படுகொலை செய்யப்படும் பத்து செய்தியாளர்களில்  ஒன்பது பேரின் கொலையாளிகள்  தண்டிக்கப்படுவதில்லை: ஐ.நா.

படுகொலை செய்யப்படும் பத்து செய்தியாளர்களில்  ஒன்பது பேரின் கொலையாளிகள்  தண்டிக்கப்படுவதில்லை: ஐ.நா.

~பி.கே. பாலச்சந்திரன்

உலகளவில் படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களில் ஏறத்தாழ பத்தில் ஒன்பது பேரின் கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ‘ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்’ (International Day to End Impunity for Crimes against Journalists), இத்தகைய தண்டனையற்ற நிலைக்கும் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் அலட்சியப் போக்குக்கும் முடிவுகட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2013ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி மாலியில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டின் வானொலி ஊடகவியலாளர்களான கிஸ்லைன் டுபோன் (Ghislaine Dupont), கிளோட் வெர்லோன் (Claude Verlon) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவர்கள் பிரான்ஸின் RFI வானொலிக்காகச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

1993ஆம் ஆண்டிலிருந்து இதுவரை உலகளவில் 1,700க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவிக்கிறது. இவ்வாறான கொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிக்கும் உலகளாவிய விகிதம் 85 சதவீதமாக இருப்பதாக யுனெஸ்கோவின் (UNESCO) அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அழுத்தங்களில் கொலைகள் மிகவும் தீவிரமான வடிவமாகும். கடத்தல், சித்திரவதை, துன்புறுத்தல் மற்றும் குறிப்பாகப் பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இணையவழி அச்சுறுத்தல்களின் அதிகரிப்பு ஆகியவற்றையும் இந்தச் சர்வதேச தினம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது என ஐ.நா. சுட்டிக்காட்டுகிறது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தண்டிக்கப்படாமல் விடப்படும்போது, ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான புலனாய்வுச் செய்திகளை உள்ளடக்கிய பொதுநலன் சார்ந்த ஊடகவியல் முடக்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் உலகளவில் ஊடகச் சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதால், ஊடகவியலாளர்கள் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். தீவிரமடையும் தாக்குதல்கள், வழக்குகள் மூலம் மேற்கொள்ளப்படும் நீதித்துறைத் துன்புறுத்தல்கள், தன்னிச்சையான கைதுகள், மிரட்டல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவை சுயாதீன ஊடகவியலை நாளுக்கு நாள் ஆபத்தான தொழிலாக மாற்றியுள்ளன.

கொலைகள் ஊடகத் தணிக்கையின் மிகக் கொடூரமான வடிவமாக இருந்தாலும், ஊடகவியலாளர்கள் கடத்தல், சித்திரவதை, உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் குறிப்பாக இணையவழித் துன்புறுத்தல்கள் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் ஊடகத்துறையினர் மத்தியில் அச்சச் சூழலை உருவாக்குகின்றன. இதனால் தகவல்கள், கருத்துகள் மற்றும் சிந்தனைகள் பொதுமக்களிடையே சுதந்திரமாகப் பரிமாறப்படுவது தடுக்கப்படுகிறது. குறிப்பாக, இணையவழியில் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களால் பெண் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

‘தி சிலிங்: உலகளவில் பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இணையவழி வன்முறையின் போக்குகள்’(The Chilling: Global Trends in Online Violence against Women Journalists) என்ற தலைப்பில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற பெண் ஊடகவியலாளர்களில் 73 சதவீதமானோர் தமது தொழில் சார்ந்த பணிகள் காரணமாக இணையவழியில் அச்சுறுத்தப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும், அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்கும் ஆபத்து தொடர்பான யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, அரபு நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனிய-அமெரிக்க பெண் செய்தியாளரான ஷிரீன் அபு அக்லே (Shireen Abu Akleh), 2022 மே 11ஆம் திகதி மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை தொடர்பாகச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, ‘பத்திரிகை’ (Press) எனப் பொறிக்கப்பட்ட பாதுகாப்பு அங்கியை அணிந்திருந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய் ஒருவரால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனிய மனித உரிமைகள் அமைப்பான அல்-ஹக் (Al-Haq) மற்றும் ஆய்வு நிறுவனமான Forensic Architecture ஆகியவை மேற்கொண்ட விசாரணையில், இஸ்ரேலிய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் மறுத்தபோதிலும், அவர் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

இந்தப் படுகொலை, கடந்த 22 ஆண்டுகளில் இஸ்ரேலால் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழுவான CPJ (Committee to Protect Journalists) அமைப்பைத் தூண்டியது.

CPJ வெளியிட்ட 2023ஆம் ஆண்டின் ‘மரணத்தை விளைவிக்கும் தொடர் போக்கு’ (Deadly Pattern) என்ற அறிக்கையின்படி, 2001 முதல் 2022 வரையான காலப்பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) குறைந்தது 20 ஊடகவியலாளர்களைக் கொன்றுள்ளன. எனினும், இந்தக் கொலைகள் எதற்கும் எவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை.

மெக்சிக்கோவைச் சேர்ந்த அனுபவமிக்க புலனாய்வு ஊடகவியலாளரும் ஆசிரியருமான ஜேவியர் வல்தெஸ் கார்டெனாஸ் (Javier Valdez Cardenas), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வந்தவர். தமக்கும் தமது சக ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் அவர் தனது பணியைத் தொடர்ந்தார்.

2017 மே 15ஆம் திகதி, மெக்சிக்கோவின் குலியாகான் (Culiacán) நகரில் தான் இணைந்து நிறுவிய ‘ரியோடோஸ்’ (Riodoce) வார இதழின் அலுவலகத்திற்கு அருகில் வைத்து அவர் 12 தடவைகள் சுடப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான பிரதேச ஆதிக்கப் போட்டி தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டிருந்தமையே அவரது படுகொலைக்குக் காரணம் எனவும், சினலோவா போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் இந்தக் கொலைக்குக் கட்டளையிட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

1992ஆம் ஆண்டிலிருந்து மெக்சிக்கோவில் 150க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான்:

2012 முதல் 2022 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான 53 வழக்குகளில் இரண்டு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக Freedom Network Pakistan அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

‘இது ஏறத்தாழ 96 சதவீதமான மிக மோசமான தண்டனையற்ற நிலையாகும்’ என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியபோதிலும், தீர்வு காணப்படாத ஊடகவியலாளர் படுகொலைகள் பாகிஸ்தானில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழுவான CPJ தெரிவிக்கிறது. 1992ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானில் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான எந்தவொரு வழக்கிலும் முழுமையான நீதி நிலைநாட்டப்படவில்லை.

அப்புத் தக் தொலைக்காட்சியின் (Abb Takk Television) மூத்த ஊடகவியலாளரான ஜாகிர் ஹுசைன் தஹார் (Zakir Husein Dahar), ஷான் தஹார் (Shan Dahar) என்றும் அழைக்கப்பட்டார். 2014 ஜனவரி 1ஆம் திகதி சிந்து மாகாணத்தின் லர்கானா மாவட்டத்தில் அவர் சுடப்பட்டார்.

நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகள் சட்டவிரோதமாக மீண்டும் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அவர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரேயொரு சந்தேகநபர் 2018ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும் இரண்டு சந்தேகநபர்களான ப்ரோஹி (Brohi) மற்றும் அவரது சகோதரர் ஆமிர் ஆகியோர் தலைமறைவானவர்களாக அறிவிக்கப்பட்டனர். ப்ரோஹி இந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பங்களாதேஷ்:

2025 டிசம்பர் 18ஆம் திகதி மாலை, பங்களாதேஷின் மிகவும் பிரபலமான இரண்டு ஊடக நிறுவனங்களான ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star), ‘புரோதோம் ஆலோ’ (Prothom Alo) ஆகியவற்றின் செய்தி அறைகளில் பதற்றம் பரவியது.

கம்புகளையும் பெற்றோல் நிரப்பப்பட்ட தீப்பந்தங்களையும் ஏந்திய கும்பல்கள், டாக்காவில் அமைந்திருந்த இந்த ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பு வாயில்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தன. வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், பிரதான பத்திரிகை அலுவலகக் கட்டடங்களை நோக்கியும் முன்னேறின.

கட்டடத்துக்குள் இருந்த ஊடகவியலாளர்களும் ஏனைய பணியாளர்களும் புகைக்கும் வெப்பத்துக்கும் மத்தியில் ஆவணங்களையும் உபகரணங்களையும் பாதுகாப்பதற்காகப் போராடினர். தீ மேலும் பரவிக்கொண்டிருந்தது.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதன்முறையாக, நாட்டின் இரண்டு மிகப்பெரிய பத்திரிகைகளும் தமது அச்சுப் பதிப்புகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

வெளியே கூடியிருந்த கும்பல்கள் ஆரவாரம் செய்துகொண்டிருந்தன. உள்ளே, உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் செய்தியாளர்கள் கட்டடத்தின் கூரையில் தஞ்சமடைந்திருந்தனர்.

நோபல் அமைதிப் பரிசு பெற்ற கலாநிதி முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இந்தச் சம்பவம் இடம்பெற அனுமதித்ததாக அவதானிகள் குற்றஞ்சாட்டினர்.

அரசாங்கத்தின் நேரடி அச்சுறுத்தல்களிலிருந்து கும்பல் நீதிவரை..

ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால எதேச்சாதிகார ஆட்சியின் கீழ், கடுமையான சட்டங்கள், கண்காணிப்பு மற்றும் நேரடி அரசாங்கக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஊடகச் சுதந்திரம் சுருக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டின் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஒளிபரப்பு உரிமங்களும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டதுடன், புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புக் குரல்களைக் கண்காணித்தன.

நோபல் அமைதிப் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் காலத்தில், அச்சுறுத்தலின் தன்மை மாறியது. அரசாங்கத்தின் நேரடித் தணிக்கையைவிட கும்பல்களின் அச்சுறுத்தல்களே முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தன.

ஒரு பத்திரிகை பொதுமக்களுக்குப் பிடிக்காத செய்தியை வெளியிட்டால், உடனடியாகக் கம்புகள், தீ மற்றும் அச்சுறுத்தல்களுடன் கும்பல்கள் அங்கு வந்துவிடுவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இந்தக் காலப்பகுதியில்:

  • 351 ஊடகவியலாளர்கள் தமது அலுவலகங்களிலும் வீதிகளிலும் துன்புறுத்தப்பட்டனர்.
  • 109 ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டனர்.
  • 167 ஊடகவியலாளர்களின் ஊடக அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டன.
  • 300க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.
  • 140 ஊடகவியலாளர்கள் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டனர்.

இடைக்கால அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் 558 சதவீதத்தால் அதிகரித்திருந்தன.

குறிப்பாக, கொலைக் குற்றச்சாட்டுகள் கவலையளிப்பதாக இருந்தன. 2024ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இடம்பெற்ற போராட்டங்களைச் செய்தியாக்கிய ஊடகவியலாளர்களில் பலர், உண்மையில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே. அந்தப் போராட்டங்களின்போது பலர் கொல்லப்பட்டிருந்தனர். பெரும்பாலான கொலைகள் ஹசீனாவின் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர்களும் அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தற்போது தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், சரிபார்க்கப்படாத செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 செப்டெம்பரில், முன்மொழியப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்களை உடனடியாகக் கைவிடுமாறோ அல்லது கணிசமான மாற்றங்களைச் செய்யுமாறோ CPJ பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.

அதிகாரிகள் ‘சரிபார்க்கப்படாதவை’ எனக் கருதும் செய்திகளை வெளியிடுவதைக் குற்றமாக்குவதுடன், ஊடகவியலாளர்களின் பணிகளைத் தடைசெய்யவும், செய்தி நிறுவனங்களின் பதிவுகளை இரத்துச் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்தத் திருத்தங்கள் அமைந்துள்ளதாக CPJ தெரிவித்தது.

முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, இணையத்தில் ‘வதந்திகள்’ மற்றும் ‘தவறான தகவல்களை’ பரப்புவது புதிய குற்றமாக வரையறுக்கப்படுகிறது. இதற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது பெருந்தொகையான அபராதம் விதிக்கப்படலாம் எனப் பல்வேறு செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டமூலத்தின் தற்போதைய வடிவத்தின்படி, அதிகாரிகள் ஏதேனும் இணையவழித் தகவலை ‘ஆதாரமற்றது அல்லது சரிபார்க்கப்படாதது’ எனத் தீர்மானித்து, அது பொதுமக்கள் மத்தியில் குழப்பம், பீதி அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவதாகக் கருதினால், அந்தத் தகவல் சட்டமீறலாக அமையலாம்.

இவ்வாறான வழக்குகள், பங்களாதேஷின் டிஜிட்டல் மற்றும் இணையவழிச் சட்டங்களின் கீழான வழக்குகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றமான இணையவழித் தீர்ப்பாயத்தில் (Cyber Tribunal) விசாரிக்கப்படும்.

செய்தி நிறுவனங்களும் இந்தச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்படலாம். அத்துடன், அந்த நிறுவனங்கள் இயங்குவதற்கான உரிமத்தை இடைநிறுத்தவோ அல்லது இரத்துச் செய்யவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

‘பங்களாதேஷின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விரிவான திருத்தங்கள் ஊடகச் சுதந்திரத்தைப் பாதிக்கும் அளவுக்கு மிகப் பரந்தவையாக உள்ளன’ என CPJ அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் குணால் மஜும்தார் (Kunal Majumder) தெரிவித்தார்.

’அதிகாரிகள் அங்கீகரிக்காத தகவல்களையும் உள்ளடக்கிய வகையில், சுயாதீனமாகத் திரட்டப்பட்டு உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.

‘இணையக் குற்றச் சட்டங்கள் ஊடகவியலாளர்களை இலக்குவைப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட வரலாறு பங்களாதேஷுக்கு உண்டு. தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தற்போதைய அரசாங்கமும் அதே நடைமுறையை மீண்டும் பின்பற்றக்கூடாது’ என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் நோக்கங்களுக்காக ஊடகவியலாளர்களுக்கு எதிராக இணையக் குற்றவியல் சட்டங்கள் பயன்படுத்தப்பட்ட வரலாறு பங்களாதேஷுக்கு உண்டு.

முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இணையவழிப் பேச்சு மற்றும் டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்திய டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 2018 முதல் 2023 வரையான காலப்பகுதியில் குறைந்தது 255 ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட எழுத்தாளர் முஷ்டாக் அகமட் (Mushtaq Ahmed), விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் ஒன்பது மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையிலேயே உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *