கம்பவாரிதி ஜெயராஜ் சொன்னது?

கம்பவாரிதி ஜெயராஜ் சொன்னது?

~ கருணாகரன்

“நடந்த போராட்டத்தை மக்கள் மறக்க வேண்டும்” என்று கம்பவாரிதி இ. ஜெயராஜ் சொன்னது, சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாதிகளாகத் தம்மை அடையாளப்படுத்தியிருப்பவர்கள், ஜெயராஜூக்குத் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் பலவிதமாக எதிர்நிலையில் வைத்துச் சித்திரிக்கின்றனர். AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அவரைச் சிலர் உருவக் கேலியும் செய்துள்ளனர். சாதாரண மொழியில் சொன்னால், கம்பவாரிதியை வறுத்தெடுக்கிறார்கள்.

அவர்களுடைய கோபத்துக்குக் காரணம், “இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஜெயராஜ் எப்படி மறக்கச் சொல்ல முடியும்? தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது அளவற்ற – ஒப்பற்ற தியாகத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதை எழுந்தமானமாக நிராகரிக்கவோ எளிதாக மறந்து விடவோ முடியுமா?அப்படி அதை மறந்து போகுமாறு சொல்வதற்கு ஜெயராஜூக்கு என்ன தகுதியும் உரிமையும் உண்டு? ஒடுக்குமுறை நிறுத்தப்படாமல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும்போது, இன்னும் போராட வேண்டிய சூழல் இருக்கும்போது எப்படி நடந்த போராட்டத்தை மறப்பது? ஆன்மீகம், கம்பராமாயணம் என்று தனக்குத் தெரிந்த துறைகளைப் பற்றிக் கருத்துச் சொல்வதை விட்டு விட்டு, தனக்குத் தொடர்பற்ற அரசியலைப் பற்றி ஏன் ஜெயராஜ் பேச வேண்டும்? போர்க்கால  நெருக்கடி வாழ்க்கையைப் பெற்ற அனுபவம் ஜெயராஜூக்கு உண்டா?போராட்டத்தை மறந்து விட்டால், அதற்குப் பிறகு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையைப் பெற்றுத் தருவாரா“ இப்படிப் பல காரணங்களை எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.  

தமிழ்ப் பரப்பில் இதொன்றும் ஆச்சரியமானதல்ல. அதனுடைய இயல்பும் வழமையும் இதுதான். இப்படி நடக்காமலிருந்தால்தான் ஆச்சரியம். இப்படிச் செய்வதன் மூலமாகத் தங்களுடைய தகுதி, தராதரத்தையும் அவர்கள் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது, தாம் யார்?எப்படியானவர்கள் என்பதையும். 

இதனால் ஏற்படுகின்ற இழப்புகளைப் பற்றியும் பின்னடைவுகளைப் பற்றியும் அவர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை. இதனால்தான், ஈழத்தமிழர்களைப் பற்றிய அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம் போன்றவற்றிலும் பிறர் கருத்துரைக்காத, ஆர்வம் காட்டாத, ஈடுபடாத ஒரு போக்கு வளர்ந்துள்ளது. ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தைப் பற்றிய கதைகளைப் படிக்கும்போது, அவற்றைப் படமாக்கலாம். நல்ல சினிமாவாக உருவாக்கலாம். தணிக்கையில்கூட வென்று விடலாம். ஆனால், அவற்றை வெளியிடும்போது, ஈழத்தமிழர்கள் காட்டுகின்ற வினைகளைத் தாங்க முடியாமலிருக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள் இருவர் சொன்னதை இங்கே குறிப்பிடலாம். பொதுவாக ஈழத்தமிழர்களை காஞ்சோண்டிச் செடியைப்போலப் பார்க்கின்ற அளவுக்குத்தான் நிலைமை உள்ளது.                                                    

இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பது ஒரு உண்மையை அல்லது அதனுடைய யதார்த்தத்தை, அதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அல்லது அதன் அடிப்படை என்ன என்பதை ஆய்ந்து அறிவதற்கு முன்பதாக பதறியெழுகின்ற உணர்வுச் சிக்கலேயாகும். ஒரு கருத்தில் அல்லது ஒரு நிலைப்பாட்டில் வலிமையாக இருக்கும் எந்தத் தரப்பும் இப்படிப் பதறாது. அதற்குத் தன்னுடைய கருத்தின் – தத்துவத்தின் பெறுமானமும் வலிமையும் தெரியும். 

ஜெயராஜ் சொல்லியிருப்பதை மேலும் பார்க்கலாம். “நடந்த போராட்டத்தை ஏன் மக்கள் மறந்து விட வேண்டும் என்று தான் சொல்வதற்கான காரணத்தை அந்த அரங்கிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ஜெயராஜ். “இதை ஏன் சொல்கிறேன் என்றால்,அதைச் சொல்லிச் சொல்லியே உங்களைக் கொதி நிலையில் வைத்து தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்கிறார்கள் சிலர்…. இதைச் சொல்வதன் மூலமாக எனக்குக் கடுமையான எதிர்ப்பு வரும். அது வரும் என்று தெரிந்து கொண்டுதான் இதைச் சொல்கிறேன்” என்று.

ஆக, இந்தக் கருத்தைச் சொல்வதால் தனக்கு வரக்கூடிய எதிர்ப்புகள், விமர்சனங்கள், கண்டனங்கள் எல்லாவற்றையும் அவர் எதிர்பார்த்துக் கொண்டே இதைக் கூறியிருக்கிறார் ஜெயராஜ். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்றுண்டு. தான் சொன்ன கருத்துக்கு  எதிர்ப்பு அலைகள் உருவாகியதற்குப் பின்னர், அதை எதிர்கொள்வதற்கோ சமாளிப்பதற்கோ விளக்கம் அளிப்பது வேறு. இது அப்படியானதல்ல. அந்த அரங்கிலேயே தான் முன்வைக்கும் கருத்தை, அதற்கான விளக்கத்தை (காரணத்தை) தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ஜெயராஜ். எனவே அந்த உறுதிப்பாடு அவருக்கிருந்துள்ளது.

போராட்டத்தில் எல்லையற்ற தியாகங்களைச் செய்தவர்களும் இழப்புகளைச் சந்தித்தவர்களும் அலைவுற்றவர்களும் மக்களே. ஆனால், அதை வைத்துக் கொண்டு, எந்த விதமான கூச்சமும் குற்றவுணர்வும் இல்லாமல் பிழைப்பு நடத்துவோர் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இசைவான ஊடக மற்றும் அரசியல்சார் ஆய்வாளர்கள், புத்திஜீவிகளுமே. இவர்களை நோக்கியே சாட்டையை வீசியிருக்கிறார் ஜெயராஜ். 

ஆனால், அவர்கள் இதைக் கண்டு கொள்ளாதவர்கள் போல, தந்திரமாக மக்களின் பக்கமாகத் தட்டி விட்டு, தமக்கு ஒன்றுமே தெரியாததைப்போல,கள்ள மெனத்தில் இருக்கிறார்கள். உண்மையில் ஜெயராஜைக் கண்டித்திருக்கவோ பதில் அளித்திருக்கவோ வேண்டியவர்கள் தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும்,  அந்த அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வாதிடுவோருமே. அவர்களில் யாரும் இதுவரையில் பேசவில்லை. பேசப்போவதுமில்லை. அதற்கான திராணியும் மனச்சாட்சியும் அவர்களிடமில்லை.  

ஜெயராஜ், மக்களையும் சாடியிருக்கிறார். அதாவது, பழைய கதைகளைச் சொல்லிச் சொல்லி (போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வரலாற்றைப் பேசிப் பேசி) உங்களை உசுப்பேற்றுகிறார்கள். இனியும் இதற்கெல்லாம் எடுபடாதீர்கள் என்று போட்டிருக்கிறார். 

ஆக, உசுப்பேற்றலுக்கு எடுபடுகின்றவர்களாகவே இவ்வளவு காலப் போராட்டத்துக்குப் பிறகும் மக்களாகிய நீங்கள் – இழப்புகளோடும் தியாகங்களோடும் தொடர்புள்ள நீங்கள் – இருக்கிறீர்கள். இதுவரையிலும் ஏதோ காரணங்களாலும் நம்பிக்கையினாலும் இப்படியிருந்ததெல்லாம் போதும். இனி அதெல்லாம் பழைய கணக்காகவே கழியட்டும். இனிமேல் ஒரு புதிய வரலாற்றை எழுதுவோம். அதற்காகப் புதிதாகச் சிந்திப்போம் என்று சொல்லாமலே சொல்லியிருக்கிறார். 

புதிதாகச் சிந்திப்போம் என்பது, போருக்குப் பிந்திய சூழலில், ஆயுதப்போராட்டம் முடிவுற்றதற்குப் பின்னர் உள்ள நிலைமையில், அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் எப்படியான அரசியல், சமூகப் பணிகளை முன்னெடுப்பது?மட்டுமல்ல, இன்றைய உலக, பிராந்திய அரசியல், பொருளாதாரச் சூழலையும் உள்ளடக்கியே புதிய அரசியலைத் தொடர வேண்டும். அதற்குரிய எந்த அடிப்படைகளும் புரிதல்களும் இல்லாத, கடந்த காலத்திலேயே படுத்து உறங்குகின்ற, கடந்த காலப் பங்களிப்பாளர்களின் தியாகத்தில் உறிஞ்சிக் கொழுக்க முயற்சிக்கின்ற அரசியலை ஜெயராஜ் நிராகரிக்கக் கோருகிறார். இதில் என்ன தவறிருக்கிறது?அப்படித் தவறு இருந்தால், அதை அதற்குரிய தருக்க அடிப்படையில் யாரும் சொல்ல வேண்டும். யுத்தம் முடிந்து 18 ஆண்டுகளாகிறது. இந்த 18 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட நினைவு கொள்ளல் அரசியலினால், எட்டிய முன்னேற்றம் என்ன?அடைந்த பயன்கள் என்ன? என்பதை ஆதாரபூர்வமாக முன்வைத்து ஜெயராஜின் வாயை அடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதனையும் காணவில்லை. அதற்கு யாரும் தயாராகவும் இல்லை. 

ஜெயராஜ் நேரடியாகப் போராட்டங்களில் பங்கேற்றவரில்லை. அவர் எந்த இயக்கத்தின் ஆதரவாளரோ, அனுதாபியோ இல்லைத்தான். ஆனால், அரசியல் அபிப்பிராயமுள்ளவர். தன்னுடைய அபிப்பிராயங்களைப் பல தடவை பொதுவெளியில் பேசியிருக்கிறார். தான் ஒரு நீண்டகால சமய, பழந்தமிழ் இலக்கியப் பேச்சாளர் என்பதற்கு அப்பால், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் அபிப்பிராயத்தையும் பொதுவெளியில் எழுதி வந்திருக்கிறார். அவற்றை பத்திரிகைகளும் வெளியிட்டிருக்கின்றன. அவை அவ்வப்போது சர்ச்சைக்குரியதாகவும் இருந்துள்ளன. குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதை விட கம்பன்கழக மேடைகளில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களுடன் எல்லாம் ஜெயராஜூக்கு நட்பும் உறவும் இருந்திருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் அரசியல் அபிலாஷையோடு, அல்லது அதற்கான உள்நோக்கங்களோடு செயற்பட்டதாக இல்லை. ஆனால்,ஜெயராஜ் அரசியலில் இறங்கினால், அவருக்கென யாழ்ப்பாணத்தில் ஒரு வாக்கு வங்கியும் ஆதரவுத் தளமும் உண்டு. அருச்சுனாவை ஆதரித்த மக்கள் ஜெயராஜை ஆதரிக்கமாட்டார்களா என்று ஒரு நண்பர் பகிடியாகக் கேட்கிறார். அது பகிடியல்ல. உண்மை. இது என்னுடைய தனிப்பட்ட அவதானம்.  

ஜெயராஜின் உரையைப் பதிவிட்டிருக்கும் தளங்களில் ஊன்றிக் கவனித்தேன். அவர் இந்தச் சர்ச்சைக்குரிய உரையை ஆற்றியது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்பன் விழா அரங்கில். அதாவது பொது அரங்கில். அதில் அவர் மிக நிதானமாகவே தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார். அந்தக் கருத்துக்குச் சபையினர் வரவேற்பைத் தெரிவிக்கும் விதமாகக் கைதட்டுகிறார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிலரிடம் மேலும் விவரங்களை அறிவதற்காக இதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் தெரிவித்ததும் ஜெயராஜ் கூறியிருப்பதும் ஒன்றே. ஆக, மிகத் தெளிவாக,நிதானத்தோடு,எதையும் எதிர்கொள்ளக் கூடிய திராணியோடுதான் ஜெயராஜ் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். இன்னொன்று, எழுத்தாளர் கிரிசாந் குறிப்பிட்டிருப்பதைப்போல, யாழ்ப்பாணத்தின் நாடியோட்டத்தை நன்றாக அறிந்தவர் என்பதால், ஒரு சீண்டலாக, தன்னுடைய கருத்தை ஊன்றிக் கவனித்து, ஒரு விவாதத்தை உருவாக்குவதற்காகவும் அவர்  இதைச் சொல்லியிருக்கக்  கூடும். அப்படியிருந்தால் அதுவும் ஜெயராஜூக்கு வெற்றியே. 

ஜெயராஜ் சொன்னதை நாம் மேலும் கவனித்துப் பேசுவதாக இருந்தால், இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை காலமுமான வரலாற்றில் தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் ஏட்டிக்குப் போட்டியான இனவாத அரசியலே இன முரண்பாடுகளுக்கு வழி அமைத்துக்கொடுத்தது. சுதந்திரன் பத்திரிகையின் பிரதிகள் இதற்குச் சான்று. அதைப்போல சிங்களப் பத்திரிகைள். இலங்கை அரசின் இனவாதச் செயற்பாடுகள் அல்லது சிங்கள இனவாதிகளுடைய இனவாத நடவடிக்கைகள் முரண்பாடுகளை உருவாக்கின. அவற்றை எதிர்கொள்ளும் மாற்று அரசியலை உருவாக்க முடியாமல், பதிலுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் இனவாத அரசியலில்  செயற்பட்டார்கள். இதுதான் வரலாற்று உண்மை. அதாவது சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் உணர்ச்சிகரமான இனவாத அரசியலை வடிவமைத்தனர். இதனை இரண்டு மொழிச் சமூக ஊடகங்களும் புத்திஜீவிகளும் ஆதரித்தன. விளைவு யுத்தமாக விரிவடைந்து, பேரழிவாக முடிந்தது. அந்த முடிவு அந்நிய சக்திகளின் காலடியில், நிபந்தனைகளின் கீழ் நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. இப்பொழுது உலக வங்கிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் IMF க்கும் வட்டியை இலங்கையர்களாக அனைவரும் கட்டுகிறோம். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம், மலைகம் என்ற பேதங்களோ விலக்குகளோ கிடையாது. 

வெளிச்சக்திகளுக்கு நாடு குழம்பி, பிளவுண்டு, சிதறிச் சின்னாபின்னப்பட்டிருப்பதே விருப்பமானது. அவர்களுடைய நலன்களுக்கு அதுவே அவசியம். ஜெயராஜ் ஒரு சுதேசியாகச் சிந்தித்திருக்கிறார். ஒரு எளிய மனிதராகத் தன்னுடைய மனதில் பட்டதை, தன்னுடைய அவதானத்திற் தோன்றியதை வெளிப்படையாக – வெள்ளாந்தியாகச் சொல்லியிருக்கிறார். அதைப் புரிந்து கொள்ள முற்படுவதே நல்லது. எதிர்ப்பதாக இருந்தால், அவரை மறுதலிக்கும் மாற்று அரசியலையும் அதற்கான பொறிமுறையையும் முன்வைக்க வேண்டும். அதன்மூலம் அவரைச் சவாலுக்குட்படுத்தலாம். அதைச் செய்வதற்கு யாருளர்?

இழப்புகளைச் சொல்லிப் புலம்புவதால் பயனில்லை. ஏனெனில் உலகம் பல வகையான இழப்புகளைக் கண்டுள்ளது. இப்போதும் மனித குலத்துக்கும் உலக அமைதிக்கும் சூழலியலுக்கும் எதிரான போர்கள் நடந்து கொண்டேயுள்ளன. மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா போன்ற பெரு நிறுவனங்களும் செய்வதறியாது தடுமாறும் நிலையே நீடிக்கிறது. என்பதால் இழப்பைச் சொல்லிச் சொல்லி யாரிடமும் நாம் அனுதாபத்தைக் கோர முடியாது. அது பயனும் இல்லை. ஆண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டோர் வரப்போவதில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கும் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைக்கும் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கத்தான் வேண்டும் என்பது நீதியுணர்வே. அதற்கான நடைமுறைகள் மிகக் கடினமானவை. அவற்றை மேற்கொள்ள வேண்டுமென்றால் மிகக் கூருணர்வும் கடுமையான உழைப்பும் வேண்டும். அதைச் செய்வதற்கு தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் கிடையாது. இதுவும் ஒரு மறுக்க முடியாத உண்மை. 

இந்த இடத்தில் நாம் எழுத்தாளரும் வலைப்பதிவருமான வ.ந. கிரிதரனின் கருத்தொன்றை இங்கே கவனிக்கலாம். “பொதுவாக குடும்பமொன்றில் இழவு வீடு நடந்தால், அந்த இழப்பைக் காலம் முழுவதும் யாரும் சொல்லிச் சொல்லி வாழ்க்கையைக்  கொண்டு நடத்துவதில்லை. அந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு, எதிர்கால இருப்பை ஆரோக்கியமாக எதிர்நோக்கி நடப்பதுதான் சரியான செயல். அதையே நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்கிறோம்“ என்பது. உண்மையே.  பழிக்குப் பழி என்பதெல்லாம் எம்.ஜி.ஆர்  – நம்பியார் சினிமாவில்தான். நிஜவாழ்க்கையிலும் அரசியலிலும் அது மிகக் கடினமானது.

கம்பன்கழகம் ஜெயராஜ் அரசியல்வாதி அல்ல. ஆனால், தொடர்ந்து அரசியலைப் பேசி வருகிறார். தன்னுடைய அபிப்பிராயத்தையும் நிலைப்பாட்டையும் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார். கிறிஸ்தவ மதகுருக்களைப் போல, பௌத்த பிக்குகளைப்போல,வேலன் சுவாமிகளைப்போல அரசியற் களங்களில் இறங்காது விட்டாலும் தன்னுடைய அபிப்பிராயங்களைத் தொடர்ச்சியாகச் சமூக வெளியில் வெளிப்படுத்தி வருகின்றார். அதை ஏற்கலாம் விடலாம். ஆனால், நம்முடைய சமூகத்தில் படித்தவர்களில் பலரும் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உண்மைகளைப் பேசுவதற்கும் தயங்கும் தடுமாறும் சூழலில் ஜெயராஜ் வெளிப்படையாகப் பேசித் தன்னை முன்னிறுத்துவது முக்கியமானது. சிங்கள இனவாதத்தை முறியடிப்பதெனில் அதற்குப் பதில் இனவாதத்தை – இனச்சவாலை உருவாக்குவதில்லை. அதை நிராகரிக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதேயாகும். ஜெயராஜ் இதைத்தான் சொல்ல முற்படுகிறார். அதை இப்போது விளக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *