~ எட் ஹேபர்ஷன் (பிபிசி)| ஜொகன்னஸ்பேர்க்கிலிருந்து
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா நிறவெறி ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்து ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் சென்றதிலிருந்து இதுவரை காலத்தில், உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) இதுவரை இல்லாத அளவுக்குப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவை அக்கட்சியே “பேரழிவானது” என வர்ணித்துள்ளது.
நாட்டின் அனைத்துக் கட்சிகளையும் விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த வாக்குகளில் ANC வெறும் 31 சதவீதத்தையே பெற்றுள்ளது. இது 2021ஆம் ஆண்டு பெற்ற 46 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியாகும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சி பெற்ற 65 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடும்போது இது மிகப் பெரிய சரிவாகும்.
மாகாணங்களிலும் நகரங்களிலும் அக்கட்சியின் வீழ்ச்சி தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான லிம்போபோவில் மட்டுமே ANC பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆறு மாகாணங்களில் அக்கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தது.
அதேபோன்று, எட்டு முக்கிய நகரங்களில் இரண்டில் மட்டுமே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஆறு நகரங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றிருந்தது.
ஒட்டுமொத்த வாக்குகளில் 25 சதவீதத்தைப் பெற்று ஜனநாயகக் கூட்டணி (DA) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேப் டவுன் நகரின் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டையும் அக்கட்சி தக்கவைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவின் எம்.கே. கட்சி (MK) 10 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் டர்பன் நகரில் ANCயைத் தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளது.
ஜூலியஸ் மலேமா தலைமையிலான பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி (EFF), ஒரு காலத்தில் ANCக்கு வலுவான சவாலாகக் கருதப்பட்ட நிலையில், இம்முறை ஆறு சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
“இது ANCக்கு மிகவும் பேரழிவான தேர்தல் முடிவாகும். இந்தப் பேரழிவு வரப்போகிறது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அதை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலைச் சந்தித்தபோது எமது மக்களின் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக இருந்தது. நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் ANCக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபிக்கிலே ம்பாலுலா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு எண்ணும் நிலையத்துக்குச் சென்ற தென்னாபிரிக்க ஜனாதிபதியும் ANC தலைவருமான சிரில் ரமபோசா, தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:
“மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது எவ்வளவு கவலையளிப்பதாக இருந்தாலும், தென்னாபிரிக்காவின் நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் வாழும் மக்கள் தமது கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். அதுவே அவர்களின் தீர்ப்பாகும். அதனை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வீழ்ச்சி கவலையளிக்கிறது. இதனை அப்படித்தான் நான் வர்ணிப்பேன்” என்றார்.
1994ஆம் ஆண்டு நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியத் தேர்தலில் ANC முதன்முறையாக நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கம் (Government of National Unity – GNU) என்ற கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் தொடர்ச்சியான வீழ்ச்சியையே வெளிப்படுத்துகின்றன.
இந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் நகர்ப்புறங்களில் ஜனநாயகக் கூட்டணி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றிருந்தாலும், அதன் ஒட்டுமொத்த வாக்கு வீதம் சிறிய அளவிலேயே அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு பெற்ற 22 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், 2016ஆம் ஆண்டு பெற்ற 27 சதவீதத்தைவிட இது குறைவாகும்.
கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தேர்தல் நடைபெற்றதால் 2021ஆம் ஆண்டு வாக்களிப்பு வீதம் 46 சதவீதமாக இருந்தது. இம்முறை அது 52 சதவீதமாக அதிகரித்துள்ளது.
“இந்தத் தேர்தல் ANCக்கு மிக மோசமான செய்தியொன்றை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மட்டத்திலும், மாநகர சபை மட்டத்திலும் அக்கட்சி வீழ்ச்சியடைந்து வருகிறது. மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போதும், ANCக்கான ஆதரவு அனைத்துப் பகுதிகளிலும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகிறது” என்று அரசியல் ஆய்வாளர் சூசன் பூய்சன் தெரிவித்தார்.
இந்த ஆதரவு வீழ்ச்சிக்கான முக்கிய காரணம், நாடு முழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அடிப்படைச் சேவைகளின் மோசமான நிலையும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுமே என அவர் சுட்டிக்காட்டினார்.
குடிநீர் விநியோகம், மின்சாரம், கழிவுநீர் அகற்றல் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட துறைகளில் நிலவும் பிரச்சினைகள் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன.
“இவை மிகப் பெரிய பிரச்சினைகள். புறநகர்ப் பகுதிகள், நகர்ப்புறக் குடியிருப்புகள் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை இந்தப் பிரச்சினைகள் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளன” என்று பூய்சன் குறிப்பிட்டார்.
ANCக்கு எதிர்காலத்தில் காத்திருக்கும் சவால்கள் இதைவிடவும் கவலைக்குரியவையாக உள்ளன. ரமபோசாவின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு அக்கட்சி புதிய தலைவரைத் தெரிவுசெய்யவுள்ளது.
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த தேசியத் தேர்தல் வரை ரமபோசா நாட்டின் ஜனாதிபதியாகத் தொடரவுள்ளார். எனினும், கட்சித் தலைமைத்துவத்துக்கும் ஜனாதிபதிப் பதவிக்கும் அவருக்குப் பதிலாக வரக்கூடிய வலுவான வேட்பாளர்கள் அதிகளவில் தென்படவில்லை.
“தென்னாபிரிக்காவில் விடுதலை இயக்கங்களின் ஆதிக்கம் செலுத்திய அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. நிறவெறி ஆட்சி முடிவடைந்த பின்னர் விடுதலை இயக்கங்கள் அரசியலில் செலுத்திய ஆதிக்கமும் முடிவுக்கு வருகிறது” என்று அரசியல் ஆய்வாளர் வில்லியம் குமேடே தெரிவித்தார்.
“2029ஆம் ஆண்டளவில் ANC நாட்டின் மிகப்பெரிய கட்சியாக இருப்பதற்குப் பதிலாக இரண்டாவது பெரிய கட்சியாக மாறக்கூடும். கட்சிக்குள் நீண்டகால உள்மோதல்களும் அதிகாரப் போட்டிகளும் தீவிரமடையலாம். இது தென்னாபிரிக்க அரசியலுக்கும் ANCக்கும் ஒரு புதிய சகாப்தமாக அமையும்” என்றும் அவர் கூறினார்.
இந்தத் தேர்தலில் வாக்களிப்பு முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரியமாக வெள்ளையின மக்களின் வாக்குகளைப் பெருமளவில் பெற்றதால் “வெள்ளையர்களின் கட்சி” என அறியப்பட்ட ஜனநாயகக் கூட்டணி (DA), இம்முறை கறுப்பின மக்களின் வாக்குகளையும் அதிகளவில் பெற்றுள்ளது.
“தென்னாபிரிக்காவில் இன அடிப்படையிலான வாக்களிப்பு முறை மாறி, இன வேறுபாடுகளைக் கடந்த வாக்களிப்பு முறையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று வில்லியம் குமேடே மேலும் தெரிவித்தார்.
தற்போது தென்னாபிரிக்கா பல நாட்கள் நீடிக்கக்கூடிய உள்ளூராட்சி அரசியல் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்ளவுள்ளது.
குறிப்பாக, நாட்டின் பொருளாதார மையமாக விளங்கும் கவுடெங் மாகாணத்தின் மூன்று முக்கிய மாநகர சபைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. ஜொகன்னஸ்பேர்க் மற்றும் பிரிட்டோரியா நகரங்களின் நிர்வாக அதிகாரத்திலிருந்து ANC முற்றாக வெளியேற்றப்படும் நிலையும் ஏற்படக்கூடும்.
“தென்னாபிரிக்கா இப்போது கூட்டணி அரசியல் நாடாக மாறியுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக ANC அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், சமூகத்தை மேம்படுத்துவதற்காக அந்த அதிகாரத்தை அக்கட்சி முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதே வாக்காளர்களின் கருத்தாக உள்ளது.
எனவே, தேசிய மட்டத்திலோ, மாகாண மட்டத்திலோ அல்லது தற்போது உள்ளூராட்சி மட்டத்திலோ ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளை மக்கள் இனியும் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகின்றனர்” என்று குமேடே தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய வேண்டும்.
