(நன்றி: டெய்லிமிரர்)
ஊடகச் செய்திகளை நம்புவதானால், நாட்டின் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக 1983ஆம் ஆண்டு அரசின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின்னர், 1983 கறுப்பு ஜூலைக் கலவரங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு (PSC) ஒன்றை நியமிக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் (NPP) பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரேரணையை முன்மொழிந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவ்வளவு காலம் தாமதித்தாவது விசாரணைக்கு முன்வந்தமைக்காகத் தமிழ்ச் சமூகம் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்க மாட்டார்கள் என நம்புவோம்.
முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துவோம். 1983 ஜூலையில் நடந்தது ஒரு கலவரம் அல்ல.
அன்றைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களான சிங்களக் கும்பல்கள், தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் முகவரிப் பட்டியல்களைக் கையில் வைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று தமிழ் மக்களைக் கொலை செய்தும் தாக்கியும் வந்தனர். அவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்தனர். உடைமைகளைக் கொள்ளையடித்தனர். வர்த்தக நிலையங்களை அழித்தனர்.
நாட்டின் பொலிஸாரும் ஆயுதப்படையினரும் (இவர்களை மாவீரர்கள் என ஜனாதிபதி திசாநாயக்க அழைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் விரும்புகிறார்) இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு செயலற்ற நிலையில் நின்றனர். பல சந்தர்ப்பங்களில், வன்முறைக் கும்பல்களை மேலும் தூண்டிவிட்டனர்.
நாட்டின் அன்றைய ஜனாதிபதி, தனது நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைத் தடுத்து நிறுத்த எதுவுமே செய்யவில்லை. அவர் பேச முற்பட்டபோதுகூட, தமிழர்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகளைக் கண்டிக்கவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கவோ இல்லை.
மாறாக, சிங்கள மக்கள் “தூண்டி விடப்பட்டதன்” எதிர்வினையாகவே தமிழ்ச் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றதாக அவர் வர்ணித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளை, பெரும்பான்மை மக்களின் தன்னிச்சையான கூட்டு ஆத்திர வெளிப்பாடாகச் சித்தரித்து, இனப்படுகொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான முயற்சியாகவே இது அமைந்தது.
அந்த இனப்படுகொலையின் நேரடிப் பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம் அல்லது மரணத்தின் விளிம்பில் இருக்கலாம். பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதமேந்திப் போராடிய அமைப்புகளின் ஆரம்பகாலத் தலைவர்களும் இன்று உயிருடன் இல்லை.
அன்றைய தமிழர் சனத்தொகையில் சுமார் நான்கில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு வெளியேறினர். தங்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் வழங்கிய நாடுகளின் குடிமக்களாக இன்று அவர்கள் வாழ்கின்றனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை யார் திட்டமிட்டு, யார் நடைமுறைப்படுத்தினார்கள் என்பது உலகம் முழுவதற்கும் தெரியும். சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் அல்லது தமிழர்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இலங்கையர்களான நம் அனைவருக்கும் அது தெரியும்.
இந்த இனப்படுகொலை நமது நாட்டின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி இன்றுவரை நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் – அதாவது இன அடிப்படையில் நிரந்தரமான பிளவு ஒன்றை நாட்டில் உருவாக்கியதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் – எத்தனை விசாரணைகளை நடத்தினாலும் நாம் என்றென்றும் அறியாமையிலேயே இருக்க வேண்டியதுதான். நாம் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதில்லை போலும்.
இப்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால், NPP அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான், 1983ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘கலவரங்களின்’ பின்னணிக் காரணங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை திடீரென முன்வைக்கப்படுகிறதுஅதற்கு என்ன காரணம் என்பதாகும்.
தமிழ் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளார்களா? அந்த வன்முறைகள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய பேரழிவு குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்களா? அல்லது நாட்டு மக்களிடையே நிரந்தரமான இனப் பிளவை அது உருவாக்கிவிட்டது என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
அல்லது, அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்கான ஒரு தந்திரமா இது?
இன்று சராசரி மாதச் சம்பளம் 35,000 ரூபாவுக்கும் 50,000 ரூபாவுக்கும் இடைப்பட்டதாகவே உள்ளது. ஆனால், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு (தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள்) நாளொன்றுக்கு இரண்டு சத்தான உணவுகளை வழங்குவதற்கே மாதம் குறைந்தது சுமார் 100,000 ரூபா தேவைப்படுகிறது. இதில் ஆடைகள், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற ஏனைய செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆச்சரியப்படத்தக்க வகையில், எமது பாடசாலை மாணவர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் போஷாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தகவல்களின்படி, நாட்டின் சனத்தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.
இத்தகைய நிலைமையிலும் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கோதுமை மாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு அதிரடியாக 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிப்பது குறித்து இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பேசிக்கொண்டிருக்கிறது.
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தத் தவறியதால் அரசாங்கம் எதிர்கொள்ளும் அவமானத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு ஒரு புதிய விவகாரம் தேவைப்படுவதாகத் தெரிகிறது.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரங்களை மீண்டும் தோண்டியெடுத்து, வாழ்க்கைச் செலவுச் சுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதற்கான இந்த யோசனையை முன்வைத்த அந்த வக்கிரமான சிந்தனை யாருடையது?
எல்லா மக்களையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிவிட முடியாது.
செம்மணி மனிதப் புதைகுழி எனக் கூறப்பட்ட இடம் திடீரென ஒரு சாதாரண பழைய மயானமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை நாம் நேரில் கண்டோம்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை முடிவில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே கூறியது சரியானதே என்ற முடிவுக்குக்கூட வரக்கூடும்.
1983ஆம் ஆண்டின் ‘கறுப்பு ஜூலை’ விரைவில் ‘வெள்ளையடிக்கப்பட்ட ஜூலை’யாக மாற்றப்பட்டுவிடலாம்!
