~ சுதாரக ஆரியரத்ன / எக்ஸாமினர்.
இலங்கையின் 23 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (Regional Plantation Companies – RPCs) தோட்டக் குத்தகை ஒப்பந்தங்கள் 2045ஆம் ஆண்டில் காலாவதியாகின்றன. அதன் பின்னர் அந்த நிலங்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து தோட்ட நிறுவனங்களுக்கோ, அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ, ஏன் அரசாங்கத்துக்குக் கூட இதுவரை தெளிவான புரிதல் இல்லை.
நாட்டின் பயிர்ச்செய்கைக்கு உகந்த விவசாய நிலங்களில் 20 சதவீதமானவை இந்தக் குத்தகைகளின் கீழ் உள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 270 கோடி ரூபாய் (2.7 பில்லியன் ரூபாய்), அதாவது சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே குத்தகைப் பணமாகச் செலுத்துகின்றன. இந்த 23 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களில் மூன்றைத் தவிர ஏனைய அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.
இந்த நிலங்கள் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள ஒரேயொரு அரசியல் சமிக்ஞை என்னவென்றால், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சாதகமான புதிய ஒப்பந்தங்களை உருவாக்கும் நோக்கில் தற்போதுள்ள குத்தகைகளை முன்கூட்டியே இரத்துச் செய்யலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருப்பதாகும்.
அத்தகைய நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மையை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், இந்தக் குத்தகைகள் தொடர்பாக எடுக்கப்படவுள்ள முடிவு என்ன என்பது குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்கெனவே உற்பத்தித் திறனைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய குத்தகைகள் இப்போதே இரத்துச் செய்யப்படுமா, 2045ஆம் ஆண்டில் நீடிக்கப்படுமா அல்லது நிலங்கள் விற்பனை செய்யப்படுமா என்பது தெரியாத நிலை காணப்படுகிறது.
தங்களது முதலீட்டுச் செலவுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு முன்னரே தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் காரணமாக, தோட்ட நிறுவனங்கள் மீள்நடுகை மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகின்றன.
குத்தகைகள் உற்பத்தித் திறனை எவ்வாறு பாதிக்கின்றன?:
1990களில் தேயிலைத் தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட 53 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது தோட்டங்களை நிர்வகித்து வருகின்றன.
தற்போதைய குத்தகைக் காலத்தில் எஞ்சியுள்ள 19 ஆண்டுகள், மீள்நடுகைக்காகச் செய்யப்படும் முதலீட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்குப் போதுமான காலமாக இல்லை.
தேயிலைத் தோட்டங்களில் தற்போதுள்ள விளைச்சலைப் பேணுவதற்காக ஆண்டுதோறும் இரண்டு சதவீத நிலப்பரப்பில் மீள்நடுகை செய்யப்பட வேண்டும் என தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஆனால் நடைமுறையில் ஆண்டுதோறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான நிலப்பரப்பிலேயே மீள்நடுகை மேற்கொள்ளப்படுகிறது.
குத்தகைகள் நீடிக்கப்படும் என்ற ஓர் எளிய உத்தரவாதம்கூட நிலைமையைப் பெருமளவில் மாற்றக்கூடும். ஆனால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தோட்ட நிறுவனங்களுக்கு அவ்வாறான நம்பிக்கையை வழங்கத் தவறிவிட்டன. உண்மையில், அவை இதற்கு நேர்மாறான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளன.
உதாரணமாக, 2022ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முறையாகப் பயன்படுத்தப்படாத மற்றும் குறைந்த உற்பத்தித் திறனைக் கொண்ட தோட்ட நிலங்களை அரசாங்கம் சுவீகரிக்கும் என எச்சரித்திருந்தார்.
அண்மையில் ஜனாதிபதி திஸாநாயக்க, குத்தகைகளை “கூடிய விரைவில்” முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வெளியிட்ட கருத்தும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இந்தக் குத்தகைப் பிரச்சினை பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு மட்டுமே உரியதல்ல. குறிப்பாக மலையகப் பகுதிகளில் இயங்கும் இந்நிறுவனங்கள், நாட்டின் மிகவும் வளமான விவசாய நிலங்களில் சிலவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
குத்தகை நீடிப்பு தொடர்பான நிச்சயமற்ற நிலை தீர்க்கப்படாவிட்டால், உற்பத்தித் திறன் தொடர்ந்து வீழ்ச்சியடையும். இது ஏற்றுமதியையும் நேரடியாகப் பாதிக்கும். இலங்கையின் அதிக நிகர வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாகத் தேயிலைத் துறை தொடர்ந்தும் விளங்குகிறது. ஆடை உற்பத்தித் துறையுடன் ஒப்பிடுகையில், தேயிலை உற்பத்திக்கான இறக்குமதிச் செலவுகள் மிகவும் குறைவாக உள்ளன.
நிலங்களை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோர்:
குத்தகைதாரர்கள் மீள்நடுகையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, அனைத்து தோட்டக் குத்தகைகளையும் எவ்வித மாற்றமுமின்றி நீடிப்பது சிறந்த தீர்வாக இருக்காது. உண்மையில், அது எதிர்மறையான விளைவுகளைக்கூட ஏற்படுத்தக்கூடும். குறைந்த உற்பத்தித் திறனுடன் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்ந்து வெகுமதி அளிப்பதாக அமைந்துவிடலாம்.
1990களில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆதரவுடன் பெருந்தோட்டங்களின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய ரொமேஷ் டயஸ் பண்டாரநாயக்க, அந்த நடவடிக்கை மற்றும் பெருந்தோட்டங்களின் எதிர்காலம் குறித்து கடந்த மூன்று தசாப்தங்களாகச் சிந்தித்து வந்துள்ளார்.
அவரது திட்டத்தின்படி, முதலில் தோட்டங்கள் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களாகத் தொகுக்கப்பட்டன. பின்னர் அவை நீண்டகாலக் குத்தகைக்கு விடப்பட்டதுடன், அவற்றின் பெரும்பான்மைப் பங்குகளும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
இன்று, அந்தப் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மாதிரியையே முற்றாகக் கைவிட்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதாக பண்டாரநாயக்க கருதுகிறார்.
1990களில் அரசியல் சமரசத்தின் அடிப்படையில் அவசியமாக இருந்த குத்தகை முறை, எதிர்காலத்துக்கான சிறந்த நிர்வாக மாதிரி அல்ல என்பதே அவரது நிலைப்பாடு.
அப்படியானால், குத்தகை முறையை உருவாக்குவதற்காகப் பல அரசியல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தாண்டி உழைத்த பண்டாரநாயக்க, ஏன் இப்போது அந்தக் குத்தகைகளை எவ்வித நிபந்தனையுமின்றி நீடிப்பதை விரும்பவில்லை?
இதற்கான பதில், கடந்த காலங்களில் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்த அவரது மதிப்பீட்டில் தங்கியுள்ளது.
“நாங்கள் அவர்களுக்கு ஒரு “தங்க” வாய்ப்பைத் தட்டில் வைத்துக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதனைப் பயன்படுத்தி எதையுமே செய்யவில்லை” என அவர் கூறுகிறார்.
பெரும்பாலான தோட்டங்கள் தேயிலைப் பயிர்ச்செய்கையைத் தாண்டி வேறு பயிர்ச்செய்கைகளுக்குப் பன்முகப்படுத்தப்படவில்லை என்பதிலும், பாரம்பரிய பெருந்தோட்ட முகாமைத்துவ முறையைத் தாண்டி முன்னேறவில்லை என்பதிலும் பண்டாரநாயக்க அதிருப்தி வெளியிடுகிறார்.
“இந்த நிலங்களை முழுமையான உரிமையுடன் (Freehold) தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்துகிறார்.
இந்தச் செயற்பாட்டுடன் இணைந்து, தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட அளவு நிலங்களை வழங்க வேண்டும் என்றும், தோட்டங்களுக்கு வெளியே வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும் மேலதிகமாக நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இதன் மூலம் இன அடிப்படையிலான எதிர்ப்புகள் உருவாவதைத் தவிர்க்க முடியும் என அவர் கருதுகிறார்.
“இந்த நிலங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு அவற்றில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்படுவார்கள். எனவே தோட்டத் தொழிலாளர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவது முக்கியம்” என அவர் தெரிவிக்கிறார்.
பண்டாரநாயக்க மட்டுமே இவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கவில்லை.
இலங்கை தேயிலைச் சபையின் முன்னாள் தலைவர் ரோஹன் பெத்தியகொடவும், எதிர்வரவுள்ள குத்தகைக் கால முடிவை இலங்கையின் பெருந்தோட்ட உற்பத்தி முறையை முற்றாக மறுசீரமைப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார். தற்போதைய பெருந்தோட்ட முறைமை காலாவதியானது என்பதே அவரது கருத்தாகும்.
தற்போதைய நிலையில், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்கள், அந்த நிலங்களைப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்குள் மட்டுப்படுத்தியுள்ளன. குறிப்பாக தேயிலைப் பயிர்ச்செய்கைக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
“இலங்கையில் தற்போது தேயிலை பயிரிடப்படும் ஒவ்வொரு இடத்திலும் தேயிலையே சிறந்த பயிரா? இல்லை. ஒரு நிலத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பதை அரசாங்கங்கள் தீர்மானிக்க முடியாது. அதனைத் தொழில்முனைவோரே தீர்மானிக்க வேண்டும்” என அவர் கூறுகிறார்.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத் தேயிலைத் துறை தொடர்ந்து போட்டித்தன்மையுடன் நிலைத்திருப்பதற்கு உயர்தரத் தேயிலை உற்பத்தியை நோக்கி நகர்வதே ஒரே வழி எனப் பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட தேயிலையின் உற்பத்திச் செலவில் தொழிலாளர் செலவு மட்டும் 40 சதவீதமாக உள்ளது.
எனினும், உயர்தரத் தேயிலை உற்பத்தி என்பது குறைந்த அளவிலான தேயிலையை உற்பத்தி செய்வதையே அவசியமாக்குகிறது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பு தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது கடினமானதாகும்.
தற்போதைய நிபந்தனைகளுடன் தோட்டக் குத்தகைகள் நீடிக்கப்பட்டால், உலகளாவிய தேயிலை வர்த்தகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறியாமலேயே, அரசாங்கம் மீண்டும் ஒரு நீண்டகாலத் தொழிற்துறைத் திட்டத்தைத் திணிப்பதாக அமையும் என பெத்தியகொட கூறுகிறார்.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மாதிரி நிலப்பிரபுத்துவத் தன்மை கொண்டது என்றும் அவர் விமர்சிக்கிறார்.
“தென் கொரியா, தைவான், ஜப்பான் போன்ற முன்னேறிய தேயிலைப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே வசிப்பதில்லை. ஆனால் இங்கே நாம் இன்னமும் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முறைக்குள் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டிப்போட்டிருக்கிறோம்” என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மாதிரிக்குப் பதிலாக உருவாக்கப்படும் எந்தவொரு புதிய முறையும், தொழிலாளர்களுக்கான லயன் குடியிருப்பு முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், தோட்டங்களுக்கு அருகிலுள்ள நகரங்களில் அவர்களுக்கு நிலங்களை வழங்கி, அங்கிருந்து தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று திரும்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் நம்புகிறார்.
இதன் மூலம் பெருந்தோட்ட மாவட்டங்களில் நிலவும் பாடசாலைகளின் இனரீதியான பிரிவினைக்கும் முடிவுகட்ட முடியும் என பெத்தியகொட கூறுகிறார்.
மேலும், தோட்டக் குத்தகைகள் முடிவடைவது, பெருந்தோட்ட மாவட்டங்களின் நகர்ப்புற அபிவிருத்தியை மறுபரிசீலனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமையும் என அவர் கருதுகிறார்.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில், தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சூழ்ந்த சிறிய தீவுகளைப் போலவே நகரங்கள் காணப்படுகின்றன. அவற்றைச் சுற்றியுள்ள நிலங்கள் தோட்டங்களாகவும் காடுகளாகவும் இருப்பதால், அவற்றை விரிவாக்குவதற்கு இடமில்லை என அவர் விளக்குகிறார்.
நகர்ப்புற அபிவிருத்திக்காக பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் சில நிலப்பகுதிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம், பெருந்தோட்ட மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும்.
“ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு எந்தவொரு வங்கியும் கடன் வழங்குவதில்லை. இதன் பொருள், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த நகரங்களின் உள்ளூர் பொருளாதாரங்களுக்குள் எந்தவொரு முதலீடும் வராது என்பதாகும்” என அவர் மேலும் கூறுகிறார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிலங்களை விற்பனை செய்வது என்பது தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்படக்கூடாது என்பதில் பெத்தியகொடவும் பண்டாரநாயக்கவும் இணங்குகின்றனர்.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது அவர்களது கருத்தாகும்.
அரசியல் ரீதியாகச் சாத்தியமான இரண்டாவது சிறந்த தெரிவு:
எனினும், அரசாங்கச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு நிலவுவதால், பெருந்தோட்ட நிலங்களை விற்பனை செய்வது அரசியல் ரீதியாகச் சாத்தியமற்றதாக இருக்கலாம் என்பதை பண்டாரநாயக்க நன்கு அறிந்துள்ளார்.
எனவே, குத்தகை முறையை ஏதோவொரு வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுப்பதே அதிக சாத்தியமுள்ள அரசியல் சமரசமாக இருக்கும் என அவர் கருதுகிறார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, குத்தகைகளை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஜனாதிபதி திஸாநாயக்கவின் அழைப்பை உறுதிப்படுத்தவில்லை.
எனினும், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, குத்தகைகளை நீடிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அரசாங்கம் தொழில்நுட்பக் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
மீள்நடுகையை ஊக்குவிப்பதற்காக உடனடியாகக் குத்தகைகளை நீடிக்க வேண்டும் என்ற பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கையை நியாயமற்றது என வர்ணிக்கும் வித்யாரத்ன, முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு குத்தகை நீடிப்பு தொடர்பான உத்தரவாதம் அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.
தொழில்நுட்பக் குழு தனது பணிகளை இப்போதுதான் ஆரம்பித்துள்ள போதிலும், உற்பத்தித் திறன், நிலப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான புதிய நிபந்தனைகளுடன் குத்தகைகள் நீடிக்கப்படுவதே அதிக சாத்தியமுள்ள முடிவாக இருக்கும் என அவர் நம்புகிறார்.
இலங்கையின் விவசாய நிலங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கான குத்தகைக் காலம் விரைவில் முடிவடைகிறது – நீடிப்பதற்குப் பதிலாக ஏலத்தில் விட வேண்டும்:
பெருந்தோட்டக் குத்தகைகள் நீடிக்கப்பட வேண்டுமாயின், வித்யாரத்ன பரிந்துரைப்பது போன்று சில புதிய நிபந்தனைகளைச் சேர்ப்பது மட்டும் போதுமானதல்ல என பண்டாரநாயக்க கருதுகிறார்.
“2045ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இந்தத் தோட்டங்களைத் தமது வசம் வைத்திருக்க குத்தகைதாரர்கள் விரும்பினால், அதற்காக அவர்கள் கணிசமான தொகையைச் செலுத்த வேண்டும்” என அவர் கூறுகிறார்.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டபோது, ஒவ்வொரு நிறுவனத்தினதும் சொத்துக்களின் பெறுமதி செயற்கையாகக் குறைக்கப்பட்டு சுமார் 20 கோடி ரூபாயாக (200 மில்லியன் ரூபாய்) மதிப்பிடப்பட்டதாக பண்டாரநாயக்க தெரிவிக்கிறார்.
ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் அவற்றை வாங்கக்கூடிய வகையில் விலையை மலிவாக வைத்திருப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.
தோட்டங்களின் பரப்பளவு மற்றும் அவற்றில் பயிரிடப்படும் பயிர்களின் தன்மை போன்ற காரணிகளுடன் இணைந்து, இந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் குத்தகைத் தொகைகள் திருத்தியமைக்கப்பட்டாலும், அவை இன்னமும் சந்தை மதிப்புக்கு வெகுதொலைவில் உள்ளன.
2019ஆம் ஆண்டில், ஒரு ஏக்கருக்கான வருடாந்த குத்தகை வருமானம் 456 ரூபாய் முதல் 3,067 ரூபாய் வரை காணப்பட்டது.
அந்தத் தொகைகூட முழுமையாகச் செலுத்தப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டளவில் எட்டு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான குத்தகை நிலுவையைக் கொண்டிருந்தன.
இந்த நிலுவைத் தொகையில் பாதிக்கும் அதிகமானவை அரசுக்குச் சொந்தமான குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்துக்குரியவை.
எனவே, குத்தகைகள் நீடிக்கப்பட வேண்டுமாயின், நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பின் அடிப்படையில் விலையைத் தீர்மானிக்கும் திறந்த ஏல முறைமை ஒன்றை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என பண்டாரநாயக்க கருதுகிறார்.
1990களில் இந்தத் தோட்டங்கள் அரசியல் ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்பட்டன. அவர்களுக்கு பெருந்தோட்ட முகாமைத்துவம் குறித்து அதிக அறிவு இருக்கவில்லை.
அப்போது நட்டத்தில் இயங்கிய அரச பெருந்தோட்டங்கள், அரசாங்கத்தின் நிதிக்கு மிகப்பெரிய சுமையாக மாறியிருந்தன. எனவே, அந்த நட்டத்தை நிறுத்துவதே அன்றைய முதன்மையான நோக்கமாக இருந்தது என பண்டாரநாயக்க விளக்குகிறார்.
“அப்போது இந்த நிலங்களை இலவசமாகவே கொடுத்திருக்கக்கூட நாங்கள் தயாராக இருந்திருப்போம்! ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இலங்கையில் விவசாயத்துக்கு மிகவும் குறைவாகப் பொருத்தமான நிலத்தைக்கூட இன்று ஒரு பர்ச்சஸ் 5,000 ரூபாய்க்குக் குறைவாக விற்க முடியாது” என அவர் கூறுகிறார்.
முந்தைய தனியார்மயமாக்கல் நடவடிக்கையைப் போலல்லாமல், அடுத்த முறை தோட்டக் குத்தகைகளுக்கான ஏலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
பண்டாரநாயக்கவின் கருத்துக்களைப் பொருளாதார நிபுணரும் தோட்டத் தொழிலாளர் உரிமைகளுக்காகச் செயற்படுபவருமான பாலச்சந்திரன் கௌதமனும் ஆதரிக்கிறார்.
வெறுமனே குத்தகைகளை நீடிப்பது என்பது பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஒரு “சலுகை” அல்லது “கையளிப்பு” நடவடிக்கையாகவே அமையும் என அவர் கருதுகிறார்.
அதற்குப் பதிலாக, நிலங்களின் உண்மையான சந்தை விலையைக் கண்டறியும் வகையில், தெளிவான போட்டித்தன்மை கொண்ட ஏல நடைமுறையின் மூலமே புதிய குத்தகைகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வேலை நேரம் உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் கௌதமன் கவனம் செலுத்துகிறார்.
ஆனால் ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்துள்ள குத்தகை நீடிப்புத் திட்டங்களில் இத்தகைய பாதுகாப்புகள் உள்ளடக்கப்படும் என அவர் நம்பவில்லை.
“ஜனாதிபதி விடயங்களை விரிவாகக் கவனிக்கும் ஒருவர். எனவே, அவர் வாக்குறுதியளித்துள்ள இந்தப் பாதுகாப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பாகத் தெளிவான திட்டம் இருந்திருந்தால், அவர் அவற்றை ஏற்கெனவே விரிவாகக் குறிப்பிட்டிருப்பார்” என அவர் கூறுகிறார்.
இது எங்களுடைய தவறல்ல என்கிறார்கள் தோட்ட நிர்வாகிகள்:
இதற்கு முற்றிலும் எதிர்மாறான நிலைப்பாட்டை பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் கொண்டுள்ளனர். அவர்கள் குத்தகைகளை நீடிக்க வேண்டும் என்றும், அதற்காக அதிக தொகையைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் விரும்புகின்றனர்.
தற்போதைய நிலப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளே பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் வணிக ரீதியாகக் கவர்ச்சியற்றவையாக இருப்பதற்கான முக்கிய காரணம் என ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ரோஷன் ராஜதுரை தெரிவிக்கிறார்.
தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி, ஒவ்வொரு நிறுவனமும் தனது குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான பயிரை மட்டுமே பயிரிட முடியும். அதாவது தேயிலை, இறப்பர் அல்லது தென்னை ஆகியவற்றில் குறிப்பிட்ட பயிர்ச்செய்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காப்பி மற்றும் கறுவா போன்ற ஏனைய பெருந்தோட்டப் பயிர்களைப் பயிரிடுவதற்கு, இலங்கை தேயிலைச் சபை மற்றும் குத்தகை வழங்குநர்களான ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை அல்லது அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் வெளிப்படையான அனுமதியைப் பெற வேண்டியுள்ளது.
பயிர்ச்செய்கையைப் பன்முகப்படுத்துவதற்கு அரசாங்கம் கோட்பாட்டு ரீதியாக ஆதரவு தெரிவித்தாலும், அதற்கான அனுமதிகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக ராஜதுரை கூறுகிறார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளை அமைப்பது தொடர்பான நிலப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளும் குத்தகைகளின் பெறுமதியைக் குறைப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
அரசாங்கம் தோட்ட நிலங்களை விற்பனை செய்ய முடிவு செய்தாலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக ஆர்வம் இருக்காது என ராஜதுரை கருதுகிறார். இருப்பினும், இது குறித்து இப்போதே கணிப்புகளை வெளியிடுவது காலத்திற்கு முந்தியதாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
“1800களில் காடுகள் அழிக்கப்பட்டு தோட்டங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் இந்த நிலங்கள் விவசாயத்துக்கு மிகவும் வளமானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மண் வளம் பெருமளவில் குறைந்துவிட்டது. தற்போது பயிரிடப்படும் தேயிலையைத் தவிர வேறு எதையும் அங்கே பெரிதாகப் பயிரிட முடியாது” என அவர் கூறுகிறார்.
தோட்ட நிறுவனங்கள் பயிர்ச்செய்கையைப் பன்முகப்படுத்தத் தவறியதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று என்பது ராஜதுரையின் வாதமாகும்.
“இந்தக் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படவில்லை” என்கிறார் எய்ட்கன் ஸ்பென்ஸ் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவருமான ரோஹன் பெர்னாண்டோ.
குத்தகைகள் நீடிக்கப்பட்டால் பெருந்தோட்ட நிலங்களில் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என அவர் கருதுகிறார்.
“பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து முன்னணி கணக்காய்வு நிறுவனங்கள் ஏற்கெனவே விரிவான மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில், தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்குக் குத்தகைகளை நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்” என அவர் கூறுகிறார்.
தற்போது தமது நிறுவனத்தின் கீழுள்ள தோட்டங்களுக்கான முழுமையான நில உரிமையை வாங்குவதற்கு எய்ட்கன் ஸ்பென்ஸ் தயாராக இருக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
“அரசாங்கம் எப்போது விரும்பினாலும், எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 20 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.”
முரண்பாடான வகையில், தனியார்மயமாக்கலின்போது தமக்குக் கிடைத்த சாதகமற்ற நிலைமையே எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனம் பயிர்ச்செய்கையைப் பன்முகப்படுத்துவதில் ஒப்பீட்டளவில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்ததாக பெர்னாண்டோ கூறுகிறார்.
கடன்சுமை நிறைந்ததாகவும், குறைந்த உற்பத்தித் திறனைக் கொண்ட தோட்டங்களைக் கொண்டதாகவும் கருதப்பட்ட எல்பிட்டிய, தனியார்மயமாக்கப்பட்ட இறுதி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.
“அந்த நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கு நாம் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதேவேளை, சில அடிப்படையான மாற்றங்களையும் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது” என பெர்னாண்டோ கூறுகிறார்.
இதன் விளைவாக எண்ணெய்ப்பனை மற்றும் பெர்ரி வகைப் பழங்களைப் பயிரிடுவதற்கான அனுமதியையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் நிலங்களை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கான மற்றொரு காரணமாக, விவசாயத் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையை ராஜதுரை சுட்டிக்காட்டுகிறார்.
“இப்போது என்னிடம் உள்ள தேயிலையைக்கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பறிப்பதற்குப் போதுமான தொழிலாளர்கள் இல்லை. அப்படியிருக்க, மீள்நடுகை செய்தால் மேலதிகமாக விளையும் தேயிலைக் கொழுந்துகளை யார் பறிப்பார்கள்?” என அவர் கேள்வி எழுப்புகிறார்.
எனினும், தொழிலாளர் பற்றாக்குறை குறித்து பெர்னாண்டோ கவலைப்படவில்லை.
“விவசாயத் துறையில் எல்லா இடங்களிலும் தொழிலாளர் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. உலகம் முழுவதும் தற்போது தானியங்கி இயந்திரங்கள் மற்றும் இயந்திரமயமாக்கலை நோக்கி நகர்கிறது” என அவர் கூறுகிறார்.
இலங்கையைப் பொறுத்தவரையில், சாய்வான மலைப்பாங்கான நிலப்பரப்புகளைக் கொண்ட தேயிலைத் தோட்டங்களில் நடைமுறைக்குப் பொருத்தமானதாகவும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இலங்கைத் தேயிலையின் தரத்தைப் பாதிக்காத வகையிலும் தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்கும் இயந்திரங்களை உருவாக்குவதே சவாலாகும்.
எனினும், இதுவரை அதனைச் சாதிப்பது சிக்கலானதாகவே இருந்து வருகிறது.
இலங்கையின் தேயிலைத் துறையில் செல்வாக்குச் செலுத்தும் அனுபவம் மிக்க இந்தப் பிரமுகர்கள் தமது கருத்துக்களில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அரசாங்கம் இனியும் முடிவெடுப்பதைத் தாமதிக்க முடியாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்களில் பெத்தியகொடவின் அழைப்பு மிகவும் வலுவானதாக உள்ளது:
“இப்போதே இதனைச் செய்யுங்கள். கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். இல்லையெனில், ஒரு தேசியச் சொத்தை நாம் இழக்க நேரிடும்.”
பெருந்தோட்டங்கள் எவ்வாறு தனியார்மயமாக்கப்பட்டன?
1972ஆம் ஆண்டின் காணி மறுசீரமைப்புச் சட்டம், தனியார் உடைமையாக வைத்திருக்கக்கூடிய நிலத்தின் அளவை 50 ஏக்கராக மட்டுப்படுத்தியது. இதன் மூலம் தனிநபர்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 1975ஆம் ஆண்டில் ரூபாய் மற்றும் ஸ்டேர்லிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களும் அரசுடைமையாக்கப்பட்டன.
1976ஆம் ஆண்டில் இந்தத் தோட்டங்களின் நிர்வாகப் பொறுப்பு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SPC) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
“அடுத்த இரண்டு தசாப்தங்களில், ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனமும் இலங்கையின் அரசியல் ஆதரவாளர்களுக்கான மிகப்பெரிய வளப் பகிர்வு மையங்களாக மாறின” என 1990களில் தேசியமயமாக்கப்பட்ட பெருந்தோட்டங்களை மீண்டும் தனியார்மயமாக்குவதற்காக நிதி அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட மறுசீரமைப்புப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ரொமேஷ் டயஸ் பண்டாரநாயக்க கூறுகிறார்.
பண்டாரநாயக்கவின் தலைமையில், 1992ஆம் ஆண்டில் 23 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களின் நிர்வாகம், ஐந்தாண்டு கால முகாமைத்துவ ஒப்பந்தங்களின் அடிப்படையில் திறந்த ஏல நடைமுறையின் மூலம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேவேளை, ஒவ்வொரு நிறுவனத்தின் கீழும் தொகுக்கப்பட்ட தோட்டங்கள் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டன.
“அரசியல் தலையீடுகளைக் குறைக்கும் வகையில், இந்த நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய அளவுக்குப் பெரியதாக இருந்தன. அதேவேளை, ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களால் வாங்கக்கூடிய அளவுக்குச் சிறியதாகவும் இருந்தன” என பண்டாரநாயக்க விளக்குகிறார்.
எனினும், தனியார் நிர்வாக ஒப்பந்தங்களுடன் மட்டும் பண்டாரநாயக்கவும் அவரது குழுவினரும் திருப்தியடையவில்லை.
ஏனெனில், அத்தகைய ஒப்பந்தங்கள் இலாபத்தைத் தனியார்மயமாக்கினாலும், நட்டம் ஏற்பட்டால் அதன் சுமையை அரசாங்கமே தொடர்ந்து ஏற்க வேண்டிய நிலை இருந்திருக்கும்.
இந்தக் குறைபாட்டை அப்போது புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த சந்திரிகா குமாரதுங்கவிடம் எடுத்துரைத்த பண்டாரநாயக்க, தனியார் நிறுவனங்களே நட்டத்தையும் ஏற்க வேண்டும் என்ற திட்டத்துக்கு அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெறுவதில் தமது பெருந்தோட்ட மறுசீரமைப்புப் பிரிவு வெற்றிபெற்றதாகக் கூறுகிறார்.
இந்தத் திட்டத்தின்படி, 1995ஆம் ஆண்டில் 23 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பெரும்பான்மைப் பங்குகளும் நிர்வாக உரிமைகளும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் அவை அடிப்படையில் தனியார்மயமாக்கப்பட்டன.
எஞ்சிய மூன்று நிறுவனங்களான எல்கடுவ, சிலாபம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டுப் பங்குகளை அரசாங்கம் தன்னிடமே வைத்துக்கொண்டது.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களாக ஒருபோதும் தொகுக்கப்படாத அரசுக்குச் சொந்தமான தோட்டங்கள், தொடர்ந்து ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கின.
அவை பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்ற தோட்டங்கள் எனக் கருதப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக பண்டாரநாயக்க கூறுகிறார்.
தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அந்தச் செயற்பாட்டைச் சீர்குலைக்காமல் இருப்பதற்காகவே, அந்தத் தோட்டங்கள் அவ்வாறு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் விளக்குகிறார்.
குத்தகை ஒப்பந்தங்களில் விடுபட்ட முக்கிய அம்சம்:
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்படும் குத்தகை ஒப்பந்தங்களில், குத்தகைக் காலம் முடிவடையும்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாத மூலதன முதலீடுகளுக்கான இழப்பீட்டை, குத்தகை வழங்குநர் குத்தகைதாரருக்கு வழங்க வேண்டும் என்ற ஏற்பாடுகளை உள்ளடக்குவது சர்வதேச ரீதியிலான சிறந்த நடைமுறையாகும்.
பெருந்தோட்டக் குத்தகை ஒப்பந்தங்களில் இத்தகைய ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டிருந்தால், குத்தகைக் காலம் முடிவடையும் நேரத்திலும் மீள்நடுகை போன்ற நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைத்திருக்கும்.
ஏனெனில், குத்தகைக் காலத்தைத் தாண்டியும் பயனளிக்கக்கூடிய முதலீடுகளின் பெறுமதியைத் தம்மால் மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு இருந்திருக்கும்.
ஆனால், தோட்டங்களுக்கான ஆரம்பகாலக் குத்தகை ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டபோது இந்த முக்கியமான விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இதன் விளைவாக, மீள்நடுகை போன்ற நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இப்போது போதிய நிதி ஊக்கம் இல்லை.
இது இலங்கையின் தேயிலைத் துறையில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்குப் பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
