாகக் கிடைத்ததாக சோனியா கூறுகிறார்.
வயது வந்த பின்னர் மத விவகாரங்களில் அதிக ஈடுபாடு காட்டாதவராக இருந்தபோதிலும், 1997 ஜனவரியில் சமஸ்கிருத அறிஞர் ஒருவரைத் தனிப்பட்ட முறையில் அணுகி பகவத் கீதையைக் கற்கத் தொடங்கினார்.
ஒவ்வொரு சுலோகமாகவும் அவர்கள் அந்த நூலைப் படித்தனர்.
தனது கடமையைச் செய்வதும், அதன் மூலம் கிடைக்கும் பலன்களில் பற்றுக் கொள்ளாமல் இருப்பதுமே பகவத் கீதையின் அடிப்படைச் செய்தி என்று அவர் புரிந்துகொண்டார்.
அந்தக் கருத்து தனது உள்ளார்ந்த முரண்பாடுகளுக்கு இறுதியில் தீர்வளித்ததாக அவர் எழுதுகிறார்.
“எனது சொந்தச் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. எனது கடமை எங்கு என்னை அழைக்கிறதோ, அங்கு நான் செல்ல வேண்டும். அதற்காக நான் வெளியில் வரவேண்டும். அவ்வாறே செய்தேன்.”
2004: பிரதமர் பதவியை நிராகரித்த தருணம்:
எனினும், இந்தச் சுயசரிதையில் இடம்பெறும் மிகவும் பரபரப்பான அரசியல் நிகழ்வு, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், 2004 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவமாகும்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை சோனியாவே முன்னின்று வழிநடத்தியிருந்தார்.
இந்தியக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோருவதற்காக, சோனியா காந்தி மன்மோகன் சிங்குடன் டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்கிறார்.
அப்போது அனைவரும் அவர் பிரதமராகப் பதவியேற்பார் என்றே எதிர்பார்த்தனர்.
ஆனால், அவர் எதுவும் கூறவில்லை.
வீட்டுக்குத் திரும்பிய பின்னர், பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று தனது மூத்த உதவியாளர் ஒருவரிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அவரது வீட்டின் வாயிலில் திரண்டனர். மூத்த தலைவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
“நீங்கள்தான் தேர்தலில் போட்டியிட்டீர்கள். நீங்கள்தான் எங்களை வழிநடத்தினீர்கள்” என்று ஒருவர் கூறினார்.
“மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். இப்போது அவர்களை எவ்வாறு ஏமாற்ற முடியும்? எமது தொண்டர்கள் கிளர்ந்தெழுவார்கள். வேறொருவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?”
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அவரைச் சந்தித்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
அவர்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டதாகவும், ஒருவர்,
“உங்கள் மறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று உறுதியாகக் கூறியதாகவும் சோனியா நினைவுகூர்கிறார்.
மன அழுத்தத்துக்கு ஆளான அவர், மெதுவாக “தீக் ஹை” (சரி) என்று கூறினார்.
அதனை அவர்கள் சம்மதமாக எடுத்துக்கொண்டு, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.
ஆனால், அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்தனர் என்று சோனியா எழுதுகிறார்.
ராகுல் கோபத்துடன் அறைக்குள் நுழைந்து, “நீங்கள் சம்மதம் தெரிவித்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.
அவரது மகள் பிரியங்காவோ, மற்றவர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
அன்று இரவு முழுவதும் தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தன்னுடனேயே அவர் விவாதித்துக்கொண்டிருந்தார்.
இந்த முடிவு தனது தனிப்பட்ட எதிர்காலம் தொடர்பானது மட்டுமல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP), தனது வெளிநாட்டுப் பிறப்பைத் தொடர்ந்து அரசியல் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தும் என்று அவர் நம்பினார்.
தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால், இந்த விவகாரம் நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, இந்தியாவுக்கே பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர் கருதினார்.
மறுநாள் காலை அவரது முடிவு உறுதியானது.
“நான் எனது முடிவை எடுத்துவிட்டேன். எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கப்போகிறேன்” என்று ராகுலிடம் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக, பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான மன்மோகன் சிங்கைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்.
மன்மோகன் சிங் “குற்றம் குறை சொல்ல முடியாத நேர்மையானவர்” என்றும், “ஆட்சிநிர்வாகம் தொடர்பாக ஆழமான மற்றும் முழுமையான புரிதல் கொண்டவர்” என்றும் அவர் வர்ணிக்கிறார்.
மோடியின் இந்தியாவும் சோனியாவின் இந்தியாவும்..
சோனியாவின் சுயசரிதை, குடும்ப நினைவுகளிலிருந்து அவர் இழந்துவிட்டதாகக் கருதும் இந்தியாவைப் பற்றிய விவாதத்துக்கு மாறும்போது மிகவும் வெளிப்படையான அரசியல் ஆவணமாக மாறுகிறது.
தான் பொதுவாழ்க்கைக்குள் நுழைந்த காலத்தில் நாடாளுமன்ற அரசியலில் “ஒருவிதமான கண்ணியமும் நாகரிகமும்” நிலவியதாக சோனியா கூறுகிறார்.
அரசியல் தாக்குதல்களும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் அப்போதும் இருந்தன. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களைச் சிறுமைப்படுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும், எதிரிகளாகக் கருதப்படுபவர்களை அச்சுறுத்துவதற்கும் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் கருதுகிறார்.
இது சர்வாதிகார ஆட்சிகளுடன் இணைந்திருக்கும் மனிதாபிமானமற்ற போக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வருவதன் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்துத்துவ தேசியவாதக் கட்சியான பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய அவரது விமர்சனம் வழக்கத்தைவிட மிகவும் நேரடியானது.
மோடியுடன் தனக்கு “உண்மையில் எந்தவிதமான நெருக்கமான தொடர்பும் இருந்ததில்லை” என்று அவர் எழுதுகிறார்.
நாடாளுமன்ற நிகழ்வுகளில் இடம்பெறும் சம்பிரதாயபூர்வமான வாழ்த்துப் பரிமாற்றங்களும், மருத்துவமனையிலிருந்து திரும்பியபோது அவ்வப்போது இடம்பெற்ற உரையாடல்களுமே அவர்களுக்கிடையிலான தொடர்பாக இருந்தன.
“தீக் ஹைன், ஆப்?” (நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?) என்று மோடி அவ்வப்போது கேட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
“அவர் பெரும்பாலும் முகத்தைத் திருப்பிக்கொள்வார். கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பார்” என்றும் சோனியா கூறுகிறார்.
மோடியின் இந்தியா குறித்த கண்ணோட்டம், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதாக அவர் எழுதுகிறார்.
“தனது மதமும் கலாசாரமும் மற்ற அனைத்தையும் விட உயர்ந்தவை” என்ற அடிப்படைவாதக் கண்ணோட்டத்தை அது உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
மோடியின் இந்தியா என்பது “படிநிலை அமைப்பு, ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு” ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், தனது இந்தியா என்பது “ஆதிக்கத்துக்கு எதிரான இந்தியா” என்றும், “உள்ளடக்கம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி” ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் சோனியா குறிப்பிடுகிறார்.
எனினும், இந்தக் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு முக்கியமான ஒப்புதலையும் அவர் தெரிவிக்கிறார்.
இன்றைய ஆளும் வர்க்கத்தின் மீது மோடி கொண்டுள்ள “அதிருப்தியைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக” அவர் கூறுகிறார்.
டெல்லியின் வசதிபடைத்த அரசியல் குடும்பங்களின் வீடுகளில் நடைபெறும் சந்திப்புகளில் தனக்கே ஒருவிதமான அசௌகரியம் ஏற்பட்டதாகவும், அங்கு பேசப்படும் அரசியல் விவாதங்கள் இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையிலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவும் சோனியா கூறுகிறார்.
மோடியின் குடும்பப் பின்னணி, அவரது விளம்பரக் குழுவினர் சித்தரிப்பதைப் போன்று அவ்வளவு எளிமையானதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் எழுதுகிறார்.
ஆனால், “சலுகைகள் குறைந்த சமூகப் பின்னணியிலிருந்து வந்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் படிப்படியாக அதிகாரத்தை நோக்கி அவர் முன்னேறியுள்ளார்” என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் மேல்தட்டு வர்க்கத்துக்கும், பின்னர் மோடி பிரதிநிதித்துவப்படுத்திய வாக்காளர்களுக்கும் இடையிலான சமூக இடைவெளியை ஒப்புக்கொள்ளும் அரிதான தருணமாக இது அமைந்துள்ளது.
உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள்..
உலகத் தலைவர்களுடனான தனது சந்திப்புகள் பற்றிய சில சுவாரஸ்யமான நினைவுகளையும் இந்தச் சுயசரிதை வெளிப்படுத்துகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு “கவர்ச்சிகரமான ஆளுமை” என்று சோனியா நினைவுகூர்கிறார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் புட்டின் தன்னைப் படகுச் சவாரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது வழியிலிருந்த வரலாற்றுச் சின்னங்களைச் சுட்டிக்காட்டி விளக்கியதாகவும் அவர் கூறுகிறார்.
புவிசார் அரசியல் தொடர்பான புட்டினின் ஆழமான அறிவும், “ரஷ்யாவை மீண்டும் அதன் முன்னைய வல்லரசு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்” என்ற அவரது உறுதியும் தன்னை ஈர்த்ததாக சோனியா குறிப்பிடுகிறார்.
“உக்ரைன் போர் இடம்பெறுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பு, முற்றிலும் வேறுபட்ட ஒரு காலகட்டத்தில்” இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் நினைவுகூர்கிறார்.
மற்றொரு சுவாரஸ்யமான சந்திப்பு பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் (Nicolas Sarkozy) இடம்பெற்றது.
2008ஆம் ஆண்டு சார்க்கோசி இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது அவருடன் உறவில் இருந்த கார்லா புரூனி (Carla Bruni) திருமணம் செய்துகொள்ளாத காரணத்தால் அவருடன் வரவில்லை.
இந்தியாவில் நடைபெற்ற அரச விருந்துபசாரத்தின்போது, இந்தியத் துணை ஜனாதிபதியின் மனைவி சார்க்கோசியிடம் பல கேள்விகளைக் கேட்டார்.
எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? அவரை நினைத்துப் பார்க்கிறீர்களா? திருமணத்துக்கான திகதி முடிவு செய்யப்பட்டுவிட்டதா?
இவ்வாறு அவர் உற்சாகமாகக் கேள்விகளை எழுப்பினார்.
சார்க்கோசியும் தனது கைத்தொலைபேசியில் கார்லா புரூனியுடன் குறுஞ்செய்திப் பரிமாற்றம் செய்துகொண்டே அந்தக் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார்.
காங்கிரஸின் கடந்தகாலம் குறித்த மௌனம்..
Belonging ஒரு நடுநிலையான வரலாற்றுப் பதிவு அல்ல.
ராஜீவ் காந்தி அரசாங்கத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பல தசாப்தங்களாக அவரது குடும்பத்தையும் துரத்திக்கொண்டிருந்த போஃபர்ஸ் பீரங்கி கொள்வனவு ஊழல் விவகாரத்துக்கு இந்த நூலில் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே வழங்கப்பட்டுள்ளது.
502 பக்கங்களைக் கொண்ட இந்தச் சுயசரிதை, காங்கிரஸ் கட்சியின் சொந்த வரலாற்றில் உள்ள அவ்வளவு பெருமைப்படத்தக்க அம்சங்கள் தொடர்பாக அதிகம் பேசவில்லை.
தனது அரசியல் எதிரிகளின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அரசியல் ஊழல், பாசாங்குத்தனம் மற்றும் பொதுவாழ்வின் தரம் வீழ்ச்சியடைந்தமை குறித்து சோனியா விரிவாகப் பேசுகிறார்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அக்கட்சியைப் பீடித்திருந்த அரசியல் ஆதரவாளர்களுக்கு சலுகைகள் வழங்கும் கலாசாரம், நெருக்கமானவர்களுக்குச் சாதகமாகச் செயற்படும் போக்கு மற்றும் ஊழல் ஆகியவற்றைப் பெரும்பாலும் தவிர்த்துச் செல்கிறார்.
மக்களின் நம்பிக்கை சிதைவடைந்ததில் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த பொறுப்பு குறித்தும் அவர் பெரிதாகச் சுயவிமர்சனம் செய்யவில்லை.
தனது கணவரும் மாமியாரும் உருவாக்கிய அரசியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுகிறார். ஆனால், அந்தப் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்க வேண்டிய கட்சி நீண்டகால வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
தான் ஒருபோதும் விரும்பாத வாழ்க்கையை வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் கதையாக மட்டுமன்றி, அந்த அரசியல் பாரம்பரியத்தைச் சுமப்பதற்காக அவர் செலுத்திய விலையின் கதையாகவும் இந்தச் சுயசரிதை அமைந்துள்ளது.
வெற்றியை விடத் துயரமே மேலோங்கும் இறுதிப் பக்கங்கள்..
இதனால், இந்தச் சுயசரிதையின் இறுதிப் பக்கங்கள் தவிர்க்க முடியாத ஒருவித சோக உணர்வை ஏற்படுத்துகின்றன.
79 வயதான சோனியா காந்தி தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார்.
55 வயதான ராகுல் காந்தி நான்கு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். 53 வயதான பிரியங்கா காந்தியும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
துன்பங்கள் மற்றும் இழப்புகள், வெற்றிகள் மற்றும் தோல்விகள், அரசியல் நிர்ப்பந்தங்களும் காய்நகர்த்தல்களும் நிறைந்த சூழலில், “நீதியானதும் மனிதாபிமானமிக்கதுமான ஒரு சமூகத்துக்கான” தனது அர்ப்பணிப்பை எவ்வாறு தொடர்ந்து பேணுவது என்பதே தனது முன்னால் இருந்த சவாலாக இருந்ததாக சோனியா கூறுகிறார்.
ஆனால், வெற்றிப் பெருமிதத்துடனோ அல்லது வரலாறு தன்னை ஒருநாள் நியாயப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனோ அவர் தனது நூலை முடிக்கவில்லை.
மாறாக, தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எஞ்சியிருக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளுடன் அவர் நூலை நிறைவு செய்கிறார்.
“இந்தத் தருணத்தில், நான் என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்தபோதிலும், எதிர்த்துப் போராடுவதற்காக நான் களமிறங்கிய சக்திகளைப் பின்னுக்குத் தள்ளுவதில் வெற்றிபெறவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.”
