மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ‘போலி தேசியவாதிகளே’ தடுத்தனர் என்கிறார் பிள்ளையான்

மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ‘போலி தேசியவாதிகளே’ தடுத்தனர் என்கிறார் பிள்ளையான்

பல குற்றவியல் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயர் குறிப்பிடப்படாத ‘போலி தேசியவாதிகளே’ மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிர்வாக ரீதியாகத் தீர்வு காணும் முயற்சிகளைத் திட்டமிட்டுத் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சுப்பிரமணியம் ஜீவராஜ், இந்தக் கருத்துக்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தனது முகநூல் பதிவில், சிறையில் சந்திரகாந்தனைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஜீவராஜ், அவரின் பெயரில் பல நேரடிக் கூற்றுகளையும் வெளியிட்டுள்ளார். எனினும், இந்தச் சந்திப்பு மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. சந்திரகாந்தன் இது தொடர்பில் தனது தரப்பிலிருந்து பகிரங்கமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அந்த முகநூல் பதிவின்படி, தான் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் இந்தப் பிரச்சினையை நிர்வாக வழிமுறைகள் ஊடாகத் தீர்ப்பதற்கு முயற்சித்ததாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ‘போலி தேசியவாதிகள் தங்களின் அரசியல் இலாபத்துக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தபோது’ தீர்வு எட்டப்படுவதற்கான வாய்ப்பு நெருங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினையை, இரு சமூகங்களுக்கிடையிலான மிகப்பெரியதும் தீர்க்க முடியாததுமான பிரச்சினையாக அவர்கள் மாற்றிவிட்டார்கள்” என்று அவர் கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கணக்கான விவசாயிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேய்ச்சல் தரைகளில் குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த 11 பேருக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ. சிறீநேசன் மற்றும் இ. சிறிநாத் ஆகியோரும் அடங்குவர். நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், ஏழு விவசாயிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இடைக்கால நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டன. மேய்ச்சல் நிலங்களைப் பார்வையிடுதல், டிசம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்தல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

எனினும், இந்த நடவடிக்கைகள் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கப் போதுமானவை அல்ல என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான சுமார் 3,025 ஹெக்டேயர் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும். அக்காணிகள் அயல் மாவட்டங்களைச் சேர்ந்த, பெரும்பாலும் சிங்கள மக்களான சோளப் பயிர்ச் செய்கையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

குடியேறியுள்ளவர்கள் தங்களின் கால்நடைகளைக் கொல்வதாகவும், அவற்றைக் காயப்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

குறிப்பிட்ட மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் பகுதிகளாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப் போவதாக அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தது. எனினும், அதற்கான திகதியையோ, ஒதுக்கப்படவுள்ள காணியின் அளவையோ அரசாங்கம் குறிப்பிடவில்லை.

மேலும், 1,570 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு மே மாதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பணிப்புரையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பிள்ளையான் கூறும் கடந்தகால நடவடிக்கைகள்..

முகநூல் பதிவில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தான் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளையும் சந்திரகாந்தன் விபரித்துள்ளார்.

அக்காலத்தில் பொலிஸ் மா அதிபரிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்ததாகவும், அப்பகுதியில் பொலிஸ் உப நிலையமொன்றை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கால்நடைகள் மீதான தாக்குதல்கள் பெருமளவில் குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்னர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே தமது கட்சியின் முதலாவது நிபந்தனையாக முன்வைத்ததாகவும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

2024 ஜூன் 22ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரகாந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது கட்சியின் ஆதரவை அறிவித்திருந்தார்.

எனினும், அந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எவ்வித நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்காக ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் வீதிகளை மறித்தவர்கள், இன்று இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கோரிப் போராடுபவர்களே என்றும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.

இது 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. அன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்திற்கு முன்னதாக, செங்கலடிக்கு அருகில் விவசாயிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நடத்திய போராட்டத்தைப் பொலிஸார் கலைத்திருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க அங்கு பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வந்திருந்தார் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘Front Line Defenders’ தெரிவித்திருந்தது.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகளும் பிள்ளையானின் பதிலும்..

தான் குற்றஞ்சாட்டிய அரசியல்வாதிகள் எவரது பெயரையும் சந்திரகாந்தன் குறிப்பிடவில்லை.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் சந்திரகாந்தனைச் சார்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

2024 மே மாதத்தில், சந்திரகாந்தனுடன் தொடர்புடைய குழுவொன்று தங்களின் போராட்டக் களத்திற்கு வந்து அச்சுறுத்தல் விடுத்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

மேலும், ‘எமது மக்கள்’ தற்போதைய அரசாங்கத்துக்கு வலுவான ஆதரவை வழங்கியிருந்த போதிலும், விவசாயிகளின் குறைபாடுகளுக்கு அந்த அரசாங்கம் இதுவரை தீர்வு காணவில்லை என்றும் சந்திரகாந்தன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானுக்கு எதிரான வழக்குகளும் விளக்கமறியலும்:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் 2025 ஏப்ரல் 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து சந்திரகாந்தனைக் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர் 359 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2006ஆம் ஆண்டு அப்போதைய கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 2026 ஏப்ரல் 2ஆம் திகதி மவுண்ட் லவீனியா நீதவான் நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது தடுப்புக் காவலுக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் விசாரணையை 2027 ஜனவரி 19ஆம் திகதி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

(நன்றி: ஜப்னா மொனிட்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *