தியோடர் வைட்டின் நிழல்: கொந்தளிப்பான அமெரிக்காவின் நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளுதல்

தியோடர் வைட்டின் நிழல்: கொந்தளிப்பான அமெரிக்காவின் நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளுதல்

~ மிலிந்த மொரகொட / வியொன் நியூஸ்

1961ஆம் ஆண்டு, அமெரிக்க ஊடகவியலாளர் தியோடர் எச். வைட் (Theodore H. White), ஜோன் எப். கென்னடி வெள்ளை மாளிகையை நோக்கிப் பயணித்த அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்த The Making of the President 1960 என்ற முக்கியமான நூலை வெளியிட்டார்.

அக்காலத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு அணுகுமுறையை வைட் கையாண்டார். தேர்தல் பிரசார உரைகள், கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளை மாத்திரம் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஒரு தேர்தலை மிகப்பெரிய தேசிய அரசியல் நாடகமாக அவர் சித்தரித்தார். ஒரு நாடு தனது அபிலாஷைகள், அச்சங்கள் மற்றும் தேசிய அடையாளம் குறித்த உணர்வுகளை எதிர்கொள்ளும் தருணமாக அந்தத் தேர்தலை அவர் பதிவு செய்தார்.

இன்றைய அமெரிக்க அரசியலை தியோடர் வைட் அவதானிக்க நேர்ந்தால், அவர் முன்னர் பதிவு செய்த அரசியல் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதொரு களத்தையே காண்பார். அமெரிக்கா தற்போது முன்னெப்போதும் இல்லாத அரசியல் நிலையற்ற தன்மையைக் கொண்ட ஒரு காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. தேர்தல்களின் மூலம் வழங்கப்படும் மக்கள் ஆணைகள் தற்காலிகமானவையாக மாறிவருவதுடன், பொதுமக்களின் கருத்து ஊசல் வியக்கத்தக்க வேகத்தில் இரு திசைகளிலும் நகர்கிறது.

2024ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் தெரிவானது, பணவீக்கம், குடியேற்றம் மற்றும் சாதாரண அமெரிக்க மக்களின் பிரச்சினைகளில் இருந்து விலகியிருப்பதாகப் பரவலாகக் கருதப்பட்ட அரசியல் அதிகார மையங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சியினால் சாத்தியமானது.

எனினும், 2026 நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்கள் மற்றுமொரு அதிரடியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதன் மூலம், ஜனாதிபதிக்கும் அவரது நிர்வாகத்திற்கும் எதிராகப் பாரிய கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த அரசியல் மாற்றத்தின் முக்கியத்துவம், எந்தவொரு அரசியல் கட்சியின் வெற்றி தோல்வியையும் தாண்டியதாகும். தேர்தல்களைத் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அதிகாரத்தைத் திருத்தியமைப்பதற்கும், தண்டனை வழங்குவதற்குமான கருவிகளாகப் பயன்படுத்துவதில் வாக்காளர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார அச்சங்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஈரானுடனான போர் மற்றும் ஆட்சிமுறை தொடர்பான கவலைகள் ஆகியவை இந்த அரசியல் மாற்றத்திற்குப் பங்களித்துள்ளன. மாற்றத்திற்கான ட்ரம்பின் வாக்குறுதியை நம்பி அவருக்கு ஆதரவளித்த வாக்காளர்கள், தற்போது அவரது நிர்வாகத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தத் தாங்கள் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளனர்.

இது அமெரிக்க ஜனநாயகத்தை நிராகரிப்பதாக அவசியம் அர்த்தப்படுத்தப்பட வேண்டியதில்லை. உண்மையில், அரசியல் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் சமநிலைப்படுத்துவதற்குமான தேர்தல் நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆற்றலை இந்த இடைக்காலத் தேர்தல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆனால், அமெரிக்காவை ஆட்சி செய்வது நாளுக்கு நாள் கடினமானதாக மாறிவருகிறது. அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பரந்துபட்ட தேசிய ஒருமித்த கருத்து தொடர்பான பாரம்பரிய எதிர்பார்ப்புகள் மறைந்து, ஆழமான அரசியல் துருவமுனைப்பு, நிறுவனங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் கணிக்க முடியாத தேர்தல் முடிவுகள் மேலோங்கியுள்ளன.

இந்தியாவுக்கு அமெரிக்காவின் அரசியல் மாற்றத்தின் முக்கியத்துவம்:

இந்தியாவைப் பொறுத்தவரையில், இது அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் முன்னேற்றம் மாத்திரமல்ல. வாஷிங்டனின் உள்நாட்டு அரசியல் இயக்கங்கள், புதுடில்லியின் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கணக்கீடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்தோ-பசிபிக் கூட்டாண்மை கணிசமான மூலோபாய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. QUAD அமைப்பின் ஊடான ஒத்துழைப்பு, பாதுகாப்புக் கூட்டாண்மைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான TRUST முன்னெடுப்பு ஆகியவை அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்களின் காலத்திலும் கட்டியெழுப்பப்பட்ட உறவைப் பிரதிபலிக்கின்றன.

எனினும், இந்த ஏற்பாடுகளின் நீடித்த தன்மை, வாஷிங்டனின் உள்நாட்டு அரசியல் சூழலால் அதிகளவில் தாக்கங்களை எதிர்கொள்ளும்.

விரிவடைந்துவரும் ஒத்துழைப்புக் கட்டமைப்பு, இந்தியா – அமெரிக்க உறவின் பரந்துபட்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. 2026 பெப்ரவரியில் இந்தியா Pax Silica அமைப்பில் இணைந்தமை, இந்த உறவுக்கு முக்கியமான தொழில்நுட்பப் பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. முக்கிய கனிம வளங்கள், குறைக்கடத்திகள் (Semiconductors) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆகிய துறைகளில் நம்பகமான கூட்டாளிகளை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட I2U2 போன்ற முன்னெடுப்புகள், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை ஒன்றிணைக்கின்றன. அதேபோன்று, முன்மொழியப்பட்டுள்ள இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (IMEC) பல்வேறு பிராந்தியங்களின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மூலோபாய நலன்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்புகள் வெவ்வேறு அபிவிருத்திக் கட்டங்களில் இருந்தாலும், இந்தியா – அமெரிக்க உறவு பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பைத் தாண்டி விரிவடைந்துள்ளது என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன.

எனினும், இந்த முன்னெடுப்புகளின் இறுதி வெற்றி, தொடர்ச்சியான அரசியல் அர்ப்பணிப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது.

2027 ஜனவரியில் புதிய காங்கிரஸ் அமர்வு ஆரம்பமாகும்போது ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியிருப்பதால், ட்ரம்ப் பிளவுபட்ட அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

காங்கிரஸ் விசாரணைகள், சட்டமியற்றும் நடவடிக்கைகளில் தடைகள் மற்றும் அரசாங்கச் செலவினங்கள் தொடர்பான மோதல்கள் ஆகியவை அவரது அரசியல் கவனத்தையும் நேரத்தையும் கணிசமாக ஆக்கிரமிக்கக்கூடும்.

வெளியுறவுக் கொள்கையில் ஜனாதிபதிக்கு கணிசமான அதிகாரங்கள் இருந்தாலும், உள்நாட்டு அரசியல் மோதல்கள் வாஷிங்டனை ஆக்கிரமித்திருக்கும்போது, ஒரே சீரான சர்வதேச நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது கடினமாகிவிடும்.

எனவே, அமெரிக்காவின் மூலோபாய உறுதிப்பாடுகள் கணிசமான அளவில் தொடர்ந்தாலும், அவற்றைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் அதன் ஆற்றல் கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழலுக்கு இந்தியா தயாராக வேண்டும்.

பொருளாதார தேசியவாதமும் வர்த்தகக் கொள்கையும்:

பொருளாதார ரீதியான விளைவுகளும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை.

2024ஆம் ஆண்டு ட்ரம்பின் வெற்றிக்கு உதவிய பாதுகாப்புவாத மனப்போக்கு (Protectionist sentiment) மறைந்துவிடவில்லை. உண்மையில், பாரம்பரிய சுதந்திர வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகும் போக்கு, அமெரிக்க அரசியலில் ஒரு கட்சிக்கு மாத்திரம் உரியதாக இல்லாமல், இரு கட்சிகளையும் தாண்டிய அம்சமாக மாறியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள காங்கிரஸ், நிர்வாகத்தின் வரி விதிப்புக் கொள்கைகளை (Tariff policies) மேலும் உன்னிப்பாக ஆராயக்கூடும். எனினும், பொருளாதார தேசியவாதத்திற்கான பரந்துபட்ட அரசியல் ஆதரவு விரைவில் குறைந்துவிடும் என்று கருதுவது தவறாகும்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் தொழில்துறைகளைப் பொறுத்தவரையில், உள்நாட்டு அரசியல் காரணிகளால் வர்த்தகக் கொள்கைகள் அதிகளவில் தீர்மானிக்கப்படும் அமெரிக்கச் சந்தையில் எவ்வாறு செயற்படுவது என்பதே முக்கிய சவாலாகும்.

பொருளாதார உறவுகளை இனிமேல் வாஷிங்டனின் அரசியல் கணக்கீடுகளிலிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்க முடியாது.

எனினும், அமெரிக்காவின் அரசியல் நிலையற்ற தன்மையை அதன் வீழ்ச்சிக்கான அல்லது மூலோபாய ரீதியான பின்வாங்கலுக்கான அறிகுறியாக புதுடில்லி கருதுவது தவறாகும்.

அமெரிக்கா இன்னமும் வலிமையான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ ஆற்றல்களைக் கொண்டுள்ளது. அதன் நிறுவனங்கள் தற்போது பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டாலும், தேர்தல் பொறுப்புக்கூறலுக்கும் அரசியல் அதிகாரத்தை மறுபங்கீடு செய்வதற்குமான வழிமுறைகளைத் தொடர்ந்து வழங்குகின்றன.

இங்கு ஒரு முக்கியமான வேறுபாடு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் அதிகார வலிமை இன்னமும் பிரமாண்டமானது. ஆனால், அதன் சர்வதேச உறுதிப்பாடுகள் எந்தளவுக்கு முன்கூட்டியே கணிக்கக்கூடியவை என்பதை இனிமேல் உறுதியாகக் கருத முடியாது.

ஒரு நாடு தனது இராணுவ மேலாதிக்கம், தொழில்நுட்பத் தலைமைத்துவம் மற்றும் பொருளாதாரச் செல்வாக்கு ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொண்டே, சர்வதேசப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் குறைந்தளவு சீரான தன்மையைக் கொண்டிருக்க முடியும்.

இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், அதிகார வலிமைக்கும் கணிக்கக்கூடிய தன்மைக்கும் இடையில் உருவாகும் இந்த இடைவெளி, வளர்ந்துவரும் புதிய உலக ஒழுங்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறக்கூடும்.

இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறை:

இந்தியாவைப் பொறுத்தவரையில், இத்தகைய நிச்சயமற்ற காலகட்டத்திற்குள் அது அனுபவமின்றிப் பிரவேசிக்கவில்லை.

வாஷிங்டனில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களுடன் செயற்பட்டதன் மூலம், இந்தியாவின் இராஜதந்திரக் கட்டமைப்பு கணிசமான நிறுவனம்சார் அனுபவத்தையும் வரலாற்று நினைவாற்றலையும் பெற்றுள்ளது.

வேறுபாடுகளைச் சமாளித்துக்கொண்டே, மூலோபாய ரீதியில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்களைப் பாதுகாப்பது எப்படி என்பதை இந்தியா கற்றுக்கொண்டுள்ளது.

இந்த அனுபவம் பெறுமதியானது. எனினும், வெளியுறவுக் கொள்கை அதிகளவில் உள்நாட்டுத் தேர்தல் கணக்கீடுகள் மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பங்களால் பாதிக்கப்படும் அமெரிக்க அரசியல் அமைப்பின் கணிக்க முடியாத தன்மையை இந்த அனுபவத்தால் முழுமையாக ஈடுசெய்ய முடியாது.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில், இருதரப்பு உறவைத் தனிநபர்களின் செல்வாக்குக்கும் ஜனாதிபதிகளின் பதவிக்காலச் சுழற்சிகளுக்கும் அப்பால் நிறுவனமயப்படுத்துவதே முக்கியமான பாடமாகும்.

காங்கிரஸின் இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள், மாநில அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் மூலோபாய ஆய்வுச் சமூகங்கள் எனப் பல்வேறு தரப்புகளுடனான தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு, தேர்தல் சுழற்சிகளைக் கடந்தும் நிலைத்திருக்கக்கூடிய ஆதரவுத் தளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அதேவேளை, தவிர்க்க முடியாத மூலோபாயக் கூட்டாளியாக அமெரிக்காவைத் தக்கவைத்துக்கொண்டே, ஏனைய நாடுகளுடனான தனது கூட்டாண்மைகளையும் இந்தியா தொடர்ந்து பன்முகப்படுத்த வேண்டும்.

தியோடர் வைட் புரிந்துகொண்ட அமெரிக்க ஜனநாயகம்:

ஒரு தேர்தல் என்பது பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டி மாத்திரமல்ல என்பதை தியோடர் வைட் புரிந்துகொண்டிருந்தார். ஒரு நாடு தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் தருணமே தேர்தல் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தல்களை ஒன்றாக நோக்கும்போது, தனது பொருளாதார அச்சங்கள், அரசியல் பிளவுகள் மற்றும் உலகளாவிய அபிலாஷைகளைச் சமநிலைப்படுத்துவதற்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டையே அவை வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்த அரசியல் ஏற்ற இறக்கங்களைக் கொண்டாடுவதோ அல்லது கவலைப்படுவதோ அதன் பணியல்ல. அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாராவதே முக்கியமானதாகும்.

அமெரிக்காவுடனான உறவு தொடர்ந்து தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். எனினும், அந்த உறவை இனிமேல் அதிகளவிலான மூலோபாய யதார்த்தவாதத்துடன் (Strategic Realism) கையாள வேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் ஜனநாயக அரசியல் நாடகத்தை தியோடர் வைட்டின் நிழல் இன்னமும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடும்.

ஆனால், ஒரு காலத்தில் அந்த அரசியல் நாடகத்திற்கு நம்பிக்கையூட்டும் திசையைக் கொடுத்த தேசிய ஒருமித்த கருத்தின் ஸ்திரத்தன்மையை அவரால் இப்போது அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *