வி.ரி. இளங்கோவன்: மீள்பார்வைக்கான காலத்தையும் களத்தையும் திறக்க வேண்டும்

வி.ரி. இளங்கோவன்: மீள்பார்வைக்கான காலத்தையும் களத்தையும் திறக்க வேண்டும்

~ கருணாகரன்

கவிஞர் புதுவை இரத்தினதுரையோடு 1980 களின் நடுப்பகுதியிலிருந்து 2009 வரை, 30 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழங்கியிருக்கிறேன். 20 ஆண்டுகள் இருவரும் இணைந்து செயற்பட்டிருக்கிறோம். அவர் கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர். நான்,பண்பாட்டுக்கழகத்தின் வெளியீடான ‘வெளிச்சம்’ இதழின் ஆசிரியர். இதனால் புதுவையின் குடும்பச் சூழல், காதல், இளமைக்கால நண்பர்கள், அவருடைய அரசியல் ஈடுபாடு, அவர் பங்குபற்றிய கவியரங்குகள் எனப் பலதையும் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருடைய பழைய நண்பர்களைச் சந்திக்கும்போது இதை நேரிலும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லும் திறன் புதுவைக்குண்டு. புதுவையிடம் கதை கேட்டவர்களுக்குத் தெரியும், அதனுடைய ருசி எப்படியானது என்று.  

புதுவையின் நண்பர்கள், தோழர்கள் பெரிய பட்டியல். தமிழ், முஸ்லிம், மலையகத் தோழர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நீண்டது. இடதுசாரிய எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு இது இயல்பாக அமைந்து விடுவது. அதில் ஒருவர் வி.ரி. இளங்கோவன். 

இளங்கோவனும் புதுவையும் சமவயதினராக இருக்கலாம். இளங்கோவனும் புதுவையும் சீனசார்புக் கொம்யூனிஸ்ற் கட்சியில் இயங்கியவர்கள். இருவரும் கவிதை, இலக்கியம் என சம ஈடுபாடுடையவர்கள். பல அரங்குகளில் ஒன்றாகவே கவிதை வாசித்துமிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் டானியல், என். கே. ரகுநாதன், கவிஞர்கள் வ.ஐ.ச.ஜெயபாலன், சில்லையூர் செல்வராஜன் போன்றோருடன் மிக நெருங்கிப் பழகியவர்கள். இதையெல்லாம் விட ஒரு சந்தர்ப்பத்தில் இளங்கோவனுடைய ஊரான புங்குடுதீவு கலட்டிப் பிள்ளையார் கோயிலில் தேர் வேலையைச் செய்வதற்கென புதுவை தங்கியிருக்கிறார். அப்பொழுது இளங்கோவனுக்கும் புதுவைக்கும் இடையில் மேலும் நெருக்கம் கூடியிருக்கிறது. தோழமையும் நட்பும் கலந்த உறவு அது. தங்களுடைய காதற் கவிதைகளையே பகிரக் கூடிய அளவுக்கான நெருக்கம்.

பிறகு (1980 களின் நடுப்பகுதியிலிருந்து) அரசியல் ரீதியாக இருவரும் வெவ்வேறு துருவங்களுக்கு நகர்ந்து விட்டனர். இளங்கோவன் சீனசார்புக் கொம்யூனிஸக் கட்சியின் ஆளாகவே இருந்தார். புதுவையோ,“இடதுசாரிகளின் காலம் இலங்கையில் வரட்சிக்குள்ளாகி விட்டது“ என்று, தமிழீழக் கனவோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில்  பயணிக்கத் தொடங்கி விட்டார். ஆனாலும் தன்னுடைய  பழைய தோழர்களின் நினைவுகளையும் தோழமையையும் புதுவை என்றுமே மறக்கவில்லை. புதுவையின் மூலமாகவே வி ரி. இளங்கோவனை அறிந்தேன். அதற்கு முன்பு இளங்கோவனுடைய பெயர்தான் எனக்கு அறிமுகம்.

1960, 70 களில் நாவேந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை போன்ற இதழ்களில் கதைகளை எழுதினார். அன்று அரசியலிலும் இலக்கியத்திலும் நாவேந்தனுடைய பெயர் அறியப்பட்டிருந்தது. ஆனால், அவருடைய தம்பி இளங்கோவனோ, அதற்கு மாறாக கொம்யூனிஸ்ற் கட்சியிலிருந்தார். தமிழரசுக் கட்சியின் வலதுசாரிப்போக்கையும் சமூக ஒடுக்குமுறை, சமூக விடுதலை குறித்து அதனுடைய கள்ளத் தனங்களையும் கொம்யூனிஸ்ற் கட்சி கடுமையாக விமர்சித்தது. இளங்கோவன் இள ரத்தத்தோடு, இந்த விமர்சனங்களை முன்வைத்தார். ஆக, குடும்பத்துக்குள்ளேயே (சகோதரர்களுக்கிடையிலேயே) இருவகை (எதிரெதிர்) நிலைப்பாடு நிலவியது.

இதைத் தவிர, சட்டத்துறையைச் சேர்ந்த வி.ரி. தமிழ்மாறன், கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் ஆகியோரும் இளங்கோவனுக்குச் சகோதரர்களே. நான்கு சகோதரர்களும் அந்த நாட்களிலேயே பிரபலமாகியிருந்தனர்.  நான்கு பேரிடமும் வெவ்வேறு திறன்கள், வெவ்வேறு அரசியல், சமூக ஈடுபாடுகளிருந்தன. என்னை அதிகம் கவர்ந்தது இளங்கோவனே. அவரும் நானும் பொதுவுடமை அரசியலில் ஆர்வம் உடையவர்கள் என்பதால் இந்த ஈடுபாடு ஏற்பட்டிருந்தது.  மட்டுமல்ல, எனக்கு நெருக்கமான கே. டானியல், இக்பால், புதுவை இரத்தினதுரை, ஷெல்லிதாசன், டானியல் அன்ரனி போன்றோருடன் இளங்கோவன் நெருங்கிப் பழகியவர். ஆனாலும் மிகப் பிந்தியே இளங்கோவனுடன் பேசிப் பழக முடிந்தது. அதற்கு முன்பு, 1980 களில் நான் ஈழ விடுதலைப்போராட்ட அரசியலில் ஈடுபட்டிருந்ததால், இளங்கோவனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர் 1990 களில் நாட்டை விட்டுப் பெயர்ந்து பிரான்சுக்குப் போய் விட்டார். ஆனாலும் இளங்கோவனுடைய எழுத்துகளை அவ்வப்போது படித்துக் கொள்வேன்.  

இளங்கோவனுடைய பொதுவுடமை அரசியல் ஈடுபாடும் அதில் அவருக்கிருந்த இலக்கிய ஆர்வமும் டானியல், டானியல் அன்ரனி, புதுவை இரத்தினதுரை, சில்வையூர் செல்வராசன், நந்தினி சேவியர், இக்பால், ஷெல்லிதாசன், நல்லை அமிழ்தன் போன்ற இலக்கியவாதிகளோடு இணைந்து இயங்கும் சூழலை உருவாக்கியிருந்தது. சமூக மாற்றத்துக்கான இலக்கியம் என்ற அடிப்படையிலேயே இளங்கோவனுடைய எழுத்துகள் இருந்தன. அவருடைய கதைகள் இதற்குச் சான்று.

இன்னொரு நிலையில் இளங்கோவன் ஆயுர்வேத மருத்துவர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சில காலம் அவர் பிலிப்பைன்ஸிலும் வேலை செய்திருக்கிறார். பிறகு புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பிரான்ஸில் வசிக்கத் தொடங்கினார். எங்கே இருந்தாலும் இலக்கியமும் பொதுவுடமை அரசியல் ஈடுபாடும் இளங்கோவனுடைய செயற்பரப்பாக இருந்துள்ளது. தன்னை ஒரு கொம்யூனிஸ்ற்றாக உணர்ந்து கொண்டதன் விளைவிது.

இளங்கோவன், சிறுகதை, கவிதை, கட்டுரை, மருத்துவம் எனப் பல வகையில் எழுதினாலும் ‘ஈழத்து இலக்கியச் சிற்பிகள்’, ‘மண் மறவா மனிதர்கள்’  என்ற இரண்டு நூல்களும் கே. டானியல் பற்றி எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. தன் அனுபவங்களின் வழியாகவும் தன் நோக்கு நிலையிலும் ஈழத்து ஆளுமைகளை மதிப்பிடும் எழுத்துகள் இவை. அதில் விவாதத்துக்குரிய புள்ளிகள் உள்ளன. ஆனாலும் அவற்றின் முக்கியத்துவம் கவனத்திற்குரியது.

டானியல் நோய்வாய்ப்பட்டு, 1986 இல் சிகிச்சைக்காகத் தமிழ் நாட்டுக்குச் சென்றபோது, அவரோடு கூடச் சென்றது இளங்கோவனே. அங்கே சிகிச்சையின்போதும் பிறகு, டானியல் மறைந்தபோதும் உடனிருந்து எல்லாக் காரியங்களையும் அங்குள்ள தோழர்களான அ. மாக்ஸ், பொதியவெற்பன், பொ. வேல்சாமி போன்றோருடன் இணைந்து இளங்கோவன் செய்திருந்தார்.  இதனால் டானியலைப் பற்றி அவரால் கூடுதலாக எழுத முடிந்தது. அத்துடன், டானியலோடு இருந்த நெருக்கத்தின் காரணமாக, டானியல் எழுதியிருந்த ‘என் கதை’ என்ற தன் வரலாற்றுச் சுருக்கத்தையும் இளங்கோவன் பதிப்புச் செய்தார். இப்படி எழுத்தாளராக, ஆவணப்படுத்துநராக, பதிப்பாளராக, மருத்துவராக, அரசியற் செயற்பாட்டாளராக எனப் பல வகையில் செயற்பட்ட இளங்கோவன் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும் தாயகத்துடனான தன்னுடைய நெருக்கத்தையும் பிணைப்பையும் விட்டு விடவில்லை. அரசியற் தோழர்கள், இலக்கியவாதிகள் என தன்னுடைய சுற்றுறவில் எப்போதுமிருந்திருக்கிறார். இப்படி ஐம்பது ஆண்டுக்கும் மேலாக ஓய்வின்றிச் செயற்படும் இளங்கோவன், இப்போது (2026) கூட புதிய புத்தகங்களைப் பதிப்புச் செய்யும் முயற்சியிலேயே இருக்கிறார். எழுதுவதும் பதிப்பதும் கூட்டங்கள் நடத்துவதும் கூட்டங்கள் – உரையாடல்களில் பங்கேற்பதும் என பிஸியாகவே இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் நடந்த இலங்கை இலக்கியச் சந்திப்பில் பார்க்கும்போது எப்படியான உற்சாகத்தோடு இருந்தாரோ, அப்படித்தான் இப்போது அவருடைய 76 வயதிலும் இருக்கிறார். “வயது, முதுமை, தளர்வு என்பதெல்லாம் கொம்யூனிஸ்ட்டுக்குப் பொருட்டில்லை.  வாழ்க்கையே போராட்டம். போராட்டமே வாழ்க்கை. நாங்கள் போராளிகள்..” என்று எப்போதும் உற்சாகமாகச் சொல்வார் இளங்கோவன். இந்தச் சொற்களில் இருக்கின்ற நம்பிக்கை முக்கியமானது. அதுவே அவரை உற்சாகத்தோடு இயங்க வைக்கிறது. அது அவர் சார்ந்த பொதுவுடமைச் சித்தாந்த அரசியல் இயக்கத்தின் வழியாக வந்தது. என்பதால்தான் எழுத்தை, இலக்கியத்தை மாற்றத்துக்கான ஒரு செயற்பாடாக இளங்கோவன் கருதி உற்சாகமாகச் செயற்படுகிறார்.

இன்று பொதுவுடமை அரசியல் இயக்கத்தின் செயற்பாடுகள் மங்கி ஒடுங்கும் நிலைக்குச் சென்றிருந்தாலும் இளங்கோவன் போன்றவர்களின் நம்பிக்கை மங்கவில்லை. அது ஒளியாகவே சுடர்கிறது. காலத்தை வென்றெடுக்கக் கூடியதாக தங்களுடைய அரசியல் இயக்கத்தின் செயற்பாடுகளும் கோட்பாடுகளும் இருக்கவில்லை என்பதைக் குறித்த கவலைகள் இளங்கோவனுக்கும் அவரொத்த தோழர்களுக்கும் இருக்கக் கூடும். ஆனாலும் அவர்கள் எதையெல்லாம் வலியுறுத்திச் சொன்னார்களோ, அவையே வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது அவர்களுக்கு தங்களுடைய வரலாற்றுப் பார்வையின் மீது மேலும் நம்பிக்கயை அளிக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, சமூகக் கொந்தளிப்பு, சாதிய ஒடுக்குமுறை, அதன் கொந்தளிப்பு என அனைத்தும் அப்படியே நடக்கின்றன. ஈழப்போராட்டம் பற்றிய எதிர்வு கூறல்கள் கூட ‘இளங்கோவன்கள்’சொன்ன மாதிரியே நடந்து முடிந்திருக்கின்றன.

இப்பொழுது நாம் இளங்கோவனையும் அவருடைய தரப்பினரையும் பற்றிச் சிந்திக்கும்போது, அவர்கள் மீதான மதிப்புக் கூடுகிறது. ‘இளங்கோவன்களை’விடவும் நாம் வலிமையும் புதுமையும் உள்ளவர்கள் என்றே ஈழப்போராட்டத்தில் குதித்திருந்தோம். 30 ஆண்டுகளின் பின்னரே தெரிந்தது, அதொரு “சிறுபிள்ளை வேளாண்மை“ போலாகி விட்டதென்று. துக்கமும் வெட்கமும் தின்ன தலைகளைத் தாழ்த்த வேண்டியவர்களாகி விட்டோம். சமூக அசைவியக்கத்தை நிகழ்த்தக் கூடிய அரசியல் உள்ளடக்கமும் செயற்பாட்டு வலிமையும் இல்லாத எந்தப் போராட்டமும் சென்றடையும் இடத்தையே ஈழப்போராட்டமும் தொட்டது.

இடதுசாரிய இயக்கத்தினர் இனமுரண்பாட்டுக்கு அல்லது இன ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலைக் கையாளத் தவறி விட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. தமிழ்த் தேசியவாதிகளும் இன முரண்பாட்டையும் இன ஒடுக்குமுறையையும்  வென்றெடுக்கவில்லை. ஆக மொத்தத்தில் எவரையும் எவரும் பழித்துரைக்க முடியாத நிலையில்தான் நிலைமைகள் உள்ளன. ஆனால், இடதுகளின் போராட்டத்தினால் சாதிய ஒடுக்குமுறையில் அசைவு நிகழ்ந்திருக்கிறது. சாதிய ஒடுக்குமுறையும் பாரபட்சமும் முற்றாக நீங்கவில்லை என்றாலும் முன்னர் இருந்த தீவிர நிலையை அது இழந்து விட்டது. அதனை மேலும் செயலிழக்க வைக்க வேண்டும். இதைப்பற்றிய உரையாடல்களை நாம் செய்து வருகிறோம். இதைச் சமத்துவம். சமூக நீதியுணர்ச்சி உடைய எல்லோரும் செய்ய வேண்டும். இளங்கோவனும் அவரோடு இணைந்து செயற்பட்ட தோழர்களும் பெற்ற அனுபவங்களை அவர்களிடமிருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.  

இளங்கோவன் தன்னுடைய அரசியல், இலக்கிய, சமூகப் பயணப்பாதையை இப்பொழுது எப்படி மதிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. அதை அவர் எழுத வேண்டும். ஆனால், அவரிடமுள்ள செயல்முனைப்பு குறையவில்லை என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தன்னுடைய அரசியல், இலக்கியப் பயணத்தில் எதையும் மறக்காமல் எல்லாவற்றையும் நினைவு கொண்டு பேசும் ஆற்றல் இளங்கோவனிடம் உள்ள சிறப்பு. முன்னோடிகளை அறிவதற்கும் அவர்களிடமுள்ள அனுபவத்தைப் பெறுவதற்கும் நினைவாற்றல் முக்கியமானது. அதைச் செம்மையாக வைத்திருக்கும் இளங்கோவன், அதை எழுத்தாகவோ பிற வடிவங்களிலோ பகிர்வது அவசியம். அது தனியே ஆவணப்படுத்துதல் என்பதற்கும் அப்பால், அதை விமர்சன பூர்வமாகவும் மறு மதிப்பீடாகவும் செய்வது அவசியம். அதுவே பயனளிக்கும். வரலாற்று அசைவியக்கத்தை நிகழ்த்துவோருக்கு அது உதவக் கூடியதாக இருக்கும். அதை அவரும் அவருடன் நெருக்கமாக இருப்போரும் இணைந்து செய்து விடுவது அவசியம். அதுவும் ஒரு அரசியல், எழுத்துச் செயற்பாடே.

இடதுசாரிகள், இயங்கியலின் அடிப்படை விதியில் புரிதல் உள்ளவர்கள் என்பதால், அதை வலுப்படுத்துவதற்கு நியாயப்படுத்தல்களை விடவும் விமர்சன பூர்வமான ஆய்வுகளும் மதிப்பீடுகளும் புதிய முன்வைப்புகளுமே தேவை. இதை இளங்கோவன் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். அதுவே அவரை வரலாற்றில் நிலைப்படுத்தும். இதற்கான கரிசனையை அவர் கொள்ளட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *