இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் சமூக மாற்றத்துக்கான சாத்தியக்கூறுகள் என்ன?

இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் சமூக மாற்றத்துக்கான சாத்தியக்கூறுகள் என்ன?

~ அகிலன் கதிர்காமர்

சமீபத்தில் நான் காரைநகரில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினரின்  கிராமமொன்றில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் தீவின் ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்த  கிராமத்தை, சீரழிந்த நிலையில் இருந்த வீதியினால் சென்று அடைவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. 

அந்தப் பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நடந்து செல்லும் தூரத்திலேயே வசிக்கின்றனர்.

குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து அதிபருடன் நான் கலந்துரையாடத் தொடங்கியபோது, பள்ளியினதும்  மாணவர்களினதும்  தேவைகள் பற்றி மட்டுமல்லாமல், அந்தப் பள்ளியைச் சூழ்ந்துள்ள சமூகத்தின் சமூக-பொருளாதார சவால்கள் குறித்தும் அதிபர் தெளிவான புரிதலைக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டேன். 

கிராமத்திற்கான போக்குவரத்து வசதியின்மை, குடும்பங்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாமை, மற்றும் இளைஞர்களின் இருண்ட எதிர்காலம் என இந்தச் சமூகத்தின் சமூகப் புறக்கணிப்பு அவரை மிகவும் கவலையடையச் செய்திருந்தது.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நான் அவ்வப்போது இந்த கிராமத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். போர் முடிவுக்கு வந்த பிறகு மீள்குடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட, திருச்சபையால் நடத்தப்படும் ஒரு பகுதிநேரப் பள்ளித் திட்டத்தைப் பார்க்க வருமாறு 2010-களின் முற்பகுதியில் ஒரு குருவானவர் எங்களில் சிலருக்கு விடுத்த அழைப்புடன்தான் இது தொடங்கியது. 

இதன் பின்னணியில் உள்ள சாதிய இயக்கவியல் ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்தன. இரண்டாம் நிலைப் பள்ளியை அடைவதற்கான மாணவர்களுக்கான பேருந்து சேவை தடைபட்டிருந்தது, போருக்குப் பிந்தைய வீட்டுத்திட்டங்கள் குறைகளுடனே இருந்தன, கிராமத்திற்குத் தேவையான பொதுச் சேவைகளை வழங்குவதில் உள்ளூர் அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்பு இருக்கவில்லை.

 வறுமை வெளிப்படையாகவே அதிகமாக இருந்தது, மேலும் மூத்த பிள்ளைகள்  கூலி வேலை தேடிச் சென்றனர். அந்தப் பகுதிநேரப் பள்ளித் திட்டத்தைப் பற்றி அதிபரிடம் கேட்டேன், ஆனால் அது இப்போது செயற்படவில்லை என்றும், குருவானவர் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு அது சிதைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த கிராமத்தின் துயர நிலை, யாழ்ப்பாணத்தில் சாதிய உறவுகள் தொடர்ந்திருகிறது என்ற  பெரிய கேள்வியை எனக்கு நினைவூட்டியது. உண்மையில், சாதி என்பது மற்ற சமூகக் கட்டமைப்புகளைப் போலவே காலப்போக்கில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது, ஆனால் ஒடுக்குமுறை மற்றும் புறக்கணிப்பின் மூலமாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

 2009 ஆம் ஆண்டில்  போர் முடிவுக்கு வந்த பிந்தைய ஆண்டுகளில் சாதிய உறவுகள் இரகசியமாகத் தொடர்ந்தன, ஆனால் சமீப காலங்களில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதி கிராமங்களின் பொருளாதாரப் பற்றாக்குறையிலும், சமூக நிறுவனங்களில் காட்டப்படும் பாகுபாட்டிலும் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1966 ஒக்டோபரில், யாழ்ப்பாணத்தில் எழுந்த ஒரு மிகப்பெரிய இயக்கம் தீண்டாமையை வீழ்த்தியது. அந்தச் சக்திவாய்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டமும், அதன் திரட்டல் பரம்பரையும், ஒடுக்கப்பட்ட சாதி “கள் இறக்குபவர்களுக்கான” கூட்டுறவு சங்கங்களின் இறுதியான எழுச்சியும் இளைஞர்களின் பங்குக்கும் சமூக மாற்றத்திற்கும் பல பாடங்களைக் கொண்டுள்ளன.

 கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால ஆயுத மோதலாலும், ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாகத் தொடரும் நம்பிக்கையற்ற மீட்சியினாலும் பேரழிவிற்குள்ளான இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் சமூக மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் என்ன? பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் சாதிய உறவுகளில் எவ்வாறு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தன என்பதைச் சிந்திக்கவும், இன்று யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் புறக்கணிப்பை எதிர்கொள்வதற்கான உத்திகளைக் பரிசீலிக்கவும் 1960-களின் அந்தச் சந்தர்ப்பத்திற்கு நான் மீண்டும் திரும்புகிறேன்.

கிராமப்புற திரட்சியும் எதிர்ப்பும்:

வரலாற்று ரீதியாக, யாழ்ப்பாணம் அதிக மக்கள் தொகை கொண்ட சிறு விவசாய நிலங்களைக் கொண்ட தனித்துவமான சமூக மற்றும் பொருளாதாரப் பண்புகளைக் கொண்டிருந்தது, அங்கு ஆதிக்க வெள்ளாள சாதியினரே பெரும்பான்மையினராகவும் இருந்தனர். இது ஒடுக்கப்பட்ட சாதிகளால் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மிகக் குறைந்த இடத்தையே வழங்கியது. 1950-களின் பிற்பகுதியில் இறக்குமதி மாற்றுக்  கொள்கைகளுடன் (வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, அதே பொருட்களைத் தனது சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் கொள்கை) கூடிய 

கிராமப்புற திரட்சி, யாழ்ப்பாணத்தில் சிறு நிலங்களில் பணப்பயிர்களுக்கான தீவிர விவசாயத்திற்கு வழிவகுத்தது. 

இத்தகைய திரட்சியிலிருந்தே தங்களால் சிமெந்து வீடுகளைக் கட்ட முடிந்தது என்று பல சிறு விவசாயிகள் கூறுகின்றனர். இச்சூழலில், நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளிடமிருந்து கூலி உழைப்புக்கான தேவை அதிகரித்ததாலும், அவர்களும் அதிக கூலி கோரத் தொடங்கியதாலும், மேல் சாதியினர் மேலும் ஒடுக்குமுறையை நோக்கித் திரும்பினர்.

இதற்கிடையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், இடதுசாரி இயக்கம் யாழ்ப்பாணத்திற்குள் காலூன்றியது. 1960-களில் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், என். சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரிய போராட்டத்தைக் கட்டமைப்பு செய்வதற்கான வாய்ப்பை வழங்கின. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் மயானங்களை பயன்படுத்துவதற்கான உரிமை உள்ளிட்ட நிலம் சார்ந்த பிரச்சினைகள் தீவிரமடைந்து வந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு கண்ணியம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும், கோவில்களுக்குள் நுழைவதற்கும் தேநீர் கடைகளில் சமமாக அமர்வதற்கும் கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்தது.

1966 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், இலங்கையின் காலனித்துவத்துக்கு பின்னரான  வரலாற்றில் முதல் ஆயுதப் போராட்டமாக இருக்கலாம். கடுமையான மோதல்களினாலும் கொலைகளினாலும் முப்பது பேர் வரை உயிரிழந்தனர். தெற்கில் 1971 ஆம், 1988 ஆம்  ஆண்டுகளில் நடந்த இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளும், வடக்கில் சிவில் போராக மாறிய ஆயுதமேந்திய போரும் கடுமையான உயிர்ச்சேதங்களுக்கு வழிவகுத்த போதிலும், 1960-களின் பிற்பகுதியில் நடந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டம், தீண்டாமையை ஏறக்குறைய ஒழித்த ஒரு உறுதியான முடிவோடு முடிவுக்கு வந்தது.

இந்தச் சூழலில், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இடதுசாரி நிதியமைச்சரான கலாநிதி என். எம். பெரேரா 1972 ஆம் ஆண்டில் பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி, கள்ளு உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ஏகபோக உரிமையை அவற்றுக்கு வழங்கினார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அங்கமாக இருந்த சிலரை இளைஞர்களாக இருந்தபோது நான் நேர்காணல் செய்தபோது, போராட்டத்திற்குப் பிறகு அவர்களில் பலர் புதிதாக அமைக்கப்பட்ட அந்த கூட்டுறவுச் சங்கங்களின்  ஊழியர்களாக மாறியதை அறிந்தேன். 

இருப்பினும், சாதிய ஒடுக்குமுறையை நிவர்த்தி செய்வதற்கான அந்த வேகமானது, இனத் தேசியவாத அரசியலாலும் தொடர்ச்சியான மோதல்களாலும் திசைதிருப்பப்பட்டு, சாதி எதிர்ப்புப் பணிகள் பின்னடைவைச் சந்தித்தன.

நிலமும் உழைப்பும்:

ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, காரைநகரில் உள்ள கிராமம் போன்ற கிராமங்களுக்கு எவ்வாறு மாற்றம் வரக்கூடும், மேலும் சில காலத்திற்கு முன்பு அந்தப் பள்ளியில் குழந்தைகளாகப் படித்த இளைஞர்களுக்கான வாய்ப்புக்கள்  என்ன? சில ஆண்டுகளுக்கு முன்பு, காரைநகரில் உள்ள மற்றொரு ஒடுக்கப்பட்ட சாதி கிராமத்திலும், அருகில் உள்ள வட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கிராமத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அங்கு ஆதிக்கச் சாதியினர் காடையர்களைப்  பயன்படுத்தி, ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அவமானப்படுத்தியும் தாக்கியும் தங்களது அதிகாரத்தைக் காட்ட முயன்றனர். எங்களிற் பலர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த கிராமங்களில் நடைபெற்ற சில கலந்துரையாடல்களில் பங்கேற்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் திரும்பப் பெற்றதால் சட்டரீதியான வழக்குகள் முன்னோக்கி நகரவில்லை.

மேலே குறிப்பிட்ட பள்ளியின் அதிபர் எனக்குத் தெரிவித்த மிகச் சமீபத்திய சவால் என்னவென்றால், அவரது மாணவர்களின் தாய்மார் பலர் கிராமத்தில் உள்ள ஒரு புதிய கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வீட்டில் குறைந்த கவனமே கிடைப்பதுடன், மாணவர்களின் வருகையின்மையும் அதிகரித்துள்ளது. குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் தேவைப்பட்ட அதே வேளையில், அவர்களின் குழந்தைகளின் நலனுக்காக கூடுதல் ஆதரவும் தேவைப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சாதி சமூகங்களைப் பொறுத்தவரை, நிலமின்மை மற்றும் கடலோர வளங்களை அணுக முடியாமை ஆகியவற்றால் வாழ்வாதாரம் குறைந்து வருவது, கூலி வேலைக்குச் செல்லும்போது சுரண்டல் வேலை நிலைமைகள், பொதுச் சேவைகளை அணுக முடியாமை மற்றும் பல நேரங்களில் வெளிப்படையான பாகுபாடு என அவர்களின் பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. வேலை வழங்குபவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட ஆதிக்கச் சாதி அமைப்புகளால் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகிறார்கள்.

இதற்கிடையில், யாழ்ப்பாணமும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. உயர் கல்வி மற்றும் வெள்ளைச் சட்டை (அலுவலக) வேலைகளில் பெண்களின் பங்கு அதிகரித்து சமூக ரீதியாக முன்னேறி வந்தாலும், வன்முறை கும்பல்களின் வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பெண்களை வெறுக்கும் தாக்குதல்கள் உள்ளிட்ட ஒரு நாசகாரக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, மேலும் கூலி வேலைக்கான வாய்ப்புகளும் ஊதியமும் குறைவாகவே உள்ளன.

இந்தச் சூழலில், பெரும்பான்மையான தமிழ் புலம்பெயர் பிரிவினரால் நிதியளிக்கப்பட்டு, தமிழ் தேசியவாத அரசியல் பேச்சு கொதிநிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாததால் தமிழ் தேசியவாதக் கட்சிகள் பலத்த அடி வாங்கிய போதிலும், அவர்களின் பேச்சும் பார்வையிலும் மாற்றம் ஏற்படவில்லை. மக்களின் பொருளாதாரக் கஷ்டங்களைப் பற்றிப் பேச அவர்களிடம் எதுவும் இல்லை, மேலும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்கி வைப்பு விடயங்களில்  அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் அல்லது துணைபோகிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் பலமான ஆணையப் பெற்றது, வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் சில உறுதியான மாற்றங்களை வழங்க வேண்டும். முக்கியமாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நிலமற்றவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீடுகளையும் வீட்டு நிலங்களையும் வழங்குவது ஒரு முன்னுரிமையாகும். ஆனால், யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள நிலங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் நிலங்களை விலைக்கு வாங்கி மறுபங்கீடு செய்ய வேண்டியிருக்கும்.

வேலை வாய்ப்புகள் மற்றும் வழக்கமான வேலைவாய்ப்பு உட்பட நிலையான பணிகளையே இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதற்கு முதலீடு தேவைப்படுகிறது. மேலும், தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தி குறைவாக இருப்பதாலும், தொழிலாளர் சங்கங்கள் ஏதும் இல்லாததாலும், பொருத்தமான பணிப் பண்பாட்டை உருவாக்க தொழிலாளர்களைச் சங்கங்களாக ஒழுங்கமைக்க வேண்டும். 

கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், ஒரு சில அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத பெருமளவிலான கடைகள் மற்றும் சிறு வணிகங்களில் தொழிற்சங்கப் பணிகள் அவசியமாகும். பல தசாப்தங்களாகத் தொழிற்சங்கக் கலாசாரம் ஏறக்குறைய அழிக்கப்பட்ட ஒரு சமூகத்தில், தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதிலும் தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதிலும் சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள், நிறுவப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் திணைக்களம் ஆகியன ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது.

1970-களில் இருந்த முற்போக்கு அரசாங்கம், பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களை  அமைத்துப் பரிசோதனை ஒன்றைச் செய்தது. இது கள்ளுத் தொழிலில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட சாதி சமூகத்தின் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக நிரூபிக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள், பராமரிப்பாளர்கள், உணவகம், ஹோட்டல் ஊழியர்கள், பல தினசரி கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட, ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் பெரும்பான்மையாகப் பணிபுரியும் யாழ்ப்பாணத்தின் முறைசாரா துறையை ஒழுங்கமைக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான நிலையங்கள்  உட்பட அத்தகைய தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்கான வளங்கள் ஒரு தொடக்கமாக அமையலாம்.

தொழிற்சங்கம் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் மரபிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. இன்று யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்கி வைப்பை நிவர்த்தி செய்வதற்கான மூலோபாயம் 1960-களின் பிற்பகுதியில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். ஆனால் அது இளைஞர்களும் பெண்களும் தங்களின் வாழ்வாதாரங்களைச் சுற்றி தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான இடங்களை உருவாக்குவதில் இருந்து தொடங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *