‘அளவுக்கு அதிகமான சுமையாக’ வரி விதிப்பு மாறுவது பொதுமக்களுக்கு ஒரு நச்சாக மாறிவிடும் – இலங்கை அரசாங்கத்திற்கு முன்னணி பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

 ‘அளவுக்கு அதிகமான சுமையாக’ வரி விதிப்பு மாறுவது பொதுமக்களுக்கு ஒரு நச்சாக மாறிவிடும் – இலங்கை அரசாங்கத்திற்கு முன்னணி பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

 (நன்றி: டெயிலி எஃப்ரி) 

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் தனது வருவாய் திரட்டும் நடவடிக்கைகளைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிக வருமான வரி, மறைமுக வரிகள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் வரி செலுத்தும் மக்கள்  கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளை, அதற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுச் சேவைகளின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) 28ஆவது வருடாந்த வரி தொடர்பான சிறப்புரையை நிகழ்த்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 12.3 சதவீதமாக இருந்த அரசாங்க வருவாய், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 15 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக அவர் கூறினார். இந்த இலக்கை 2024ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டிலேயே அந்த இலக்கு தாண்டப்பட்டுள்ளது.

தற்போதைய வரி விதிப்பு நிலை தொடருமானால், 2026ஆம் ஆண்டிலும், 2027ஆம் ஆண்டிலும் இந்த இலக்கு மீண்டும் தாண்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நாம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை விடவும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளோம். ஆனால், இது நல்ல விடயமல்ல. ஏனெனில், அரசாங்கம் அதிக வருவாயைத் திரட்டுவது நல்லது என்று உங்களில் பலர் நினைக்கலாம். உண்மையில், அந்த வருவாய் எங்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்திற்கு அந்தப் பணத்தை வழங்குவதற்காக எமது சொந்த நுகர்வையும் முதலீட்டையும் நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தனிநபர் வருமான வரி விதிப்புக்கான வருமான உச்சவரம்பைக் குறைத்ததன் மூலம் வரி வசூல் அதிகரித்ததாகக் குறிப்பிட்ட கலாநிதி விஜேவர்தன, ஆரம்பத்தில் மாதாந்த வருமான உச்சவரம்பு 100,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டு, பின்னர் 150,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 36 சதவீத உச்சபட்ச விளிம்பு வரி விகிதம் (Marginal Tax Rate) அறிமுகப்படுத்தப்பட்டதும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கொண்டுவரப்பட்டதும் வரி வருவாய் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தன என்றார்.

பெறுமதி சேர் வரி (VAT) 2021ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த நிலையில், பின்னர் 15 சதவீதமாகவும் தற்போது 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வரி விலக்குகள் நீக்கப்பட்டதுடன், VAT பதிவுக்கான வருமான உச்சவரம்பு 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டதால் சிறிய வர்த்தக நிறுவனங்களும் சிக்கலான வரி இணக்கப்பாட்டு நடைமுறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வுக்கு விதிக்கப்படும் மறைமுக வரிகள், வரி முறையைப் பிற்போக்கானதாக (Regressive) மாற்றுகின்றன என்றும் அவர் எச்சரித்தார். இதனால், அதிக வருமானம் பெறுவோருடன் ஒப்பிடுகையில் குறைந்த வருமானம் பெறுவோர் தமது வருமானத்தில் அதிகமான பங்கை வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

“வலியால் துடிக்கும் ஒரு நோயாளிக்கு மருத்துவர் மருந்து கொடுப்பதைப் போன்றதே இது. அந்த மருத்துவர் அளவுக்கு அதிகமாக மருந்தைக் கொடுத்தால், அது நச்சாக மாறிவிடும். இன்று இலங்கையில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே” என்று அவர் கூறினார்.

நாட்டு மக்கள் மூன்று வகையான வரிச் சுமைகளை எதிர்கொள்வதாகவும் கலாநிதி விஜேவர்தன தெரிவித்தார்.

நேரடி வரிகள் மக்களின் செலவிடக்கூடிய வருமானத்தைக் குறைக்கின்றன. மறைமுக வரிகள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான உண்மையான கொள்வனவுத் திறனைக் குறைக்கின்றன. பணவீக்கமோ மறைமுகமான வரியாகச் செயற்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

“மத்திய வங்கி தனது 5 சதவீத பணவீக்க இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயற்படும்போதோ, அல்லது பெரும்பாலும் 7 சதவீதமாக இருக்கக்கூடிய அதன் இலக்குக் கட்டுப்பாட்டு எல்லையின் உச்சத்தை அடையும்போதோ, எமது நிதிச் சொத்துகளின் உண்மையான பெறுமதி மீண்டும் குறைவதை நாம் அனுபவிக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கமான பரிந்துரைகள், வருவாயை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் ஒருங்கிணைப்பை (Revenue-based Fiscal Consolidation) மையமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் வாதிட்டார்.

அதாவது, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு அரச செலவினங்களைக் குறைப்பதுடன் வருவாயை அதிகரிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் வருவாயை அதிகரிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதேவேளை, வட்டிக் கொடுப்பனவுகளைத் தவிர்த்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இருப்பான முதன்மை நிதி மிகை (Primary Surplus) என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த அணுகுமுறை, அரசாங்கத்திற்குக் கடன் வழங்கியவர்களின் வட்டி வருமானத்தைப் பாதுகாப்பதற்காக அரச ஊழியர்களையும் மானியங்களைப் பெறுவோரையும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக விமர்சகர்கள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீத முதன்மை நிதி மிகையை அடைய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்திருந்தது. ஆனால், அரசாங்கம் மூலதனச் செலவினங்களைக் குறைத்ததன் மூலம் சுமார் 4 சதவீத முதன்மை நிதி மிகையை அடைந்துள்ளதாக கலாநிதி விஜேவர்தன தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்காக மூலதனச் செலவினங்களுக்கு 1.3 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் 987 பில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 75 சதவீதமாகும்.

2026ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடும் 1.3 டிரில்லியன் ரூபாவாக இருந்தது. எனினும், அந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒதுக்கீட்டில் 16 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. செப்டம்பர் மாத இறுதியில் இது 28 சதவீதமாக அதிகரித்திருந்தது.

எஞ்சிய 72 சதவீத நிதியையும் ஆண்டின் இறுதிக் காலாண்டில் செலவிட முடியும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அவர்களால் உண்மையில் அவ்வாறு செய்ய முடிந்தால், மூலதனச் செலவினத் திட்டத்தை இவ்வளவு திறமையாகச் செயற்படுத்தியதற்காக அவர்களுக்கு நாம் பாராட்டுகளையும் மதிப்பையும் வழங்க வேண்டும்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மூலதன உருவாக்கம் (Capital Formation) குறைவடைவது எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியைப் பலவீனப்படுத்தும் என்றும், அதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் வருவாய் அடித்தளமும் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகள் அளவுக்கு அதிகமாக நிரம்பியிருப்பது, கல்விக்காகத் தனியார் வகுப்புகளை நாட வேண்டிய நிலைமை, பொலிஸ் நிலையங்களில் காணப்படும் தாமதங்கள் ஆகியவற்றை உதாரணங்களாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் இடையிலான ‘தார்மீக ஒப்பந்தம்’ (Moral Contract) மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“வரி செலுத்துவோர் மேற்கொள்ளும் இந்தத் தியாகத்திற்கு ஈடாக, பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள் வழங்கப்படுவதில்லை” என்று அவர் கூறினார்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாய் நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமை (Revenue Administration Management Information System – RAMIS), விரிவுபடுத்தப்பட்ட வரி செலுத்துவோர் வலையமைப்பைக் கையாள்வதற்கான போதிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, வரி செலுத்துவோர் தமது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரி வசூலில் இலக்கு மீறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், வரி வசூல் நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் தவறியதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்றும் கலாநிதி விஜேவர்தன குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *