~ எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று (செங்கலடி) மற்றும் கோறளைப்பற்று தெற்கு(கிரான்) பிரதேச செயலகங்களின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ‘மண்டரி’ ஆற்றுப்படுகையில் காணப்படும் இடங்களே மயிலத்தமடு, மாதவனை என்னும் புல்வெளிகளாகும். எனினும் இப்புல்வெளிகள் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுடன் தமது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. யுத்தத்துக்கு முன்னரான காலங்களில் இந்த புல்வெளியை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனாலும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதியாகவும் காமினி திஸாநாயக்க நீர்ப்பாசன அமைச்சராகவும் இருந்தபோது கொண்டுவரப்பட்ட மகாவலி திட்டத்தினுடைய (B) பி வலைய விரிவாக்க பணிகளுக்காக இப்பிரதேசத்தின் 12,000 ஏக்கர் புல்வெளிகள் மகாவலி அதிகார சபையினால் 1979ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக விவசாயிகளுடைய மேய்ச்சல் தரைகளின் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டன.
மறுபுறத்தில் 1983ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்ததன் காரணமாக அரச படைகளும் அரச திணைக்களங்களும் கூட இப்பிரதேசங்களின் கட்டுப்பாட்டை இழக்கவேண்டி ஏற்பட்டது. அதேவேளை 1990 களிலிருந்து இப்பிரதேசங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் படையணிகளுக்குரிய (பஃயரின் அன்ட் டச்சிங்) பயிற்சி திடல்களாக பயன்படுத்தி வந்தனர். இத்தகைய யுத்தகாலங்களில் மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் அப்பிரதேசங்களுக்குள் நுழைவதை அபாயகரமானதாகக் கருதினர். அதன் காரணமாக போதிய மேய்ச்சல் தரைகளின்றி மாடுகள் நலிவுற்றமையினால் பாலுற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆனாலும் 2007ஆம் ஆண்டு குடும்பிமலை உட்பட்ட இப்பிரதேசங்கள் அரச படைகளால் மீட்கப்பட்டன. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு உருவாகிய கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் சிவ.சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தமை காரணமாக மட்டக்களப்பு விவசாயிகள் பயமின்றி மீளவும் மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்களுக்கு சென்று அந்த மேய்ச்சல் தரைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
அவ்வேளைகளில் மகாவலி அதிகார சபைக்கும் கால் நடையாளர்களுக்குமான முரண்பாடுகள் தலைவிரிக்கத் தொடங்கின. மகாவலி அதிகார சபையினர் மட்டக்களப்பு கால்நடையாளர்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையோடு இணைந்து வன இலாகா திணைக்களமும் தமிழ் கால்நடையாளர்களுக்கு எதிராக களத்தில் இறங்கினர்.
இத்தகைய முரண்பாடுகள் உருவானதன் காரணமாக மட்டக்களப்பு கால் நடையாளர்களுக்கு என தனியான மேய்ச்சல் தரைகளை சட்டரீதியாக பெற்றுக்கொள்வதன் அவசியம் கிழக்கு மாகாண முதலமைச்சரால் உணரப்பட்டது. எனினும் மாகாண சபைகளுக்கு காணியதிகாரம் இன்றி எதையும் அவரால் செய்ய முடியாதிருந்தது. அவ்வேளையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தனிப்பெரும்பான்மை இருக்கவில்லை. சிங்கள மற்றும் முஸ்லீம் கட்சிகளின்
ஆதரவுடனேயே அவர் முதலமைச்சராக இருந்தார். எனவே சட்டரீதியாக காணியுரிமைக்கான நியதிச் சட்டமியற்றுவதற்குரிய சாதகமான சூழல் இருக்கவில்லை.
அதன் காரணமாக 13 வது யாப்பு சட்டத்திருத்தத்தின் படி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணியதிகாரங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென அவர் குரல்கொடுத்தார். தனிநாட்டுக்கான போராட்ட பாதையில் இருந்து ஜனநாயகத்துக்குள் பிரவேசித்த ஒரு முதலமைச்சராக அவர் இருந்தமையினால் காணியதிகாரங்களுக்கான அவரது குரல் தேசிய அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளானது. சிங்கள பேரினவாதிகளால் அவரது காணியுரிமைக் கோரிக்கை அச்சத்துடனேயே அணுகப்பட்டது. தனது காணியுரிமைக் கோரிக்கைக்கு பலம் சேர்க்க குரல்கொடுக்குமாறு அவ்வேளையில் (22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலமாக இருந்த) தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு சிவ.சந்திரகாந்தன் பகிரங்க அழைப்பு விடுத்தார். அது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் அவர்களை அவரது இல்லம் தேடிச்சென்று உரையாடினார். ஆனால் சம்பந்தன் அவரை திமிர்த்தனமாக அணுகினார். “கிழக்கு மாகாண சபையையோ கிழக்கு மாகாண முதலமைச்சரையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியொன்று இருப்பதை நான் அறியேன்” என்றார்.
எனினும் சந்திரகாந்தன் ஓய்ந்துவிடவில்லை.மாகாணங்களுக்கான காணியதிகாரக் கோரிக்கையை தளர்த்தி நேரிடையாக ‘மேய்ச்சல்தரை’ கோரிக்கையை கிழக்குமாகாண சபைக்கு கொண்டுவந்தார். அதற்காகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மேய்ச்சல் தரையாக பிரகடனம் செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
அத்தீர்மானங்கள் குறித்து அன்றைய கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடன் நீண்ட உரையாடல்களை நடத்தினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து உரையாடினார். இலங்கையின் தேசிய பால் உற்பத்தியில் 25 வீதத்துக்கு மேல் பங்களித்து வந்த கிழக்குமாகாணம் யுத்தத்தின் காரணமாக வெறும் 8 வீதத்துக்கு வீழ்ந்திருந்தமையை சுட்டிக்காட்டி உரிய மேய்ச்சல் தரைகள் வாய்க்கின்ற போது தேசிய பால் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை கிழக்கு மாகாணத்தினால் வழங்க முடியும் விளக்கினார். மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தினை நம்பி சுமார் இரண்டரை லட்சம் மாடுகள் இருப்பதாகவும் எடுத்துக் காட்டினார்.
ஆனாலும் இத்தகைய தகவல்களை ஆதாரங்களோடு விளக்குவதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. அன்றைய நிலையில் இரண்டரை லட்சம் மாடுகள் இருப்பதாக சொல்லப்பட்ட போதிலும் பதிவு செய்யப்பட்ட பால் மாடுகளின் எண்ணிக்கை வேறும் இருபதாயிரமாகவே காணப்பட்டது என்பதே உண்மையாகும். அதிக எண்ணிக்கையில் பால் மாடுகளுக்கு சொந்தமாக இருந்தவர்கள் அவற்றை உத்தியோக பூர்வமாக பதிவதில் பின்னின்றனர். சமுர்த்தி போன்ற அரச சமூகக்கொடுப்பனவுகள் தடைப்பட்டுவிடும் மற்றும் வருமானவரி கட்ட வேண்டிய நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்கின்ற பலவித சமூகக் காரணிகள் அதற்கு காரணமாயிருந்தன.
எனவே மாடு வளர்ப்பாளர்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாக்குவதற்குமான முயற்சிகளை சந்திரகாந்தன் மேற்கொண்டார். இதுவரைகாலமும் ‘மாட்டுக்காரர்கள்’ என அழைக்கப்பட்டுவந்த குறித்த கால்நடை வளர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து முதன்முறையாக “மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்” என்னும் அமைப்பாக்கினார். இதற்கான முதலாவது ஒன்றுகூடல் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலைய மண்டபத்தில் இவ்வாலயத்தின் முக்கியஸ்தர் சுப்ரமணியம் தியாகராஜா அவர்கள் தலைமையின் இடம்பெற்றது. கிண்ணையடி, கிரான், கோரகல்லிமடு, சந்திவெளி, முறக்கொட் டான் சேனை, சித்தாண்டி, மாவடி வேம்பு, வந்தாறுமூலை… போன்ற கிராமங்களில் இருந்த பண்ணையாளர்களை ஒருங்கிணைத்து இக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் மென்மேலும் அதிகளவான மாடுகளை பதிவு செய்யத் தூண்டினார். 2009ஆம் ஆண்டு யூன் மாதம் 8ஆம் திகதி இவ்வமைப்பு சார்பில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்குரிய பிரதேசங்களை அடையாளப்படுத்தி நில வரைபடமும் தயாரிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு “மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள்” அமைப்பினரை முன்னிறுத்தி கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சந்திரகாந்தனின் பங்கெடுப்புடன் குடும்பி மலைப் பிரதேசத்தில் ‘பட்டிப்பொங்கல்’ கொண்டாடப்பட்டது
கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபையின் மேற்குறித்த ஓய்வற்ற கரிசனைகள் காரணமாக இலங்கைப் பாராளுமன்றத்தில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சனை முதன் முதலாக பேசுபொருளாக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்றத்தில் முதலாவது விவாதம் இடம்பெற்றது. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 28034 ஹேக்டெயர் அதாவது சுமார் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மேய்ச்சல் தரையாக ஒதுக்குமாறு கிழக்கு மாகாண சபையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஆராயப்பட்டது. ஆனாலும் நீண்ட விவாதங்களின் பின்னர் முதற்கட்டமாக 15,035 ஹேக்டெயர் அதாவது சுமார் 37,000 ஏக்கர் நிலங்களை ஒதுக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சுக்கு பாராளுமன்றம் அறிவுறுத்தியது.
தொடர்ந்து வந்த அமைச்சரவைக் கூட்டங்களில் மயிலத்தமடு, மாதவனை உட்பட்ட குறித்த இடங்களை மேய்ச்சல்தரைகளாக அரசு வர்த்தமானியில் பிரகடனம் செய்வது ஒன்றே எஞ்சியிருந்தது. அந்நிலையில் கிழக்கு மாகாண சபை 2012ஆம் ஆண்டு யூன் மாதம் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டதன் காரணமாக சிவ.சந்திரகாந்தன் அமைச்சரவை கூட்டங்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு கைநழுவிப் போனது. இது மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வரலாற்றில் பெரும் துரதிஷ்ட்டமாகும்.
அதன்பின்னர் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெரும் செல்வாக்கு செலுத்தியிருந்ததோடு அவர்களே உருவாக்கிய ‘நல்லாட்சி’அரசாங்கத்திலும் சுமந்திரனே உத்தியோகப் பற்றற்ற பிரதமராக வலம்வந்தார். 2011ஆம் ஆண்டு பாராளுமன்றம் காணி அமைச்சுக்கு அறிவுறுத்திய விடயங்களை முன்வைத்து மேச்சல் தரைகளுக்கான வர்த்தமானிப் பிரகடனம் செய்வதற்கான அருமையான வாய்ப்புகள் அவர்கள் முன்னிருந்தன. ஆனால் அத்தகைய பொறுப்புக்களையிட்டு அவர்கள் கரிசனை கொள்ளவில்லை.
அதுமட்டுமன்றி கிழக்கு மாகாண சபையில் 2015-2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆட்சியை பகிர்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண அமைச்சரவையில் துரைராசசிங்கம் அவர்கள் விவசாய அமைச்சராக பணியாற்றினார். அவ்வேளைகளில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகளை வர்த்தமானி பிரகடனம் செய்வதற்கான எத்தகைய முயற்சிகளும் இடம்பெற்றதாக அறிய முடியவில்லை.
இப்படியாக நீண்ட காலமாக இழுபட்டுவந்த மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைப் பிரச்னையானது காலப்போக்கில் வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கத் தொடங்கியது. மேற்படி பிரதேசங்கள் அம்பாறை மற்றும் பொலநறுவை எல்லைங்களில் காணப்படுவதனால் அப்பிரதேச விவசாயிகள் என்னும் பெயரில் சட்டப்பூர்வமற்ற புதிய சிங்கள குடியேற்றவாசிகள் ஆக்கிரமிக்கத்தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அரச திணைக்களங்கள் இருந்தன. அவர்களால் “மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள்” அச்சுறுத்தப் பட்டத்தோடு மாடுகள் கொல்லப்படும் நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கின. பண்ணையாளர் இளைப்பாறும் குடிசைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிலவேளைகளில் தீக்கரையாக்கப்பட்டன.
அதேவேளை மேச்சல்தரைகளை பயன்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களர்களுக்கு எதிராக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையோடு இணைந்து வன இலாகா திணைக்களமும் பல்வேறு ‘அத்துமீறல்’ வழக்குகளைப் பதிவு செய்வதன் ஊடாக நிர்வாக அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வந்தனர். நூற்றுக்கணக்கான இவ்வழக்குகள் மங்களகம மற்றும் தெய்யத்தக் கண்டி போன்ற தொலைதூர சிங்கள எல்லைக் கிராமங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் தாக்கல் செய்யப்படுவதன் காரணமாக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் பெரும் அலைக்கழிச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
அவ்வேளையில்தான் சந்திரகாந்தன் மீண்டும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராகவும் பிரதியமைச்சராகவும் சிறிது காலம்(2022-2024) பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அவரது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்தி கரடியனாறு போலீஸ் நிலையத்தின் கிளைக் காவலரண் ஒன்றை மயிலத்தமடு பிரதேசத்தில் உடனடியாக அமைக்க ஆவன செய்தார். அக்காவல் நிலையத்துக்குரிய குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை மூன்று தினங்களுக்குள் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார். பண்ணையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அவையனைத்தும் இக்காவலரன் ஊடாக கரடியனாறுப் போலீசில் பதிவுசெய்யப்படவேண்டுமென அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தினார். இதனுடாக பண்ணையாளர்களதும் கால்நடைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்து திணைக்களங்களின் நிர்வாக கெடுபிடிகளுக்கு முடிவு கட்டினார். அதன்பயனாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
மறுபுறத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராகவும் பிரதியமைச்சராகவும் சிவ.சந்திரகாந்தன் எடுத்த மேற்படி நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித தார்மீக ஆதரவுகளை நல்க முன்வரவில்லை. மாறாக பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடாத்தப்பட்ட ஒவ்வொரு சந்திப்புகளையும் கச்சேரிக் கூட்டங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூக்குரலிட்டு குழப்பியடிப்பதிலேயே குறியாயிருந்தார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மட்டக்களப்புக்கு அழைத்து மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சனை பற்றி ஒரு தீர்க்கமான கலந்துரையாடலை மேற்கொள்ள பிரதியமைச்சர் சந்திரகாந்தனால் திட்டமிடப்பட்டது. 2023 ஒக்டோபரில் அவர் மட்டக்களப்புக்கு வருகை தந்தார். அதிகார மையங்களோடு கலந்துரையாடி காரியம் சாதித்து பழக்கமற்ற கூட்டமைப்பினர் அவரது வருகையை பகிஷ்கரித்தனர். பண்ணையாளர்களை உசுப்பேற்றி ‘சட்டி முட்டி’ஆர்ப்பாட்டம் செய்து பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை சீரழித்தனர்.
இப்போது மீண்டும் பண்ணையாளர்களின் பிரச்சனைகள் எல்லைகடந்து அதிகரித்துச் செல்கின்றன. நாளுக்கு நாள் மாடுகள் கொல்லப்படுகின்றன. பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளினால் துப்பாக்கி மிரட்டல்கள் விடப்படுகின்றன. ஒருபோதும் இல்லாதவாறு அம்பாறை மற்றும் பொலன்னறுவை விவசாயிகளும் தங்கள் பங்குக்கு உரிமைகோருகின்றனர். முதற்கட்டமாக 1150 ஏக்கர் நிலத்தை மேய்ச்சல் தரையாக பிரகடனம் செய்வதற்கு கடந்த மே மாதம் மட்டக்களப்புக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாய்மூல உத்தரவாதம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அது சாத்தியமானால் குறைந்தபட்சம் இப்பிரச்சனையானது இன முரண்பாடுகளாக பூதாகாரம் எடுக்காமல் தடுக்க முடியும். இல்லாவிடின் எதிர்காலத்தில் மேய்ச்சல் தரைப்பிரச்சனை மென்மேலும் புதிய புதிய சிக்கல்களை உருவாக்கும்.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பண்ணையாளர்களை சந்திக்க வந்த மட்டக்களப்பு மாவட்ட ஆளுந்தரப்பு எம்பி பிரபு அவர்கள் பண்ணையாளர்களுள் இருந்த விசஷமூட்டப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார். அப்படியானால் ஆளுந்தரப்புடன் பேசாமல் யாருடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க போகின்றீர்கள்? அதன் எதிரொலிதான் பண்ணையாளர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்களுடன் இணைந்து மனுக்கொடுக்கச் சென்றபோது வாசல் பூட்டப்படுமளவுக்கு கொண்டு விட்டிருக்கின்றது. ஆளுந்தரப்புடன் பேசாமல் யாருடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க போகின்றீர்கள்? அன்று மேய்ச்சல் தரைப்பிரச்சனை ஊர் தேடிவந்த ஜனாதிபதி ரணிலை சந்திக்க மறுத்து தகிடுதத்தம் பண்ணிய கூட்டமைப்பினர், கையிலிருந்த மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சந்திரகாந்தன் அவர்களை கச்சேரிக் கூட்டங்கள் நடத்த விடாமல் பரம்பரையாதிக்க சண்டித்தனம் பண்ணிய சாணக்கியன் கூட்டம் இன்று அரச அதிபர் கதவைச் சாத்தி விட்டாராம் என்று வீதியில் நின்று குரைக்கின்றனர்.
இறுதியாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் நியாயமான உரிமைப்போராட்டம் வழக்கம் போல தமிழ்தேசியக் கூட்டமைப்பினரின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக திசை திருப்பப் பட்டு தடம் புரளுகின்றது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
சிந்திக்கவேண்டியது “மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள்” தவிர வேறுயாருமில்லை.
