தனது 59ஆவது வயதில் சமையல் தொழிலுக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற யாழ்ப்பாண அகதி தந்தைக்கு நோர்வே போக்குவரத்து அமைச்சரான  மகளின் நெகிழ்ச்சியான மரியாதை

தனது 59ஆவது வயதில் சமையல் தொழிலுக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற யாழ்ப்பாண அகதி தந்தைக்கு நோர்வே போக்குவரத்து அமைச்சரான  மகளின் நெகிழ்ச்சியான மரியாதை

இலங்கை – நோர்வேயின் போக்குவரத்து அமைச்சர் கம்ஸி குணரத்தினம் (Kamzy Gunaratnam), கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது தந்தைக்கு நெகிழ்ச்சியான மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக அகதியாக நோர்வே சென்ற அவரது தந்தை, அங்கு பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலிலும் சமையல் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் தனது 59ஆவது வயதில் மாலை நேரப் பாடசாலையில் கல்வி கற்று, சமையல் தொழிலுக்கான தொழில்சார் தகுதிச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது மூன்று வயதில் நோர்வே சென்ற கம்ஸி குணரத்தினம் (38), நோர்வே மொழியில் எழுதியுள்ள முகநூல் பதிவில், தனது தந்தையே தனக்கான மிகப்பெரிய முன்மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை, தானே மொழியையும் கலாசாரத்தையும் புதிதாக கற்றுக்கொண்டிருந்த ஒரு நாட்டில், தனது பிள்ளைகளை வளர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட துணிச்சல் குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

“1980கள் மற்றும் 1990களில் நோர்வேயில் குடியேற்றக்காரர் என்ற பின்னணியைக் கொண்ட ஒரு மனிதராக வாழ்வது எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. புதிய மொழி, புதிய நடைமுறைகள், முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகள் கொண்ட ஒரு நாட்டுக்கு வந்து, அதேவேளையில் ஒரு தந்தையாகவும், குடும்பத்தைக் காப்பவராகவும், முன்மாதிரியான மனிதராகவும் உறுதியாக நின்றது எவ்வளவு சவாலானதாக இருந்திருக்கும்” என்று அவர் எழுதியுள்ளார்.

பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் தொழிற்கட்சிக் கூட்டணி அரசாங்கத்தில் கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, ஜோன்-ஐவர் நிகார்டுக்குப் பதிலாக கம்ஸி குணரத்தினம் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நோர்வேயில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மீன்பிடித் தொழிலிலிருந்து ஒஸ்லோ நகர மண்டபம் வரை..

“எங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குவதற்காகவே அவர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டைவிட்டு வெளியேறினார். உலகின் மிகச்சிறந்த நலன்புரி அரசான நோர்வேக்கு வந்து, எங்களுக்காக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கக் கடுமையாக உழைத்தார்” என்று தனது தந்தையைப் பற்றி கம்ஸி எழுதியுள்ளார்.

தனது மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துச் செல்வதற்கு முன்னதாகவே அவரது தந்தை நோர்வேக்குச் சென்று குடியேறினார். ஆரம்பத்தில் நோர்வேயின் வடபகுதியில் தங்கிய அவர், அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டார். அந்தக் காலப்பகுதியில் பல இலங்கைத் தமிழர்களும் இவ்வாறான தொழில்களில் ஈடுபட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குடும்பத்தினர் ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தபோது, அவரது தந்தை பல ஆண்டுகளாக, முறையான தொழில்சார் தகுதிச் சான்றிதழ் இல்லாத சமையல்காரராகப் பணியாற்றினார்.

2009ஆம் ஆண்டு, நோர்வே மன்னரின் பாதுகாப்புப் படையான His Majesty the King’s Guard அமைப்பின் ஒஸ்லோத் தலைமையகமான ஹூஸெபியில் (Huseby) அவருக்கு வேலை கிடைத்தது.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் பணியைத் தொடர்வதற்குத் தொழில்சார் தகுதிச் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டது.

“அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா? எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் மாலை நேரப் பாடசாலையில் சேர்ந்து படித்தார். தனது 60ஆவது பிறந்தநாளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக, நிறுவன சமையல்காரருக்கான தொழில்சார் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்” என்று கம்ஸி எழுதியுள்ளார்.

ஒஸ்லோ நகர மண்டபத்தில் (Oslo City Hall) நடைபெற்ற நிகழ்வில் அந்தச் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது முன்வரிசையில், துணை மேயராக இருந்த அவரது மகளும் அமர்ந்திருந்தார் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கம்ஸி குணரத்தினம் 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒஸ்லோவின் துணை மேயராகப் பதவி வகித்தார்.

“இதுதான் நோர்வேயின் கதை” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை எப்போதும் கூறிவரும் ஒரு வாசகத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்:

“வெற்றிபெறுவதற்கான அடித்தளம், வாய்ப்புகள் மற்றும் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும்போது, ஆம், அப்போது உங்களால் வெற்றிபெற முடியும்.”

கடின உழைப்பு என்றால் என்ன என்பதைத் தனது தந்தை செயல்வடிவில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது குடும்பத்தை ஒஸ்லோவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரோருடாலன் (Groruddalen) பகுதியில் வளர்ப்பதற்கு தனது தந்தை எடுத்த முடிவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் குடியேறியவர்கள் என்ற பின்னணியைக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வசிக்கின்றன.

அந்தப் பகுதியின் பன்முகத்தன்மை, அங்குள்ள மக்களின் வாழ்க்கைக் கதைகள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை தன்னை ஒரு வளமான அனுபவங்களைக் கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எல்லாத் தெரிவுகளும், எல்லாப் பாதைகளும் நாம் பயணித்துக்கொண்டிருந்தபோதே உருவாக்கப்பட்டன” என்று அவர் எழுதியுள்ளார்.

தனது தந்தை நோர்வே மொழி, கலாசாரம் மற்றும் அந்நாட்டின் நடைமுறைகளைக் கற்றுக்கொண்டிருந்த அதேவேளையில், தனது பிள்ளைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியிருப்பார் என்பதைத் தன்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் நோர்வே மொழியைச் சற்றுத் தடுமாற்றத்துடன் பேசக்கூடும். ஆனால், அவரது பெரிய புன்னகையும் அளவற்ற அன்பும் அவரை மற்றவர்கள் புரிந்துகொள்ளவும், அவரை ஒரு மனிதராக அடையாளம் காணவும் உதவுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வேறு எதுவும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் அப்பா நோர்வே நாட்டுக்குச் செய்துவரும் பங்களிப்பில் நூறில் ஒரு பங்கையாவது என்னால் வழங்க முடிந்தால் அதுவே எனக்குப் பெருமை” என்று அவர் எழுதியுள்ளார்.

இந்த முகநூல் பதிவுடன் ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. கம்ஸி, அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் அப்போது ஒஸ்லோவின் பிரதான விமான நிலையமாக விளங்கிய ஃபோர்னெபுவில் (Fornebu) வந்து இறங்கி, தந்தையுடன் மீண்டும் இணைந்துகொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

“எங்களை மீண்டும் சந்தித்ததில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதைப் பாருங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படம், அமைதியின்மை, போர் மற்றும் அச்சம் நிறைந்த சூழலில் வாழும் மக்களைத் தனக்கு நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலையும், அகதிகளுக்கு ஒரு தாயகமும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நோர்வே பாடலின் இரண்டு வரிகளுடன் தனது பதிவை அவர் நிறைவுசெய்துள்ளார்.

ப்

இறுதியில், தமிழில் ‘அப்பா’ என்று தனது தந்தையை விளித்து தந்தையர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அமைச்சரவை வரை..

கம்ஸி குணரத்தினம் 1988 மார்ச் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கம்ஷஜினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam) என்ற பெயரில் பிறந்தார். எனினும், கம்ஸி என்ற பெயரிலேயே அவர் நீண்டகாலமாக அறியப்படுகிறார். தற்போது நாடாளுமன்ற மற்றும் அரசாங்க ஆவணங்களிலும் இந்தப் பெயரே பயன்படுத்தப்படுகிறது.

2007ஆம் ஆண்டு, தனது 19ஆவது வயதில் ஒஸ்லோ நகரசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை தொழிற்கட்சியின் இளைஞர் அணியான தொழிலாளர் இளைஞர் கழகத்தின் மத்திய குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

2011 ஜூலை 22ஆம் திகதி, தனது 23ஆவது வயதில், உடோயா (Utøya) தீவில் நடைபெற்ற அந்த இளைஞர் அமைப்பின் கோடைகால முகாமில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் கொல்லப்பட்டனர். கம்ஸி நீந்தி அங்கிருந்து தப்பியதால் உயிர் பிழைத்தார்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து நினைவுகூர்ந்த அவர், இலங்கையில் துப்பாக்கிச் சூடுகளிலிருந்து தப்பி நோர்வே வந்த தமது குடும்பம், அங்கு தனது மகள் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிவிடுவதற்காகவா நோர்வே வந்தது என்று தனது தாயார் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

2015 ஒக்டோபரில், தனது 27ஆவது வயதில், ஒஸ்லோ நகரின் வரலாற்றிலேயே மிக இளவயது துணை மேயராகப் பதவியேற்றார். 2021 ஒக்டோபர் வரை அந்தப் பதவியில் இருந்தார்.

2019 ஜனவரியில் துணை மேயராக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்த அவர், கொழும்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். அத்துடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பெண்களையும் சந்தித்துப் பேசினார்.

2021ஆம் ஆண்டு நோர்வே நாடாளுமன்றமான ஸ்டோர்டிங்கிற்கு (Storting) ஒஸ்லோ தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டார். 2025ஆம் ஆண்டிலும் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

நாடாளுமன்றத்தில் முதலில் நீதித்துறை விவகாரங்களுக்கான குழுவிலும் பின்னர் சுகாதாரக் குழுவிலும் உறுப்பினராகப் பணியாற்றினார்.

2025ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் குழுவின் முதலாவது துணைத் தலைவராகப் பணியாற்றிவந்த அவர், அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.

மார்ட்டின் அவுர்டால் (Martine Aurdal) என்பவருடன் இணைந்து 2021ஆம் ஆண்டு “Din kamp er min kamp” (உனது போராட்டம் எனது போராட்டம்) என்ற நூலையும் எழுதியுள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக, மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக் கொள்கைகள் மற்றும் தபால் சேவைகள் தொடர்பான பொறுப்புகளை அவர் வகிக்கிறார்.

நோர்வேயின் வீதிகள், ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் கடலோர நிர்வாகம் ஆகியவை அவரது அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வருகின்றன.

(நன்றி: ஜஃப்னா மொனிட்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *