வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும் தொடரும் சவால்களும்

வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும் தொடரும் சவால்களும்

~ வீரகத்தி தனபாலசிங்கம் 

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில்  நடுப்பகுதியில் இலங்கையின் வடபகுதியில் அமைதி நிலவிய நிலப்பரப்புக்கு அடியில் ஒரு பெரும் சமூகக் கொந்தளிப்பு புகைந்து கொண்டிருந்தது. ‘கற்றறிந்தோரின்  மண்’ என்று  புகழப்பட்ட  யாழ்ப்பாணத்தின் திரைக்குப் பின்னால் தீண்டாமை எனும் கொடூரமான நச்சு மரம் வெகு ஆழமாக வேரூன்றியிருந்தது. 

ஒரு மொழியைப் பேசி, ஒரே தெய்வத்தை வழிபட்ட ஒரு சமூகத்தின் பெரும்பகுதியினர் பிறப்பின் பெயரால் மட்டுமே ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று ஒதுக்கப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட அடிமைகளாக வாழ்ந்தனர். இந்த நெடுங்கால அநீதிக்கு எதிராக ஒரு தலைமுறை அதன் மௌனத்தைக் கலைத்து நிமிர்ந்து நிற்கத் தொடங்கிய வரலாற்றுச் சந்திப்புத்தான் அந்த அறுபதுகள்.

ஆலயங்களுக்குள் பிரவேசிக்கத் தடை, பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளத் தடை, உணவகங்களில் சமமமாக அமரத் தடை, பாடசாலை அனுமதிகளில் பாகுபாடு, ஏன்…. நல்ல உடைகளை அணியவோ, செருப்பை அணியவோ கூட உரிமையற்ற ஒரு கொடிய ஒரு சமூக அமைப்பு அங்கு ஆதிக்கம் செலுத்தியது. உயர்சாதி மேலாதிக்க மனோபாவம் சாதி ஒடுக்குமுறையை அதன்  இயல்பான உரிமையாகவே கருதியது.

ஆனால், இந்த வன்முறைக்கும் அவமானத்துக்கும் எதிராக குமுறிக் கொண்டிருந்த அடிநிலை மக்களின் சீற்றம் ஒரு தீப்பொறிக்காக காத்திருந்தது. 1966 ஆம் ஆண்டையொட்டி இடதுசாரி இயக்கங்களின் வழிகாட்டலுடனும் ஒடுக்கப்பட்ட மக்களின் 

சொந்த விழிப்புணர்வுடனும் அந்த தீப்பொறி இறுதியாகப் பற்றிக்கொண்டது.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் எழுச்சியோடு வடக்கின் வீதிகளும் கோயில் வாசல்களும் சமூக நீதிக்கான போராட்டக் களங்களாக மாறின. தேநீர்க்கடை மற்றும் ஆலயப் பிரவேசப் போராட்டம் போன்றவை வரலாற்றுத் திருப்புமுனைகளாக அமைந்தன.

நெஞ்சில்  வீரியத்தைச் சுமந்து கொண்டு “நாங்களும் மனிதப் பிறவிகளே” என்று முழக்கமிட்டபடி கோயில்களினதும் உணவகங்களினதும் வாசல்களை நோக்கிச் சென்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சக்திகள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. இரத்தமும் கண்ணீரும் சிந்தப்பட்டாலும், அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைத்தெறியும் அந்தப் போராட்டம் பின்வாங்கவில்லை. அதுவே அதற்குரரிய பிரத்தியேகமான அடையாளமாகும்.

அந்தக் கிளர்ச்சி வெறும் சமூகப் போராட்டம் மட்டுமல்ல, வட இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கலாசார வரைபடத்தையே தலைகீழாக மாற்றிப்போடப்  புறப்பட்ட ஒரு புரட்சிகரப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. சாதிய மேலாதிக்கத்தின் அடித்தளத்தை உலுக்கிய அந்த எழுச்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் துணிச்சலையும்  சுயமரியாதையையும் கற்றுக் கொடுத்தது.

அறுபது வருடங்களுக்கு முன்னர் சிந்தப்பட்ட அந்த இரத்தமும் அவர்கள் எழுப்பிய சுதந்திரக் குரலுமே இன்றைக்கும் வடக்கில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வின் அழியாத வரலாற்றுச் சுவடுகளாக நிலைத்து நிற்கின்றன.

 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் அண்மையில்  கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய  ‘யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறையும் போராட்டங்களும்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்று   ‘1966 ஆம் ஆண்டு  சாதிக்கொடுமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டமே  காலனித்துவ ஆட்சியின் முடிவுக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் முதல் ஆயுதப் போராட்டமாகும். 

“தென்னிலங்கையில் 1971 ஆம், 1988 ஆம் ஆண்டுகளில் நடந்த இரு ஆயுதக் கிளர்ச்சிகளும் வடக்கு, கிழக்கில் உள்நாட்டுப் போராக மாறிய தமிழ்ப் போராளி  இயக்கங்களின்  ஆயுதப் போராட்டமும் பாரியளவில் உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் வழிவகுத்த போதிலும், 1960 களின் பிற்பகுதியில் இடம்பெற்ற சமூக நீதிக்கான போராட்டம் தீண்டாமையின் கொடுமையை பெருமளவுக்கு ஒழித்த   உறுதியான முடிவோடுதான் முடிவுக்கு வந்தது.”

இலங்கைத் தமிழர்களின் சமூக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் (ஒக்டோபர் எழுச்சியின்) அறுபதாண்டு நினைவு அதற்கேயுரிய முக்கியத்துவத்துடன் வடக்கில் அனுஷ்டிக்கப்படவில்லை  என்ற போதிலும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் இன்றைய வடக்கு தமிழர் சமூகத்தில் சாதியப் பாகுபாடுகளின் நிலையையும் ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களுக்கு பொதுவில் இடதுசாரி இயக்கங்களின் ஒருமைப்பாடும் ஆதரவும் இருந்த போதிலும், காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு ) தான் தீர்க்கமான வழிகாட்டலையும் தலைமைத்துவத்தையும் வழங்கியது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அமைப்புக்கள் பலவற்றையும் உள்ளடக்கியதாக இருந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. 

சமூக அநீதிகளுக்கு எதிராக பல கால கட்டங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தைக் கையில் எடுத்த பின்னர் மாத்திரமே அதற்கு மார்க்சிய அடிப்படையிலான தத்துவார்த்த வழிகாட்டலும் அமைப்பு ரீதியான வலுவும் கிடைக்கப்பெற்றது. சாதிய ஒடுக்குமுறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஜனநாயக உரிமை சார்ந்த பிரச்சினை என்ற தெளிவான அரசியல் பார்வையை சண்முகதாசன் தலைமையில் அவரது கட்சியின் வடபகுதி தோழர்கள்  வகுத்தனர்.

ஆதிக்க சாதியினருக்கு வெளிப்படையாக ஆதரவாகச் செயற்பட்ட பொலிசாரின் அடக்குமுறைகளையும் கைதுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்த போதிலும், மக்கள் அச்சமின்றி தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற புரட்சிகர உணர்வை  விளிம்புநிலை மக்களிடையே சண்முகதாசன் விதைத்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்  வழிகாட்டலில் 1966 ஒக்டோபர் 21 அன்று சுன்னாகத்தில் இருந்து யாழ்நகர் நோக்கி மிகப்பெரிய சாதி ஒழிப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள், இடதுசாரி இயக்க உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள் என்று பல தரப்பினரும் கலந்துகொண்ட அந்த எழுச்சிப் பேரணி வடக்கு தமிழர்களின் சமூக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இயல்பாகவே அது பொலிசாரின் அடக்குறைக்கு உள்ளானது. 

இந்த எழுச்சியைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்டில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட கோயில் பிரவேசப் போராட்டம் உட்பட பல போராட்டங்களை  வடபகுதி கண்டது. காலஞ்சென்ற  கே.டானியல் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் தங்களது இலக்கியப் படைப்புக்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் அனுபவங்களை வெளிப்படுத்தி சாதிய ஒடுக்குமுறை குறித்த விவாதங்களை சமூகத்திலும் இலக்கியப் பரப்பிலும் விரிவுபடுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

அதேவேளை, இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் கோலோச்சிய மிதவாத தலைவர்களும் அவர்களின் கட்சிகளும் சமூகநீதியைப் பொறுத்தவரை, சமபந்திப் போசனம் போன்ற  சம்பிரதாயபூர்வமான சில நடவடிக்கைகளைத் தவிர, சமூகநீதிப் போராட்டங்களில் அக்கறை காட்டவில்லை என்பது மறக்கமுடியாத வரலாற்று உண்மையாகும். 

யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய தீவிர சாதியப் பாகுபாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் அவர்கள் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான நியாயமான குரல்களை தமிழ்த் தலைவைர்கள் பெரும்பாலும் உதாசீனப்படுத்தினர் என்றுதான் கூறவேண்டும். தங்களது வர்க்க மற்றும் சாதியக் கட்டமைப்புக்குள் தங்களது அரசியல் பலத்தையும் செல்வாக்கையும்  பேணிக்காக்க முற்பட்ட மிதவாதத் தலைவர்கள் சாதி ஒழிப்புப் போராட்டங்களை ஆதரிக்கத் தவறியதுடன் விளிம்புநிலை மக்களின் சமூக விடுதலையை தங்களது அரசியல் தளத்தில் ஒருபோதும் பிரதானப்படுத்தவுமில்லை.

பிற்காலத்தில் உருவான தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமிழ்த் தேசிய விடுதலையை முதன்மையாக முன்னிறுத்தின. அவற்றுள் பெரும்பாலான இயக்கங்கள் சாதியப் பாகுபாடுகள் குறித்த பிரச்சினைகளை மேலோட்டமாகவே பார்த்தன அல்லது தமிழ்த் தேசிய விடுதலைக்குப் பிறகு தீர்க்கப்பட வேண்டிய இரண்டாம் பட்சமான பிரச்சினையாக அதை ஒதுக்கின.

 ஆயுதப் போராட்ட இயக்கங்கள் சிலவற்றில் சமூக மாற்றத்துக்கான முற்போக்குக் கூறுகளைத் தாங்கிநின்ற போக்குகள் இருந்த போதிலும், ஒட்டுமொத்த இயக்கங்களின் கட்டமைப்பில் சாதிய ஒடுக்குமுறையை வேரோடு சாய்க்கும் திட்டமிடப்பட்ட அல்லது ஆழமான பரிமாணங்கள் போதிய அளவில் காணப்படவில்லை. தேசிய விடுதலைப்  போராட்டத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியில் பல சாதிய முரண்பாடுகள் தற்காலிகமாகப் பின்னிறுத்தப்பட்டாலும், அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளில் அக்கறை காட்டப்படவில்லை.

அதனால், 1966 ஒக்டோபர் எழுச்சி என்பது வெறும் கடந்தகால நினைவு அல்ல. அது சண்முகதாசன் போன்ற தலைவர்களின் வழிகாட்டலில் உருவான, இன்னமும் நிறைவேற வேண்டிய சமூக விடுதலைக்கான அறைகூவலாகும். தேசிய இன உரிமைகளுக்காக போராடும் ஒரு சமூகம் தனக்குள் நிலவும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவது அவசியமானது என்ற உண்மை சரியான முறையில் இன்னமும்கூட உணரப்படவில்லை.

வெளியில் சமத்துவத்தைக் கோரிவிட்டு உள்ளே ஆழமான  வேறுபாடுகளைப் பேணுவது முரண்பாடான ஒரு போக்காகும். சாதியப் பாகுபாடுகளைப் பற்றி பேசுவது  தேவையற்றது என்றும் அது தற்போது தமிழச் சமூகத்தில் ஒரு பிரச்சினையாக இல்லை என்றும் வாதிடுவதும் அவற்றை மறைப்பதும் ஒற்றுமையை ஒருபோதும் உருவாக்காது, மாறாக, அவற்றை எதிர்த்து உறுதியுடன்  செயற்படுவதே உண்மையான ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரில் பாரியளவில் உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் கடந்துவந்த இலங்கை தமிழர் சமுதாயத்திலும் அதன் அரசியலிலும் இன்று சமூக நீதிக்கான அக்கறை எந்தளவில் இருக்கிறது என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும். 

தேசிய இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு போன்ற அம்சங்களுக்கே முதன்மை அளிக்கப்பட்டுவந்த பாரம்பரியம் காரணமாக சமுதாயத்திற்குள் இருக்கும் சாதியாதிக்கம், வர்க்க வேறுபாடு, பாலினச் சமத்துவமின்மை மற்றும் பிராந்திய ரீதியான ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமூகநீதி சார்ந்த உள்ளகப் பிரச்சினைகள் இன்னமும் ஓரங்கட்டப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. 

ஆனால், கடந்தகால சமூகநீதிப் போராட்டம் மற்றும் போரின் முடிவுக்குப் பின்னரான வாழ்வியல் காரணமாக சில நேர்மறையான மாற்றங்களை காணமுடிகின்ற போதிலும், சமூகப் படிநிலைகளில் சாதியச் சிந்தனை இன்னமும் ஆழமாகவே உள்ளது. பாரம்பரியமாக நிலவிவந்த சாதியக் கட்டுப்பாடுகள் மற்றும் தீண்டாமையின் வெளிப்படையான வடிவங்கள் (கோயில்கள், பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு இருந்த தடை போன்றவை ) கணிசமாகக் குறைந்திருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டுவதும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும், திருமண உறவுகள், நிலவுடைமை போன்றவற்றில் சாதியச் சிந்தனை ஆழமானதாகவே இருக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், வாக்கு வங்கிகளைக் கணக்கிடுவதிலும் சாதியப் பின்னணி   பங்காற்றுகிறது. சாதியைக் கடந்து ஒரு ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை  அரசியல் தளத்தில் இன்னமும் தேவையான அளவில் காணக்கூடியதாக இல்லை.

தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் தேசிய இனப்பிரச்சினை,  அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு சார்ந்த உரையாடல்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. அடித்தட்டு மக்களின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகள் சார்ந்த விவகாரங்கள் பிரதான தமிழ் அரசியலில் இன்னமும் இரண்டாம் பட்சமானவையாகவே கருதப்படுகின்றன. இதனால் சமூகநீதி அடிப்படையிலான ஐக்கியத்தை தமிழர்கள் மத்தியில் உருவாக்குவது தொடர்ந்தும் பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்த நிலைவரத்தை தேசிய மக்கள் சக்தி தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி வடக்கில் செல்வாக்கை வளர்க்கிறது.

1960 களின் சமூகநீதிப் போராட்டங்கள் சாதியக் கொடுமைகளின் பகிரங்க வடிவங்களை ஒழித்துக்கட்டின என்றாலும், தமிழ்ச் சமூகம் தனக்கான முழுமையான விடுதலையை அடைய இன்னும் பல படிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. வெளியிலிருந்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பும் அதே வேளையில், சமூகத்திற்குள் உறைந்துகிடக்கும் சாதியக் கட்டுப்பாடுகளையும் உள் முரண்பாடுகளையும் தைரியமாக எதிர்கொண்டு வேரறுப்பதே உண்மையான ஜனநாயக சமத்துவத்திற்கு வழிவகுக்கும். கடந்தகால எழுச்சிகளின் நினைவுகளைக் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல், விளிம்புநிலை மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக சுயமரியாதையை முதன்மைப்படுத்தும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதே அந்த வரலாற்றுப் போராட்டங்களுக்கும் அவற்றை வழிநடத்திய தலைவர்களுக்கும்  நாம் செலுத்தும் உண்மையான  அஞ்சலியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *