~ லில்லி ஜமாலி
(வட அமெரிக்க தொழில்நுட்பச் செய்தியாளர், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து)
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பச் சூழலில் இதுவரை அதிகம் அறியப்படாத ஒரு பிரிவைச் சேர்ந்த நிறுவனங்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், முதலீட்டாளர்கள் அனைவரும் அவற்றின் வளர்ச்சியை நம்பிக்கையுடன் பார்க்கவில்லை.
சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்குத் தொழில்நுட்ப வட்டாரங்களில் CoreWeave, Nebius போன்ற நிறுவனங்களின் பெயர்கள் ஏற்கெனவே பரிச்சயமானவை.
இவை ‘நியோகிளவுட்’ (Neocloud) நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்கள், விலையுயர்ந்த கணினிகள் நிரம்பிய பிரம்மாண்டமான தரவு மையங்களை (Data Centres) நடத்துகின்றன. அந்தக் கணினிச் செயலாக்கத் திறனை Anthropic, OpenAI, Meta போன்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்குகின்றன.
ஆனால், தற்போது சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெறும் மிகத் தீவிரமான விவாதங்களில் ஒன்றாக இந்த நிறுவனங்கள் மாறியுள்ளன.
நியோகிளவுட் நிறுவனங்களின் நிதி நிலைமை எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? அவற்றின் அண்மைக்காலச் சிக்கல்கள், செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து எத்தகைய எச்சரிக்கைகளை வெளிப்படுத்துகின்றன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2030ஆம் ஆண்டளவில் நியோகிளவுட் நிறுவனங்களில் 80 சதவீதமானவை தனித்துச் செயற்படும் நிறுவனங்களாகத் தமது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என Gartner நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதேவேளை, நிதி நிலைமை பலவீனமடைவதால், இந்தத் துறையைச் சேர்ந்த குறைந்தது மூன்று நிறுவனங்கள் விரைவில் ஏனைய நிறுவனங்களால் கையகப்படுத்தப்படும் என Forrester நிறுவனத்தின் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent), நியோகிளவுட் நிறுவனங்கள் தொடர்பாக அண்மையில் எழுந்துள்ள கவலைகளைக் குறைத்து மதிப்பிட முயன்றார். CNBC தொலைக்காட்சிக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கட்டமைப்புடன் ஒப்பிடும்போது இந்நிறுவனங்கள் ஒரு சிறிய பங்கையே வகிக்கின்றன என்றார்.
கடன் குறித்த கவலைகள்..
நியோகிளவுட் நிறுவனங்கள் பொதுவாகத் தமது சேவைகளைப் பயன்படுத்தும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நீண்டகாலக் குத்தகை ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, அதன் அடிப்படையில் நிதியைத் திரட்டுகின்றன.
கணினிச் செயலாக்கத் திறனை உடனடியாகப் பெற்றுக்கொள்ள விரும்பும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இவை இத்தகைய ஒப்பந்தங்களைச் செய்கின்றன.
பின்னர், அந்த ஒப்பந்தங்களையும் தாங்கள் கொள்வனவு செய்யும் செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளையும் (AI Chips) பிணையாகக் காட்டி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுகின்றன என ‘The Quiet Period’ என்ற ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடுகள் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் கோரி ஜோன்சன் (Cory Johnson) விளக்கினார்.
நியோகிளவுட் நிறுவனங்கள் பெருமளவில் கடன் பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஏனெனில், அவை பயன்படுத்தும் வன்பொருள் சாதனங்களுக்கான (Hardware) செலவுகளை முன்கூட்டியே செலுத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னணி உதாரணமாக CoreWeave நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.
அந்நிறுவனம் சேவைகளை வழங்கும் சில பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், அதன் அளவு மிகவும் சிறியது.
ஆனால், CoreWeave நிறுவனத்துக்குக் கடன் வழங்கும்போது, கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அதன் சொந்த நிதி நம்பகத்தன்மையைவிட Microsoft அல்லது Meta போன்ற அதன் வாடிக்கையாளர் நிறுவனங்களின் நிதி நம்பகத்தன்மைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என ஜோன்சன் கருதுகிறார்.
இதுவே CoreWeave நிறுவனம் எவ்வாறு 35.1 பில்லியன் அமெரிக்க டொலர் (26.3 பில்லியன் பவுண்ட்) கடனைத் திரட்டியது என்பதை விளக்க உதவுகிறது என அவர் கூறினார்.
ஆனால், சில முதலீட்டாளர்கள் தற்போது இந்த நிறுவனங்கள் மீதான தமது நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் CoreWeave நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி நான்கில் ஒரு பங்கால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது அந்நிறுவனம் மட்டுமல்ல.
Nebius, IREN, Applied Digital போன்ற ஏனைய நியோகிளவுட் நிறுவனங்களின் பங்குகளும் இதே காலப்பகுதியில் சுமார் 25 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்தத் துறையில் உள்ள பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வோரும் தற்போது அச்சமடைந்துள்ளனர். இதனால், அந்நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டி வருமானத்தை அவர்கள் கோரத் தொடங்கியுள்ளனர்.
CoreWeave நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக் இன்ட்ரேட்டர் (Mike Intrator), சந்தையின் தற்போதைய எதிர்வினை ‘அறிவுக்கு பொருந்தாதது’ (Irrational) எனக் கூறியுள்ளார். அத்துடன், தமது நிறுவனத்தின் வணிக மாதிரி மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, CoreWeave நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய செயற்கை நுண்ணறிவுச் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிப்டோ நாணயத் துறையில் உருவான நிறுவனங்கள்..
பல நியோகிளவுட் நிறுவனங்கள் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் கிரிப்டோ நாணயச் சுரங்கத் தொழில்துறையிலிருந்து (Crypto Mining) உருவானவை.
Bitcoin போன்ற மெய்நிகர் நாணயங்களை உருவாக்கும் நிறுவனங்களே இந்தத் துறையில் செயற்படுகின்றன.
கிரிப்டோ நாணயச் சுரங்கத் தொழிலில் பயன்படுத்தப்படும் சில வகையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
CoreWeave நிறுவனம் 2017ஆம் ஆண்டு Ethereum மெய்நிகர் நாணயத்தைச் சுரங்க முறையில் உருவாக்கும் தொழிலில் கவனம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
IREN, Core Scientific, Applied Digital ஆகிய நிறுவனங்களும் ஆரம்பத்தில் கிரிப்டோ நாணயச் சுரங்கத் தொழிலிலேயே ஈடுபட்டிருந்தன.
2022ஆம் ஆண்டு OpenAI நிறுவனம் ChatGPT-ஐ அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுத் துறை பெரும் வளர்ச்சியடைந்த போது, இந்த நிறுவனங்களிடம் ஏற்கெனவே இருந்த உட்கட்டமைப்பு வசதிகள் அவற்றுக்குப் பெரும் சாதகமாக அமைந்தன.
இதற்கு விதிவிலக்கான நிறுவனமாக Nebius உள்ளது.
ரஷ்யாவின் Google என அழைக்கப்பட்ட Yandex நிறுவனத்தின் ஒரு பகுதியாக முன்னர் செயற்பட்ட இந்த நிறுவனம், 2024ஆம் ஆண்டு அதிலிருந்து பிரிந்து தனது பெயரை Nebius என மாற்றிக் கொண்டது.
தற்போது இந்த நிறுவனங்களின் வெற்றி, முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் எதிர்காலத்திலேயே தங்கியுள்ளது.
அத்துடன், நியோகிளவுட் நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக விளங்கும் மிகப்பெரிய தரவு மைய இயக்குநர்களான ‘ஹைப்பர்ஸ்கேலர்கள்’ (Hyperscalers) எனப்படும் நிறுவனங்களின் எதிர்காலமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெருமளவிலான முதலீடுகள் குவிக்கப்பட்டு வருகின்றன என S&P Global நிறுவனத்தின் Visible Alpha Research பிரிவின் தலைவரான மெலிசா ஒட்டோ (Melissa Otto) தெரிவித்துள்ளார்.
“இந்தத் துறையில் மிகப் பெரிய அளவிலான முதலீடுகள் செலுத்தப்படுகின்றன. இது ஒரு ஆயுதப் போட்டியைப் போன்றது” என அவர் குறிப்பிட்டார்.
இந்த முதலீட்டு அலை நியோகிளவுட் நிறுவனங்களுக்கும் பெரும் நன்மையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வணிக மாதிரியின் மறுபக்கம் அதிக நிதியியல் ஆபத்துகளைக் கொண்டிருப்பதாக Forrester நிறுவனத்தின் துணைத் தலைவரும் முதன்மை ஆய்வாளருமான சார்லி டாய் (Charlie Dai) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தமது பெரிய தொழில்நுட்ப வாடிக்கையாளர்கள் முதலீட்டுத் திட்டங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், அது நியோகிளவுட் நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
கடந்த வாரம் Microsoft மற்றும் Google நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகள் தொடர்பாக வெளியிட்ட கணிப்புகள், வோல் ஸ்ட்ரீட் ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிடக் குறைவாக இருந்தன.
இதனைத் தொடர்ந்து பல நியோகிளவுட் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் சரிவடைந்தன.
மேலும், Anthropic மற்றும் OpenAI ஆகிய நிறுவனங்களின் எதிர்காலத்தையும் நியோகிளவுட் நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்வரும் மாதங்களில் பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை (IPO) ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறை ஒரு பொருளாதாரக் குமிழியாக (AI Bubble) இருந்து அது வெடித்தால், நியோகிளவுட் நிறுவனங்கள் நிச்சயமாக அதன் பாதிப்புகளைச் சந்திக்கும் என Tusk Ventures நிறுவனத்தின் பிராட்லி டஸ்க் (Bradley Tusk) தெரிவித்துள்ளார்.
‘சிறிய மீன்களின் அழிவு’
நியோகிளவுட் நிறுவனங்களின் எதிர்காலம், அவை தொடர்ந்து கடன் பெறுவதற்கான வாய்ப்புகளிலும் தங்கியுள்ளது.
ஆனால், வட்டி வீதங்கள் அதிகரிக்கும்போது கடன் பெறுவதற்கான செலவும் அதிகரிக்கிறது.
எலான் மஸ்க் அண்மையில் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இத்தகைய சவால்கள் காரணமாக 200க்கும் மேற்பட்ட நியோகிளவுட் நிறுவனங்கள் ‘சிறிய மீன்களின் அழிவையும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பையும்’ (Guppy-level death and consolidation) எதிர்கொள்ளக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, சிறிய நிறுவனங்கள் முதலில் சந்தையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதே அவரது கருத்தாகும்.
“சில நிறுவனங்கள் இந்த நெருக்கடியைக் கடந்து வெற்றிகரமாகத் தொடரும். ஆனால், அவை அதிக எண்ணிக்கையில் இருக்கப்போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு கணினிச் செயலாக்கத் திறனுக்கான தேவை, அதன் விநியோகத்தைவிட அதிகமாகவே இருப்பதாக Yorkville Ives நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய தரவு மைய நிறுவனங்களால் நிரப்ப முடியாத ஒரு முக்கியமான இடைவெளியை நியோகிளவுட் நிறுவனங்கள் நிரப்பி வருகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எனினும், நியோகிளவுட் துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றங்கள் கவலையளிப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட Nscale என்ற நியோகிளவுட் நிறுவனத்துடன் Microsoft செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை அண்மையில் இரத்துச் செய்துள்ளது. 2030ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் எனக் கருதப்படும் மின்சார விநியோகப் பிரச்சினைகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் Firmus நிறுவனம் பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைக் கைவிட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் இடம்பெறும் அதேவேளையில், தரவு மையங்கள் அமைப்பதற்கு எதிராகப் பொதுமக்களிடையே எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு உண்மையில் அதிகரிக்கக்கூடியது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“கவலைப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன” என ஆய்வாளர் கோரி ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
(நன்றி: பிபிசி)
