~ மிலிந்த மொரகொட / த பிரிண்ட்
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்கு பொதுவான வரலாறு, மத மரபுகள் மற்றும் மூலோபாய அமைவிடம் ஆகியவற்றை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. எனினும், இதுவரை அதிகம் ஆராயப்படாத ஒரு முக்கியமான பரிமாணம் உள்ளது. அதுதான் இரு நாடுகளினதும் இயற்கை மரபுரிமை. வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சவால்களுக்கான நடைமுறைத் தீர்வுகளுடன் விஞ்ஞான அறிவையும் நிபுணத்துவத்தையும் இணைப்பதன் மூலம், வனவிலங்கு பாதுகாப்பு என்பது இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதியதொரு வழியைத் திறக்கக்கூடும்.
இதற்கு இந்தியக் காட்டெருமை (Gaur) ஒரு சுவாரஸ்யமான தொடக்கமாக அமையலாம்.
உலகில் வாழும் காட்டுமாடுகளில் மிகப்பெரிய இனமான இந்தியக் காட்டெருமை ஒரு காலத்தில் இலங்கையிலும் வாழ்ந்துள்ளது. 1681ஆம் ஆண்டு வெளியான தனது An Historical Relation of the Island Ceylon என்ற நூலில், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியின் மாலுமியான ரொபேர்ட் நொக்ஸ் (Robert Knox), கண்டி மன்னரால் வளர்க்கப்பட்ட விலங்குகளிடையே தான் கண்ட ‘கவுரா’ (Gauvera) எனும் விலங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
‘கவறா’ (Gavara) என்ற சிங்களப் பெயரும் இலங்கையின் பல இடப்பெயர்களில் இன்றும் நிலைத்திருக்கிறது. கவரகனே, கவரகிரிய, கவரம்மான, கவரவெல மற்றும் கவரத்தென்ன போன்ற இடப்பெயர்கள் இதற்கு உதாரணங்களாகும்.
இந்த வரலாற்று மற்றும் புவியியல் சான்றுகள், ஒரு காலத்தில் இலங்கையின் இயற்கை மரபுரிமையின் ஓர் அங்கமாக விளங்கிய இவ்விலங்கை நினைவூட்டுகின்றன. எனினும், காலப்போக்கில் இந்த விலங்கு இலங்கையிலிருந்து முற்றாக அழிந்துவிட்டது.
ஆனால், இந்த அற்புதமான விலங்கை இலங்கையர்கள் மீண்டும் ஒருமுறை காண்பதற்கான வாய்ப்பு உருவாக முடியாதா? ஆரம்பத்தில், அதற்குப் பொருத்தமான ஒரு விலங்கியல் பூங்கா சூழலில் அதனை அறிமுகப்படுத்த முடியுமா? இத்தகைய முயற்சி, உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான பரந்தளவிலான கூட்டாண்மைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைய முடியுமா?
பாதுகாப்பும் மனிதர்களுடனான சகவாழ்வும்..
துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக ‘கவந்திஸ்ஸ’ (Kavantissa) என்ற தந்தம் கொண்ட யானை உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் பொதுமக்கள் துயரத்தை ஏற்படுத்தியது.
இலங்கையின் பௌத்த மரபில் யானைகளுக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. நாடு முழுவதிலும் நடைபெறும் ஆலயத் திருவிழாக்களில், கம்பீரமான தந்தங்களைக் கொண்ட யானைகள் புனித சின்னங்களையும் நினைவுச் சின்னங்களையும் சுமந்து செல்கின்றன. குறிப்பாக, கண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெரா விழாவில், அழகிய அலங்காரங்களால் அணிவிக்கப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானை ஒன்று புத்தரின் புனித தந்த தாதுவைச் சுமந்து செல்கிறது.
எனவே, யானை என்பது இலங்கையின் வனவிலங்குகளில் ஒன்றாக மட்டும் இல்லாமல், நாட்டின் மத மற்றும் கலாசார அடையாளத்தின் முக்கியமான சின்னமாகவும் விளங்குகிறது.
எனினும், இலங்கையின் சவால் தனிப்பட்ட விலங்குகளைப் பாதுகாப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்தும் உயிரிழப்புகளையும் பயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன. அதேவேளை, குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட ஏனைய விலங்குகளாலும் நாடு முழுவதிலும் உள்ள விவசாய சமூகங்கள் கணிசமான பொருளாதார இழப்புகளைச் சந்திக்கின்றன.
உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரணான இலக்குகளாகக் கருதப்படக்கூடாது. இவை ஒன்றுக்கொன்று துணைபுரியும் நோக்கங்களாக அணுகப்பட வேண்டும்.
இந்தியாவும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கிறது. வாழிட முகாமைத்துவம், பயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பயனடைய முடியும்.
தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய யானைகள் மற்றுமொரு பொறுப்பை நமக்கு நினைவூட்டுகின்றன. விலங்குகளின் நலன் தொடர்பான கவலைகளைத் தொடர்ந்து, இலங்கையில் ‘முத்து ராஜா’ என அழைக்கப்பட்ட ‘சக் சுரின்’ (Sak Surin) என்ற யானையை தாய்லாந்து 2023ஆம் ஆண்டு மீண்டும் தனது நாட்டுக்குத் திருப்பி அழைத்துச் சென்றது. அதன் பின்னர், அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஏனைய யானைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களும் சர்வதேச ரீதியில் விலங்குகளைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் பொறுப்புகளை வெளிப்படுத்தின.
இராஜதந்திர நல்லெண்ணம் என்பது பொருத்தமான வசதிகள், கால்நடை மருத்துவப் பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை முகாமைத்துவம் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும்.
ஏனெனில், நமது பொதுவான இயற்கை வரலாறும் எதிர்காலமும் இங்கு பணயம் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புதல்:
இந்தியாவும் இலங்கையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை.
பிரதமர் நரேந்திர மோடியினால் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேசப் பெரும்பூனைப் பாதுகாப்புக் கூட்டணியில் (International Big Cat Alliance) இலங்கை பங்கேற்றிருப்பது, வனவிலங்கு பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஏற்கனவே உள்ள ஒரு தளமாகும்.
இந்தக் கூட்டணி, ஏழு முக்கியமான பெரிய பூனை இனங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞான ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் வனவிலங்கு சார்ந்த இராஜதந்திர உறவுகள் ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் உருவாகின்றன.
வனவிலங்கு நிபுணர்கள், ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஆர்வத்துடன் செயற்படும் தொண்டர்கள் அடங்கிய திறமையான சமூகத்தையும் இலங்கை கொண்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் பாதுகாப்பு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் தன்னார்வலர்கள் ஆகியோர் இந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பெறுமதியான அடித்தளத்தை வழங்குகின்றனர்.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் அவற்றின் வாழ்விடங்களைப் பேணுவதிலும் இலங்கை கணிசமான நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் கொண்டுள்ளது. எனவே, உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நாடாக மட்டுமன்றி, தனது அனுபவங்களையும் அறிவையும் பங்களிக்கக்கூடிய நாடாகவும் இலங்கை விளங்குகிறது.
இந்தியக் காட்டெருமை இந்த ஒத்துழைப்பின் அடுத்த நடைமுறை முயற்சியாக அமையலாம்.
இதற்காக, விலங்கியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் இந்திய, இலங்கைப் பாதுகாப்பு நிறுவனங்கள் இணைந்து சாத்தியக்கூறு ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும். விலங்குகளின் நலன், கால்நடை மருத்துவ வசதிகள், பொருத்தமான பராமரிப்பு நிலையங்கள், இனப்பெருக்கத் தேவைகள் மற்றும் நீண்டகாலச் செலவுகள் ஆகியவை இந்த ஆய்வில் மதிப்பிடப்பட வேண்டும்.
சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் வளர்க்கப்படும் காட்டெருமைகளின் எண்ணிக்கை நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டுமாயின், அவற்றின் மரபணுப் பல்வகைமை பேணப்படுவது மிகவும் அவசியமாகும்.
ஆய்வின் முடிவுகள் சாதகமாக இருந்தால், பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் உரிய சட்ட ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு, இந்தியா விலங்குகள், தொழில்நுட்ப நிபுணத்துவம் அல்லது ஏனைய உதவிகளை வழங்க முடியுமா என்பதை இரு அரசாங்கங்களும் ஆராயலாம். தொழில்முறை மதிப்பீட்டின் பின்னர் இலங்கையில் பொருத்தமான விலங்கியல் பூங்கா ஒன்றையும் இதற்காகப் பரிசீலிக்கலாம்.
இதன் உடனடி நோக்கம், பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றுக்குப் பயன்படும் வகையில் முறையாகப் பராமரிக்கப்படும் காட்டெருமைக் கூட்டமொன்றை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
இது காட்டெருமைகளை மீண்டும் இயற்கைச் சூழலில் விடுவிப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். காட்டுக்குள் அவற்றை விடுவிப்பது சூழலியல் மற்றும் மனிதப் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எழுப்பக்கூடும்.
எதிர்காலத்தில், இயற்கைச் சூழலை ஒத்ததாக அமைக்கப்பட்ட பாதுகாப்பான வேலியிடப்பட்ட பரந்த பகுதியில் அவற்றை வளர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமானால், அதற்கெனத் தனியான மதிப்பீடு அவசியமாகும்.
காட்டெருமைகளை மீண்டும் காட்டுக்குள் விடுவிப்பதே இந்தத் திட்டத்தின் இறுதி இலக்கு என்று முன்கூட்டியே கருதக்கூடாது.
ஒரு விலங்கினத்திலிருந்து பரந்தளவிலான கூட்டாண்மைக்கு..
இந்தியாவும் இலங்கையும் இந்த ஆரம்ப முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கூட்டாய்வு ஆராய்ச்சிகள், நிபுணர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், கால்நடை மருத்துவ ஒத்துழைப்பு மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்களைக் குறைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னெடுக்க முடியும்.
வனவிலங்குத் திணைக்களங்கள், விலங்கியல் பூங்கா நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுச் செயற்குழுவை உருவாக்கி, அதனூடாகத் திட்டங்களை அடையாளம் காணவும், பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கவும், அவற்றின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்யவும் முடியும்.
கண்மூடித்தனமாக விலங்குகளைப் பரிமாறிக்கொள்வதற்கோ அல்லது தேவையற்ற புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கோ முக்கியத்துவம் அளிக்கப்படக்கூடாது. மாறாக, அளவிடக்கூடிய நன்மைகள், பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீண்டகால முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
உறுதியான பெறுபேறுகளை வழங்கக்கூடிய சிறிய அளவிலான ஒரு திட்டமே நம்பகமான தொடக்கமாக அமையும்.
இந்தியா – இலங்கை உறவுகள் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் மற்றும் இணைப்புத்திட்டங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளன.
ஆனால், முதிர்ச்சியடைந்த ஒரு இருதரப்பு உறவு என்பது இரு நாடுகளின் நிறுவனங்களையும் சமூகங்களையும் பொதுவான நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இந்தியக் காட்டெருமை இத்தகைய முயற்சிக்கான ஒரு பொருத்தமான தொடக்கமாக அமையலாம்.
முறையான முகாமைத்துவத்துடன் கூடிய சிறைப்பிடிக்கப்பட்ட வளர்ப்புச் சூழலில் இந்த விலங்கை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவருவது, பெருமளவில் மறக்கப்பட்டுவிட்ட இலங்கையின் இயற்கை வரலாற்றின் ஒரு பகுதியுடன் இன்றைய தலைமுறையை மீண்டும் இணைக்கும்.
எனினும், இது சாத்தியமானதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது பாதுகாப்புத்துறை நிபுணர்களேயன்றி, இராஜதந்திர ஆர்வம் மட்டுமல்ல.
இந்தியாவும் இலங்கையும் தமது பொதுவான வரலாற்றைப் பயன்படுத்தித் தமது உறவுகளை நீண்டகாலமாக வலுப்படுத்தி வந்துள்ளன. இப்போது, தமக்கிடையிலான பொதுவான இயற்கை மரபுரிமையை அடிப்படையாகக் கொண்டு, அந்த உறவுகளின் அடுத்த அத்தியாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
(மிலிந்த மொரகொட இலங்கையின் முன்னாள் அமைச்சரும், இராஜதந்திரியுமாவார். மூலோபாய விவகாரங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனமான பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் (Pathfinder Foundation) நிறுவனரும் ஆவார். 2021 செப்டெம்பர் முதல் 2023 செப்டெம்பர் வரை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார்.
இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களாகும்.)
