நவம்பர் மாதம் என்பது தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாதமாகும். அந்த மாதத்தின் முதல் நாளிலேயே, முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகள் குழுவொன்று, 1989ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது அந்த இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை (People’s Front of Liberation Tigers – PFLT) மீண்டும் செயற்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இனிமேல் தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகள் சார்பிலான நடவடிக்கைகளை இந்தக் கட்சியே முன்னெடுக்கும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான இ. கதிர், ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மீளுயிர்ப்பிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளராகத் தாம் பொறுப்பேற்றுள்ளதாகவும், மாவட்ட மற்றும் வட்டாரக் கிளைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இனிவரும் காலங்களில் எமது தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பிலான அனைத்து நடவடிக்கைகளும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் ஊடாகவே முன்னெடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு நவம்பர் மாதத்தின் முதல் நாளைத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார். தமிழர்கள் உயிர்நீத்த போராளிகளையும் அவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் மாதம் நவம்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் சார்பில் செயற்படுவதாக அவர் கூறியுள்ள நிலையில், நவம்பர் 27ஆம் திகதி உச்சத்தை அடையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளும் அந்தக் கூற்றுக்குள் அடங்குவதாகவே கருதப்பட வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் இதே ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கதிர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களைத் தமிழ்க் கட்சிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தங்களது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிகழ்வுகள் பொதுமக்களிடமும், அவற்றை ஏற்பாடு செய்யும் மாவீரர் பணிச் செயலகம் போன்ற அமைப்புகளிடமும் விடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பல இலங்கைத் தமிழர்களுக்கு மாவீரர் நாள் என்பது ஆழமான உணர்வுபூர்வமான நாளாகும். உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளிகளில் பலர் அவர்களுடைய சொந்தப் பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளாக இருந்தமையே அதற்குக் காரணம்.
எனினும், பல முன்னாள் போராளிகள் கூறுவதன்படி, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது இலாபம் ஈட்டும் ஒரு வர்த்தகமாகவும் மாறிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு புலம்பெயர் நாடுகளில் இருந்து பல மில்லியன் ரூபாய் நிதி யாழ்ப்பாணத்துக்கு வருகின்றது என்றும், அந்த நிதியைப் பெற்றுக்கொள்வதில் அமைப்புகளும் தனிநபர்களும் போட்டியிடுகின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
17 ஆண்டுகளாக எவரும் முயற்சிக்காத நிலையில், இப்போது ஏன் இந்தக் கட்சியை மீண்டும் உருவாக்குகிறீர்கள் என்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் கேட்டது.
விடுதலைப் புலிகளின் மீளுயிர்ப்பிக்கப்பட்ட அரசியல் பிரிவாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு கட்சி, அந்த நிதியில் தனக்குரிய பங்கைக் கோருவதற்கு ஏற்ற நிலையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கதிர் “நிதி” குறித்துப் பேசவில்லை. இருப்பினும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கவில்லை; அரசியல் கட்டமைப்பையே மீளுயிர்ப்பிக்கிறோம்”:
இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு ஒப்பானதா என்று கேட்கப்பட்டபோது, கதிர் அதனை மறுக்கவில்லை.
“நாங்கள் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கவில்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் கட்டமைப்பையே மீளுயிர்ப்பிக்கிறோம்” என்று அவர் கூறினார்.
“நாங்கள் புலிகள், நாங்களே விடுதலைப் புலிகள் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் முன்னாள் போராளிகள் வேறு அரசியல் கட்சிகளின் ஊடாகச் செயற்பட்ட போதிலும் எதிர்பார்த்த திருப்திகரமான முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“இப்போது விடுதலைப் புலிகளே இந்த அரசியலை நேரடியாகவும் முழுமையாகவும் கையில் எடுத்துள்ளனர். நாங்கள் சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் போராளிகள்” என்று அவர் தெரிவித்தார்.
சட்டரீதியான தடைகள்..
இந்தத் திட்டம் வெளிப்படையான சட்டரீதியான தடைகளை எதிர்கொள்கிறது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது. 2025ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் அந்தத் தடையை நீடித்துள்ளது.
மேலும், 1983ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் நாட்டைப் பிரிப்பதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதிக்கிறது.
எனினும், தமது கட்சியின் இலக்கு கூட்டாட்சித் தீர்வு என்றும், அதனை ஜனநாயக வழிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்போவதாகவும் கதிர் தெரிவித்தார்.
கட்சியைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கட்சியின் பழைய புலிச் சின்னம் தேர்தல் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டிய புதிய சின்னம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் தேசிய மாநாடு ஒன்றை அறிவிக்கவுள்ளதாகவும், அந்த மாநாட்டில் கட்சியின் மத்திய குழு அறிவிக்கப்படுவதுடன் கொள்கைகளும் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்துக்கு விடுத்த செய்தி..
கதிர் தனது உரையின் ஒரு பகுதியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை நோக்கியும் முன்வைத்தார்.
“எங்களுக்கு வன்முறையோ, இனவாதமோ, மதத் தீவிரவாதமோ தேவையில்லை” என்று அவர் கூறினார்.
இனவாதத்துக்கு எதிராகவும் நாட்டைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை வரவேற்ற அவர், அரசாங்கங்கள் பௌத்த மதகுருமார்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத நடைமுறை பலவீனமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், அரசாங்கம் வேறொரு வழியில் அடக்குமுறையை முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
1987ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவரான திலீபனின் நினைவுச் சின்னத்தை அகற்றுமாறு யாழ்ப்பாணப் பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாநகர சபைக்குக் கடிதம் எழுதியதாக வெளியான செய்திகளை அவர் இதற்குச் சான்றாகக் குறிப்பிட்டார்.
அந்த நினைவுச் சின்னம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆயுதப் போராட்டம் தொடர்பான சிந்தனைகளைத் தூண்டுவதுடன் இனங்களுக்கிடையில் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்திருந்தன.
கதிரின் கூற்றுப்படி, திலீபனின் நினைவுச் சின்னம் 1988ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபையின் அனுமதியுடன் முதன்முதலில் அமைக்கப்பட்டது. பின்னர் அரச படைகளாலும் போட்டிக் குழுக்களாலும் பலமுறை சேதப்படுத்தப்பட்டு, மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களைத் தமிழர்கள் அகற்ற முயற்சிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவற்றுள்:
- வவுனியாவில் அமைந்துள்ள மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் சிலை.
- புதுக்குடியிருப்பு மாந்துவிலில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம்.
- கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னம்.
திலீபனின் நினைவுச் சின்னத்தை அகற்றுவது, தடுக்க விரும்புவதாகப் பொலிஸார் கூறும் மோதலையே உருவாக்கிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகள் மீதான விமர்சனம்:
தமிழ் அரசியல்வாதி களையும் கதிர் கடுமையாக விமர்சித்தார்.
சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்காக மூத்த தமிழ்க் கட்சிகள் மக்களை வன்முறையை நோக்கித் தள்ளுவதாக அவர் குற்றம்சாட்டினார். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்கவோ அதற்கு ஆதரவளிக்கவோ இல்லை என்றும் கூறினார்.
தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைப் போன்றதொரு அரசியல் மாற்றம் வடக்கு, கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே இப்பிராந்தியத்தில் உண்மையான அரசியல் கட்சி என்றும் ஏனையவை அரசியல் குழுக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் முன்னாள் போராளிகள் அந்தக் கட்சிகளிலிருந்து வெளியேறி விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் போராளிகளின் முந்தைய நிலைப்பாட்டுக்கு முரணான புதிய முயற்சி:
தேர்தல் அரசியலில் முதன்முதலில் நுழைந்தபோது முன்னாள் போராளிகள் எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானதாகவே இந்தப் புதிய முயற்சி அமைந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியாக உருவெடுத்த அமைப்பின் நிறுவனர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ அல்லது விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியையோ மீண்டும் உருவாக்கும் அல்லது உயிர்ப்பிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபடவில்லை என்று வலியுறுத்தியிருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர்கூட முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், இப்போது ஏன் புதிய கட்சியை உருவாக்குகிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை கதிரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ஜனநாயகப் போராளிகள் கட்சியில் இருந்தபோதே விடுதலைப் புலிகளின் அரசியல் கட்டமைப்பு தொடர்பான அறிவிப்பைத் தாம் வெளியிட்டிருந்ததாகக் கூறினார்.
அந்தக் கட்டமைப்பில் இணைவதற்குப் பதிலாக மற்றவர்கள் தனித்தனியாகக் கட்சிகளை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஏனைய கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பதையும் தாம் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்சி:
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி (PFLT) என்பது விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல் அரசியலில் உத்தியோகபூர்வமாக ஈடுபட்ட ஒரே முயற்சியாகும்.
1989ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதையும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைவதற்குத் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.
கொழும்பில் உள்ள கலதாரி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் ஆரம்பம் அறிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவரான கோபாலசாமி மகேந்திரராஜா, மாத்தையா என்ற பெயரில் அறியப்பட்டவர், கட்சியின் தலைவரானார். முன்னாள் அரசியல் பொறுப்பாளரான யோகரட்ணம் யோகி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல் ஆணைக்குழு இந்தக் கட்சியை அங்கீகரித்தது. கட்சியின் சின்னமாகப் புலி தெரிவுசெய்யப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் பார்வையாளர் தரப்பாக இந்தக் கட்சி பங்கேற்றது. 1990ஆம் ஆண்டு மீண்டும் போர் தொடங்கியபோது அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகியது.
பின்னர் மாத்தையா, பிரபாகரனுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு 1994ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
காலத்தின் தேவைக்கேற்ப கட்சியின் அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும், அதன் பணிகள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டதாகவும் கதிர் கூறினார்.
போரின் இறுதிக்கட்டத்தில் கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க அதன் தலைமை தீர்மானித்திருந்ததாகவும், அதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் குழு முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் பதிவு தொடர்ந்தும் இருந்தபோதிலும், அது அரசியலில் எந்தவொரு தீவிரமான பங்களிப்பையும் மேற்கொள்ளவில்லை.
2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சில வேட்பாளர்கள் PFLT சார்பில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தபோது இந்த நிலைமை சிறிது காலத்துக்கு மாறியது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் வாக்குச் சீட்டுகளில் புலிச் சின்னம் இடம்பெற்றது.
இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் சதி என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
பின்னர், அந்த வேட்புமனுக்களில் போலிக் கையொப்பங்கள் இடம்பெற்றிருந்ததாகத் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பதிவு செய்யப்பட்ட பொதுச் செயலாளரான யோகி ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தினால் தேர்தல் அதிகாரிகள் அந்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன.
2010ஆம் ஆண்டு பிரிட்டனின் தேர்தல் ஆணைக்குழு இதே பெயரில், சிவப்புக் கொடியில் அதே புலிச் சின்னத்தைக் கொண்ட ஒரு கட்சியைப் பதிவு செய்தது.
இலங்கையில், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய காரணத்தால் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பதிவைத் தேர்தல் திணைக்களம் ரத்துச் செய்தது. இதனுடன் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி மற்றும் தேசிய ஐக்கியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டன.
ஜனநாயகப் போராளிகளிலிருந்து மீண்டும் புலிகளின் பெயரை நோக்கி..
ஆங்கிலத்தில் Crusaders for Democracy என்று அழைக்கப்படும் ஜனநாயகப் போராளிகள் கட்சி, சுமார் 300 முன்னாள் போராளிகளால் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
முன்னாள் தமிழ் பத்திரிகை ஆசிரியரான நடேசபிள்ளை வித்தியாதரன் அதன் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து வேட்பாளர்கள் சிலந்திச் சின்னத்தின் கீழ் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டனர். எனினும், எந்தவொரு ஆசனத்தையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
அதன் பின்னர் இந்தக் கட்சியின் அரசியல் கூட்டணிகள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம், துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தின் தலைமையில், பெரும்பாலும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்ட குறைந்தது நான்கு அமைப்புகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது.
தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படப்போவதாக அந்தக் கூட்டணி அறிவித்தது.
அதே ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கதிர் அந்தக் கட்சியின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். அப்போது அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிட்டார்.
இதையடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வி. ஆனந்தசங்கரி அவருக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார்.
முன்னாள் போராளிகள் தன்னல நோக்கங்களைக் கொண்ட அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னாள் போராளிகளை இராணுவத்தின் தகவல் வழங்குவோர் எனக் கூறி நிராகரித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கதிர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டார்.
போர்ச் சட்டங்களை மீறியமை தொடர்பாக இலங்கைக்கு எதிராக சர்வதேச சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையை இனப்படுகொலை என்று வர்ணித்த அவர், இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழர் தாயகம் என்று குறிப்பிட்டார்.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகளை முன்வைத்த அவர், பிரபாகரனைத் “தேசியத் தலைவர்” என்றும் குறிப்பிட்டார்.
(நன்றி: ஜப்னா மொனிட்டர்)
