~ சமூக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்
அண்மையில் கொழும்பில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். அறிவழகன், இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் அரசியல் வரலாறு குறித்து முன்வைத்த கருத்துகள் வரலாற்று ரீதியாகவும் அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையிலும் தீவிர மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற தளத்திலிருந்து முன்வைக்கப்படும் கருத்துகள் உண்மையான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தின் பிரசாரத் தேவைகளுக்காக வரலாற்றை எளிமைப்படுத்துவதாகவோ வசதிக்கேற்ப மறைப்பதாகவோ அமையக்கூடாது.
அவரது உரையில் உள்ள பிரதான குறைபாடுகளைப் பின்வருமாறு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ;
“சுதந்திரத்துக்கு முன்னர் அல்லது சுதந்திரத்தின்போது இலங்கையில் இனப்பிரச்சினையே இருக்கவில்லை; அது சுதந்திரத்தின் பின்னர் மேட்டுக்குடி ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது” என்ற அறிவழகனின் வாதம் அடிப்படை வரலாற்றுத் தரவுகளுக்கே முரணானது.
சுதந்திரத்திற்கு 33 ஆண்டுகளுக்கு முன்னரே, 1915 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் கலவரம் நாடளாவிய ரீதியில் பரவிப் பெரும் உயிரிழப்புகளையும் உடைமைச் சேதங்களையும் ஏற்படுத்தியது. இது காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே இங்கு ஆழமான மத மற்றும் இன ரீதியான முரண்பாடுகளும் மேலாதிக்கப் போக்குகளும் வேரூன்றியிருந்ததற்கான அசைக்க முடியாத சான்றாகும்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மத மறுமலர்ச்சி இயக்கங்கள் நவீன அடையாள அரசியலுக்கு வித்திட்டன. 1920 களில் இலங்கை் தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுகள், 1931 டொனமூர் அரசியலமைப்பின் மீதான இனவாரிப் பிரதிநிதித்துவ விவாதங்கள், சோல்பரி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஜி. ஜி. பொன்னம்பலம் முன்வைத்த “ஐம்பதுக்கு ஐம்பது” சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கை என அனைத்தும் சுதந்திரத்திற்கு முன்னரே இங்கு ஆழமான அரசியல் முரண்பாடுகள் இருந்ததை நிரூபிக்கின்றன.
சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் தமது வாக்கு வங்கிக்காக இனவாதத்தைத் தீவிரப்படுத்தினர் என்பது உண்மையே. ஆனால் “சுதந்திரத்திற்கு முன் இனப்பிரச்சினையே இருக்கவில்லை” எனக் கூறுவது வரலாற்று உண்மைகளை முழுமையாக மறுதலிப்பதுடன், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பதற்கு ஒப்பாகும்.
1948 ஆண்டில் தேசிய மக்கள் சக்தி இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது” என்பது வரலாற்று முரண்நகையாகும்.
வரலாற்றை அதன் கால-வெளிப் பின்னணியில் பார்க்காமல், இன்றைய ஒரு அரசியல் இயக்கத்தை 1948 இற்குப் பொருத்திப் பார்ப்பது (Anachronism) ஓர் ஆய்வாளருக்குப் பொருத்தமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய மக்கள் சக்தியின் பிரதான தூணான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), வரலாற்றில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எடுத்த நிலைப்பாடுகளை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
1971 கிளர்ச்சியின் போது ரோகண விஜேவீரவின் “ஐந்து வகுப்புகளில்” மலையகத் தமிழ்த் தொழிலாளர்களை “இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவி” எனச் சித்தரித்தமை ;
1987-1989 காலப்பகுதியில் இலங்கை-இந்திய — இலங்கை சமாதான ஒப்பந்தம் மற்றும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமான மாகாண சபை முறையை “நாட்டைப் பிளவுபடுத்தும் சதி” எனக் கூறி அதற்கு எதிராகத் தென்னிலங்கையில் முன்னெடுத்த ஆயுத வன்முறைப் போராட்டங்கள் ;
1987 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையைச் சட்டரீதியாகப் பிரிப்பதற்கு 2006 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்து, அவ்விரு மாகாணங்களையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்தது ஜே.வி.பி. தான்.
அதிகாரப் பகிர்வை மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் மரபுவழித் தாயகக் கோரிக்கையான வடக்கு-கிழக்கு இணைப்பையும் மிகக் கடுமையாக எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று முறியடித்த ஓர் அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட இயக்கம், 1948 இலேயே இருந்திருந்தால் இனப்பிரச்சினையே தோன்றியிருக்காது என்று வாதிடுவது வரலாற்று உண்மைகளுக்கு மாறான ஒரு கற்பனையாகும்.
வடக்கு-கிழக்கில் பௌத்தமயமாக்கல்:
இலங்கையர் என்ற பொது அடையாளத்தைப் பற்றிப் பேசும் கலாநிதி அறிவழகன், ஓர் அடிப்படைக் கேள்வியை வசதியாகத் தவிர்த்துவிட்டார். இலங்கையானது சமத்துவமான உரிமைகளைக் கொண்ட ஒரு “பல்லின-பன்முகத்துவ நாடு” (Multi-ethnic, secular state) என்பதை ஏற்றுக்கொள்ள ஜே.வி.பி. யோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ தயாராக உள்ளதா?
இலங்கை அரசியல் சாசனத்தின் 9 ஆவது உறுப்புரை பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குகின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்த 9 ஆவது உறுப்புரையை நீக்கவோ அல்லது நாட்டை மதச்சார்பற்ற-பல்லின அரசாகப் பிரகடனப்படுத்தவோ தயாராக இல்லை. மாறாக, பௌத்தத்திற்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் என்றே தெற்கில் தொடர்ந்து உறுதியளித்து வருகின்றது ;
பௌத்தத்துக்கு முன்னுரிமை வெறும் அரசியலமைப்பு விதியாக மட்டுமல்லாமல், கள யதார்த்தத்திலும் தீவிரமாகப் பிரயோகிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை விவகாரத்தில்,
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் ஆலய நிலம் தொல்பொருள்துறை என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்படும் விவகாரத்தில்,
முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி மேற்கொள்ளப்பட்ட பௌத்த விகாரை அமைப்பில் — இவை அனைத்திலும் முந்தைய ஆட்சிகள் முன்னெடுத்த அதே சிங்கள-பௌத்த மேலாதிக்க, பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சிநிரலைத் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் எவ்விதக் குறுக்கீடும் இன்றித் தொடரவே செய்கிறது.
அரசியலமைப்பு ரீதியாகவும் நில ஆக்கிரமிப்புகள் மூலமாகவும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நடைமுறையில் அனுமதித்துக்கொண்டு, மேடைகளில் மட்டும் “இலங்கையர் அடையாளம்” என்று போதிப்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.
பொறுப்புக்கூறலும் நிலைமாறுகால நீதியும்..
நாட்டில் உண்மையான நேர்நிலை அமைதியை (Positive Peace) உருவாக்க வேண்டுமாயின், வெறும் யுத்தமின்மை (Negative Peace) அல்லது பொருளாதார விநியோகம் மாத்திரம் போதாது. கடந்த காலங்களிலும் நிகழ்காலத்திலும் அரசாலும் அதன் படைகளாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.
சர்வதேசமும் மனித உரிமை அமைப்புகளும் மிகக் கடுமையாகக் கண்டிக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அல்லது அதன் மாற்று வடிவங்களான புதிய கொடூர சட்ட வரைவுகளைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க முனையும் அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைதியையோ நல்லிணக்கத்தையோ கட்டியெழுப்ப முடியாது.
கடந்த கால வடுக்களுக்கான பொறுப்புக்கூறலும், மனித உரிமைகள் மீதான உண்மையான மதிப்பும் இன்றிப் பேசப்படும் “நல்லிணக்கம்” ஒரு வெற்றுப் பிரச்சாரமே தவிர வேறில்லை.
“முதலில் நல்லிணக்கமும் நம்பிக்கையும், அதன் பின்னரே அதிகாரப் பகிர்வு” என்ற அறிவழகனின் வாதம், கடந்த 7 தசாப்தங்களாகத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரை ஏமாற்றப் பயன்படுத்திய அதே பழைய தந்திரோபாயத்தின் (Functional integration over constitutional reform) மறுவடிவமேயாகும்.
அதிகாரப் பகிர்வு என்பது ஏதோ கருணையின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகையோ அல்லது பரஸ்பர அன்பின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் விவகாரமோ அல்ல; அது ஒரு பல்லின நாட்டில் சிறுபான்மைத் தேசியங்களின் இருப்புக்கும் அரசியல் உரிமைகளுக்கும் வழங்கப்படும் அரசமைப்பு ரீதியான பாதுகாப்பு உத்தரவாதமாகும் (Constitutional Guarantee). அதிகாரப் பகிர்வைக் காலவரையறையின்றித் தள்ளிப் போட்டு் விட்டுப் பேசப்படும் வெற்று நல்லிணக்கமும் பொருளாதார அபிவிருத்தியும் கடந்த காலத்தில் தோல்வியையே தழுவின என்பதை வரலாறு எமக்குக் கற்பித்துள்ளது.
லீ குவான் யூ பற்றிய கட்டுக்கதை..
“கொழும்பைப் போன்று போன்று மாற்றுவேன் என்று லீ குவான் யூ கூறினார்” என்பது இலங்கையில் நீண்டகாலமாக உலவி வரும் ஒரு தவறான அரசியல் கட்டுக் கதையாகும். லீ குவான் யூ தனது சுயசரிதையான “The Singapore Story ” இல், இலங்கையை ஒரு முன்மாதிரியாக அன்றி, “எவ்வாறு ஒரு நாடு குறுகிய இனவாத அரசியலாலும் போலி வாக்குறுதிகளாலும் பாதாளத்தில் வீழும்” என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவே (Cautionary Tale) சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கல்வியியலாளராக இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத அரசியல் புனைவுகளை மேடைகளில் மறுஉற்பத்தி செய்வது ஆய்வாளர் என்ற வகையில் நெறிமுறைக்கு உகந்ததல்ல.
தெற்கில் ஞானசார தேரரின் விவகாரமும், வடக்கில் திலீபனின் நினைவுகூரல் விவகாரமும் வெறும் “செயற்கையான திசைதிருப்பல்கள்” என்றும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையுடன் தொடர்பற்றவை என்றும் கூறுவது சிறுபான்மை மக்களின் கூட்டு நினைவுகூரல் மற்றும் அடையாள உரிமைகளை அவமதிப்பதாகும். பொருளாதார நெருக்கடியை முதன்மைப்படுத்தி மக்களின் அரசியல், பண்பாட்டு, வரலாற்று உரிமைகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் போக்கு, மார்க்சியத்தின் பெயரால் இனப்பிரச்சினையை “வகுப்புவாதப் பிரச்சினையாக” மட்டும் சுருக்கிப் பார்த்த அதே பழைய வரலாற்றுப் பிழையின் தொடர்ச்சியாகவே அமையும்.
கல்விமான்களின் கடமை:
எல்லாவற்றிற்கும் மேலாக, கலாநிதி அறிவழகன் போன்ற கற்றறிந்த கல்விமான்களின் தார்மீகக் கடமை என்னவென்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆளும் கட்சியின் மேடைகளில் ஏறி அரசியல் முழக்கங்களை நியாயப்படுத்துவதை விடுத்து, தென்னிலங்கையைச் சேர்ந்த தமது சக கல்விமான்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கும் கசப்பான உண்மைகளைத் தெளிவுபடுத்த முன்வருவதே ஒரு உண்மையான புத்திஜீவியின் பணியாகும்.
நாட்டில் நிலையான அமைதியும் நிரந்தரமான அரசியல் தீர்வும் ஏற்பட வேண்டுமாயின், அது தமிழ் மக்கள் மீதான சமத்துவமான நடத்தையின் (Equal treatment) அடிப்படையிலும், கடந்த காலத்தில் அரச இயந்திரத்தினாலும் பேரினவாதத்தினாலும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளையும் வரலாற்றுத் தவறுகளையும் பகிரங்கமாக ஒப்புக் கொள்வதிலும் இருந்தே தொடங்க வேண்டும் என்பதைத் தென்னிலங்கைக்கு உணர்த்துவதே கல்விமான்களின் வரலாற்றுப் பொறுப்பாகும். அதை விடுத்து, இனப்பிரச்சினையை ஆளும் கட்சிகளின் தேர்தல் இலாபங்களுக்காக வெறும் அரசியல் விவகாரமாகச் சுருக்குவது ஆரோக்கியமானதல்ல.
இறுதியாக, இலங்கைக்கு ஒரு புதிய அரசியல் கலாசாரமும், ஊழலற்ற நிர்வாகமும், பொருளாதார மீட்சியும் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அத்தகைய புதிய மாற்றமானது கடந்த காலத் தவறுகளையும் வரலாற்றையும் நேர்மையாக ஒப்புக் கொள்வதிலும், இலங்கை ஒரு பன்மைத்துவ பல்லின நாடு என்பதை ஏற்றுக் கொண்டு தையிட்டி, கன்னியா, குருந்தூர்மலை போன்ற நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாறுகால நீதியை வழங்குவதிலும் இருந்தே தொடங்க வேண்டும்.
வரலாற்றை வசதிக்கேற்பத் திரித்தும், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களைத் தக்கவைத்தும், பௌத்த மேலாதிக்கத்தை மறைமுகமாக ஆதரித்தும் முன்னெடுக்கப்படும் எந்தவொரு “தேசிய நல்லிணக்கமும்” நிரந்தரமான அமைதியைத் தராது.
