“நீங்கள் வேறு. நாங்கள் வேறு“- இன்னும் ஏன் கள்ள மௌனம்?

“நீங்கள் வேறு. நாங்கள் வேறு“- இன்னும் ஏன் கள்ள மௌனம்?

~ கருணாகரன்

தீண்டாமைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்ட அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நடக்கின்றன. இடதுசாரியத் தோழர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் அன்றைய போராட்டச் சூழலும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைப் பற்றியும் நினைவு கொண்டும்  பேசப்படுகிறது. இது அவசியமானது. ஒரு காலகட்டத்தின் முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை, அந்த வரலாற்றுச் சூழலில் வைத்து விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் முக்கியம். அப்போதுதான் அதனுடைய பெறுமானம் என்ன என்று புரியும். மட்டுமல்ல, அன்றைய அந்தப் போராட்டத்தின் விளைவுகள் இன்று எத்தகைய சாதக பாதகங்களை உருவாக்கியுள்ளன?இன்றைய நிலையில் அந்தப் போராட்டத்தை எப்படித் தொடரலாம்?அல்லது அதற்கான தேவை எந்த அளவி்ல் உள்ளது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அன்று (1960 களில்) இடதுசாரிகளே முன்னெடுத்திருந்தனர். அந்தப் போராட்டத்தை ஒடுக்கி, முறியடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் ஆதிக்க சாதியினரால் மேற்கொள்ளப்பட்டன. அதையெல்லாம் கடந்தே தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட முன்னணித் தோழர்களில் சிலர் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். சிலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அவையெல்லாம் பல நூல்களில் சாட்சியங்களோடும் சான்றுகளோடும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சுதந்திர இலங்கையில் நடந்த முதலாவது வெகுசன எழுச்சிப் போராட்டமாக அந்தப் போராட்டமே இருந்திருக்கிறது. அது சமூக அசமத்துவத்துக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகத்தில் நடந்த ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உள்ளது. ஆகவே அந்தப் போராட்டத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. என்பதால்தான் அந்தப் போராட்டம் இன்று கவனப்படுத்தப்பட்டுப் பேசப்படுகிறது, மற்றும்படி பழைய கதைகளைப் பேசுவதற்கோ, அன்றைய பெருமைகளை நினைவு கொள்வதற்கோ அல்ல. சமவேளையில்  அன்றைய அந்தப் போராட்டங்கள் உருவாக்கிய மாற்றங்கள், அசைவுகளுக்குப் பிறகு, சாதிய நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் – முன்னேற்றங்கள் என்ன? இன்றைய நிலைவரம் என்ன?இன்றுள்ள சாதிய நிலைமைகள், நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி? போன்ற விடயங்களும் இந்த அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்ச்சிகளில் பேசப்படுகிறது. ஆனால் இவற்றைக் குறித்து பெருந்திரள் ஊடகங்களில் எந்தச் சேதிகளையும் காணவில்லை. தமிழ் அரசியற் தரப்புகளிடத்திலும் இவற்றைப் பற்றிய அக்கறைகள் இல்லை. தமிழ் அரசியல் பத்தியாளர்களும் இவற்றைப் பற்றி மூச்சு விடாமல், கனத்த அமைதியைப் பேணுகின்றனர். ஆக ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பு வெளிப்படையாகவே நடக்கிறது. இதொன்றும் ஆச்சரியமானதல்ல. சாதிய மனோநிலை உள்ளவரை இப்படித்தான் நடக்கும். 1960 களில் நிலைமை எப்படி இருந்ததோ அப்படித்தான் இந்த உளநிலை உள்ளது. அன்று தமிழரசுக் கட்சியும் அதனை ஆதரித்த தரப்புகளும் ஊடகங்களும் இந்தப் போராட்டங்களையும் இந்தப் பிரச்சினையையும் எப்படிப் பார்த்தனவோ அப்படித்தான் இன்றும் ஏனைய கட்சிகளாலும் தரப்புகளாலும் பார்க்கப்படுகிறது. ஆக புற நிலையில் சில மாற்றங்கள் மேற்படி போராட்டங்களால் நிகழ்ந்திருந்தாலும் அகநிலையில் பெரிய அளவில் மாற்றமோ முன்னேற்றமோ நிகழவில்லை.

வெளியே இன ஒற்றுமை பற்றித் தாரளமாகப் பேசினாலும் உள்ளே “நீங்கள் வேறு. நாங்கள் வேறு“ என்ற பிரிகோடுகள் தாராளமாகப் பரிபாலிக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்து, ஊர்களை விட்டு, உறவுகளை இழந்து, அகதியாகி, ஏதிலியாகி அலைந்து திரிந்ததற்குப் பிறகும் புத்தி தெளியவில்லை. சித்தம் கூடவில்லை என்றால் என்னதான் செய்வது?அப்படியென்றால் நம்முடைய தேசியவாத உணர்வு எத்தகையது?அதனுடைய அடிப்படை எப்படியானது? சாதி, பிரதேச, பால், வர்க்க,மத   வேறுபாடுகளைப் பேணிக்கொண்டே ஒரு தேசியவாதத்தை முன்னெடுக்க முடியுமா? அது மெய்யான விடுதலையைத் தருமா?

எனவே, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களின் அடுத்த கட்டத்தைப் பற்றிய சிந்தனையை இன்றைய யதார்த்தங்களோடும் தேவைகளோடும் இணைத்து நாம் உருவாக்க வேண்டும். அந்தப் போராட்டத்திற்கான தேவை, அதனுடைய வடிவம், அதில் மக்களுடைய பங்கேற்புகள், அதனுடைய வழிநடத்தல் பண்பு,அதற்கான தலைமைத்துவம், அந்தத் தலைமைத்துவத்தின் பண்பும் பொறுப்பும் எனப் பலதையும் குறித்துச் சிந்திக்கவும் பேசவும் வேண்டியுள்ளது.  

இந்த இடத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களையும் இன்றைய யாழ்ப்பாணச் சமூகச் சூழலையும் இணைத்து சமூக ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் எழுதியுள்ள கட்டுரை கவனத்துக்குரிய ஒன்று. அகிலன் தன்னுடைய கட்டுரையில் வட்டுக்கோட்டைப் பகுதியை சான்றாக்கி, அங்கே தற்போதும் நடைமுறையிலுள்ள சாதியப் பாகுபாடுகளையும் அதற்கு அனுசரணையாக உள்ள உள்ளுர் நிர்வாக குறைபாடுகள் – தவறுகளையும் (உண்மையில் இவை குற்றங்களே) ஆதாரப்படுத்துகிறார். அகிலன் குறிப்பிட்ட வட்டுக்கோட்டையில்தான் தனித் தமிழீழத்துக்கான பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களும் அங்கங்கே நடத்தப்படுகின்றன. தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்கான சாத்வீக வழி, ஆயுத வழிப் போராட்டங்களும் நடந்துள்ளன. ஆனால்,சாதியத்தைப் பற்றியோ, அதனுள் புதைந்திருக்கும் நீதியின்மையைக் குறித்தோ, அதனுள் வைத்துப் பேணப்படும் அசிங்கங்களைப் பற்றியோ தமிழீழப் பிரகடன ஆதரவாளர்கள் பேசுவதேயில்லை. தங்களின் காலடியிலும் நெஞ்சுக்குள்ளும் உள்ள ஒரு சமூகவியல் பிரச்சினையை – அசமத்துவத்தை – நீதியின்மையைப் பற்றிப் பேசாமல் எப்படி இவர்களால் தவிர்க்க முடிகிறது?

என்பதால்தான் தமிழீழப் பிரகடனம் நினைவு கொள்ளப்படும் இன்றைய சூழலில், அதற்குப் பத்து ஆண்டுகள் மூத்த தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. இது ஒன்றும் ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள் அல்ல. நம்முடைய சமூகச் சூழல் இன்னமும் வளர்ச்சியடையாமலே உள்ளது. ஜனநாயக விழுமியங்கள், அடிப்படை உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான இடமும் இன்னமும் போதாத நிலையிலேயே உள்ளன என்பதை ஆதாரப்படுத்திப் பேச வேண்டியுள்ளது. 

அகிலன் கதிர்காமர், கள ஆய்வுப் பணியாளராக திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்களும் கவனத்துக்குரிய விடயங்களும் பல. அவற்றைப் போல ஒரு சமூகச் செயற்பாட்டாளராக என்னுடைய அவதானங்களும் நேரடி அனுபவங்களும் ஏராளமானவை. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் பிரயோக நிலையில் உள்ள சாதிய வேறுபாடுகளும் புறக்கணிப்புகளும் சாதிய அதிகார – ஒடுக்குமுறைகளும் மிக மோசமானவை. அங்குள்ள கோயில்களில் இன்னும் தீண்டாமை நிலவுகிறது. சமூகத்தில் பல நிலைகளிலும் சாதிய வேறுபாடுகளின் அடிப்படையில்தான் விடயங்கள் கையாளப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதேச வேறுபாடுகள் (ஈழத்தமிழர் – மலையகத் தமிழர் என்ற அடிப்படையில்) பராமரிக்கப்படுகின்றன. அரச திணைக்களங்களிலும் கூட மறைமுகமாக இந்த வேறுபாடுகளின் பிரதிபலிப்பைக் காண முடியும். நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி, தேவைகளை இனங்காணுதல், பிரதிநிதித்துவம் எனப் பலவற்றிலும் இதனை அவதானிக்கலாம். 

இங்கே சில கேள்விகள் எழுகின்றன. தமிழ்த்தேசியவாத உரையாடல்களில் சமூக அசமத்துவ நிலைமையைக் குறித்து ஏன் பேசப்படுவதில்லை?சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிய இன்றைய சமூகப் புரிதல் என்ன? இளைய தலைமுறையின் உணர்வுகளும் நிலைப்பாடும் எத்தகையதாக உள்ளது? பெருந்திரள் ஊடகங்களின் பார்வை என்ன? தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இந்த அசமத்துவத்துக்கு எதிராக எத்தகைய நிலைப்பாட்டையும் வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கின்றனர்? பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், தமிழ் சிவில் அமைப்புகள், மத நிறுவனங்கள் அல்லது மதத் தலைமைகள் போன்றவை இந்த அநீதியைக் குறித்து என்ன வகையான நிலைப்பாட்டுடன் உள்ளன?

“இவற்றைத் தொடர்ந்து பேசுவதால்தான் இந்தப் பிரச்சினை இன்னும் உயிர்ப்பிக்கப்படுகிறது” என்று சொல்வோரும் வாதிடுவோரும் உள்ளனர். “இவற்றைப் பேசாமல் விட்டால் அடுத்து வரும் சில பத்து ஆண்டுகளில் இந்த வேறுபாடுகளும் அநீதியும் ஒழிந்து விடும்” என்பது அவர்களுடைய நம்பிக்கை. நடைமுறையில் பிரச்சினைகளை எதிர்கொள்வோருக்குத்தான் தெரியும் அவற்றின் கனதியும் தீவிரமும் வலியும். இன ஒடுக்குமுறையின் வலியும் தீவிரமும் குரூரமும் எப்படி நமக்கு வலியாகவும் நீதியின்மையாகவும் உணரப்படுகிறதோ அப்படித்தான் சாதிய ஒடுக்குமுறையும் அதன் அநீதியும் இருக்கும்; இருக்கிறது. ஒன்றினால் ஒன்றை மறைத்து மூடிவிட முடியாது. ஒன்றை நிராகரித்து ஒன்றை ஏற்க முடியாது. எழுத்தாளர் கே. டானியல் 40 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது, இங்கே கவனப்படுத்தப்பட வேண்டியது. “சாதிய ஒடுக்குமுறையையும் வர்க்க வேறுபாட்டையும் பேணிக் கொண்டு இனவிடுதலையைப் பெற முடியாது. அது சாத்தியப்படப்போவதில்லை” என்பதை. வரலாறு அதை நிரூபித்திருக்கிறது.

இன்று தமிழீழமும் கிடைக்கவில்லை. சாதியப் பிரச்சினைகளும் தீரவில்லை. ஆனால், இரண்டுக்குமான போராட்டங்கள் நடந்துள்ளன. அரை நூற்றாண்டு கடந்து விட்டது? நாம் கற்றது என்ன? பெற்றது என்ன? இது அகத்தையும் புறத்தையும் திறந்து வேலை செய்ய வேண்டிய புதிய காலச் சூழல். அந்தக் காலச் சூழல் அழைக்கிறது,உண்மையான விடுதலையாளர்களை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *