மே தினங்கள் இரண்டு-தோழர் கிருஷ்ணக்குட்டி நினைவு:(நினைவிடை தோய்தல்:முழுக்கு-2)

மே தினங்கள் இரண்டு-தோழர் கிருஷ்ணக்குட்டி நினைவு:(நினைவிடை தோய்தல்:முழுக்கு-2)

— சித்தி சிவராசா —

எனது வாழ்நாளில் இடம்பெற்ற இரண்டு மே தினங்கள். 1968ல் மட்டக்களப்பில் இடம்பெற்றது ஒன்று. 1969ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது மற்றொன்று. இரண்டும் இரண்டு விதமான அனுபவங்கள்.

1966 ல் மட்டக்களப்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தபோது எனது வயது 19.

1968 இல் மட்/கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மே தினத்தின்போது எனது வயது 21.

1969 ல் யாழ்ப்பாணம் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மே தினத்தின்போது எனது வயது 22.

1966 – 1969 மூன்று வருடகாலத்தில் நான் அடைந்த அனுபவங்களை விபரிக்கின்றேன்.

மட்டக்களப்பில் கம்யூனிஸ்ட் கட்சி செயற்படத் தொடங்கியது தோழர் கிருஷ்ணக்குட்டி என்பவரின் செயல்பாட்டில்தான் அல்லது அவரது தலைமையில் தான்.

தோழர் கிருஷ்ணக்குட்டி, இந்திய கேரளமாநில கம்யூனிஸ்ட் கட்சியில் அதன் தலைவர் தோழர் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கியபோது அதில் இணைந்து ஈடுபட்டவர். இந்திய மத்தியஅரசு கேரள, மேற்குவங்காள கம்யூனிஸ்ட்டுக்களைத் தடை செய்த காலத்தில் தோழர் கிருஷ்ணக்குட்டி பல தோழர்களுடன் இலங்கை வந்தார். அன்று இலங்கையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டக்களப்பில் கட்சிப்பணிகளைத் தொடர 1950க்கு பின்பு மட்டக்களப்புக்கு கட்சியின் முழுநேர ஊழியராக அனுப்பியது.

1955 கால கட்டத்தில் தோழர் கிருஷ்ணக்குட்டி மட்டக்களப்பில் முழுநேர ஊழியராகத் தனது வாழ்வைத் தொடங்கி, 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற சூறாவளி அனர்த்தத்தில் மரணமானார். ஏறக்குறைய 52 வருடங்கள் மக்களுக்காகச் சேவை செய்தார்.

1968ம் ஆண்டின் மே தினம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு பிரமாண்டமான மே தினம். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) தோழர் சண்முகதாசனின் தலைமையில் இயங்கிய இக்கட்சியின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகத் தோழர் கிருஷ்ணக்குட்டி செயற்பட்டார். அந்த ஆண்டின் மே தினத்தை பாட்டாளிபுர மைதானம் (தற்போதைய நவீன பஸ்நிலையம் அமைந்துள்ள பகுதி) என்றழைக்கப்பட்ட இடத்தில் நடத்த கட்சி முடிவு செய்தது.

கட்சி அங்கத்தவர்கள், கட்சி அனுதாபிகள் என்று பலரும் ஒன்றுகூடி நடத்திய மேதினம் அது. அன்று வாழைச்சேனை கடதாசி ஆலையில் (Paper Factory) சுமார் (4000) நாலாயிரம் ஊழியருக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்த இடம் அது. அதில் சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொழிற்சங்கத்தை நடாத்தியது. (CTUF) ‘சிலோன் ட்றேட் யூனியன் பெடறேஷன்’ என்ற பெயருடன் அது இயங்கியது. அதிலிருந்தும் பல தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு.

கட்சிக்கான சுவரொட்டிகள் பதாதைகள் தயாரிக்கப்பட்டன. சுவரொட்டிகள் ஒட்டுவதற்காகத் தோழர்கள் ஏற்படுத்தப்பட்டனர். எனது ஊராகிய ஏறாவூர் நகரத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட ஏற்பாடாகி இருந்தது. அன்று ஆளும் கட்சியாக UNP (ஐ.தே.க) அரசாங்கம் நடைபெற்ற காலம் அது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சாதி ஒடுக்குமுறை, தீண்டாமையை எதிர்த்தும், ஐ.தே.கட்சி ஆட்சியை எதிர்த்தும் வாசகங்கள் எழுதிய சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டன. அன்று அதை எதிர்த்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் எங்கள் தோழர்களுக்குமிடையில் வாய்சண்டை, கை சண்டை இடம்பெற்றது. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கலவர முறைப்பாடுகள் செய்யப்பட்டு எங்கள் தோழர்கள் பலர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறையில் சித்திரவதைக்காளானார்கள்.

நான் தப்பித்து மட்டக்களப்பு சென்று மட்டக்களப்பு, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வந்து நடைபெற்ற சம்பவங்களை தோழர் கிருஷ்ணக்குட்டி அவர்களிடம் கூறினேன். அவர் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எங்களை மதிக்கவில்லை. வெளி வராந்தாலில் போடப்பட்டிருந்த இருப்பிடத்தில் அமரச்சொன்னார்கள். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் எங்களைப் பார்ப்பார் என்றார்கள். நான் மனக் குழப்பத்திலிருந்தேன். கிருஸ்ணக்குட்டி எதைப்பற்றியும் பதட்டப்படாமல் என்னுடன் உரையாடியபடி இருந்தார். அப்போது நான் நினைத்தேன். இந்த மனிதர் சாதாரணமானவர். உடல்வாகு அது இது என்று ஏதும் இல்லாதவர் மற்றவர்கள் பார்வையில் அவர் ஒரு ஏழை மனிதனாகவும், ஏதோ தொழில் செய்து வாழ்பவராகவும் தான் தெரிவார். ஆனால் அவருடைய உறுதியான உள்ளத்தை அன்று நேரில் கண்டேன்.

அன்று பொலிஸ் சிறையில் அடைப்பட்டிருந்த தோழர்கள் சிறைக்கம்பி வெளிகளுக்குள் இருந்து எங்களுடன் பேசினார்கள். நடந்தவற்றை எல்லாம் கூறினார்கள். தங்களை மட்/நீதிமன்றம் கொண்டு சென்று அங்குதான் எங்களுக்கான தண்டனை? அல்லது விடுதலை வழங்குவார்கள் என்று பலதையும் சொன்னார்கள். தோழர் கிருஷ்ணக்குட்டி எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே எங்கள் தோழர்களும், சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தோழர்களின் உறவினர்களும் கவலையுடன் எங்களை நோக்கிக் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பொலிஸ் நிலையத் தலைமை அதிகாரி OIC(ஓ.ஐ.சி) வாகனத்தில் வந்து இறங்கினார். அவரைக் கண்டதும் பொலிஸ் நிலைய ஊழியர்கள் பரபரப்புடன் செயல்பட்டனர். அவர் உள்ளே போய்ச் சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிகார தோரணையில் கேட்டார், ‘யார் இங்கே கிருஷ்ணக்குட்டி’ என்று; தலைமைப் பொலிஸ் அதிகாரி டெலிபோனில் யாருடனோ சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. தோழர் கிருஷ்ணக்குட்டி தன்னைப் பெயர் சொல்லி அழைத்த பொலிஸ் உத்தியோகத்தருடன் உள்ளே போனார். பத்து நிமிடங்களும் ஆகியிராது தோழர் கிருஷ்ணக்குட்டியுடன் அடைபட்டுக் கிடந்த தோழர்கள் அனைவரும் வெளியே வந்தனர். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தலைமை அதிகாரி வெளியில் வந்து சில நிமிடம் தோழர் கிருஷ்ணக்குட்டியுடன் பேசிவிட்டு உள்ளே போனார்.

நாங்கள் வெளியில் வந்ததும் எங்கள் தோழர்கள் தெரு வீதியில் பட்டாசுகளை வெடிக்கச் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து கொண்டனர்.

இவை மற்றவர்களின் பார்வையில் ஒரு சாதாரண நிகழ்ச்சி. எங்களைப் பொறுத்தவரையில் இது மகத்தான மகிழ்ச்சி.

அன்று மாலை மட்டக்களப்பு பட்டாளிபுர மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் காயங்களுடன் எங்கள் தோழர்களும் கலந்து கொண்டனர். அன்று நடைபெற்ற மே தினக் கூட்டம் கவிஞர் சுபத்திரன் தலைமையில் இடம்பெற்றது. அதில் தோழர் சண்முகதாசன் பிரதம பேச்சாளராகப் பேசினார். கூட்டத்தில் தோழர் வீ.ஏ.கந்தசாமி, தோழர் இளங்கீரன், தோழர் டானியல், தோழர் ம.க.அந்தனிசில், தோழர் ரனசிங்க எனும் துரைரெத்தினம், தோழர் வெலிங்டன் இவர்களுடன் அன்றைய கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. பண்டாரநாயக்கா, தோழர் சாருமதி யோகநாதனுடன் நானும் கலந்து கொண்டோம். 

அக்கூட்டத்தில் கவிஞர் சுபத்திரன் இயற்றிய ஒரு பாடலை நானும் தோழர் நவரெத்தினமும் பாடினோம். மட்டக்களப்பில் அன்று நடைபெற்ற அந்த மே தினம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

1969ம் ஆண்டின் மேதினம்:

1968ல் மட்டு நகரில் நடைபெற்ற மேதின கூட்டத்தைத் தொடர்ந்து 1969ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மேதினம் மறக்க முடியாத ஒரு மே தினம்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அன்று டட்லி சேனநாயக்கா அரசு பல பிரச்சினைகளில் இருந்த காலம் அது. அவர்கள் சிங்கள மக்களின் ஆதரவை பெறவேண்டிப் பௌர்ணமி தினத்தை (போயா தினம்) அரச விடுமுறை தினமாக்கினார்கள்.

அந்த ஆண்டின் மே தினம் (1969) பௌர்ணமி தினத்தில் வந்தது. (1969.05.01) அரசாங்கம் அத்தினத்தில் மே தினத்தை நடத்த முடியாது என்று அறிவித்தது. இடது சாரிக் கட்சிகள் இதை எதிர்த்தன. இறுதியில் பீட்டர் கெனமன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி (மாஸ்கோ சார்பு) ஏப்ரல் 30ம் திகதி மே தினத்தை நடத்தியது. சில கட்சிகள் மே இரண்டாம் திகதி நடத்த முடிவு செய்தன.

சண்முகதாசனின் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கில் சார்பு) மே முதல் திகதியே மே தினத்தை நடத்த முடிவு செய்தது. தலைநகர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடத்த முடிவானது. மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரனுடன் நாங்கள் ஐந்து பேர் கலந்து கொள்ள முடிவு செய்து யாழ்ப்பாணம் போனோம். தோழர் ரணசிங்க துரைரெட்ணத்துடன் பத்து பேர் கொழும்புக்குச் சென்றனர். எனக்கு யாழ்ப்பாண முதல் அனுபவம்.

இன்று ஊர்வலம், மே தினம் கூட்டங்களை நடத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதாக அரசு பொலிஸ் வண்டியில் அறிவித்தது. அரசு முன்கூட்டியே யாழ்ப்பாணக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சிறை செய்தது. அதில் தோழர் வீ.ஏ.கந்தசாமி, எழுத்தாளர் தோழர் டானியல் மற்றும் பலர் கைதானார்கள். திட்டமிட்டபடி ஏனைய தோழர்கள் கூட்டமும் ஊர்வலமும் நடாத்த முடிவு செய்தனர். யாழ் கட்சித் தோழர் மணியம் தலைமையில் ஊர்வலம் அன்று வின்சர் தியேட்டர் சந்தியிலிருந்து ஆரம்பமானது. நான், சுபத்திரன், சாருமதி உட்பட மற்றைய தோழர்களும் கலந்து கொண்டோம். சுமார் நாலாயிரம் தோழர், தோழியர்கள் என்று மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. போலீஸ் இடைமறித்துக் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியது. தடிஅடி நடத்தியது. பலர் கைதானார்கள், நாங்கள் தப்பித்துப் பின்பு கூட்டமும் நடத்தினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *