இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களாகப் பெருமளவிலான மஞ்சள் மற்றும் வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் பறப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அசாதாரணக் காட்சி குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.
கொழும்பு, காலி, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஒரே திசையில் கூட்டமாகப் பறந்து செல்வதைக் காட்டும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த நிகழ்வு குறித்து Fact Crescendo Sri Lanka வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, இது பருவகால மழைவீழ்ச்சி, தாவர வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இனப்பெருக்கச் சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய இயற்கையான வண்ணத்துப்பூச்சிகளின் பருவகால இடம்பெயர்வாகும்.
இலங்கையில் வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்வு பொதுவாக இரண்டு காலப்பகுதிகளில் இடம்பெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரதான இடம்பெயர்வு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும், சிறிய அளவிலான இடம்பெயர்வு மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும் இடம்பெறுகின்றது.
பருவமழை மாற்றக் காலத்தில் பெய்யும் மழை, வண்ணத்துப்பூச்சிகளுக்கான உணவையும் இனப்பெருக்க வாழிடங்களையும் வழங்கும் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, முட்டையிடுவதற்குப் பொருத்தமான தாவரங்களைத் தேடியும், உணவு மற்றும் ஏனைய வளங்களுக்கான போட்டியைக் குறைப்பதற்காகவும் அவை வெவ்வேறு பிராந்தியங்களை நோக்கி நகர்கின்றன.
இந்த இடம்பெயர்வில் லெமன் எமிக்ரன்ட் (Lemon Emigrant), மோட்டில்ட் எமிக்ரன்ட் (Mottled Emigrant), லெஸ்ஸர் அல்பட்ராஸ் (Lesser Albatross) மற்றும் காமன் அல்பட்ராஸ் (Common Albatross) ஆகிய வண்ணத்துப்பூச்சி இனங்கள் பங்கேற்கின்றன.
சபரகமுவ பல்கலைக்கழகப் பேராசிரியர் கபில திஸாநாயக்க உள்ளிட்ட ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆய்வொன்று, 2024ஆம் ஆண்டு Taprobanica என்ற அறிவியல் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு இலங்கையின் முக்கியமான வண்ணத்துப்பூச்சி இடம்பெயர்வுப் பாதைகளை அடையாளம் கண்டுள்ளது.
இலங்கையின் 60 இடங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, பிரதான இடம்பெயர்வுப் பாதைகளில் ஒன்று தென்கிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கிச் செல்கின்றது.
குமண தேசியப் பூங்கா பகுதியிலிருந்து வில்பத்து நோக்கி வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம் மூன்று முதல் நான்கு நாட்களில் இடம்பெறுகின்றது.
இடம்பெயரும் அல்பட்ராஸ் வகை வண்ணத்துப்பூச்சிகளின் சராசரிப் பறக்கும் வேகம் மணிக்கு சுமார் 11 கிலோமீற்றர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை வண்ணத்துப்பூச்சிகள் பாதுகாப்புச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவர், பருவகால மழைவீழ்ச்சி வண்ணத்துப்பூச்சிகளின் உணவுத் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக *Fact Crescendo*விடம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வறண்ட வலயப் பகுதிகளில் இது வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்குச் சாதகமான சூழலை உருவாக்குகின்றது.
இதன் காரணமாக வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து, காற்றின் திசை மற்றும் பொருத்தமான தாவரங்களின் கிடைப்பனவு ஆகியவற்றின் தாக்கத்துடன் அவை நாடு முழுவதும் பரவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் பொரளைப் பகுதியில் லெமன் எமிக்ரன்ட் மற்றும் மோட்டில்ட் எமிக்ரன்ட் வகை வண்ணத்துப்பூச்சிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பறந்து செல்வதைத் தாம் நேரடியாக அவதானித்ததாகவும் அந்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
வண்ணத்துப்பூச்சிகள் சிவனொளிபாத மலையை நோக்கிச் செல்கின்றனவா?
இந்தப் பருவகால இடம்பெயர்வு, வண்ணத்துப்பூச்சிகள் சிவனொளிபாத மலையை நோக்கிப் பயணிக்கின்றன என்ற இலங்கையின் பாரம்பரிய நம்பிக்கையையும் மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. சிவனொளிபாத மலை, வண்ணத்துப்பூச்சி மலை (Butterfly Mountain) என்றும் அழைக்கப்படுகின்றது.
சில வண்ணத்துப்பூச்சிகள் இணை சேர்வதற்கான துணையைத் தேடி உயரமான இடங்களைச் சுற்றிக் கூடும் இயல்பைக் கொண்டுள்ளன என்று நிபுணர்கள் விளக்குகின்றனர். இந்த நடத்தைக்கு Hill-topping என்று பெயர்.
எனினும், பல வண்ணத்துப்பூச்சிகள் சிவனொளிபாத மலையை நோக்கிக் குறிப்பாகப் பயணிப்பதில்லை என்றும், அவற்றின் இடம்பெயர்வு வடமேற்குத் திசையை நோக்கியே இடம்பெறுகின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த இடம்பெயர்வு இயற்கைப் பேரிடர் ஒன்றுக்கான எச்சரிக்கையா?
வண்ணத்துப்பூச்சிகள் பெருமளவில் தென்படுவது, அண்மையில் சூறாவளி அல்லது வேறு ஏதேனும் இயற்கைப் பேரிடர் ஏற்படப்போவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.
எனினும், வண்ணத்துப்பூச்சிகளின் இத்தகைய பாரிய இடம்பெயர்வு ஒரு பெரிய இயற்கைப் பேரிடர் ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிவிக்கின்றது என்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வளிமண்டல அழுத்தம், ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் காற்றின் திசை போன்ற மாற்றங்களுக்கு வண்ணத்துப்பூச்சிகள் உணர்திறன் கொண்டவை. இருப்பினும், அவற்றின் நகர்வுகளை எதிர்வரவுள்ள இயற்கைப் பேரிடர் தொடர்பான உத்தியோகபூர்வ எச்சரிக்கையாகக் கருத முடியாது.
காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி மற்றும் ஆக்கிரமிப்புத் தாவர இனங்களின் பரவல் ஆகியவை வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைக்குப் பெருகிவரும் அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது பெருமளவிலான வண்ணத்துப்பூச்சிகள் தென்பட்டாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையும் பாரிய இடம்பெயர்வு நிகழ்வுகளும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, தற்போது அவதானிக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகளின் பெருமளவிலான நகர்வு, எதிர்வரவுள்ள இயற்கைப் பேரிடருக்கான அறிகுறி அல்ல. மாறாக, இது இயற்கையின் பருவகாலச் சூழலியல் சுழற்சியின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது.
(நன்றி:நியூஸ்வயர்)
