– அழகு குணசீலன் –
“நம் அனைவரையும் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்புவதற்கான ஒரு தளம் இது…… பொதுவான அம்சங்கள் இருக்கும் இடங்களில் நாங்கள் இணைந்து பயணிப்போம். ஏனெனில் ஒன்று பட்ட குரலுக்கு அதிக வலிமை உண்டு”
ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து இந்த கூட்டமைப்பை ஜுலை 2026 இல் அமைத்த பின்னர் தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள் இவை. எல்லா தமிழ் பேசும் கட்சிகளும் இந்த கூட்டில் இல்லாத போதும், ஒரு மித்த குரலும், அதற்கான வலிமையும் குறித்து சுமந்திரனின் கூற்றை நவம்பர் 2 இல் மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் கொள்கை இணக்கப்பாட்டின் படி புதிய அரசியல் அமைப்பு -அதிகாரப்பகிர்வு, மாகாணசபைத் தேர்தல், வடக்கு, கிழக்கு, மலையக காணிப் பிரச்சினைகள் என்பன அடையாளம் காணப்பட்ட மூன்று முக்கிய மூலங்கள்.
அண்மைய போராட்டத்தில் கூட்டமைப்பின் ஆறு கட்சிகளில் எத்தனை கட்சிகள் கலந்து கொண்டன? அதன் தலைமைகள் எங்கே ஓடி ஒழித்தன. கூட்டமைப்பில் உள்ள ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் முன்னேற்ற கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எங்கே போயின? சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றிற்கு என்ன நடந்தது?.
நீங்கள் புதிய அரசியல் அமைப்பையும், அதிகாரப்பகிர்வையும், மாகாண சபைத்தேர்தலையும் ஏன் கோருகிறீர்கள்? ஏனெனில் அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை காணி உரிமையுடன் நிர்வகிப்பதற்கான அடிப்படை ஜனநாயக உரிமைக்கோரிக்கையே இது. வெறுமனே மாகாணசபை கதிரைகளை நிரப்புதல் அல்லது உங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்வதற்காக அல்ல.
ஆகக்குறைந்தது மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தமிழரசுக்கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு எம்.பி.க்களில் எவரும் இல்லை. கிழக்கு மாகாணத்தின் அயல் மாவட்டங்களில் இருந்து தமிழரசுக்கட்சியின் கோடீஸ்வரனோ, குகநாதனோ அங்கு சமூகமளிக்கவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும், எடுத்ததற்கெல்லாம் சமூக ஊடகத்தில் போட்டோ போஸ்ட் போடும் மனோகணேசனும் இல்லை. ஜீவன் தொண்டமானும் இல்லை. இங்குதான் சுமந்திரனின் “ஒன்று பட்ட குரலும், அதன் வலிமையும்” கேலிக்குரியதாக உள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பை தங்கள் அரசியல் அஜண்டாவில் இன்னும் காலத்திற்கு காலம் தூசு தட்டுகின்ற சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் எங்கே போனார்கள்? இந்த போராட்டத்தை- பொதுவான காணிப் பிரச்சினையை தமிழரசுக்கட்சி மட்டும் கையில் எடுத்ததா? அப்படி என்றால் தமிழ்த்தேசிய கட்டமைப்பில் ஓடிய அதே சுழியைத்தான் சுமந்திரன் ஓடுகிறாரா?
மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வார்த்தைகளையும், ஜே.வி.பி.யின் மார்க்சியத்தையும்(?) மட்டக்களப்பில் திருப்பி அரைக்கும் என்.பி.பி. எம்.பி. பிரபாவும் சட்டம், சமத்துவம் பற்றியே பேசுகிறார். மார்க்சியத்தை விடுங்கள். ஏனெனில் அதில் அவர் இரண்டு வருட குழந்தை. ஆனால் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் உரிமைகளையும், பேரினவாத சட்டத்திற்கு முரணான ஆக்கிரமிப்பு அத்துமீறலையுமா? அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
மயிலத்தமடு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மேய்சல்தரை பிரதேசம். ஆயிரம் பண்ணையாளர்கள், 35, 000 க்கும் மேற்பட்ட கால்நடைகளை அங்கு வளர்க்கிறார்கள். இந்த நிலையில் ஜே.வி.பி.அரசாங்கம் கடந்த கால அதே பேரினவாத முகத்துடன் மகாவலி அதிகார சபை வெளிமாவட்ட மக்களை அங்கு குடியேற்ற அனுமதிக்கிறது. சோளச்செய்கைக்கு நிலம் ஒதுக்கி இன உறவை சீரழிக்கிறது. பண்ணையாளர்களின் கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. பௌத்தமதம் பசுவதை- மிருகவதை குறித்து பேசுவது என்ன? போயாவுக்கு மட்டும் இறைச்சிக்கடையை மூடினால் சரியா?
சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மேய்சல்தரை, சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுதல், பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய நீதிமன்ற தீர்ப்புக்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் அதற்குள் சமரசம் தேடுவதன் பின்னணியில் ஆக்கிரமிப்பு உளவியல் ஒழிந்து இருக்கிறது. சட்டத்தில் இனரீதியாக பாரபட்சம் காட்டப்படுகிறது.
இந்த விவகாரம் மாவட்ட, மாகாண மட்ட அரசாங்க கட்சி முகவர்களாக செயற்படும் அரசாங்க அதிபராலோ, ஆளுநராலோ தீர்க்கப்படப்போவதில்லை. இது தெரிந்திருந்தும் வருகின்ற வரவு -செலவுத்திட்டத்தில் அரசாங்கத்தை ஆதரித்து “கண்சிவந்த மேனியர்” கதைபேச தமிழ்த்தேசிய அரசியல் தயாராகிறதேயன்றி பண்ணையாளர்களின் நன்மைக்காக அல்ல. அப்படி என்றால் அது சுமந்திரன் கூறிய வாக்கை செயற்படுத்தியிருக்கவேண்டும்.
இத்தனையும் நடக்கும் போது புகலிட “மார்க்சியர்கள்”(?) சிலர் இன்னும் அநுர அரசாங்கத்தை ஒரு இடதுசாரி அரசாங்கமாக வெள்ளையடிக்கிறார்கள். இன்னும் சிலர் ஆரம்பத்தில் இருந்த வேகத்தில் இருந்து சோர்ந்து போய் விட்டார்கள். இவை மட்டும் அல்ல. ஜே.வி.பி. அதன் முகத்தை இன்னும் முழுமையாக காட்டவில்லை. பொலநறுவையில் இருந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார்? பெலவத்தை உளவாளிகளா…? அல்லது மக்கள் போராட்ட குழுவினரா? என்பது விரைவில் தெரியவரும்.
